முதலாளி யுகம் ஒரு பாகத்தில் முடிந்து விடுமென்று நினைத்தேன். அதன் முதல் நூற்றாண்டே தனி பாகமாக ஆகிவிட்டது. எனவே, அதன் இரண்டாம் நூற்றாண்டு ஐந்தாம் பாகமாக வெளிவந்து “கடவுளின் கதை” முடியும்.
மீண்டும் வலைத்தளங்களுக்கே நன்றி சொல்ல வேண்டியுள்ளது. ஹெகல், ஸ்டிராஸ், பாயர்பாக், டார்வின் போன்ற ஐரோப்பிய ஞானிகளின் மூலநூல்கள் அங்கே கிடைத்தன. இளமையிலிருந்தே மார்க்சிய நூல்களை வாசித்து வந்த நான் பாயர்பாக்கின் “கிறிஸ்தவத்தின் சாரம்” பற்றிக் கேள்விப்பட்டிருந்தேனே தவிர அதைப் பார்த்ததில்லை. இப்போது அதைப் படித்தபிறகுதான் மார்க்ஸ்-எங்கெல்சின் படைப்புகள் மேலும் விளக்கம் பெற்றன.
இன்னும் ஆச்சரியம், இந்தியாவின் சில பழைய நூல்களும் வலைத்தளங்களில் கிடைத்தது. ராம்மோகன் ராயின் ஆங்கில நூல்கள், சிவநாத் சாஸ்திரி எழுதிய “பிரம்மோ சமாஜ வரலாறு”, மகேந்திரநாத் குப்தா எழுதிய “ராமகிருஷ்ணரின் கதாமிர்தம்”, தயானந்த சரஸ்வதி எழுதிய “சத்யார்த்த பிரகாசம்” போன்றவற்றைப் படித்த பிறகுதான் அந்தப் பகுதிகளைப் பற்றி எழுதும் தைரியம் வந்தது.
இஸ்லாமிய, பவுத்த வரலாறைப் பொறுத்தவரை நண்பர் சீனிவாசராகவனுக்குத்தான் மீண்டும் நன்றி சொல்ல வேண்டும். “இஸ்லாம் பற்றிய கேம்பிரிட்ஜ் வரலாறு” போன்ற முக்கியமான நூல்களை அவர்தான் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நூலகத்திலிருந்து படியெடுத்து அனுப்பி வைத்தார். திராவிடர் கழகத்திற்கும் நன்றி செலுத்த வேண்டும். அது அந்த நாளில் வெளியிட்டிருந்த இங்கர்சாலின் படைப்புகள் அவரைப் பற்றி எழுத அஸ்திவாரம் போட்டுத் தந்தன.
Reviews
There are no reviews yet.