பாகிஸ்தான் போகும் ரயில்:
“”1947-ல் இந்தியா சுதந்தரம் பெற்றது. அதே நேரத்தில்தான் மாபெரும் துயர் இந்தியாவைச் சூழ்ந்தது. தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தேசம் மட்டுமல்ல, லட்சக்கணக்கானோரில் உடல்களும் பிளக்கப்பட்டன. உடைமைகள் அபகரிக்கப்பட்டன. பெண்கள் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அருகருகே நட்புடன் வசித்துவந்த மக்கள் ஒருவரை ஒருவர் கொலை வெறியுடன் தாக்கிக்கொண்டனர். ஒருவரது குற்றத்தை முன்வைத்து அடுத்தவர் தம் குற்றங்களை அரங்கேற்றத் தொடங்கினர்.
மனிதர்களின் வெறித்தாண்டவம் பேயாட்டம் ஆடிக்-கொண்டிருக்கும் பின்னணியில், பஞ்சாபில் ஒரு கிராமம் மட்டும் அமைதியாக இருக்கிறது. அப்படி அந்த கிராமத்து முஸ்லிம்களும் சீக்கியர்களும் மட்டும் அமைதியாக இருந்துவிட முடியுமா என்ன? அந்த அமைதியைக் குலைக்கிறது பாகிஸ்தானிலிருந்து வரும் ஒரு ரயில். அதில் எண்ணற்ற இந்து, சீக்கியப் பிணங்கள். பழிக்குப் பழியா? பாகிஸ்தானுக்குப் புலம் பெயரும் முஸ்லிம்கள் அடங்கிய ரயிலுக்கு என்ன ஆகப் போகிறது? அதுதான் கதை. இந்தக் கதைக்கு இடையில் ஒரு மென்மையான காதல், அரசியல்மீதான ஆழமான பார்வை, சீக்கிய மதத்தைப் பற்றிய விமரிசனம், அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகள் பற்றிய குத்தல், காவல்துறை மீதான கருத்துகள் என்று எண்ணற்ற சித்திரங்களை வரைந்து செல்கிறார் குஷ்வந்த் சிங்.
எழுதப்பட்டு 60 ஆண்டுகள் கழித்தும் இன்னும் வலுவாக நம்முன் நிற்கிறது இந்தக் கதை.””
Shanmuga priya –
புத்தகத்தின் பெயர் – பாகிஸ்தான் போகும் ரயில் (Train to Pakistan)
ஆசிரியர் – குஸ்வந்த சிங்
தமிழில் – ராமன் ராஜா
1947 இந்திய பாகிஸ்தான் பிரிவினை பற்றி 1956-ல் குஸ்வந்த்சிங் எழுதிய நூல் Train to Pakistan. இந்தியாவின் புகழ்பெற்ற நாவலாசிரியர் மற்றும் பத்திரிக்கையாளர். இவரின் எழுத்துக்களில் எப்போதும் கிண்டலுக்கும் கேளிக்கும் பஞ்சமிருக்காது. பாகிஸ்தான் போகும் ரயில் என்னும் நாவலில் எவ்வாறு முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் உள்ள ஒற்றுமை குலைக்கப்படுகிறது என அழகாக சித்தரித்திருப்பார் ஆசிரியர்.
பஞ்சாபில் ஓடும் சட்லெஜ் ஆற்றின் அருகே உள்ள அழகிய கிராமம் மனோ மஜாரா. அந்த ஊரில் சீக்கியர்களும், முஸ்லீம்களும் அதிகளவில் வாழ்கின்றனர். ரயில் நிலையம் உள்ள இந்த கிராமத்தில் அடிக்கடி வரும் ரயில் சரக்கு வாகனங்கள் சத்தத்தை வைத்துதான் அந்த ஊர் மக்கள் உறங்குவதும், விழிப்பதும். அந்த ஊரில் முஸ்லீம்களுக்கான ஒரு மசூதியும், சீக்கியர்களுக்கான ஒரு கோவில் இருந்தாலும் மக்கள் முக்கியமான வழிபடுவது எல்லோருக்கும் பொதுவான ஊர் தெய்வத்தைதான்.
அந்த கிராமத்தில் உள்ள ஒரே இந்துவான ராம்லால் சேட்டின் கொலையுடன் கதை ஆரம்பமாகிறது. கொலையை செய்தது வேறு திருடர் கூட்டம் என்றாலும், அதற்காக சீமைக்கு சென்று படித்த (முஸ்ஸலமான் எனக் கருதி) அந்த ஊர் ரவுடியான ஜக்காவும் கைது செய்யப்படுகிறார்கள். அந்த ஊர் மேஜிஸ்டிரேட்டும், சப் இன்ஸ்பெக்டரும் முஸ்லீம்களை மனோ மாஜாரவில் இருந்து வெளியேற்ற இவர்களை பயன்படுத்த திட்டமிடுகின்றனர். இதற்கிடையில் பாகிஜஸ்தான் நாட்டில் இருந்து வரும் ரயிலில் பிணங்கள் மட்டுமே வர மனோமாஜரா மக்கள் முஸ்ஸலமான்களை கண்டு அஞ்சுகின்றனர். முஸ்லீம்களும் சர்தார்கள் நம்மை அழித்துவிடுவார்கள் என அஞ்சுகின்றனர்.
சர்தார்கள் ஒன்று கூடி முஸ்லீம்களை சிறிதுநாட்கள் முகாம்களில் தங்கவைத்து விட்டு பின் திரும்ப கிராமத்திற்கு வர முடிவெடுக்கின்றனர். ஆனால், இதற்கிடையே சட்லெஜ் நதியில் மிதந்து வரும் பிணங்கள், பாகிஸ்தானில் .இருந்து வரும் சர்தார் அகதிகள் அங்குள்ள சர்தார்களை முஸ்லீம்கள் பழிதீர்க்க முடிவெடுக்கின்றனர். அன்று மனோ மஜரா வழி பாகிஸ்தானுக்கு செல்லும் முஸ்லீம்களை செல்லும் மக்களை முடிவெடுக்கின்றனர். இதில் அவர்களை கொல்லும் முயற்சி என்னானது என்பதே மீதிக்கதை.
சீக்கியம், முஸ்லீம், ஜெயின் ஆகிய மூன்று மதங்களுக்கும் பொதுவான பெயரான இக்பால் எவ்வாறு காவல்துறை மற்றும் நீதித்துறையால் அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு முஸ்லீமாக ஆக்கப்படுகிறது என்பதை மிக அழகாக விவரித்துள்ளார் ஆசிரியர். மதமே இல்லை என்று வாதிடும் இளைஞனை எவ்வாறு தன் மதத்தினை வெளியே கூற வைக்கிறார்கள் என்பது மிக சுவாரசியம்.
இந்த நாவலில் உள்ள மற்றுமொரு முக்கிய அம்சம், தென்மேற்கு பருவழை வருவதற்கு முன் உள்ள காலநிலை உருவகமும், தென்மேற்கு பருவமழை பற்றிய காலநிலை குறிப்புகளும். மழைக்கு முந்தய, பிந்திய காலநிலையையும் மிக நேர்த்தியாக விவரித்துள்ளார் ஆசிரியர்.
மதவெறி என்பது தாங்களாகவே சிந்திக்கத் தெரியாதவர்களுக்கிடையே மட்டுமே எவ்வாறு மற்றொரு உயிரை கொல்லுமளவு பரப்பப்படுகிறது என்பது இந்த புத்தகத்தின் மூலம் நன்கு புரிந்து கொள்ள முடியும். சகோதர, சகோதரிகளாக காலங்காலமாக பழகி வரும் வேற்று மதத்தவரை எவ்வாறு ஒரே இரவில் உதறித்தள்ள முடிகிறது என்று கேள்வி எழுவதை தடுக்கமுடியவல்லை. வாசிப்போம். வேற்றுமைகளை களைந்தெறிவோம்.
ம.சண்முகப்பிரியா