4 reviews for கிழவனும் கடலும்
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹125.00 Original price was: ₹125.00.₹120.00Current price is: ₹120.00.
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். அழகிய கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
அனைத்தும் / General
Poonkodi Balamurugan –
புத்தகம்: கிழவனும் கடலும்
ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில் : எம்.எஸ் ( எம்.சிவசுப்ரமணியம் )
1952 ஆம் ஆண்டு ஹெமிங்வேவால் எழுதப்பட்டு 1954 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்ற குறுநாவல்.
வறுமைப்பிடியில் இருக்கும் முதுமையான மீன்பிடிக்கும்மனிதன் தான் சாந்தியாகோ.என்னதான் திறமைசாலியான மனிதராக இருந்தாலும் இவருக்கு அதிர்ஷ்டம் எப்போதும் கேள்விக்குறியான ஒன்று. தொடர்ந்துஎண்பத்து நாலு நாட்கள் கடலுக்குள் தன் சிறிய படகினில் சென்று மீன் ஏதும் அகப்படாமல் வெறும் கையோடு திரும்பி வந்து கொண்டிருக்கிறார். முதல் நாற்பது நாட்கள் அவருடன் ஒரு சிறுவன் துணைக்கு சென்று கொண்டிருந்தான். ராசி இல்லாத இந்த கிழவன் படகில் வேண்டாம் என்று வேறு படகிற்கு அவனை மாற்றிவிட்டார்கள் அவனது பெற்றோர்கள். ஆனாலும் மீன்பிடிக்க கிழவர் கிளம்பும் நேரத்தில் தன்னாலான உதவிகளைச் செய்துவிட்டு தான் செல்வான் அந்த சிறுவன். இன்று எப்படியும் மீன் கிடைத்து விடும் . எண்பத்தைந்து தன் ராசியான எண் எனச் சொல்லிக் கொண்டு தன் கப்பலுடன் கடலுக்குள் செல்கிறார்.
இன்று எப்படியும் மீன் பிடித்துவிட வேண்டும் கடலுக்குள்சென்று கொண்டேயிருக்கிறார். சிறிது தூரத்தில் வானத்தில் பறவைகள் வட்டமிடுவதைப் பார்த்து கப்பலை அங்கு செலுத்துகிறார். ஒன்றன் பின் ஒன்றாக பல தூண்டில்கள் போட்டுவிட்டு காத்திருக்கிறார் தீடீரென்று ஒரு தூண்டில் பலமாக இழுக்கப்படுகிறது.ஆஹா ஏதோ பெரிய மீன் மாட்டிக்கொண்டது என்று உடம்பின் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி இறுக்கமாக பற்றிக்கொள்கிறான். கண்டிப்பாக மாடடியிருப்பது பெரிய மீன் தான் எனத் தெரிகிறது. மேலிழுக்க முயல்கிறான்..படகோடு சேர்த்து மீன் இவனை இழுத்துச் செல்கிறது. வாழ்வில் சில நேரங்களில் நாம் போராட மனமின்றி வாழ்வின் போக்கில் போவோமே அது போல மீனின் போக்கில் கப்பலைச் செலுத்துகிறான் . மீன் ஆழத்திலும் செல்லாமல் போய்கொண்டேயிருக்கிறது. ஒரு முறை வெளிய தண்ணீருக்கு மேலே வரும் போது தான் பார்க்கிறான் தன் கப்பலை விட மிகப்பெரிய மார்லின் மீன் மாட்டிக்கொண்டதை அறிந்து அந்த எண்பத்து நான்கு நாட்களையும் இது ஒன்று சமன்செய்து விடும் என்று மகிழ்கிறான்.
ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் மகிழ்ச்சி கிட்டி விடுமா என்ன ? தொடர்ந்து மீனுக்கும் அவருக்குமான போராட்டம் தொடர்கிறது. அவர் விடாக்கண்ணனாக இருந்தால் மீன் கொடாக்கண்ணனாக இருக்கிறது. அந்த மீனைக் கொன்று , மீனோடு உயிரோடு கரை சேர்வாரா என்பது தான் மீதிக்கதை. மூன்று மூன்று பகல்கள் கடலுக்குள் இயற்கைக்கும் மனிதனுக்கும் நடக்கும் போராட்டம். பசி , வலி எல்லாம் தாங்கி கொள்ள கூடிய மனிதனால் தனிமையை மட்டும் தாங்க முடிவதில்லை . யாரும் பேச்சுத்துணைக்கு அற்ற நிலையில் மீனிடம் பேசுகிறார்.கடலிடம் பேசுகிறார்.அந்தச் சிறுவன் அங்கிருப்பதாய் நினைத்து பேசுகிறார். ஒரு சமயம் கப்பல் மீது இளைப்பாற வந்த குருவி உடன் பேசுகிறார். இளைப்பாற இடம் இல்லை என்று தெரிந்தும் தைரியமாய் கடல் தாண்டும் அந்த சிறு குருவிதான் அவரின் மனோபலத்தை தூண்டிவிட்டு உயிரோடு கரை சேர்க்கிறது.நம்பிக்கையின் போராட்டத்தை மிக மிக அற்புதமாய்
எழுதியிருப்பார் ஹெமிங்வே.
ஓர் இடத்தில் மீனிடம் கிழவர் சொல்வதாக ஒரு வரி வரும். மனிதனை கொல்வது எளிது. ஆனால் வெல்வது கடினம் என.. A man can be defeated but can not destroyed… அவ்வளவு அற்புதமான வாக்கியம். யார் பாராட்டினாலும் , தூற்றினாலும் , அங்கீகரிக்காவிட்டாலும் எனது கடமையை நான் செய்வேன் என்ற மிகப்பெரிய வாழ்க்கைப் பாடத்தை தந்துள்ளது இந்நாவல் .
வினோத் –
எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் The Old Man and The Sea என்னும் புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு தான் கிழவனும் கடலும். சாந்தியாகோ என்னும் மீன்பிடி கிழவனுக்கு தொடர்ச்சியாக 84 நாட்கள் கடந்தும் ஒரு மீனும் சிக்கவில்லை இருப்பினும் அந்த கிழவன் மனம் தளரவில்லை. அவனது நம்பிக்கையிலிருந்து சற்றும் தளரவில்லை. இறுதியில் அவனது தூண்டிலில் சிக்கியது பெரிய மீன். அதன் விளைவு இவன் அந்த மீனை பிடிப்பதற்கு பதிலாக அது அவனை இழுத்துக் கொண்டு வெகுதூரம் கடலுக்குள் சென்றது.
கிழவனுக்கும் அந்த மீனுக்கும் இடையிலான போராட்டமே இந்த நாவல். மிகச் சிறிய நாவல் என்றாலும் இது நம்மிடையே பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.
தனிமை ஒரு மனிதனை எவ்வளவு துயர்வுறச் செய்யும் என்பதை நாம் உணர்ந்து கொண்டிருக்கும் சூழலில் இத்தகைய நாவல் நமக்கு புது ஊக்கத்தை தருகிறது. வாழ்வின்மீதான நமது பிடி சற்று தளரும்போதெல்லாம் இந்த நாவலை வாசித்து புத்துயிர் பெற்றுக் கொள்வோம்.
Kmkarthikn –
கிழவனும் கடலும்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில் – எம்.எஸ்
காலச்சுவடு
சாண்டியாகோ எனும் கிழவன், மனோலின் எனும் சிறுவன், மார்லின் என்ற ஒருவகை மீன் இவ்வளவு தான் கதாப்பாத்திரங்கள். அதிலும் முக்கால்வாசி பக்கங்கள் அந்தக் கிழவன் தனிமையில் புலம்புவதாகவே இருக்கிறது. இதற்குப்போய் நோபல் பரிசா!! இதற்குத்தான் நோபல் பரிசு. தனிமையில் புலம்பும் அந்த கிழவனின் வார்த்தைகளுக்காகத் தான் நோபல் பரிசு. அவன் என்ன புலம்புகிறான்! அவன் புலம்பும் ஒவ்வொரு வார்த்தைகளும் நம் வாழ்க்கைக்குத் தேவையான அட்சாரங்கள்.
தன்னம்பிக்கை, விடாமுயற்சியின் உருவம் தான் சாண்டியாகோ. என்பத்தி நான்கு நாட்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றும் என்பத்தி நான்கு நாட்களும் மீனேதும் கிடைக்காமல் வெறும் கையுடன் திரும்பும் சாண்டியோகோவை அதிர்ஷ்டம் இல்லாதவன் என ஊரே கெக்கலிக்கிறது. இன்று என்பத்தி அஞ்சாவது நாள் என்பத்தி அஞ்சு எனக்கு ராசியான எண், இன்று நிச்சயம் எனக்கு பெரிய மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வழக்கம்போல் கடலுக்குச் செல்கிறார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கடலுக்குள் நெடுந்தொலைவு செல்கிறார்.
என்பத்தி அஞ்சாவது நாள் கடலுக்குள் சென்றவர் மூன்று நாளாக ஊர் திரும்பவில்லை. அவருக்கு என்ன ஆனது என ஊரார் கொஞ்சம் வருத்தமும் அடைகிறார்கள். கொஞ்சம் தேடியும் திரிகிறார்கள். என்பத்தி ஏழாவது நாள் இரவு சாண்டியாகோ கரை திரும்புகிறார். மறுநாள் காலை அவரது படகை ஊர்மக்ககள் வைத்தகண் வாங்காமல் பெரும் வியப்போடு பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள். அப்படி அவர் என்ன கொண்டுவந்தார், மூன்று நாட்களாக என்ன செய்தார் என்பது தான் கதை.
கதையென்றா சொன்னேன் இல்லையில்லை பாடம். வாழ்க்கைப்பாடம்.
இதை வெறுமனே மீன்பிடிக்கும் கதை என்று மட்டுமே பார்ப்பது தவறு. அது ஒரு களம் அவ்வளவே. மாறாக வாழ்க்கையையும் அதன் இரக்கமில்லாத் தன்மையையும் சொல்லும் கதையாகவும், போட்டிகள் நிறைந்த உலகத்தில் தன்னை நிரூப்பிக்க ஒரு மனிதன் படும்பாட்டைச் சொல்லும் கதையாகவும், தனிமையின் கோரத்தைச் சொல்லும் கதையாகவும் இன்னும் பல பரிமாணங்களில் இந்தக் கதையைப் பார்க்கலாம்.
வாழ்க்கை என்பது இந்தக் கதையில் இருப்பது போலத்தான் இரக்கமற்றது. உங்களின் தோல்விகளைக் கண்டு எள்ளி நகையாடும், உங்கள் பொறுமையை சோதிக்கும். மர்லின் மீன் அந்த கிழவனை இழுத்துச்செல்வது போல துன்பத்தின் எல்லைக்கே உங்களை துரத்தும், அனைத்திலும் போராடி ஒருவழியாகவென்று விட்டால், அதற்குப்பிறகு தான் இருக்கிறது உண்மையான போராட்டம். அதுதான் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் போராட்டம். இந்தப் போராட்டத்தில் பெரும்பாலானோர் தோற்றுத்தான் போகிறார்கள். நம்ம சாண்டியோகாவைப் போல. ஆனால் சாண்டியாகோ நிச்சயம் ஒருநாள் முழு வெற்றி பெருவார். அவரது மனோதிடம் இங்கு யாருக்குத்தான் இருக்கிறது.
சாண்டியாகோவிற்கும் அந்தச் சிறுவனுக்கும் இடையேயான அன்பு நீருக்கும் மீனுக்குமான உறவைப்போல உயிருள்ளதாக இருக்கிறது.
நாவலின் மையப்பகுதியில் ஒருசிறிய பறவை வரும். கடலைக் கடந்து பறக்கும் அந்தப் பறவை இளைப்பாற இவரது படகில் வந்து அமரும். அந்த சிறிய பறவையிடம் கிழவன் பேசுவது போல் ஒரு காட்சி வரும். அட்டகாசமான பகுதி, அட்டகாசமான உரையாடல்.
நாவலின் ஓவியங்களைப் பற்றி கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். ஒவ்வொரு ஓவியமும் காட்சியை அப்படியே நமக்குள் கடத்துகின்றன. அதுவும் அந்த மர்லின் மீன் கடலிலிருந்து அந்தரத்தில் எவ்விக் குதிக்கும் அந்தக் காட்சிGoosebumbs.
அப்றம் மொழியாக்கம் அளவான சொற்பிரயோகம். நேர்த்தியான வசனங்கள் என மிகச்சிறப்பான செயல்பாடு.
இறுதியாக ஒரு கேள்வி சாண்டியாகோவைப் போல் யாரால் வாழ முடியும். ஏன் இந்தநாவலை எழுதிய ஹெமிங்வே-யே சாண்டியகோவைப் போல் வாழ்க்கையை போராடி வாழாமல் தற்கொலை செய்துகொண்டார்.
வாழ்க்கை இரக்கமற்றது வாழவேண்டுமெனில் மனத்திடம் கொண்ட சாண்டியாகோவைப் போல் வாழ முயற்சிப்போம்.
#Kmkarthikeyan_2020-37
S.Kavitha –
நோபல் பரிசுபெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் புகழ் பெற்ற நாவல் தான் கிழவனும் கடலும். இது வெளிவந்து 60 ஆண்டுகள் ஆகிறது. வறுமையில் தனித்து வாழும் மீனவ முதியவர் சாந்தியாகோவின் வாழ்வியலை பற்றிய கதை..
இந்த நாவலின் விமர்சனத்தை முகநூலில் பார்த்து வாங்கினேன். அதை படித்த போதே கதை தெரிந்து விட்டதால் படிக்கும் போது சுவாரசியம் அவ்வளவாக இல்லை. படத்தின் விமர்சனம் பார்த்து விட்டு படம் பார்த்த அனுபவம் போல இருந்தது. படமோ/ புத்தகமோ விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் முக்கியமான கருவை தவிர்த்து / மேலோட்டமாக சொல்லலாம்.
மீன் பிடிப்பதை தொழிலாக இருக்கும் நேர்மையான சாந்தியாகோ, அவர்களுக்கு உதவியாக இருக்கும் சிறுவன், இருவரும் மீன் பிடிக்க செல்கிறார்கள். நாற்பது நாள்களாக மீன் கிடைத்ததால் சிறியவன் அவருடைய அப்பாவால் வேறு படகுக்கு மாற்றபடுகிறான். முதியவர் 84 நாள்களாக சென்றும் ஏதும் கிடைக்காத நிலையில் மற்றவர்களின் அதிஷ்டம் இல்லை என்று ஏளனத்திற்கும், சிலரின் பரிதாபதிற்க்கும் ஆளாகிறார்.
இருப்பினும் அடுத்த நாளும் அவர் புறப்பட்ட ஆயத்தமாகிறார். அவரின் மேல் பிரியம் காட்டும் சிறுவன் அவருக்கு உதவி செய்கிறான்.. இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அன்பும், அக்கறையும் அற்புதமாக இருக்கிறது.
விடா முயற்சியுடன் கடலுக்கு தனியாக செல்லும் சாந்தியாகோ, அங்கு ஒரு மீனுடன் ஏற்படும் போராட்டத்தை அருமையாக விவரிக்கிறது. திரும்பி வரும் போது அவருக்கு கிடைத்த வெற்றி தோல்வியோ அவரை பாதித்து இருக்கவில்லை.
சாந்தியாகோ கடலில் தனக்கு தானே பேசிக்கொள்வர். ஊக்கம் கொடுத்து கொள்வர். சில சமயங்களில் சாடுவர். வான், ஆகாயம், காற்று, மீன்கள், பறவை என அனைத்திடமும் அன்பாக பேசுவார். கடைசி வரை, ஏன் உயிர் போகும் நிலைமை வரும் சமயங்களில் தன் போராடும் குணத்தை விட்டு விட வில்லை. 87 நாள்களாக பெரிய மீன்கள் கிடைக்காமல் அடுத்த நாள் நம்பிக்கையுடன் செல்லும் வயதான சாந்தியாகோவின் மனவலிமை, நேர்மறை சிந்தனை எவ்வளவு உயர்ந்ததாக இருக்கும்.
அவர் பேசும் சில வரிகள்
அதிஷ்டம் இருப்பது நல்லதே, ஆனால் காரியத்தில் நான் ஒழுங்காக இருக்க வேண்டும், அதிஷ்டம் வரும்போது, நீ தயாராக இருப்பாய்.
ஒரு மனிதனை அழிக்க முடியும், ஆனால் அவனை தோற்க்கடிக்க முடியாது.
நான் சிந்திக்க வேண்டும் அது ஒன்று தான் என்னிடம் இருக்கிறது.
மரணத்திலிருந்து தப்புவது இல்லை வாழ்க்கை அதையும் மீறி எப்படி எதிர்கொள்வதில் இருக்கிறது.
இந்த நாவல், ஒருவரின் வயது வலிமையை தீர்மானிப்பதில்லை என்பதை காட்டுகிறது.
ஓயாத போராட்ட குணம் உள்ள ஒருவரிடம் அதிஷ்டம் ஒருநாள் தலைவணங்கும் என்பதில் ஐயமில்லை..
சாந்தியாகோ கிழவனிடம் கற்று கொள்ள நிறைய இருக்கிறது. முடிந்தால் வாசியுங்கள்.