Theipuri Pazhangkayiru (Harilal Tha/Pe Mohandas Gandhi)
காந்தியடிகளின் பொதுவாழ்க்கை என்பது முழுக்கமுழுக்க வெவ்வேறு போராட்டங்கள் நிறைந்த ஒன்றாகும். அவருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையும் வேறொரு விதத்தில் போராட்டம் நிறைந்ததாக இருந்தது. காந்தியடிகள் தன்னைப்போலவே தன் மனைவியும் பிள்ளைகளும் எந்தப் பயனையும் எதிர்பார்க்காத தியாகவாழ்க்கையை வாழவேண்டும் என்று எதிர்பார்த்தார். அவருடைய விருப்பங்கள் அவருக்கு பல கசப்பான அனுபவங்களையே அளித்தன. அந்தக் கசப்புகளையெல்லாம் விழுங்கியபடி, மீண்டும் மீண்டும் தான் விரும்பிய பாதையிலேயே அவர்களைச் செலுத்த விழைந்தார் அவர். தென்னாப்பிரிக்காவில் பீனிக்ஸ் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஆரம்ப காலத்தில் காந்தியடிகள் வகுத்த சில போராட்டங்களில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு அனைவரும் இளைய காந்தி என அழைக்கும் அளவுக்கு தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டிருந்தார் காந்தியடிகளின் மூத்த மகன் ஹரிலால். ஒரு தருணத்தில் வெளிநாட்டுக்குச் சென்று படிப்பதற்கான உதவித்தொகை அவருக்குக் கிடைக்கும் நிலையில் இருந்தது. ஆனால் தன் பிள்ளைகள் தியாகப்பாதையை ஏற்கவேண்டும் என விரும்பிய காந்தியடிகள் அந்த வாய்ப்பை இன்னொரு மாணவருக்கு அளித்துவிட்டார். அந்த ஏமாற்றம் ஹரிலாலின் மனத்தில் ஆறாத புண்ணாக அமைந்துவிட்டது. தந்தை தன்மீது எடுத்துக்கொண்ட உரிமையை அவர் தன் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையாகக் கருதி மனம் புழுங்கினார். அக்கணம் முதல் ஹரிலால் தன் தந்தையின் பாதையிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கினார்.
Reviews
There are no reviews yet.