நானும் என் திராவிட இயக்க நினைவுகளும்:
தொகுப்புரை
அன்புள்ள அப்பா,
எனக்கு சில பெருமைகள் உண்டு.
உங்களின் பிள்ளை நான் என்பது அவைகளில் முதன்மையானது.
நம் வீட்டில் பெரியவர் நீங்கள்;
கடைசி குழந்தையும் நீங்கள் தான்!
திண்ணைப் பள்ளிக் கூடத்துக்கு என்னைத் தூக்கிப் போன உங்கள் தோள்களை இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.
ஞாபகம் தெரிந்த அந்த நாள் முதலாய் இதுவரை நீங்கள் என்னை அடித்ததேயில்லை என்னும் ஆதங்கமும் எனக்குண்டு.
அம்மாவின் கண்டிப்பு இல்லையானால், அலைகள் திசைமாறிப் போயிருக்கும்.
அடிக்கடி நீங்கள் காணாமல் போய்விட்டு, ஐந்தாறு மாதங்களுக்குப் பின் வீடு திரும்பிய கதைகளை அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அப்படி நீங்கள் ஆற்றிய பணியால்தான், இன்று அத்தனை பிள்ளையும் நலமாய் இருக்கிறோம்.
நீங்கள் பறித்தீர்கள்; நாங்கள் பசியாறினோம்.
நீங்கள் நடந்தீர்கள்; நாங்கள் களைப்பாறினோம்.
உங்கள் பையில் பணமிருந்தது, நான் பார்த்த நாள் குறைவு. ‘வளமான செல்வத்தை மறைவாகப் பெட்டியில் வைத்ததே என்றுமில்லை” நீங்கள்.
உங்கள் கால்களின் 78 வருடப் பயணத்தை என் சின்ன எழுதுகோலால் அளக்க முடியவில்லை.
ஆனாலும்
இந்தப் புத்தகத்தை எழுதி முடித்தபோதுதான், நான் எழுதக் கற்றுக்கொண்டதற்கே ஒரு அர்த்தம் வந்தது.
நீங்கள் என்னிடம் பேசியது போலவே, இந்தப் புத்தகத்தைப் பேச்சுவழக்கில் எழுதியிருப்பதால், உங்கள் கருத்துக்களை மட்டுமில்லாமல், உங்கள் குரலையும் உள்ளே பதிவு செய்திருக்கிறேன்.
உங்கள் கருத்து, உங்கள் பணி, உங்கள் குரல், உங்கள் உருவம், உங்கள் கையெழுத்து எல்லாவற்றையுமே இந்தப் புத்தகத்திற்குள் பார்க்கமுடியும்.
என் கருத்து, என் மொழிநடை எதுவுமே உள்ளே வந்து விடக் கூடாது என்பதில் கவனமாயிருந்திக்கிறேன்.
பழைய புகைப்படங்கள், பழைய கடிதங்கள் இவைகளே இன்னும் அதிகமாய்ச் சேர்க்க முடியாதது ஒரு குறை, அக்குறை நீங்கும் அடுத்த பதிப்பில்!
உங்கள் பெயரைச் சொன்னதும் எனக்குக் கொடுத்துதவிய திரு.சுபாசுந்தரம், திரு கோவிந்தன் ஆகியோருக்கு என் நன்றி என்றும் உண்டு.
இந்தப் புத்தகத்தை
நீங்களும், அம்மாவும் எங்களுக்கு விட்டுப்போகும் சொத்தாய் நினைக்கிறோம்.
அன்புடன்,
– சுப.வீரபாண்டியன்
Reviews
There are no reviews yet.