Micha Kathaikal
கரிசல் இலக்கிய மேதை கி.ரா. அவர்கள், அகவை தொன்னூற்றெட்டில் படைத்தளித்த எழுத்துக்கள் இவை.
அவர்தம் நீண்ட வாழ்வின் அனுபவமும் அவருக்கே உரித்தான எள்ளலும் இரண்டறக் கடைந்து சமைத்த அமுதம் என இவற்றைக் கொண்டாடலாம்.
கி.ரா.வின் வாசகர்களுக்கு எதிர்பாராமல் கிடைத்த புதையல் என்பதாகவும் கொள்ளலாம்.
மனித உள்ளங்களின் மகா வித்தைகளையும் விந்தைகளையும் தம் மொழியில் விரித்துக்கொண்டே செல்கிறார் கி.ரா.
தமது மண்ணில் தாம் அறிந்த எளிய மனிதர்களில் தொடங்கி ரசிகமணி டி.கே.சி போன்ற அபூர்வ மனிதர்கள் வரைக்கும் தன் எழுத்தால் வரைந்துகொண்டு செல்கிறார்.
ஒவ்வொரு வாசகனின் புத்தக அலமாரியிலும் இருக்கவேண்டிய அபூர்வ நூல் இது.
Kmkarthikn –
கி.ராவைக் கொண்டாடுவோம்.
நம்ம வீட்டு கொண்டாங்களை எப்படி போட்டோ புடிச்சு ஆல்பமா போட்டு காலத்துக்கும் வெச்சு வெச்சு பாத்து மீண்டும் மீண்டும் அந்த காலத்துக்கே சென்று திரும்பி அந்த கொண்டாட்டத்தை கொண்டாடுவோமோ அதேபோல கிராவைக் கொண்டாடியிருக்கும் புத்தகம் தான் இந்த மிச்சக் கதைகள் புத்தகம்.
புத்தகத்தில் பக்கதுக்குப் பக்கம் அய்யாவோட போட்டோ தான். அவரை அணுவணுவா ரசிச்சு எடுத்த புகைப்படங்கள். நடு நடுவுல கொஞ்சம் கதைகள்.
பெரும்பாலானோர் சொல்றது மனுசன் 98 வயசுல எப்படி எழுதிருக்கார் பாருங்கன்னு. அவுங்களுக்கெல்லாம் தெரியாதுன்னு நெனைக்கிறேன். அவரோட எழுத்துக்கு வயசு, அவர் எந்த வயசுல எழுத ஆரம்பிச்சாரோ அந்த வயசுலயே நின்னுருச்சுன்னு.
புத்தகத்துல மொத்தம் 19 கதைகள். முதல் கதையே வர்ணம். பாரதியார் என்ன நிறம் அப்படிங்கிற கேள்வியோட விவாதம் தொடங்கி, என்.எஸ். கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர் போன்ற பெரிய ஆட்களெல்லாம் சேர்ந்து பண்ணுன ஒரு கொலையைப் பத்தி பேசி, இன்னும் பிற வர்க்க நியாய அநியாயங்களைப் பேசி இறுதியில் எல்லாம் சரி எங்கிற வார்த்தையோடு முதல் கதையை முடிக்கிறார். அதற்கு அடுத்த பத்தி இப்படி எழுதுகிறார்.
“எல்லாம் சரிதான்” என்று இங்கே நான் சொல்லியிருப்பது, அனைத்தையும் சரி என்று ஒப்புக்கொண்ட அர்த்தத்தில் அல்ல.
ரெண்டாவது கதை “எந்த மூலை” தேங்காத்தண்ணி விரும்பியாக தன்னோட மனைவியைப் பற்றி சொல்லும் கதை. ஒரு தேங்காயை எப்படி ஒடைக்கணும். ஒடைச்ச தேங்காயிலிருந்து எப்படி தேங்காத்தண்ணி புடிக்கணும்னு ஒரு குழந்தைக்குச் சொல்லுகிற மாதிரி சொல்லிக்குடுக்கிறார்.
“சில தேங்காத் தண்ணி வெறியர்கள் அவர்களுடைய வாயிக்கு நேரா தண்ணி விழும்படி வச்சி சொட்டுக்கூட சிந்தாமல்க் குடித்து விடுவார்கள்”
அய்யாவோட எழுத்து கொண்டாறது எப்போதுமே இதுபோன்ற எளிய விஷயங்களைத்தான். அதை அய்யோவோட எழுத்துல படிக்கும்போது நமக்குமே கூட அது ஒரு கண்கொள்ளாக் காட்சி போல ஆக்கிவிடுவார்.
பல ஆண்டுகள் ஆஸ்பத்திரிகளிலேயே ஆயுஸை செலவளித்திருக்கிறீர்கள். அது பற்றி ஒன்றும் நீங்கள் சொன்னதாகத் தெரியலையே!
சொல்லணும். இந்த நூறு வயசு முடியட்டுமே என்று பார்க்கிறேன் என்றேன்.
அவ்வளவு நம்பிக்கையா!
தொன்னூற்று ஆறு கழிஞ்சிதுன்னா கொஞ்சம் விட்டு வைப்பான் எமன்.
யோகம் இருந்தால் நூத்தி எட்டுவரையும்கூட போகும். அதுவும் தாண்டினா நூத்தி இருவது வரை போகும் என்பார்கள்.
எமனுக்கு ஒரு நொடி என்பது நமக்கு எத்தனையோ வருசங்கள்.
இப்படியான ஒரு உரையாடலை வாசிக்கும் போது அறியாமல் அழுதுவிட்டேன். அய்யா இறந்து விட்டாரா என்ன!
வளர்ச்சி மனவளர்ச்சி என்று தலைப்பை வைத்து விட்டு கதையின் முதல் வரியை இப்படியை ஆரம்பிக்கிறார்.
“அழுத்திச் சொல்ல வேண்டியிருப்பதால் ரெண்டு தடவைகள் சொல்ல வேண்டியிருக்கிறது”
மனவளர்ச்சி இல்லாதவர்களை வைத்து மாரடிப்பது சங்கடமான விஷயம்னு அய்யா சொல்ல வர்ற செய்தி பாலியல் சார்ந்த தெளிவைத் தான்.
அக்மார்க் கி.ரா கதை ஒன்னு இந்த தொகுப்புல இருக்கு. அது தான் “பொக்குக் கதெ” கி.ராவோட விந்தை மனிதக் கூட்டங்களில் மேலும் ரெண்டு மனிதர்களைக் கூட்டியிருக்கார். முதன்முதலாக “கோபல்ல கிராமம்” படித்தபோது இருந்த அதே கிறக்கம் தான் பொக்குக்கதெக்கும் வரும்.
ஜமுனாங்கிற தலைப்பின் கீழ் அய்யா எழுதியது :-
“நண்பர்கள் சொல்லுவார்கள் அவர்கள் கும்பகோணம் போனால், எந்த தெருவிலாவது ஜானகிராமனின் ஜமுனா தட்டுப்படுவாளா என்று அவர்கள் கண்கள் தேடுமாம்!
அவர்கள் இடைச்செவலுக்கு வந்தால் யாரைத் தேடுவார்கள்?”
தேடுவதற்கா பஞ்சம், சங்கைய்யால ஆரம்பிச்சு இந்த இவள் வரைக்கும் பலபேரைத் தேடி எனக்கே தனிப்பட்ட ஒரு பயணம் போகணும்னு ஒரு ஐடியா இருக்கு.
இதுமாதிரி ஒவ்வொரு தலைப்பின் கீழும் அய்யாவுடன் நேரடியாக உரையாடியதைப் போலவும், நேரடியாக கதை கேட்டதைப் போலவும் மிக நெருக்கமாக பிணைந்திருக்கிறார்கள் புத்தகத்தை.
நரைகளுக்காக ஒரு கதை, வெத்தலைக்காக ஒரு புராணம், குற்றாலத்துக்கான ஒரு வழிகாட்டிப் பார்வை, நயினாப் பிள்ளை பற்றி ஒரு இசைக் கச்சேரி, வழக்கம்போல ரசிகமணிக்கு ஒரு புகழ்மாலை என வழக்கமான கி.ரா வாழ்ந்து கொண்டிருக்கிறார் புத்தகத்தில்.
கதையைக் கதையாகக் கேட்கத் தெரியணும். அப்போதான் கதைகள் செழிக்கும்.
என்கிற அய்யாவின் வார்த்தைகளோடே முடிக்கிறேன்.