1 review for வாசக பர்வம்
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹210.00.₹200.00Current price is: ₹200.00.
ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மெளனங்களும் பதற்றங்களும் நிரம்பியவை. எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நூலில் தான் எதிர்கொண்ட படைப்பாளுமைகள் குறித்த அற்புதமான சித்திரங்களை உருவாக்குகிறார். தமிழில் ஒரு எழுத்துக்கலைஞன் தனது முன்னோடிகள் குறித்து எழுதிய மனம் ததும்பச் செய்யும் வரிகள் இவை.
Delivery: Items will be delivered within 2-7 days
Poonkodi balamurugan –
புத்தகம் : வாசகபர்வம்
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்.
எல்லா எழுத்தாளர்களும் யாரோ ஒருவரின் வாசகர்களே. அப்படி தான் வாசித்த , நேசித்த எழுத்தாளர்கள் பற்றி , அவர்களுடன் ஆன தன் அனுபவங்களை பற்றிய நூல் தான் வாசகபர்வம். வைக்கம் பஷீரிலிருந்து தொடங்கி , ப.சிங்காரம் , சுஜாதா , பிரமீள் , சி.சு. செல்லப்பா, விக்ராமதித்யன் , கோபி கிருஷ்ணன் , பிரபஞ்சன் ,வண்ணநிலவன் ,
ந.முத்துச்சாமி , அசோகமித்திரன் ,
ஏகே.ராமானுஜன் , கவிஞர் மீரா , கிரா., வண்ணதாசன் , சுந்தர ராமசாமி , கோணங்கி என்று தொடர்ந்து ஜெயகாந்தனில் முடிக்கிறார்.
பால்யகால சகியை வாசித்த நாளிலிருந்தே பஷீரை சந்திக்க வேண்டும் என்ற அவருடைய ஆவல் தொடங்கி இருக்கிறது. தீவிர இலக்கியம் என்பது தடி தடியான புத்தகங்களாகவும் , நூற்றுக்கணக்கான சம்பவங்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசிரியரின் எண்ணங்களை பஷீரின் குறுநாவல்கள் தகர்த்தெறிந்தது என்று குறிப்பிடுகிறார். பஷீரின் எழுத்துக்களில் துக்கம் தான் பரிகாசமாய் வெளிப்படுகிறது. மறைக்கப்பட்ட வலியொன்று தான் பரிகாசமாய் வெளிப்பட்டு பிறரை சிரிக்க வைத்திருக்கிறது. எளிய மனிதர்களின் மீதான அவரது அக்கறைதான் அவர் எழுத்தில் எங்கும் வெளிப்படுகிறது. பஷீருடன் ஆன ஒரு சந்திப்பில் எது உங்களை எழுத வைத்தது என்றதற்கு சனற்றும் தயக்கமின்றி பசி என்றாராம். ” பசித்த பொழுதுகளில் தன்னால் வேறு எதுவும் செய்ய இயலாது . அத்தோடு தனது பசியைப்பற்றி கவலையின்றி உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது என்ற ஆதங்கமும் தான் என்னை எழுத வைத்தது என்றுசொன்னாராம். பிரிக்க முடியாதது வறுமையும் புலமையும் தான் போலும். எழுத்தாளர்களுக்கு கிடைக்க கூடிய பணம் என்பது மிகக் குறைவுதான். அவர்களின் உழைப்பை மிக எளிதாய் திருடிவிடும் பிடிஎப் புத்தகங்களை படிக்காதீர்கள் என்பது நம் குழுவில் அடிக்கடி கதிர் அவர்களால் நினைவுறுத்தபடுகிறது என்பதை நான் நினைவு கூர்ந்தேன் .
தமிழின் முக்கிய நாவல்களாய் கருதப்படும் புயலிலே ஒரு தோணி , கடலுக்கு அப்பால் போன்ற ப.சிங்காரம் அவர்களின் நாவல்கள் தான் யுத்தகால வாழ்வைப்பற்றியும் நெருக்கடியான அந்த நாட்களில் ஏற்படும் மனித அவலங்களைப் பற்றியும் அடையாளம் காட்டுகின்றன . சிங்காரத்தின் வாழ்க்கை எப்போதும் அவரை நினைவிலே அமிழ்ந்து போக வைத்து மனதில் கொழுந்து விட்டெரியும் கடந்தகால நினைவின் ஜ்வாலைகளுடன் மௌனமாக வாழ்ந்து கொண்டிருந்தார் . நெருக்கமான நட்புமில்லை. யாரோடும்உறவுமில்லை. தனிமையில் இருந்திருக்கிறார். தனிமை எத்துணை வலியானது..அதுதான் அத்தனை வலிமையாய் அவர் எழுத்துக்களில் வெளிப்பட்டதோ..
தி.நகரில் ரங்கநாதன் தெருவிலுள்ள முன்றில் புத்தகக்கடை தான் இலக்கியவாதிகளின் சந்திப்பிற்கான வெளியாக இருந்திருக்கிறது . அங்குதான் அவர் பல எழுத்தாளுமைகளைச் சந்தித்து உரையாடி இருக்கிறார்.
சுஜாதா அவர்களை வெளியே விமர்சித்துக் கொண்டே ரகசியமாய் அவரை தொடர்ந்துவாசித்துக் கொண்டிருந்தது விசித்திரமான ஒன்று. இலக்கியம் , நாட்டார் வழக்காறு , தமிழ்செவ்விலக்கியங்கள் , நாடகம் , சினிமா , துப்பறியும் கதைகள் , விஞ்ஞான கதைகள் , குறுநாவல்கள் , இசை என்று அவர் தொடாத துறைகளே இல்லை என்று சிலாகித்து அவர் நுனிபுல் மேயவில்லை என்பதை தன் கருத்துகளில் ஆழப் பதிக்கிறார். எங்கோ கிராமத்தில் பிறந்துசென்னை வந்து அடையாளம் ஏதுமின்றி இருந்த நாளில் தன்னை சமமாய் நடத்தி பேசி, விவாதித்து , நல்ல நல்ல எழுத்துக்களை , கவிதைகளை , புனைக்கதைகளை அறிமுகப்படுத்திய கவிஞர் பிரமீள் அவர்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
.தான் வெளியிட்ட புத்தகங்களை தலைச்சுமைகளாக கட்டித் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு இடமாக சென்று விற்று வந்த செல்லப்பா அவர்களைப்பற்றி வியந்து பேசுகிறார்.ஜல்லிக்கட்டை மையமாக வைத்து தமிழில் வெளியான வாடிவாசல் என்ற முக்கியமான நூலின் ஆசிரியர் தான் இந்த செல்லப்பா அவர்கள். சிறுபத்திரிக்கைகளின் முன்னோடி இதழ் எழுத்து. அந்த இதழின் ஆசிரியரும் செல்லப்பா அவர்கள் தான்.
கவிஞனாகவே வாழ்வது என்பது தமிழ் சூழலில் ஒரு பெரிய சவால் .வாழ்க்கை நெருக்கடிகள் ஒருபுறம் இழுக்க மறுபுறம் கவிதைக்குரிய அங்கீகாரம் இன்றியும் தனிமையில் தள்ளப்படுவதுதான் காலம் காலமாக நடைபெறுகிறது. அத்தனையும் மீறி அந்த கவிஞனை முன்னெடுத்து செல்பவர்கள் நிஜமான வாசகன். அப்படி கவிஞனாகவே வாழ்ந்து , எப்போதும் தன்னை சுற்றி கொண்டாட்டத்தையும் , இளைஞர் பட்டாளத்தையும் வைத்திருக்கும் விக்ரமாதித்யன். அவரின் கவிதைகள் எளிய மனிதர்கள் பால் மிகுந்த அக்கறை கொண்டவை. நடுத்தர வயதில் வேலையற்று போன ஒரு மனிதன் வேலை தேடி , குடும்பத்தைப் பிரிந்து செல்லும் ஒரு அதிகாலை பற்றிய கவிதை மிகவும் வலி நிரம்பியது.
அன்றைக்கு
அதிகாலை இருள்
பிரிந்திருக்கவில்லை..
நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது.
சாரல் மழை பெய்து
சுகமான குளிர்வியாபித்திருந்தது.
அயர்ந்து தூங்கிக்
கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்துவிளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாய் இருக்கிறது
கண்ணுக்குள்…
என்றைக்குமான வலியைக் கடத்தும் கவிதை இது. இந்த தனிமைபடுத்தப்பட்ட காலங்கள் முடிந்து வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரத்த குடும்பத்தை பிரிந்து எங்கோ வேலை தேடச் செல்லும் எண்ணற்றோரின் எதிர்கால வலியையும் என் மனதில் விதைக்கிறது.
இப்படி ஒவ்வொருவர் பற்றி நினைவுகளும் நீள்கிறது.இருக்க இடமின்றி , உண்ணாமல் பல நாட்கள் அலைந்து காலத்தால் அழியா நூல்களைத் தந்த ஒவ்வொரு எழுத்தாளரையும் நம்முள் கடத்துகிறது இந்நூல். மண்ணில் புதைந்த ஒவ்வொரு உயிரும் என் கதையை எழுது என்று ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதைச் செவிமடுத்து அதை தன் எழுத்துள் கொண்டு வருபவர்கள் காலம் அழியா நூல்களைத் தருகிறார்கள் என்பது தெள்ளெனத் தெரிகிறது.