எரியும் பூந்தோட்டம்
ஒரே ஒரு தவறுதான் ஆனால் பின்விளைவாய் ஒரு மனிதன் மனதில் குடும்பத்தில் ஒட்டு மொத்த வாழ்க்கையிலும் எத்தனை எத்தனை பாதிப்புகள்? தப்பே செய்யாத ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை சிதைந்து சீரழிந்த அவலம்; இவ்விருவேறு மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தின் மூலம் எய்ட்ஸ் எனும் கொடிய நோய் குறித்தும் அது தொடர்பான சமூகப் பார்வை மற்றும் பிரச்சனைகள் குறித்தும் சுவாரசியமிகு ஆய்வு ஒன்றை முன்வைத்துள்ள நாவல்.
Arunthathi ravishankar –
புத்தகம் :எரியும் பூந்தோட்டம்( சாகித்திய அகாதமி விருது பெற்ற தெலுங்கு நாவல்)
ஆசிரியர் :சலீம்
தமிழ் மொழிபெயர்ப்பு: சந்தா தத்
ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் HIV யால் பாதிக்கப்பட்ட நபர்களின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் நாவல்.
சமூகத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் மீதான பார்வையை இந்நாவலின் மூலம் முழுதாக அறிந்து கொள்ளலாம்.
இருவேறு கதைக்களம்.
,முன்னாள் காதலியால் HIV தொற்றுக்கு ஆளானதாக எண்ணி குற்ற உணர்வில் தினம் தினம் இறந்து கொண்டிருக்கும் குமார்.
தான் கணவனால் நோய் தொற்றுக்கு ஆளாகி, சமூகத்தால் அலைக்கழிக்கப்படும் நாகமணி.
குமாரின் நோய் அச்சம் நாவலின் இறுதி வரை பயணிக்கிறது நாகமணி எல்லா இன்னல்களையும் தாண்டி “பாசிட்டிவ் பீப்பிள் கேரில்” இணைந்து வெற்றிப் பெண்மணி ஆகிறார்.
HIV பற்றிய மக்களின் அறியாமை, எய்ட்ஸ் நோயாளிகளை மற்றவர்கள் அணுகும் விதம், முறையற்ற உறவால் மட்டுமே அந்நோய் பரவுவதாக நிலவும் நம்பிக்கை,விளம்பரத்திற்காக” கவண் ” பட பாணியில் பாதிக்கப்பட்டவரின் முகத்தை திரையிடும் கேடு கெட்ட ஊடகங்கள், தவறான ரிப்போர்டுகளை தரும் ரத்த பரிசோதனை மையங்கள் என எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு விழிப்புணர்வு நாவல்.