அம்பேத்கரின் வாழ்க்கை என்பது ஒடுக்கப்பட்ட பெருந்திரளான தலித் மக்களின் வாழ்க்கையும்தான். அம்பேத்கரை அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பொருத்தி, அவர் அக்கறை செலுத்திய தலித் மக்களோடு இணைத்துப் பார்க்கும்போது மட்டுமே அவரைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் கிடைக்கும். இந்தச் சித்திரத்தைக் கொண்டு இந்தியாவைப் புரிந்துகொள்ள முயலும்போது புதிய பார்வைகளும் கோணங்களும் சாத்தியமாகின்றன. அம்பேத்கரின் அரசியலையும் மகாராஷ்டிராவின் மகர் இயக்கத்தையும் ஒன்றோடொன்று உரையாடவிட்டு, விரிவாகவும் ஆழமாகவும் அலசி ஆராயும் முதல் ஆய்வு இது. ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் ஓங்கி ஒலிக்கும் அரசியல் குரலாக அம்பேத்கர் எவ்வாறு மாறினார், இன்றுவரை இந்திய அரசியலின் தவிர்க்கமுடியாத பெரும் சக்தியாக அவர் ஏன் திகழ்கிறார், ஒரு தலித் தலைவராக மட்டும் ஏன் அவரை நாம் குறுக்கிவிடமுடியாது என்பதற்கான காரணங்கள் தெள்ளத்தெளிவாக இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. மகர் மக்களின் வாழ்வியல், மகாராஷ்டிராவின் சாதி அரசியல், சாதி இந்துக்களின் ஒடுக்குமுறை, தீண்டாமையும் அதற்கு எதிரான போராட்டமும், தேசிய விடுதலை இயக்கம், காந்தி, வட்ட மேஜை மாநாடுகள், புனே ஒப்பந்தம், பௌத்தம், மதமாற்றம் என்று அம்பேத்கரையும் அவர் வாழ்ந்த காலகட்டத்தையும் முற்றிலும் புதிய நோக்கில் கண்முன் கொண்டு வருகிறார் தலித் சமூக வரலாற்றின் முன்னோடியாகத் திகழும் எலினார் ஸெல்லியட். அவர் முன்வைக்கும் ஆதாரங்கள் இதுவரை ஆராயப்படாதவை. அவர் வந்தடையும் முடிவுகள் மறுக்கமுடியாதவை, நம் புரிதலை மாற்றக்கூடியவை. அம்பேத்கரின் உலகை சாத்தியமாகக்கூடிய அத்தனை பரிமாணங்களோடும் காட்சிப்படுத்தும் இந்நூலைத் தமிழில் வெளியிடுவதில் கிழக்கு பதிப்பகம் பெருமிதம் கொள்கிறது.
Reviews
There are no reviews yet.