அசை: ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகள்

Publisher:
Author:

150.00

அசை: ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகள்

150.00

Asai: Oru Seithiyaalanin Ezhuthappadaatha Kurippugal

எஸ். அர்ஷியா, பிறந்தது 1959ல். அதாவது தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது. காமராஜர் முதல்வராக இருந்தபோது. திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்து, தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்து திமுக வளர ஆரம்பித்தபோது. 1950-60களில் காமராஜரின் முயற்சியால் கல்வி பரவலாகிறது. அனைத்து சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கிறார்கள். மதிய உணவுத் திட்டத்தால் பயனடைகிறார்கள். அர்ஷியாவுக்கு நினைவு தெரியும்போது இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுக்கிறது. தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வீச்சு அதிகரிக்கிறது. ஆட்சிக்கட்டிலை நோக்கி மெல்லமெல்ல நகரத்தொடங்கி அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியும் அமைகிறது.
பதினைந்து, பதினாறு வயதில் அர்ஷியா நடமாடும்போது, திமுகவை விட்டு எம்ஜிஆர் விலகி அதிமுக என்ற கட்சியைத் தொடங்குகிறார். நாடுமுழுவதும் எமர்ஜென்சி அமலாகிறது. மார்க்சிய – லெனினிய அமைப்புகளின் தாக்கம் தமிழக இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்ஜிஆர் முதல்வராகிறார். பாரதிராஜா, மகேந்திரன் உள்ளிட்ட நியூவேவ் இயக்குநர்கள் தமிழ்ச் சினிமாவை புரட்டிப் போடுகிறார்கள்.
இருபதுவயதைக் கடந்த இளைஞராக மதுரை மண்ணில் அர்ஷியா சுற்றி வந்தபோது, வட மாவட்டங்களில் மார்க்சிய – லெனினிய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், தோழர்களும் படுகொலை செய்யப்படுகிறார்கள். தென்மாவட்டங்களை மையப்படுத்தி மதுரையில் இதைக் கண்டித்து கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. PUCL என்ற மக்கள் அமைப்பு முழுவீச்சுடன் மாநில அரசைக் கண்டிக்கிறது.
ஏவிஎம்மின் ‘முரட்டுக்காளை’, ‘சகலகலாவல்லவன்’ உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி பெறுகின்றன. சமூகத்தளத்திலும் திரைத்துறையிலும் இதன் பாதிப்பு எதிரொலிக்கிறது. எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். 1984 தமிழக சட்டமன்ற தேர்தலில் ‘படுத்துக்கொண்டே’ அவர் ஜெயிக்கிறார். அதிமுக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி யைக் கைப்பற்றுகிறது.
1987ம் ஆண்டு பயிற்சிப் பத்திரிகையாளராக இதழியல் துறையில் அர்ஷியா, ‘மதுமலரன்பன்‘ எனும்பெயரில் தனது வலதுகாலை எடுத்துவைத்து நுழைந்தபோது எம்ஜிஆரின் மரணமும் அதைத் தொடர்ந்து ஜானகி – ஜெயலலிதா தலைமையில் அதிமுக இரண்டாக உடைவதும் அரங்கேறுகிறது.
இந்தத் தமிழக முன்கதைச் சுருக்கம் எதுவும் ‘அசை’யில் இல்லை. ஆனால், வாக்கியங்களுக்கு இடையில் இவற்றை வாசகர்கள் வாசிக்க முடியும். அதற்கான வாய்ப்பை எஸ்.அர்ஷியா தன் கட்டுரைகளின் அதிகளவில் கொடுத்திருக்கிறார். அந்தந்த மாவட்டங்களின் – குறிப்பாகத் தமிழகத்தின் தென்பகுதி – சமூக, பொருளாதார வாழ்வு எப்படி இருந்தது… செய்தி சேகரிக்க அவர் சென்றபோது என்னவாக அவை மாறியிருந்தன… என்பதைக் காட்சிகளாக விவரித்திருக்கிறார். இதன்கூடவே இன்னொரு வளர்ச்சியும், அதுசார்ந்த சோகங்களும் மவுனமாக ‘அசை’போடப்பட்டிருக்கிறது. அதுதான் பத்திரிகையுலக வரலாறு!

அசை : ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகள் -கே.என்.சிவராமன் (குங்குமம் முதன்மை ஆசிரியர்)

Delivery: Items will be delivered within 2-7 days