பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முதலில் தமிழகத்தில் உருவானது.
பெரியார் அதை முன்னெடுத்தார். சுயமரியாதை என்னும் சொல் தமிழர்களின் மந்திரச் சொல்லாக மாறியது. இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிடர் கழகம் பிரகடனம் செய்த போரில் ஒட்டுமொத்த தமிழகமும் இணைந்துகொண்டது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகத் தொடங்கி, தமிழ்ச்சமூகத்தை ஆளும் மாபெரும் அரசியல் சக்தியாக திமுகவை அண்ணா வளர்த்தெடுத்ததன் பின்னணியில்தான் எத்தனைப் போராட்டங்கள். தியாகங்கள்!
திராவிட இயக்கத்துக்கான ஆரம்பப் புள்ளி உருவான 1909 தொடங்கி அண்ணா மறைந்த 1969 வரையிலான அரசியலும் சரித்திரமும் புத்தகத்தின் முதல் பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
Kathir Rath –
#திராவிட_இயக்க_வரலாறு
ஆர்.முத்துக்குமார்
பள்ளிப்படிப்பை கடந்த அனைவருக்கும் நவீன வரலாறு அல்லது சமகால வரலாறு பற்றி ஒரு எண்ணம் இருக்கும். எப்படி என்றால் எல்லாம் நமக்கு தெரிந்தது தானே என்ற ஒரு அசட்டுத்தனம். அதென்னவோ ஆயிரமாண்டு முந்தைய வரலாற்றினை மெனக்கெட்டு தேடித்தேடி வாசிப்பார்கள். சமகால வரலாறு போட்டித் தேர்வுக்கு வாசிப்பவர்கள் கூட அதிகம் வாசிப்பதில்லை. என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
ராமச்சந்திர குஹாவின் இந்தியா காந்திக்கு பிறகு மற்றும் இந்தியா நேருவுக்கு பிறகு வாசித்த பிறகுதான் சமகால வரலாற்றில் தெரிந்தது கையளவு, தெரியாதது உலகளவு என்பது புரிந்தது. அதன்பின்னர்தான் கடந்த நூறாண்டு காலகத்தின் கதை சொல்லும் புத்தகங்களை தேடி வாசித்தேன். அவ்வகையில் நவீன தமிழகத்தின் வரலாற்றை திராவிட இயக்கங்களின் வரலாற்றின் கண்ணோட்டத்தோட சொல்வதுதான் இந்த இரண்டு புத்தகங்களும்…
எடுத்ததும் அயோத்திதாசரின் திராவிட மகாஜனசபையில் இருந்து துவங்குவார் என்று எதிர்பார்த்து துவங்கினேன். இல்லை, நீதிக்கட்சி துவக்கத்தில் இருந்து துவங்குகிறது. சரியாக சொல்லப் போனால் மிண்டோ மார்லி சீர்திருத்தம் 1909ல் இருந்து துவங்குகிறது. எப்படி பிராமண எதிர்ப்பு மனநிலை உருவாகிறது என்பதில் துவங்கி, அது இயக்கமாக வளர்வது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனக்கு இதுவரை நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த்தில் இருந்து தான் வரலாறு தெரிந்து இருந்தது. ஆனால் அந்த தேர்தலில், அதாவது இந்தியாவின் முதல் தேர்தல் 1921 ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பெற ஒரு மனிதர் உயிர்தியாகம் செய்ய வேண்டி இருந்த்து என்பது இந்நூலின் மூலம்தான் தெரிந்து கொண்டேன்.
டி.எம்.நாயர். காங்கிரஸ் தலைவராக வெள்ளையரை எதிர்த்த மனிதர், பார்ப்பனர்களால் பாதிப்புக்குள்ளாகி ஜஸ்டிஸ் பார்ட்டியின் முக்கிய தூணாகிறார். இப்புத்தகத்தில் அவரது ஒரு உரை கொடுத்திருக்கிறது. அதை படிக்கவதற்காகவே இப்புத்தகத்தை வாங்கலாம்.
ஆட்சிக்கு வந்த்துமே நீதிக்கட்சிக்குள் நடைபெறும் பதவிப் போட்டிகள். அதன் எழுச்சி, வீழ்ச்சி என ஒரு புறம் இருக்க, நீதிக்கட்சிக்கு போட்டியாக பார்ப்பனர் அல்லாதோருக்காக சென்னை ஜன சங்கம் என்று காங்கிரசின் துணை அமைப்பு உருவாக்கப்பட்டு, ஜஸ்டிஸ் பத்திரிக்கைக்கு போட்டியாக, தேசபக்தன் என்றொரு பத்திரிக்கை, திருவிகவால் துவங்க படுகிறது. அதற்கு சந்தாதாரர்களை பிடித்து தர சொல்லி, வரதராஜுலு நாயுடு, ஈரோட்டில் இருந்து ஒரு மனிதரை அணுக, அவரும் பிடித்து தர, அந்த செல்வாக்கன மனிதரை அப்படியே காங்கிரஸ் சென்னை மாகாண துணைத் தலைவர் பதவி கொடுத்து அரசியலுக்கு இழுத்து வருகிறார்கள். அதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது, அந்த மனிதர்தான் ஈவேரா பெரியார்.
வவேசு ஐயரின் சேரன்மாதேவி ஆசிரம பிரச்சனையி்ல் காங்கிரசில் இருந்து வெளியேறு சுயமரியாதை இயக்கம் துவங்கும் ஈவேராவினை காலம் நீதிக்கட்சியுடன் இணைக்கிறது. அவருடன் இன்னொரு நபர் வந்து சேர்கிறார் காஞ்சிபுரத்தில் இருந்து. பெயர் அண்ணாதுரை.
சுதந்திரம் பெறும் வரையில் சுயமரியாதை இயக்கம் எப்படி திராவிடர் இயக்கமாக மாறி செயல்பட்டது என்பதை விடவும், அக்கால அரசியல் வரலாறு மிக தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது. சென்னை மாகாண அரசியலுடன் தேசிய அரசியலும்தான்.
அதைவிட முக்கியம் திராவிட இயக்கத்தின் பிளவு, அதாவது அண்ணா பிரிந்து சென்று திராவிட முன்னேற்ற கழகம் துவங்கிய சூழல் மிகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆதாரங்களுடன். பெரியார் மணியம்மை திருமணம் மட்டுமன்றி என்னென்ன விசயங்களில் இருவருக்குள்ளும் ஒத்து போகவில்லை என்பதை இப்புத்தகத்தில்தான் தெரிந்து கொண்டேன்.
நீதிக்கட்சி திராவிட இயக்கமாக மாற்றி மேடையில் அறிவிக்கப்படும் போது கருப்புக் கொடியில் சிகப்பு நிறம் காட்டப்பட வேண்டும். சிகப்பு மை இல்லை. ஒரு 20 வயது அளைஞன் தனது கையை கிழித்து ரத்தத்தால் அதனை நிறமூட்டுகிறான். அவன் பெயர் கருணாநிதி.
அதேபோல் திராவிட இயக்கத்தில் பெரியாரின் தீர்மானத்தை வழிமொழிந்து 12 வயதில் ஒரு சிறுவன் பேசுகிறான். அவன் பெயர் வீரமணி.
அண்ணாவின் சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தில் தனது அண்ணன் வேண்டாம் என்று சொன்னதால் நடிக்காமல் போகிறார் ஒரு நாடக நடிகர், அவர் பெயர் இராமச்சந்திரன். அவருக்கு பதிலாக நடித்து பெரும்புகழ் அடையும் நடிகரின் பெயர் கனேசனில் இருந்து சிவாஜி கனேசனாகிறது.
திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்து திமுக ஆரம்பித்த ஒரே வாரத்தில் எப்போதோ எழுதிய புத்தகத்திற்காக அண்ணா, பெரியார் இருவரும் தனித்தனியே தண்டிக்கப்பட்டு ஒரே சிறையில் அடைக்கப்படுவது செம ட்விஸ்டாக இருந்தது.
இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி மட்டும் எப்போது படித்தாலும் புல்லரிக்கிறது. அத்தனை இயக்கங்களையும் ஒருங்கிணைத்து போராடி வெற்றி காண்பது என்பது எவ்வளவு பெரிய விசயம்…!
ராஜாஜியை பதவி இறக்கி காமராசரை வைத்து வேண்டிய திட்டங்களை நிறைவேற்றிய பெரியாரின் திறன் யாருக்கு வரும்?
அதே போல் கருனாநிதியின் அரசியல் வெற்றிகள், ஈவிகே சம்பத் போன்ற பெருத்தலைகளை தாண்டி திமுகவில் எப்படி வளர்ந்தார் என்பதெல்லாம் எனக்கு புது தகவல்களே…
அதிலும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததும் பதிவி ஏற்பதற்கு முன்பே அனைவரும் சென்று பெரியாருடன் இணைவதெல்லாம் வேற லெவல். அரசியல் சாணக்கியருக்கு பிம்பிலிக்கி பிலாப்பி.
அண்ணாவை பற்றி மட்டுமே சொல்லி கொண்டே போகலாம். அதனை மாபெரும் தமிழ்கனவு புத்தகத்தில் சொல்லி கொள்ளலாம்.
திமுக ஆட்சியை பிடித்ததில் இருந்து தமிழக வரலாற்றின் இரண்டாம் அத்தியாயம் துவங்குகிறது. திமுகவை ஒன்றும் செய்ய முடியாமல் போகவே, என்னவெல்லாம் செய்து எம்ஜியாரை வெளியே கொண்டு வந்து தனிக்கட்சி துவங்க வைத்தார்கள் என்பதெல்லாம் புது தகவல்கள்.
மாநில சுயாட்சி என்றால் என்ன என்பது இந்தியாவிற்கே தமிழகம்தான் சொல்லி தந்திருக்கிறது. ராஜமன்னார் கமிட்டி அமைக்கப்பட்டதன் பின்னனியும் இப்புத்தகம் மூலமே அறிந்து கொண்டேன்.
நெருக்கடி நிலையினை திமுக எதிர்கொண்டதை போல வேறு எந்த இயக்கத்தாலும் எதிர் கொண்டு நின்றிருக்க முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சியை காங்கிரசுடன் இணைத்துக் கொண்டிருக்க, திமுக மட்டுமே இறுதி வரை எதிர்த்து போராடி இருக்கிறது.
அதிமுக உருவான பிறகு நடந்த கூத்துக்களை எல்லாம் இப்புத்தகத்தின் ஆதாரப்பூர்வமான விளக்கத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். அதே நேரம் அப்போதில் இருந்து இலங்கை பிரச்சனையில் இந்திய/தமிழகத்தின் நிலைப்பாட்டினை தெரிந்து கொள்ள இப்புத்தகம் பெரிதும் உதவும்.
திமுகவின் அடுத்த பிளவு, மதிமுக உருவாதல். அதன் விளைவுகள்.
அப்படியே நூல் பிடித்தார் போல 2010 வரையிலான நிகழ்வுகளை கடந்து வருகிறோம்.
அனைத்துமே ஆதாரப்பூர்வமாகத்தான் சொல்ல படுகிறது. அதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தலைவர்களின் பேச்சுக்களை அப்படியே பதிந்த்து சிறப்பு.
தமிழகத்தின் நூறாண்டு வரலாற்றினை தெரிந்து கொள்ள விரும்புவோர், திராவிட இயக்க வரலாற்றினை தெளிவாக தெரிந்து கொள்ள விரும்புவோர் கட்டாயம் இப்புத்தகத்தை படிக்க வேண்டும்.