இந்தியா 1948 – அசோகமித்திரன்
அசோகமித்திரனுடைய ‘இந்தியா 1948’ நாவல், அடிப்படையில் மனசாட்சி பற்றிய கதை. மனசாட்சி, மனசாட்சியால் உருவாகக்கூடிய குற்ற உணர்ச்சி ஆகியவை நாவலின் அடிச்சரடாக ஓடுகின்றன.
விரும்பியோ விரும்பாமலோ சில முடிவுகளை நாம் எடுத்துவிடுகிறோம். அது சரியா, தவறா என்பது அப்போது தெரியாது. சில முடிவுகளுக்கு வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். அந்தப் பொறுப்பை அனைவருமே ஒரே மாதிரி ஏற்றுக்கொள்வதில்லை. இந்த நாவலில் வரும் மையக் கதாபாத்திரம் தன் முடிவுக்கான முழுப் பொறுப்பை ஏற்கிறான். தன்னைச் சுற்றி உள்ள யாரையும் புண்படுத்தாமல் அந்த விஷயத்தை எப்படிக் கையாள்வது என்று பார்க்கிறான். இதனால், அந்தப் பொறுப்பின் சுமை குற்ற உணர்ச்சியாக மாறுகிறது.
அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த சராசரியான ஆணாக அவன் நடந்துகொண்டிருந்தால் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. மனசாட்சியின் உறுத்தல் இருந்திராவிட்டாலும் பிரச்சினை இருக்காது. ஆனால், அவனால் அப்படி நடந்துகொள்ள முடியாது. இதுதான் இந்தக் கதையைச் சாத்தியமாக்குகிறது.
ஒரு மனிதனின் மனசாட்சி, அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சி, தன்னைச் சேர்ந்தவர்கள் தொடர்பாக அவன் ஏற்றுக்கொள்ளும் பொறுப்பு, யாரையுமே அலட்சியப்படுத்த முடியாத இயல்பு. இவற்றைக் கொண்ட ஒருவனுடைய கதை இது. மனசாட்சியின் கதை.
இதே மனசாட்சிதான் தர்மபுத்திரனை வழிநடத்தியது. நச்சு கலந்த நீரை அருந்தி வீழ்ந்து கிடக்கும் நான்கு தம்பிகளில் யார் உயிர் பிழைக்க வேண்டும் என்று விரும்புகிறாய் என யட்சன் கேட்கும்போது, நகுலனை மட்டும் உயிர்ப்பித்துக் கொடுத்தால் போதும் என்று தர்மனைச் சொல்ல வைத்தது இந்த மனசாட்சிதான். எல்லாக் காலகட்டங்களிலும் எல்லாச் சூழல்களிலும் செயல்படும் மனசாட்சி இது. இந்த மனசாட்சியின் தவிப்பு, பயணம், அனுபவங்கள், அதிர்வுகள் ஆகியவற்றை இந்த நாவலில் நாம் உணரலாம்.
குடும்பங்களில் பெண்களின் நிலையையும் அசோகமித்திரன் இணைகோடாகக் கொண்டு வருகிறார். முடிவுகள் மேலிருந்து திணிக்கப்பட்ட காலம் அது. எது குறித்தும் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் இளம் தலைமுறையினருக்குக் குறைவு. குறிப்பாகப் பெண்களுக்கு மிகவும் குறைவு. அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு அதைப் பொறுப்பாக நடத்திச்செல்ல வேண்டும். பெண்களுக்கு எதுவும் தெரியாது என்பதல்ல. இந்த நாவலில், தன் மகனைப் பார்த்ததுமே அவனுக்கு ஏதோ பிரச்சினை என்பது அவன் அம்மாவுக்குத் தெரிந்துவிடுகிறது. தன் அண்ணன் சாமியாராகப் போனதிலும் அந்த அம்மாவுக்குக் கருத்து இருக்கிறது. அவர் எதையுமே வெளிப்படையாகப் பேசுவதில்லை. பெண்கள் எல்லாவறையும் அறிகிறார்கள். எல்லாவறையும் தாங்கிக்கொள்கிறார்கள்.
அந்தக் காலத்திலேயே பெண்களில் படித்தவர் கள், கார் ஓட்டத் தெரிந்தவர்கள் எல்லாம் இருந்திருக் கிறார்கள். ஆனால், அவர்கள் திறமைக்கும் அறிவுக் கும் ஏற்ற பங்கைக் குடும்பம் அவர்களுக்குத் தராது. ஆண்கள் தரும் சுமைகளையும் அவர்களுடைய மீறல்களையும் பொறுத்துக்கொண்டு குடும்பத்தின் ஆணிவேராகச் செயல்படுகிறார்கள். இந்தப் பரி மாணத்தையும் நாவல் அழுத்தமாகச் சொல்கிறது.
‘இந்தியா 1948’ அடிப்படையில் ஒரு தனிமனிதனின் கதைதான். அதேசமயம், அந்தக் காலகட்டத்தின் கதையும்கூட. நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் தொழில், அதிகாரவர்க்கம் ஆகியவை வளர்ந்துவந்த விதம், அதிகாரவர்க்கம் அரசியல்வாதிகளையும் மற்றவர்களையும் பார்த்த விதம், சர்வதேச உறவுகள், அமெரிக்காவின் நிலை, தாராவி போன்றதொரு இடத்தின் குரூரமான யதார்த்தம் எனப் பல்வேறு விஷயங்களை நம் அனுபவப் பரப்புக்குள் அசோகமித்திரன் கொண்டுவந்துவிடுகிறார். அசோகமித்திரன் பொதுவாக எதையும் சொல்வது இல்லை. இயல்பாகக் காட்டிவிடுவார். இந்த நாவலிலும் அப்படித்தான்.
அசோகமித்திரனின் புனைவுகளில் கதைச் சரடைப் பிடித்துக்கொண்டு பிரதியினூடே பயணிப் பதில் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனால், கதை யோட்டத்தினூடே அவர் தரும் நுட்பமான சங்கதி களை உள்வாங்குவதற்குக் கவனமான வாசிப்பு தேவைப்படுகிறது. இந்த நாவலும் அத்தகைய கவனமான வாசிப்பைக் கோருகிறது. மனசாட்சி குறித்த ஆழமான கேள்விகளை எழுப்பிக்கொள்ளத் தூண்டும் இந்த நாவல், ஒரு காலகட்டத்தின் கதையையும் நுட்பமாகச் சொல்லும் விதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
– இந்து தமிழ் திசை
Reviews
There are no reviews yet.