Kaanakathin Kural
மிகச்சிறந்த அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஜாக் லண்டன். அவருடைய புகழைப் பலமடங்காக்கிப் பெருக்கி உறுதிப்படுத்திய படைப்பு ‘கானகத்தின் குரல்’. இது ஒரு நாயைச் சுற்றிப் புனையப்பட்ட கதையே என்றாலும் படித்து முடித்ததும் மானுட வாழ்வின் அர்த்தத்தை அல்லது அர்த்தமின்மையை நோக்கித் திரண்டெழும் கேள்வி மிகமுக்கியமானது.
கானகத்தின் குரல் ஒருவிதத்தில் மண்ணுலகில் பெருகிப்போன தன்னலக் குரலின் எதிரொலி. நாயின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் மானுட வாழ்வின் விமர்சனமாக நாவல் உருமாறும் முக்கியமான தளம் இது. வாசக மனத்தில் எண்ணற்ற கேள்விகளை உருவாக்குவதில் ஜாக் லண்டன் பெற்றிருக்கும் கலைவெற்றி மகத்தானது.
இந்த நாவலை ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்தவர் பெ. தூரன்.
சுவை குன்றாத மொழிபெயர்ப்பைப் படிக்கப்படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
– பாவண்ணன்
ஜாக் லண்டன் இறந்து முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அவர் எழுதிய ஐம்பது நூல்களில் பெரும்பாலானவற்றை மக்கள் மறந்துவிட்டார்கள். திறனாய்வாளர்களுள் காலமே சிறந்தது. அது தூங்காமல் வேலை செய்து மதிப்பிடுகின்றது. காலப்போக்கில் பல நூல்களை மக்கள் மறந்துவிட்டாலும், கானகத்தின் குரல், கடல், ஓநாய் , மார்ட்டின் ஈடன் போன்ற நூல்களும், இருபது முப்பது சிறுகதைகளும் என்றும் அவர்கள் நினைவில் இருக்கும். இருபதாண்டுகளில் ஐந்தாறு சிறந்த நூல்களை எழுதியிருந்தால் அதுவே எந்த எழுத்தாளனுக்கும் சிறந்த வெற்றியாகும். மேலே குறிப்பிட்ட நூல்களெல்லாம் ஜாக் லண்டனுடைய வாழ்க்கையின் முற்பகுதியான சுமார் பத்தாண்டுகளில் எழுதப்பட்டவை. அவற்றில் காணப்படும் திறமையும், சக்தியும், உற்சாகமும், ஸ்நார்க் பிரயாணத்திற்குப் பின்பு எழுதப்பட்ட நூல்களில் குறைந்து காணப்படுகின்றன. மனோபாவனைத் திறமையாலும் கதையும் கருத்துக்களும் தங்கு தடையின்றிச் செல்லும்படி அமைக்கும் ஆற்றலாலும் கதையை கற்பனை செய்வதற்கு வேண்டிய இயற்கைத் திறமையாலும் ஜாக் லண்டனுக்கு இக்கால அமெரிக்க இலக்கியத்தில் ஒரு முக்கியமான ஸ்தானம் கிடைத்துள்ளது.
– ப்ராங்க் லூதர் மாட்
Reviews
There are no reviews yet.