2 reviews for கறுப்பர் நகரம்
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹280.00.₹270.00Current price is: ₹270.00.
“இந்தப் புதினம் யாரைப் பற்றியுமான வரலாறு இல்லை.ஆனால் வெறுமனே புனைவு என்றும் சொல்ல முடியாது.இதில் வரும் ஒவ்வொருவரும் வாழ்ந்து மரித்துப் போனவர்கள்.சிலர் இப்போதும் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள்.இடங்களும் கட்டிடங்களும் அப்படியே.என்னை சுற்றியிருந்த மக்களிடம் வறுமையும்,காதலும் வாழ்வதற்கான வேட்கையும்,மொழியும்,வைராக்கியமும,அறியாமையும் எனப் பலவிதமான சூழல்களை நான் கண்டிருக்கிறேன்.”
Delivery: Items will be delivered within 2-7 days
Dhinesh bharathi –
**கறுப்பர் நகரத்து கறுப்பு சரிதம்…
*வட்டார மொழிநடை
தமிழ் மொழி பேச்சு வழக்கில் இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து அல்லது தொழில் சார்ந்து வட்டார மொழி வழக்குகளாக உள்ளன.
தமிழ்நாட்டில் வட்டார வழக்குகள் பல இருப்பினும், “மதுரை, நெல்லை, குமரி மற்றும் சென்னை ” வட்டார வழக்குகள் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.
மக்களின் வாழ்வியலை உடல் மொழியாலும், பேச்சு மொழியாலும் ஓரளவு அவர்களின் வட்டார மொழியை புரிந்து கொள்ள முடியும். ஆனால் எழுத்தின் வழி அவர்களின் மொழியை புரிந்துகொள்ளுதல் அவ்வளவு எளிதல்ல.
மதுரைத் தமிழைக் குடித்து வளர்ந்து வந்த எனக்கு சென்னைத் தமிழ் கொச்சைத் தன்மையாக இருப்பதாக, பெருங்களத்தூரில் நானிருந்த ஆரம்ப காலத்தில் உணர்ந்தேன். பின்னர் மக்களின் வார்த்தைகளின் வழி கசியும் அன்பின் சொற்களை மெல்ல மெல்ல உட்கிரகித்து இதயத்துள் சேமித்து வைத்தேன்.
அந்த சேமிப்பு தற்போது கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம் நூலைப் படிப்பதற்கு உதவியாக இருந்திருக்கிறது. ஆம். கறுப்பர் நகரத்து மக்களின் வாழ்வியல் மொழியை புரிந்துகொள்ள அன்று நான் காதுற்றது இன்று கண்ணுற்று படிக்க உதவிற்று.
*ஆராயி என்னும் கருப்பட்டி
ஆராயி… இந்த ஒற்றை பேரை எத்தனை முறை உச்சரித்து விடுகிறோம் செங்கேணியும் நாமும். அவன் நினைவுகளிலும் கனவுகளிலும் அந்த ஒற்றைப் பெயர், அவன் காற்றிலும் இதயத் துடிப்பிலும் கலந்து எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அந்த பெயரில் அவனுடைய அம்மாவின் ஆன்மா கரைந்திருக்கிறது மட்டுமல்லாது அவனுடைய ஆன்மாவும் கலந்திருக்கிறது. இருண்டு போன அவன் உலகிலும் கடைசி வரை ஒலித்துக் கொண்டிருக்கும் ஒற்றை நாதமாய் அது இசைக்கிறது.
செங்கேணியின் வாயிலாக அந்த கருப்பட்டி அழகியை கரன் கார்க்கி, வார்த்தை கவிகளால் வர்ணிக்கும் அழகை படிக்கையிலே, அப்பேர்ப்பட்ட ஒருத்தியை தேட துடிக்கிறது மனம்.
*சினிமாவிலும் ஒலிக்கும் பெயர்
எந்த ஒரு படைப்பு இலக்கியத்தையும் படிக்கும் வாசகர்கள் அந்த படைப்பில் தனக்கு பிடித்தமான அல்லது பாதித்த கதாபாத்திரத்தை தன்னுடைய படைப்புகளில் பயன்படுத்த விரும்புவர்.
உதாரணமாக இயக்குநர் பாலா ல.சா.ரா.வின் “அபிதா” நாவலின் மீதான தாக்கத்தால் அந்த நாவலின் கதாநாயகி அபித குசலாம்பாளை தன்னுடைய “சேது” படத்தின் நாயகிக்கு பயன்படுத்திருப்பார்.
அதேபோல், இயக்குநர் கீரா தன்னுடைய “எட்டுத்திக்கும் பற” திரைப்படத்தில் “கறுப்பர் நகரம்” நூலின் தாக்கத்தாலோ என்னவோ கருப்பட்டி அழகியான ஆராயி பெயரை தன்னுடைய கதாபாத்திரத்திற்கு இட்டு அழகு பார்த்துள்ளார்.
*விளிம்புநிலை மக்களின் வாழ்வியல்
ஆண்டைகளின் அட்டூழியங்களை தனி ஒருத்தியாய் எதிர்கொண்டு தன்னையே அழித்துக் கொள்ளும் செங்கேணியின் அம்மா.
உரிமைக்காக குரல் கொடுத்து மாய்ந்து போகும் பாளையத்தின் அப்பா. ஊரே எதிர்த்த போதும் எதிர்க்குரல் கொடுக்கும் அவனின் உடன்பிறந்தோன். மக்களின் அறியாமை இருளை அகற்ற கல்வியே விளக்கு என போதிக்க ஆவண செய்யும் பாளையம்.
இளம் வயதில் கல்லாமையால் பல்வேறு இடங்களில் அவமானப்படுவதும், கற்பதற்கு வயது ஒன்றும் தேவை இல்லை என்பதை உணர்ந்து கற்க முற்படுவதும், எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல்காரனும், அன்பிற்கு ஏங்குபவனுமான செங்கேணி.
இவை போன்று விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை கார்க்கியின் எழுத்தின் வழி உணர்கையில் நெஞ்சம் நனைகிறது.
கார்க்கி சொல்வது போல இந்தப் புதினம் யாரைப்பற்றியுமான வரலாறு இல்லை. ஆனால் வெறுமனே புனைவு என்றும் சொல்ல முடியாது. இதில் வரும் ஒவ்வொருவரும் வாழ்ந்து மரித்துப் போனவர்கள். சிலர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்…
ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால் இந்தப் புதினம் *கறுப்பர் நகரத்து கறுப்பு சரிதம்*…
பேரன்புடன்
தினேஷ் பாரதி
Prasannan –
#வாசிப்பனுபவம் :
#கருப்பர்_நகரம்
#கரன்_கார்க்கி
#பாரதி_புத்தகாலயம்
கரன் கார்க்கி எழுதி, நான் படித்த மூன்றாவது நாவல் இது. கடந்த வருடம் ஒரு போட்டியின் போது படித்த #மரப்பாலம் முதலாவது. அடுத்த போட்டியில் #ஒற்றைப்பல் படித்தேன்.
தன்னைச் சுற்றியுள்ள சக மனிதர்களின் ஆசாபாசங்களை, அவர்தம் வாழ்வியல் சூழல்களை கதையில் எளிமையாகக் கொண்டுவருவதில் வல்லவர். இந்த நூல் சென்னையின், பழைய மெட்ராஸின் உண்மை மனிதர்களை அவர்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கையைச் சொல்லும் நாவல்.
இன்றைய வடசென்னைதான் அன்றைய மெட்ராஸ். செயிண்ட் ஜார்ஜ் கோட்டையும், கூவமும் கலந்திருந்த நகரம். படிப்பறிவில்லாத, தாழ்த்தப்பட்ட மக்களின் கோபம், வறுமை சூழ் காதல், சாராய நீச்சல் முதலியவற்றைக் களமாகக் கொண்ட நாவல்.
செங்கேணி என்ற கிழவனின் flashback காக கதை சொல்லப் படுகிறது. ஆயுள் தண்டனை முடிந்து வெளியே வரும் செங்கேணி, நிலை மாறிய சென்னையின் தோற்றத்தைக் கண்டு மலைக்கிறான். தான் வாழ்ந்த சேரி, குப்பங்களைக் காணவில்லை. செண்ட்ரல் ரயில் நிலையம் மட்டும் இருக்கிறது. மூர் மார்க்கெட் தொலைந்து போய் இருக்கிறது. தான் வாழ்ந்த இடம், மனைவி ஆராயி… என்று தேட…
சுழலில் நாம் பின் செல்கிறோம். செங்கேணி ஆராயி ஏழ்மையின் பிண்ணனியில் அரும்பிய காதல், அக்காவின் கணவரின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பி, செங்கேணியுடன் வாழ வெளியே வரும் ஆராயி, அவர்களுக்கு அடைக்கலமாய் இருக்கும் செந்தாமரை – பாளையம் தம்பதி. பேய்க்காளி சாராயம் காய்ச்சுபவன், மீசைக்காரர் என்ற கறி வியாபாரி, வேலு பாளையத்தின் சங்கத் தோழன்.. இருவரும் சங்கக் கட்டடத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பெரியார், அம்பேத்கரை சொல்லித் தருகிறார்கள்..
இவர்களைச் சுற்றி நடக்கும் கதை…
செங்கேணிக்கும் ஆராயிக்குமான காதலை மிக அழகாக எழுதிச் செல்கிறார். பாளையம் கிட்டத்தட்ட ஒரு கதைசொல்லி வேடம். அவனைச் சுற்றி நடக்கும் ஜமா நியாய அநியாயங்களை அலசும். தங்களை ஏன் மேலே வர விடாமல் ஒரு சிலர் சதி செய்கிறார்கள் என்பதை, தமக்காகக் குரல் கொடுக்கும் அம்பேத்கர், பெரியாரின் கொள்கைகளை பேச்சு வாக்கில் சொல்லிக் கொண்டே இருப்பவன். கல்வியின் மேன்மையை உணர்ந்தவன்.
நல்லாப் படிங்கடா.. அப்பத்தான் அவங்களை கேள்வி கேட்க முடியும், அவங்களுக்கு இணையாக வாழமுடியும் என்று பேசுபவன். பேய்க்காளி ஆராயியின் மீது கண் வைத்து காத்திருக்க, ஒரு விபத்து செங்கேணியின் வாழ்வை அடியோடு மாற்றுகிறது. ஆராயிக்கு என்ன ஆனது, செங்கேணி ஏன் சிறை சென்றான் என்பதுதான் கதை.
நாவல் முழுவதும் மெட்ராஸ் பாஷை.
பாளையம் அந்த வட்டார மொழியின் தோற்றுவாயை அலசுவது அற்புதம். இன்னாமேன் என்று ஆங்கிலேயன் கேட்பது ‘இன்னாம்மே’ என்றாயிற்று. சென்னைக்கு வந்த ஆங்கிலேயர்களுக்கு வீட்டில் வேலை செய்ய, துணி துவைக்க, வண்டியோட்ட என்ற பல வேலைகளுக்கு இவர்கள் சென்றார்கள். பட்லர்கள் பேசும் இங்கிலீஸ் “பட்லர் இங்கிலீஷ்” ஆனது.
ஆங்கிலேயர்களும், சென்னைவாழ் தமிழர்களும் இப்படிப் பேசியதுதான் மெட்ராஸ் பாஷை.
பெரியார் மறைந்த நிகழ்வு இதில் ஒரு நாள் காட்சியாக வருகிறது. எனவே கதை நடந்த காலம் எழுபதுகளில் இருக்கலாம். அன்றைய சென்னையை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார்.
திருப்பூர் புத்தக விழாவில் வாங்கியது.
நல்ல தேர்வு என்று என்னை நானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறேன்.
2011 ல் முதல் பதிப்பு வந்தது, நான்காம் பதிப்பில்தான், 2019 படிக்கக் கிடைத்தது என்பதை எண்ணி ஒரு குட்டும் வைத்துக் கொள்கிறேன்.
#Prasannan