நிலம் பூத்து மலர்ந்த நாள்
முன் ஜென்மத்தின் பழக்கமான பாதையினூடே இயல்பாக நடந்து செல்லும் ஒருவனைப் போல,சங்கப் பழமையின் பல பாவனைகளின் வழியே மனோஜ் குரூர் சஞ்சரிப்பது கண்டு நான் அதிசயப்பட்டேன்.
-ஜெயமோகன்
இந்நாவலில் ஈராயிரம் ஆண்டின் காலத்தைப் புலபடுத்தும் மொழி கையாளப்பட்டிருக்கிறது.சங்க இலக்கியத் தமிழுடன் தோய்வும் பரிச்சயமும் உடைய எந்த வாசகனாலும் இந்த நாவலை சிரமமின்றிப் படித்துச் செல்ல இயலும்.
இந்நாவலை வாசிக்கும்போது மனோஜ் குரூரின் பழந்தமிழ் இலக்கியப் புலமை வியப்பளிக்கிறது.சற்றுத் தீவிரமாக யோசித்துப் பார்த்தால்,மலையாள மொழி பேசும் எழுத்தாளர் எழுதிய தமிழ் நாவலை வாசிப்பது போல் நீரோட்டமாக இருக்கிறது.
வழக்கமாக,மொழி மாற்றம் பெற்று வரும் இலக்கிய வடிவங்களை வாசிக்கும்போது தோன்றும் சிலிர்ப்பும் வறட்டுத் தன்மையும் கட்டுரைத்தனமும் தோன்றாவண்ணம் மிகத் துல்லியமான படைப்பு மொழியில் மாற்றுகிறார் மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ.
-நாஞ்சில் நாடன்
Shanmuga Priya Saravanan –
புத்தகத்தின் பெயர் – நிலம் பூத்து மலர்ந்த நாள்
மலையாள மூலம் – மனோஜ் குரூர்
தமிழில் – கே.வி.ஜெயஸ்ரீ
மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூர் அவர்களால் சங்க இலக்கியத்தினை தழுவி எழுதப்பட்ட நாவல். புத்தகத்தின் பெயரே ஒரு கவிதை போல் தொடங்குகிறது. 2000 வருடங்களுக்கு முன் தமிழ் சமுதாயத்தில் நடந்த நிகழ்வுகளை பாடலாக தந்தது தமிழ் இலக்கியம். இதையே கதையாக வழங்கி பண்டைய தமிழர்களின் வாழ்க்கையை நம் கண் முன்னே நிறுத்துவதே எழுத்தாளரின் ஆகப்பெறும் சாதனை. சங்கப்பாடல்கள் நம் பள்ளி பாடங்களில் .இடம் பெற்றிருந்தாலும், அதை புரிந்த கொண்டவர் மிகச்சிலரே. ஆனால் சங்கப்பாடல்களுக்கான கதை வடிவம் எல்லோரும் படித்து இன்புறும் நிலையில் உள்ளது.
இசைக்கருவிகள் இசைப்பதையும், பாடல்கள் பாடுவதை மட்டுமே தங்கள் தொழிலாக கொண்ட பாணர்களை பற்றிய கதையாக எழுதப்பட்டுள்ளது. கதை மூன்று பகுதிகளைக் கொண்டது. கொலும்பன் குடும்பத்தினை விட்டு ஓடிய மூத்த மகன் மயிலனை தேடியும் பாடி பரிசில் பெறுவதற்காக நாடு நாடாக சுற்றி வருகின்றனர். அவர்கள் மயிலனை சந்தித்தார்களா? மயிலன் ஏன் தன் கூட்டத்தாரை விட்டகன்றான்? பெண்கொலை செய்த நன்னன் ஏன் அவ்வாறு செய்தான். பாரியை யார் கொலை செய்தது போன்றவற்றை மர்மப் புனைவாகவே சொல்லியிருக்கிறார்.
பாணரின் வறியநிலையை ”எங்களுடனேயே இருந்த நாய், நிறைய ஆட்கள் இருந்த அந்தக் குடிலிலேயே பிரசவித்தது. கண் திறக்காத குட்டிகளின் இளம்வாய்கள் தாயின் முலைகளில் முட்டித்தேடிய போதும் அவை வற்றி வறண்டிருந்தன. எங்கள் வறுமை வளர்ப்பு நாயிடமும் ஒட்டியிருந்தது“ என்ற வரிகள் மூலம் உணர வைத்துள்ளார்.
. கணவன் இறந்த பின் மனைவி தன் கூந்தலை மழித்து கொள்ளும் பழக்கத்தை கணவன் இறந்தால் ஒருத்தியின் பெண்மையையே வெட்டியெறிவது ஏன்? என பெண் மூலமே பழங்கொடுமைகளை சாடுவது சிறப்பு. மேலும் சங்கப்பாடல்களில் உள்ள மரங்கள், பரணர் எழுதிய 99 வகையான மலர்கள், அப்பாடல்களில் குறிப்பிடப்பட்ட விலங்குகள் என எல்லாவற்றையும் உணர வைத்துள்ளார் எழுத்தாளர். தமிழில் எழுதப்பட்ட சங்கப்பாடல்களை உள்வாங்கி அதை ஒரு புனைவுக் கதையாக்கி மலையாள மொழியில் வெளியிட்டுள்ளார். சங்கப்பாடல்களோடு மர்மப் புனைவும் கலந்த சுவை எல்லோருக்குமே மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுவதாகவே இருக்கும்.
ம.சண்முகப்பிரயா
போடிநாயக்கனூர்
Kathir Rath –
நிலம் பூத்து மலர்ந்த நாள்
மனோஜ் குரூர்
தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ
பொன்னியில் செல்வன் வாசிக்க துவங்குகையில், கல்கி தம் கரங்களை கவனமாக பற்றிக் கொள்ள சொல்லி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழ தேசத்துக்கு அழைத்து செல்வார். அதற்கு பின் வேறெந்த நூலும் இப்படி காலப்பயணம் செய்ய வைத்ததில்லை. நெடுநாட்களுக்கு பிறகு இந்நூல் ஈராயிரம் ஆண்டுகள் முன்பான சங்க காலத்திற்கு கூட்டி சென்றது.
சங்கப் பாடல்களான எட்டுத்தொகையினையும் பத்துப் பாட்டினையும் வாசிக்காதவர்கள் கூட தமிழ் கூறும் நல்லுலகில் வாழ்ந்த கடையேலழு வள்ளல்களை பற்றி அறிந்திருக்க வாய்ப்புண்டு. குறிப்பாக பாரியும் அதியமானும் தமிழர்களின் சொலவடைகளில் கலந்தவர்கள். பேச்சு வாக்கில் சொல்லும் போது கூட “இவர் பெரிய பாரி வள்ளல்” என்றுதான் சொல்வோம். அதே போல் அவ்வைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான். அவர்களது காலமான கி.பி 1-3 நூற்றாண்டு காலத்தினை மையமாக கொண்டு அதிகம் நூல்கள் வந்த்தில்லை. வந்தாலும் பெரும்பாலும் சங்கப்பாடல்களை போன்றே மன்னர்களை புகழ்ந்தே வரும்.
மக்களை குறிப்பாக எளியோரை மையமாக கொண்டு வந்திருப்பதே இந்நூலிம் முதல் சிறப்பு. அதிலும் தம் வறுமையை போக்க நாடு நாடாக சென்று கூத்தாடும் கலைஞர்களின் வாழ்வியலோட அரசியல் சூழ்ச்சிகளை சொல்லும் நாவல் இது.
புத்தகம் நான் லீனியர் பாணியில் கதை சொல்கிறது. மூன்று பாகங்களாக உள்ள இந்நூலில் முதல் கதை சொல்லியாக வரும் பாணர் குலத்தை சேர்ந்த கொலும்பன். தங்கள் வசமுள்ள வறுமையை தொலைக்கவும், தொலைந்து போன தம் மூத்த மகனை கண்டடையவும் தம் கூட்டத்துடன் பெரும்பாணரின் தலைமையில் நாடு நாடாக அலையும் கதையினை சொல்கிறார். இம்பர்காட்டில் பரணரை சந்தித்து அவர் காட்டும் வழியில் செல்பவர்கள் பேரரசர்களின் அரசியல் சதுரங்கத்தில் பகடைக் காய்களாகிறார்கள். அந்த சூழ்ச்சியில் இறக்கும் தருவாயில் தொலைந்த மகனை காண்கிறார்.
பரிசிலுக்காக கூத்திசைத்த தருணத்தில் நடந்த சூழ்ச்சியில் தந்தையை இழந்து நாட்டை விட்டு கூட்டத்துடன் தப்பித்து வெளியேறும் கொலும்பன் மகள் சித்திரை வாயிலாக கதையின் இரண்டாம் பகுதி சொல்லப்படுகிறது. வறுமை தீராவிடினும் விருந்தோம்பலில் சிறந்த தமிழர்களால் வாழ்வாதாரத்தை உருவாக்கி கொண்ட கூட்டத்தோடு இருப்பவளுக்கு காதல் ஏற்படுகிறது. காதலன் போர்த்தொழில் புரியும் மறவன். அனைவரின் சம்மதத்தோடு அவனது மனைவியாக அவன் நாட்டிற்கு செல்பவளுக்கு ஏகப்பட்ட அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. தங்கள் வாழ்வு இப்படி ஆனது விதியல்ல என்பதும் சிலரின் சதி என்பதும் அவளுக்கு தெரிய வருகிறது.
கொலம்பனின் வீட்டில் இருந்ந வறுமை தாளாமல் உரை விட்டு ஓடிப்போன மகன் சந்தன் வாயிலாக மூன்றாம் பகுதி சொல்லப்படுகிறது. அறிவை வளர்த்து கொள்வதன் மூலம் செல்வமீட்டலாம் என திட்டமிட்டு ஒவ்வொரு காயாக நகர்த்துபவனுக்கு, அறவும் செல்வமும் என்றும் ஓரிடத்தில் சேர்ந்திருக்காது என்பது தாமதமாகத்தான் புரிகிறது. அதற்குள் அவனது வாழ்வு அவன் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறி, பல தேசங்களின் தலைவிதியை நிர்மாணிப்பவர்களின் கரங்களில் சென்றடைகிறது. எத்தேசம் ஓடி ஓளிந்தாலும் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுவதோடு நூல் நிறைவுறுகிறது.
புத்தகம் பற்றி என்னவென்று சொல்ல? முதலில் இது போன்ற சங்க இலக்கியங்களை கையாண்டு தமிழில் நேரடி நூலாக வராமல் மலையாள கவிஞர் எழுதியது கண்டு தமிழனாக வெட்குகிறேன். எவ்வளவு அருமையான கதைக்களம் நம் முன் கிடந்திருக்கிறது. யாரும் அதை கையாளவில்லையே…! இன்னும் எத்தனை எத்தனை பொற்காசுகளை காலால் மிதித்துக் கொண்டிருக்கிறோமோ…!
முதலில் கதை மெதுவாக சென்றாலும், ஆங்காங்கு வரும் சங்கப்பாடல் சொல்லாடல்கள், அக்கால மக்களின் வாழ்வியல்கள் சுவாரசியமளிக்கின்றன. உதாரணத்திற்கு தன்னை காதலித்தவனை பற்றி கிளியோலம் சொல்கையில் எனக்காக மடலேற அவன் பனங்கருக்குகளை சேகரிக்க துவங்கி இருந்தான் என்பதும், அவன் மாடு பிடித்தலில் இறந்ததை சொல்லி ஒஇட்டு எப்படி இருந்தாலும் காளையை அடக்காதவர்களை ஆயர்களாகிய நாங்கள் மணக்க மாட்டோம் என யதார்த்தமாக சொல்வது முல்லைக்கலியை (கலித்தொகை)யினை நினைவுபடுத்துகிறது.
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்.
அதே போல் பாணர் கூட்டம் ஒவ்வொரு நிலமாக கடக்கையில் அதற்கேற்ற கருப்பொருள்களை கையாண்டிருப்பது வெகு சிறப்பு. மலைப்பகுதியை கடக்கையில் அதற்கேற்ற பண்ணிசைப்பது, முல்லையில் ஏறுதழுவதலில் ஆடும் கூத்து, பாலை நிலத்தில் நடக்கும் களவுத்தொழில், நெய்தல் நிலத்தில் நடக்கும் கடல் வணிகம் என அனைத்தும் சுவாரசியமளிக்கிறது.
தகடூர் வந்ததும் மகிரன் “நான் இல்லாத சமயத்தில் வெட்சிப்போர் நடந்துள்ளது” என்பான்.
“வெட்சி நிரை கவர்தல், மீட்டல் கரந்தையாம்”
எதிரி நாட்டு மாடுகளை ஓட்டி வந்து அவனை போருக்கழைத்தல் வெட்சிப்போர், அதை மீட்க நடப்பது கரந்தை போர். இது போன்ற எண்ணற்ற சொல்லாடல்கள்.
கொலும்பனது கதைப் பகுதியிலேயே வேள்பாரி கொலைப்பகுதி வருகிறது. அங்கிருந்தே ஏன், யார், எதற்கு என்ற கேள்விகள் தொடர்ச்சியாக சுவாரசியத்துடன் வாசிக்க வைக்கிறது.
கதை மாந்தர்களாக சங்கப் புலவர்களான பரணரும் கபிலரும் அவ்வையும் வருவதை விடவா தனி சுவாரசியம் நமக்கு தேவை?
ஒவ்வோருவரும் தாங்கள் எழுதிய பாடல்களை சொல்வது, அல்லது அவர்களை சந்திக்கையில் மற்றவர்கள் சொல்வது என ஒவ்வொரு இடமும் சிறப்பு.
ஒரு நாளுக்கு எட்டு தேர்க்கால் செய்யும் தச்சன் ஒரு மாதம் முழுக்க முயன்று ஒரு தேர்க்கால் செய்தால் எத்தகைய திறன் வாய்ந்த்தாய் இருக்குமோ அப்படிப்பட்டன் அதியமான் நெடுமானஞ்சி என்று நானே பாடியிருக்கிறேன் என்பார் அவ்வை.
அதேபோல் அதியமான் நாடான தகடூரில் முதல்முதலாக கரும்பினை காணும் சித்திரையிடம் அந்நாட்டினர் வானத்திலிருந்து அதியமான் முன்னோர் கொண்டு வந்த்து என சொல்லிம் இடம், அதியமான் முன்னோர்கள் சீனத்தில் இருந்து கரும்பினை வரவழைத்திருப்பார்கள். இப்படி பல தகவல்கள் நூல் முழுக்க விரவி கிடக்கின்றன.
என் கண்ணிற்கு ஏதாவது ஒரு மத அரசியல் படாமலா இருக்கும்? போர் முடிந்து வரும் மகிரன் வேப்ப மரத்தில் இருக்கும் அம்மனுக்கு பசுங்கன்றினை பலியிடுவான். ஆக தமிழர்களுக்கு இது தொன்று தொட்டு வரும் வழக்கம்தான் என உறுதியாகிறது.
தமிழர்கள் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.
இரா.கோமதிசங்கர் –
‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’
மலையாள மூலம் : மனோஜ் குரூர்
தமிழில் : கே.வி.ஜெயஸ்ரீ
கவித்துவமான தலைப்பு இல்லையா..!
நிலம் பூக்குமா என்ன…விடியலுக்கு முந்தைய மீச்சிறு காலத்தை நிலம் கீறுதல் என்று எங்கள் பகுதியில் சொல்வோம்… அதை வெள்ளி முளைக்கும் காலம் எனத் திருப்பாவை (வெள்ளி முளைத்து வியாழம் உறங்கிற்று) கூறும்..பூத்து மலர்தல் என்றால் உதயக் கதிர் எழும்பி நிலம் பொலிதல் எனலாமா..
நிலத்தின் குணங்களையே கொண்டிருக்கும் மனிதர்களும் விடியல் மலர்வதற்காய் காத்திருப்பார்கள்.. சிலருக்கு மட்டும் அந்த ‘நாள்’ வருவதேயில்லையோ..
தொல் தமிழ் வாழ்வும் மலையாளமும்..
மனோஜ் குரூர் மலையாள மொழியில் தமிழரின் தொன்மை உலகத்தை மீட்டெடுத்து தந்திருக்கிறார். கே.வி.ஜெயஸ்ரீ அழகான மொழி நடையில் தமிழ்படுத்தியிருக்கிறார்..ஒரு கனவு போன்ற மொழியாக்கம் கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருதை வென்று தந்திருக்கிறது..தமிழ் வென்றெடுத்த விருதென்று சொல்லத் தோன்றுகிறது.. மனோஜ் குரூர் மற்றும் கே.வி.ஜெயஸ்ரீ இருவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்..
சேர பூமி பழந்தமிழ்ச் சொற்கள் பலவற்றை இன்னும் பொருள் மங்காமல் வைத்திருப்பதைப் பார்க்கலாம்.. சோற்றுப் பதமாக ஒரு சொல்.. ‘வெள்ளம்’ “வெள்ளத் தனைய மலர்நீட்டம்” என்ற குறள் நினைவுக்கு வருகிறதா.. ஆனால் நம் தமிழ் நிலம் பலவற்றைத் தொலைத்தும் விட்டதல்லவா..
இப்போதோ மலையாள எழுத்துக்களில் பூத்து மலர்ந்த இந்த தொல்தமிழ் வாழ்க்கைப் பதிவு நவீன தமிழுலகிற்கு நிறைவான பரிசு…
மனோஜ் குரூர் ஆற்றுப் படுத்திய மனிதர்கள்..
சங்கத் தமிழ் தந்த பத்துப் பாட்டில் முதல் ஐந்து பாட்டுகள் ‘ஆற்றுப் படை’களாகும். திருமுருகாற்றுப் படை மட்டும் முருகனிடம் பக்தரை ஆற்றுப் படுத்தும்..மற்ற நான்கும் வாழப் பொருள் நாடித் திரியும் பாணரை (பெரும் பாணாற்றுப்படை மற்றும் சிறு பாணாற்றுப்படை) பொருநரை (பொருநராற்றுப் படை) கூத்தரை (மலைபடுகடாம்) வள்ளண்மை மிகுந்த வேந்தரிடம் ஆற்றுப் படுத்துபவை..வள்ளல்களைக் கண்டு பாடியும் ஆடியும் மகிழ்வித்து பொருள் கொள்ளும் பாணரும் விறலியரும் கூத்தரும் சங்கப் பாடல்களில் ஆங்காங்கே தென்படுவதன்றி அவர்கள் வாழ்க்கை சொல்லிக் கொள்ளும் விதமாக இருந்ததில்லை.. இந்த நிலைகொள்ள இயலாத மனிதர்களையே சங்க இலக்கியங்களில் தேடிக் கண்டடைந்திருக்கிறார் மனோஜ் குரூர்..இந்த நூல் ஆற்றுப் படுத்திய சங்கப் புலவர்கள் வாயிலாக ஆற்றுப் படுத்தப் பட்டவர்களின் கதை..
சங்க காலக் கதையாடல்:
பாடி ஆடி மகிழ்வூட்டி கிடைத்ததைக் கொண்டு பசித்தீ தணித்துக் கொள்ளும் எளிய பாணர்களும் கூத்தர்களுமான கூட்டம்.. வறுமை உந்தித் தள்ள வள்ளல் யாரேனையும் நாடி தம் வறுமைநிலை போக்கிடலாம் என்ற முடிவுடன் தாய் பூமியை விட்டு இடம் பெயர்கிறது..பெரும்பாணன் தலைமையில் செல்லும் குழுவில் கொலும்பனின் குடும்பமும் ஒன்று..கொலும்பனோடு, இளைய மகன் உலுகன் மனைவி நெல்லக்கிளி புதல்வியர் சித்திரை மற்றும் சீரை ஆகியோர் உள்ளனர். மூத்த மகன் மயிலன் சில காலம் முன்பு குடும்பத்தை உதறிச் சென்றுவிட்டான்.. இந்தப் பயணத்தின் ஊடே ஏழி மலையில் இருப்பதாக கேள்வியுறும் தன் மகன் பற்றியும் அறியலாகும் என்று நம்புகிறான் கொலும்பன்..மயிலனின் நண்பன் சந்தன்.. கூடவே வரும் அவனுக்கும் சித்திரைக்கும் மெல்லிய நட்பு நிலவுகிறது..
இவர்கள் சென்று கண்ட வள்ளல்களான வேள் பாரியும் அதியமான் நெடுமான் அஞ்சியும் காணும் முன்பே மறைந்து போன ஏழி மலையின் மன்னன் நன்னனும் அரசியல் சதிகளோடும் போர்களோடும் ஒற்றாடல்களோடும் நமக்கு காணக்கிடைக்கின்றனர்.. இவர்களை ஆற்றுப் படுத்திய (சங்கத் தமிழின்) பெரும் புலவர்களான பரணர், கபிலர் மற்றும் ஒளவை ஆகியோரும் அதிகார பீடத்தின் அண்மையில் நின்றாலும் முள்மேல் நிற்போராகவே நமக்கு காட்சி தருகிறார்கள்..போர் மறவர்களும் ஒற்றர்களுமே அரசனின் அண்மையில் கை ஓங்கியவர்களாகத் (எல்லாக் காலத்தினும் அதிகாரவர்க்கம் தானே நிழல் அரசாங்கம்) தென்படுகிறார்கள்.
பயணத்தில் அவர்கள் கடந்து செல்லும் மனிதர்களான குறிஞ்சியின் எயினர், வேடுவர், மருதநில உழவர், முல்லையின் இடையர் மற்றும் உமணர் ஆகியோரின் எளிமையையும், இருப்பதைக் கொண்டு ஆதரிக்கும் விருந்தோம்பலையும் அழகாகச் சொல்லிச் செல்கிறார் கதாசிரியர்..சங்க காலத் தமிழர் பண்பாட்டினை நாமும் கண்டடைகிறோம். கதையின் நடுவில் சித்திரை காதல் கொள்ளும் மகீரன் மூலமாக ஒற்றர் மற்றும் மறவர்(படை வீரர்) நிலையும் பாலை நிலத்தின் கொள்ளையர் சமூகமும் சித்தரிக்கப் படுசிறது. கதையின் இறுதிப்பகுதி முசிறி என்ற வணிகக் கடல்துறையில் நிகழகிறது. தொல் தமிழகத்தின் பரதவர் வாழ்வும் பிற நாட்டு வணிகர் தொடர்பும் சொல்லப் படுவதன் மூலமாக எதிர்கால உலகம் வணிகர் வழியில் என்பதும் குறிப்பாக உணர்த்துகிறது புதினம். பயணத்தின் முடிவில் வறுமை தொலைந்ததா அல்லது வாழ்க்கை தொலைந்ததா..மறைந்து போன மயிலன் வழியில் எதிர்ப்பட்டானா..என்பதையெல்லாம் கதை படிப்போர்க்கு விட்டுச் செல்கிறேன்.
சங்கச் சுவடுகள்:
பாணரையும் கூத்தரையும் கொண்டாடும் வேள்பாரி அவர்களை முன்னிறுத்தியே கொல்லப் படுவது நாவலில் அரசியல் சூழையும் அவலச்சுவையையும் ஒருங்கே தருகிறது.
அறிவுச் சூழல் அரசர்களின் புகழுக்காய் கொண்டாடப் படுவதும் கலைஞர்களோ இரவலராய் அலைந்து திரிவதும் அழகாகக் பதிவாகியிருக்கிறது..
சங்கப் பாடல் மூலம் நாம் அறிந்த செய்திகள் எல்லாம் புதினம் முழுவதும் உரையாடல்களிலும் காட்சிச் சித்தரிப்புகளிலும் கதைப் போக்கிலும் நம்மோடே கூடவே பயணிப்பது சுகம்..
நாவலில் நான் அடையாளம் கண்ட சங்கப் பாடல்களை குறிக்க ஆசைதான்..ஆனால் படிக்கப் போகும் நண்பர்களுக்கு அந்த அனுபவத்தை விட்டுச் செல்வதே சரியாகுமென்று அமைகிறேன்..
வேள்பாரி படித்தவர்களுக்கு ஒரு தொடர் போல அமையக்கூடிய நாவல்…பரணரும் கபிலரும் ஒளவையும் சுவை கூட்டுவார்கள்… அமேசானில் கிடைக்கிறது. படித்து விடுங்கள்…
சரவணன் சுப்ரமணியன் –
நிலம் பூத்து மலர்ந்த நாள் மலையாள மூலம் மனோஜ் குரூர்
தமிழில் கே.விஜெயஸ்ரீ
மின்நூல்
பள்ளி, கல்லூரியில் கிடைக்கப்பெற்ற அரிய தமிழாசிரியர்கள் வாயிலாக மட்டுமே அறியக் கிடைத்த தரவுகள் பழந்தமிழர் வாழ்வு குறித்தவை.
மகன்றில் பறவைகள், தலைவன் தலைவி ஊடல், பறம்புமலை, இரவலர்கள், புரவலர்கள் உள்ளிட்டவை நினைக்குந்தோறும் சிலிர்ப்பினை ஏற்படுத்துபவை.
தமிழை ஒரு பாடமாகக்கூட பயில மனமில்லாத தலைமுறைகளைக் காண்கையில் ஒருவித அயர்ச்சி ஏற்படுகிறது.
ஆதித்தமிழர் வாழ்வு குறித்த இந்நாவலை ‘மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்’ என்று குறிப்பிடுகிறார் நாஞ்சில்நாடன்.
ஜெயமோகனின் கூற்றுப்படி ‘அன்னியரால் தீண்டப்படாத பரிசுத்தமான தமிழ்நிலம்’ கேரளத்திலிருந்து மனோஜ் குரூர் மூலமாக இந்நாவல் கிடைத்திருக்கிறது.
பாணர், கூத்தர், பொருநர் போன்ற சொற்களெல்லாம் மனதில் காட்சிப் படிமங்களுடன் அழகாக பதிந்துவிடுகிறது இந்நாவலை வாசிக்கையில்.
மூன்று பாகங்களில் அமைந்திருக்கும் நாவலின் முதல் பாகம் மகனை தவற விட்ட பெற்றவர், உடன்பிறந்தவர்களின் துடிப்பையும், தேடலையும் சொல்லிச் செல்கிறது.
தமிழரான நீலபத்மநாபன் ‘பள்ளிகொண்டபுரம்’ நாவலில் திருவனந்தபுரத்தை மிக இயல்பாக அழகியலுடன் புனைவாக்கியது போன்று, மலையாள சமூகத்தை சார்ந்த மனோஜ், இந்நாவலில் பண்டைத்தமிழ் மரபை தனது எழுத்துக்களின் மூலம் தீட்டிச் செல்கிறார்.
‘உப்பிடப்படாதவைக்கெல்லாம் ஒரே சுவைதானென்று மீண்டும் உணர்ந்தோம்’
‘கொடுமையும், கனிவும் ஒரே வயிற்றில் பிறந்த இரட்டையர்களே. அரசியலில் இவற்றை பிரித்தறிய முடியாமல் குழப்பமடைவோம்’.
‘பிறந்துவிழும் குழந்தையின் உள்ளத்தில் தெளிவான வானம் தென்படும். அப்புறம் அதன் நிறம் மாறி மாறி வரும்’.
‘அல்லலற்று வாழ இந்த பூமி கனிந்து நல்கிய பொருளும், செழிப்பும் உள்ளவர்களுக்கு மற்றவரின் துயரம் வெறும் ஒரு பொழுதுபோக்காக இருக்கலாம்’.
ஓராண்டிற்கும் மேலாக பெரும் உழைப்பினை இட்டு இந்நாவலை தமிழுக்கு கொண்டுவந்திருக்கும் கேவி ஜெயஸ்ரீ அவர்களின் சிரத்தையினை எடுத்துக் காட்டுபவை மேற்கண்ட வரிகள்.
சித்திரையின் காதலும், அவளது துயரார்ந்த நிகழ்வுகளையும் நாவலின் இரண்டாம் பாகம் பேசுகிறது.
மயிலன் தோன்றி தன்னிலை விளக்கம் அளிப்பது மூன்றாம் பாகம்.
‘அனைவரும் ஒன்றாகவே இருப்போம் என்று நினைத்திருப்பவர்க்கெல்லாம் நாம் தனித்தனியானவர்களே என்பதை உணர உற்றாரின் மரணமே தேவைப்படுகிறது’.
வெகு இயல்பாக, அழகாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள் ஜெயஸ்ரீ. வாழ்த்துக்கள்!
மொழிபெயர்த்த ஜெயஸ்ரீ அவர்களும், மொழிபெயர்ப்புக்கு உறுதுணையாக இருந்த பரமேஸ்வரி அவர்களும் அறிமுகமானவர்கள் என்ற வகையில் பெரும் மகிழ்ச்சி.