SILING
இந்த நாவலை வாசிக்கும்போது கதையின் நாயகன் குமரன் வேறல்ல நாம் வேறல்ல என்கிற எல்லை பலருக்கு குறுகிக் கொண்டே வருவது தெளிவாகும். அவரது சிறுகதைகளில் இருக்கும் மொழி ஆளுமை நாவலில் இல்லாது எளிய மொழியில் உரையாடல்களாய் பின்னி இருக்கிறார். அவரது கதைகளுக்கான களம், உளவியல் சார்ந்த அவருடைய கதைகள் தமிழ் இலக்கியத்தில் பேசப்பட்டது போலவே சிலிங் நாவலும் பேசப்படும்.
-முல்லைநாதன்
Srinivasan –
மூன்றாவது அடுக்காக இருப்பதாகச் சொல்லப்படும் மனிதர்களின் புதைநிலை மன வன்மமானது, தமிழில் புனைவுகளாக வெளிப்பட்டது குறைவு. கோபிகிருஷ்ணன் இந்தப் புள்ளியில் தொடர்ந்து எழுதினார். மனிதர்களின் மனமானது அழுக்குகள் நிரம்பிய ஓர் இருட்டறை என்பதை நிறுவ அவர் தன்னையே பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். தொடர்ந்து இரைந்துகொண்டே இருக்கும் உள்மனத்தை அவர் இறுதிவரை எழுதிக் கடக்கவே முயன்றார். மனிதர்களின் புதைநிலை மனமானது ரகசியங்களின் சுரங்கம். ஒருவர் அதைப் பொதுவெளியில் திறந்து காட்டும்போது, அவர் இந்தச் சமூகத்திரளுக்குப் பொருத்தமற்றவர் ஆகிறார். கோபிகிருஷ்ணனின் வாழ்க்கையே இதற்கு உதாரணம். ஒப்பனைகள் நிரம்பிய மேல்நிலை மனமே ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பானதாக இருக்கிறது. புதைநிலை மனதில் பின்னிக்கிடக்கும் வன்மமும் நிறைவேறாத ஆசைகளும் பாலுணர்வு ஏக்கங்களும் கனவுகளாக வெளியேறி அவற்றின் வீரியத்தைக் குறைத்துக் கொள்கின்றன. கணேசகுமாரனின் ‘சிலிங்’ குறுநாவலானது புதைந்துகிடக்கும் ஒருவரின் ரகசியங்கள் வெளிப்படும்போது, அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த நாவலில் மனநோயாளி, நண்பன், ரகசியக் காதலி ஆகியோரின் ஆழ்மனத்தையும் அறிய முடியாமல் தோற்று நிற்கிறார் மனநல மருத்துவர் அறிவுடை நம்பி கலியபெருமாள் பூரணச்சந்திரன். ஆக, ஆழ்மனத்தை அறிவது என்பது ஒரு பாவனைதான். மருத்துவத்தாலும் இது கடினம்; மருத்துவர் இதை இறுதியில் உணர்ந்துகொள்கிறார். மனநோயாளி குமரன், மருத்துவர் பூரணச்சந்திரன் இருவரின் மனமும் ரகசியங்களால் நிரம்பியவை. இருவருமே தங்கள் மனைவியர் மீது அதிருப்தியில் இருப்பவர்கள். நண்பனின் மனைவியிடம் குமரனும், நண்பனின் ரகசியக் காதலியிடம் மருத்துவரும் திருப்தியைக் காண்கிறார்கள். மருத்துவருக்குத் தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. குமரனால் தன் ஆசையைக் கனவினூடாக மட்டுமே தீர்த்துக்கொள்ள முடிகிறது. குமரனுக்கும் மருத்துவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் குறிப்பிடத்தகுந்தவை. இந்த நாவலில், கணேசகுமாரன் இரு கதாபாத்திரங்களின் மூலமாக இரண்டு பிரச்சினைகள் குறித்த விவாதத்தைத் தொடங்கியிருக்கிறார். ஒன்று, மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளை என்னவாகப் பார்க்கிறார்கள் என்பது. இது பற்றி நிறையத் தமிழ்த் திரைப்படங்கள் உண்டு; புனைவுகள் குறைவு. இரண்டு, இந்த கரோனா நோய் மனிதர்களிடம் ஏற்படுத்தியிருக்கும் உளவியல் பிரச்சினைகள். மனிதர்களின் புதைமனப் பிரச்சினையைச் சமகால அரசியலுடன் கணேசகுமாரன் இணைத்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் எழுதப்படும் இலக்கியங்களுக்குள்ளும் அந்நோய் ஊடுருவுவதைத் தவிர்க்க முடியாது என்பதற்கு இந்நாவலும் ஒரு சான்று.
அனைவருக்கும் அடுத்தவர் வாழ்க்கை மீது ஓர் ஈர்ப்பு எப்போதும் இருக்கிறது. அந்த ஈர்ப்பைப் புனைவு அழகாகத் தொட்டிருக்கிறது. அந்த ஈர்ப்பு ரகசியமாக இருக்கும் வரை பிரச்சினை இல்லை; வெளிப்படும்போது அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதற்கு மருத்துவரே சாட்சியமாகிவிடுகிறார்!