4 reviews for கன்னித்தீவு
Add a review
You must be logged in to post a review.
₹280.00
Out of stock
ஒரு தீவு, ஒரு கர்ப்பிணி, சில பழங்குடிகள். இதுதான் இந்த நாவல். மானுடம் அடையாள வேறுபாடுகள் கடந்தது. துயர்மிகு கண்களும், மகிழ்வின் புன்னகையும், நீருபூத்த காமமும் புரிய தேசமும் பாஷையும் தடையில்லை. அப்படி அந்நிய நில பெண்ணொருத்தியை மையமிட்டு ஒரு தொல்பழங்குலம் தடுமாறிச் சுழல்வதன் நியாயங்களை, அபத்தங்களைத் தீட்டிக் காட்டுகிற இப்பிரதி நவீன மனிதனுக்கும் இயற்கைக்குமான நிழல் யுத்தத்தில் யாருக்கு வெற்றி என்ற வினாவை எழுப்புகிறது.
Delivery: Items will be delivered within 2-7 days
Kathir Rath –
#கன்னித்தீவு
ஜனவரி புத்தக திருவிழாவில் வெளியிட்ட மற்ற புத்தகங்களை விட தனது கன்னித்தீவு நாவல் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே எழுத்தாளர் சரவணகார்த்திகேயனின் விருப்பமாக இருந்தது. அவரின் பதிவினை கண்ட பின்தான் நானும் இப்புத்தகத்தை வாங்கினேன். இல்லையென்றால் இரதி இரகசியம்தான் வாங்கி இருப்பேன். அடுத்து இந்த நாவல் விமர்சன போட்டி இல்லையென்றால் கட்டாயம் உடனடியாக வாசித்திருக்க மாட்டேன். அதற்கு நன்றிகள்.
கன்னித்தீவு என்ற பெயரும், அதை விட கதை சொல்லும் அருமையான அட்டைப்படமும் போதும் கரு என்ன என்பதை விளக்கி விட. ஒரு கர்ப்பிணி பெண், ஒரு பழங்குடியினர் வசிக்கும் தீவில் சிக்கி கொள்வதுதான் கதைக்கரு. இதை யூகித்து விட்டதால் பெரிதாய் சுவாரசியம் இருக்காது என எதிர்பார்ப்பின்றி வாசிக்க செய்வது உண்மையில் இப்புத்தகத்திற்கு ஒருபலம்தான். ஏனெனில் பெரிதான எதிர்பார்ப்பு எப்போதும் ஆபத்துதான்.
ஒரு உயர்சாதி பிராமினப் பெண் தன்னுடன் படித்த தாழ்த்தப்பட்ட ஆணை, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு, அந்தமானில் வசிக்கிறாள். அவளுக்கு பிரசவத்திற்கு கொஞ்ச நாட்களே இருக்கும் நிலையில் எதிர்பாராத விதமாக ஒரு பழங்குடியின தீவில் சிக்கி கொள்கிறாள். இதுதான் கதை என்று அட்டைப்படத்தையும் முன்னுரையையும் தாண்டும் போதே புரிந்து கொண்டு விடுவோம். ஆனால் இது மட்டும்தான் இந்த புத்தகம் சொல்லுகிறதா என்றால் இல்லை்
இப்புத்தகத்தை வெறும் அட்வெஞ்சர் பாணியாகவோ அல்லது ஒரு கர்ப்பிணியின் காதல் நினைவுகளாகவோ யாரும் பார்த்து விடக்கூடாது என்பதுதான் என் பெரிய தவிப்பு. ஏனென்றால் என் அளவில் இப்புத்தகம் பேசுவது வேறு சில முக்கிய விசயங்கள். பேசுவது என்றால் சொல்வதில்லை, கேள்வி எழுப்புவது, நம்மை தேட செய்வது.
தாண்டவராயன் கதை நூலில் வரும் வரி ஒன்று “கதைகளை பொருத்த வரையில் சொல்லப்பட்டதை விட மறைக்கப்படுவதே கேட்போரிடம் சென்று சேர வேண்டியவையாக இருக்கும்” இப்புத்தகத்திலும் அப்படித்தான் சிலவற்றை நான் பார்க்கிறேன். அதை தனி ஒரு பதிவாக பதிவிடுகிறேன்.
பார்வதி தன் கருவிலுள்ள சிசுவை தன் கணவன் முருகன் கண்டு ரசிக்கையில், அவனை இவள் இரசிப்பதாக தொடங்குகிறது இந்நாவல். அங்கு தொடங்கி நாவல் முழுக்க பார்வதியின் முருகன் மீதான காதல் வெளிப்படாத இடமே இல்லை. அப்படிப்பட்ட காதலுக்கு சோதனையாக வருகிறது தேர்தல். சிறிய அஜாக்கிரதையால் தவிர்க்க முடியாத தேர்தல் பணிக்காக ஒரு தீவிற்கு செல்ல வேண்டும். சொன்னால் முருகன் அனுமதிக்க மாட்டான். அதனால் பொய்யுரைத்து விட்டு கிளம்புகிறாள். அந்த பொய்யில் துவங்குகிறது நவீன மானுட இனத்தின் பயணம், அது சென்று முடிவடைவது கற்காலத்திடம்.
நெருப்பை முறையாக பயன்படுத்த தெரியாத அளவிலான நாகரீகம் மட்டுமே அடைந்த பழங்குடியினர் வாழும் லெமூரியர் தீவில் தனியாக சிக்கி கொள்கிறாள். அது எப்படி, உடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதெல்லாம் நாவல் சொல்லும் கதை.
கடலின் வழியாக வரும் அனைத்து ஆபத்தையும் வெளியாட்களையும் முதலில் தங்களின் பின்பக்கத்தை காட்டி எதிர்ப்பு தெரிவித்து விட்டு, அதையும் தாண்டி முன்னேறுபவர்களை தாக்கி திருப்பி அனுப்பும் லெமூரியர்கள், அத்தீவின் கரையில் காலடி வைத்த எவரையும் உயிரோடு விடுவதில்லை. தப்பி பிழைப்பவள் பார்வதி மட்டுமே, அதற்கு காரணம் அவளது கர்ப்பம்.
அவளை சீராட்டுவதற்காகவே தம் மகனுடன் வந்து சேரும் லெமூரிய பெண் பார்வதிக்கு மரியாவாகிறாள். அடுத்தடுத்த நாட்களில் பார்வதியின் அத்தீவு அனுபவம் மானுடவியலில் மிகப்பெரிய பாய்ச்சல்.
தீவின் நடுவே அமைந்துள்ள காட்டை சிஎஸ்கே வர்ணிக்கும் அத்தியாயம் இருக்கிறதே, அட அட அட, 2 முறை திரும்ப படித்தேன்.
பழங்குடியினரின் வாழ்வு முறை, அவர்களின் உணவில் இருந்து பாலியல் வரை அத்தனைக்கும் சாட்சியாகும் பார்வதி அவர்கள் இயற்கை பேரிடரை எதிர்கொள்ளும் இடத்தில் நவீன மனிதர்கள் இயற்கையை விட்டு எவ்வளவு தூரம் விலகி வந்துள்ளார்கள் என்பதை கண்டுணர்கிறாள்.
பல முக்கிய தருணங்கள் தரும் சுவாரசியத்தை கெடுக்க கூடாது என்பதற்காக பலவற்றை மறைக்கிறேன். ஆனால் மொத்தமாக கதையை சொன்னாலும் கேட்டு விட்டு படிக்க இயலும்.
கதை என்னவென்று தெரிந்தாலும் கீழே வைக்காமல் வாசிக்க செய்வது சிஎஸ்கேவின் எழுத்து நடைதான். முழுக்க பெண்ணின் பார்வையில் எழுதி விடாமல் கணவன் இருந்திருந்தால் என்ன யோசித்திருப்பான் என தனது ஆண்பார்வையை கலந்திருப்பது ரசிக்கும் படி இருக்கிறது.
அதிலும் எந்த மாதிரி கதையிலும் அரசியல் பேச முடியும் என்றாலும் மற்றவர்களை போல் இலைமறை காயாக இல்லாமல் தனது பக்க கருத்தை நேரடியாக பேசி இருப்பது வெகு சிறப்பு.
அங்கங்கு சொல்லப்படும் நவீன உவமைகளை வெகுவாக ரசித்தேன். கற்காலத்தில் கதை நுழைந்த பிறகு முழுக்க அங்கேயே சிக்க வைக்காமல் சம காலத்தை குறித்தும் எழுதியது ரசிக்கும் படி இருந்த்து. உதாரணத்திற்கு கப்புள் கோல்ஸ் பற்றி சொல்லும் இடம். 100 பௌர்ணமிகள் ஒன்றாக பார்க்க திட்டமிடுவது போன்றவை.
அதிலும் கந்த சஷ்டி கவசத்தை பயன்படுத்திய இடங்கள் அருமை.
அனைத்தையும் விட குறிப்பாக பஞ்ச பூதங்களின் அடிப்படையில் பிரித்து எழுதி இருப்பது. அதற்கேற்றார் போல் கதையின் போக்கும் அமைந்திருந்த்து.
எபபடியும் பார்வதிக்கு பிரசவம் அத்தீவில்தான் என்று தெரிந்திருந்தாலும் அந்த கட்டத்தை எட்டுகையில் மிகவும் படபடப்பாக இருந்தது. அதிலும் ஒரு வட்டத்திற்குள் அவள் நுழைக்கப்படும் இடம் திக்கென்றிருந்த்து எனக்கு.
கர்ப்பம், பிரசவம் குறித்து a-z தெரிந்து கொள்ள தாராளமாக இப்புத்தகத்தை பரிந்துரைக்கலாம். முதல் முதலாக சூலுறுவதில் துவங்கி பிரசவத்திற்கு பிறகான தடுப்பீசி வரை அத்தனை அத்தனை தகவல்கள், அத்தனையையும் கதையோட இணைத்து கொடுத்திருப்பதுதான் சிறப்பு. அந்த வகையில் திருமணமான இணையர் படிக்க வேண்டிய நூலாக இதை பரிந்துரைக்கலாம்.
#குறைகள்
பார்வதி அந்த தீவில் சென்று சிக்கி கொள்ள வேண்டும் என திட்டமிட்டு செய்வது போல் தொடர்ச்சியாக தவறாகவே எடுக்கும் முடிவுகள்
இப்படித்தான் சிக்கி கொள்ள போகிறாள் என முன்கூட்டிய தெரிந்த வாசகனை மிக பொறுமையாக அந்த கட்டத்திற்கு கூட்டி செல்வது. என்னை கேட்டால் பார்வதி கடலில் தத்தளிக்கும் இடத்தில் இருந்து கதையை துவக்கி இருக்கலாம்.
நிக்கி கதாபாத்திர வடிவமைப்பு, உண்மையில் வலிந்து திணிக்கப்பட்டதை போல இருக்கிறது. அவன் இப்படித்தான் நடந்து கொள்ள போகிறான் என்பது முதல் அறிமுகத்திலேயே தெரிந்து விடுகிறது.
பழங்குடியின பெண்ணான மரியா, கடல் வழியாக வந்த பார்வதியை தேவதை இனத்தவளாய் நினைத்திருப்பதாய் சொன்ன இடம் ஒப்பவில்லை. எந்த கடவுள் வழிபாடும் புராண கதைகளும் இல்லாத கூட்டம் பரம்பொருளை கூட நம்பட்டும். ஆனால் தேவர்கள் போன்றொரு கருதுகோளை கையாள்வது சரியாக படவில்லை.
#முடிவுரை
மிகவும் சிறந்த நாவல் என்று சொல்ல முடியாத வடிவம்தான் என்றாலும் கன்னித்தீவு இந்த காலகட்டத்தில் அனைவரும் வாசித்து விவாதிக்க வேண்டிய நூல்தான்.
எனக்கு தெரிந்த அனைவரையும் இப்புத்தகத்தை படிக்க சொல்லி இருக்கிறேன். மேலும் இது பேசும் கேள்வியெழுப்பும் விசயங்கள் குறித்து நண்பர்களிடம் உரையாடுகிறேன். இன்னும் இது பெரும் விவாத பொருளாக விரும்புகிறேன்.
Poonkodi Balamurugan –
புத்தகம்: கன்னித்தீவு
ஆசிரியர் :சி.சரவணக்கார்த்திகேயன்.
இந்த புத்தகத்தை பிறகு படித்துக்கொள்ளலாம் என்று நினைத்து படிக்காமலேயே இருந்தேன். ஆனால் நம் குழு நண்பர்களின் பதிவுகளைப் படிக்க படிக்க நாமும்இப்போதே படித்தால் என்ன என்று தோன்றியது. புத்தகத்தை கிண்டிலில் வாங்கியதும் அட்டைப்படத்தை மட்டுமே வெகு நேரம் பார்த்துக்கொண்டு இருந்தேன். சந்தோஷ் நாராயணனின் அட்டைப்படம் அவ்வளவு ஈர்ப்பாக இருந்தது.
அந்தமானும் சுற்றியுள்ள தீவுகளும் தான் கதைக்களம் என்பதால் முதலில் அந்தமானைப்பற்றி , அங்கு தீவில் வாழும் அந்தமான் பழங்குடி மக்கள், கிரேட் அந்தமானிஸ், ஓங்காஸ், ஜார்வாக்கள், சென்டினல்கள் எனப் பலவகை பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள். அந்தமானில் சென்டினல் தீவில் சென்டினல் இனப் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள விரும்புவதில்லை. அந்தமானில் வசிக்கும் மற்ற பழங்குடியினரிடத்திலும் இவர்கள் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. வனவிலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்பவர்கள். இவர்கள் பேசும் மொழியும் பிற இன மக்களுக்குப் புரியாது. கிட்டதட்ட30000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவர்கள் இப்பழங்குடிகள். ஆப்பிரிக்காவிலிருந்து இடப்பெயரத் தொடங்கி ஆசியாவில் வாழத் தொடங்கிய உலகின் மூத்த குடிகள் இவர்கள். இப்படி பல செய்திகளைத் படித்தும் , பழங்குடி மக்களைப்பற்றி பல காணொளிகளைப் பார்த்தும் அப்பழங்குடி மக்களைப் பற்றி அறிந்து கொண்டேன். மேலும் எனது கணவர் ஒரு முறை அந்தமான் சென்றிருப்பதால் அவரிடமும் அந்தமானைப் பற்றி , பழங்குடிகளைப் பற்றி கேட்டறிந்தேன். நாவலில் ஒன்றிப்படிக்க நினைத்ததே இந்த தகவல்கள் தேடலுக்கு காரணம்.
கதைச்சுருக்கம்:-
ஐஐடி வளாகத்தில் நடைபெறும் ஒரு விழாவிற்கு
வனவாணி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய பார்வதி செல்லும்போது , கணினித்துறையில் கடைசிவருடம் படிக்கும் முருகன் ஒரு இக்கட்டான சூழலில் காப்பாற்ற அவர்களுக்கிடையே நட்பு வலுக்கிறது. உலகத்தின் கீழுள்ள அனைத்து விஷயங்களையும் பேசும் அளவிற்கு நெருங்க நெருங்க காதல் வயப்படுகிறார்கள்..பார்வதியின் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்து இருவரும் அந்தமான் தீவில் வசிக்கிறார்கள். பார்வதி முதலில் கருத்தரித்து அந்தக்கரு கலைந்து மீணடும் ஒருமுறை கருத்தரிக்கிறாள். இந்த முறை மிகுந்த கவனத்துடன் இருந்து வருகிறார்கள். பார்வதி ஒன்பதாவது மாத ஸ்கேனை முடித்து விட்டு பள்ளிக்கு சென்ற போது அவளை அந்தமான் தீவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற இடைத்தேர்தலுக்கு ப்ரைஸிடிங் ஆபிசராக போக வேண்டும் என்ற சுற்றறிக்கையோடு பள்ளி தலைமையாசிரியர் எதிர்கொள்கிறார்.
போக வேண்டாம் என்று முருகன் சொல்கிறான் . போகவேண்டும்என்பது அவளது முடிவு.சரி இந்த இக்கட்டான சூழலில் பெரியவங்க பேச்சைக் கேட்கலாம் என்று பார்வதியின் வீட்டுக்கு போன் செய்கிறார்கள். முதலில் அவள் தாய் பேசாமல் துண்டிக்கிறாள். ஆனாலும் தகவலை மட்டும் மாமியாரிடம்சொல்லிவிட்டுமுருகன் வைத்து விடுகிறான். அவளை இறந்ததாக சொன்ன பெற்றோர்கள் அவள் சூல் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும் மகிழ்ச்சியில் அவளுடன் பேசிஅந்தமான் வந்து அவளுக்கு வளைகாப்பு நடத்துவதாகச்சொல்கிறார்கள். முருகனிடம் தன் தந்தை தேர்தல் பணிக்கு செல்ல அனுமதி அளித்து விட்டதாகச் சொல்லி தேர்தல் பணிக்கு செல்கிறாள்.
அவள் செல்ல வேண்டிய பகுதி ஓங்கோ மக்கள் வசிக்கக்கூடிய பகுதி. அங்கு மானுடவியலாளர் ரசூல் மற்றும்புகைப்பக் கலைஞன் நிக்கியுடன் கடல்வழிப்பயணம் செய்கிறாள். நிக்கியின் வக்கிரப்பார்வையை எதிர்கொண்டு ஒரு வித அச்சத்துடன் பயணிக்கிறாள். தேர்தல் நாளும்வருகிறது. மதியம் வரை காத்திருந்தும்கூட ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை. ஐந்த மணி காத்திருந்து விட்டு பணியை முடித்துக்கொண்டு செல்வதுதான் சிறப்பு என காவல்துறை ஆய்வாளர் சொல்கிறார். ஆனால் ரசூலுக்கோஇவ்வளவு தூரம்பயணித்தும் பழங்குடி மக்களைப் பற்றி அறியாமல் எப்படி செல்வது என தயக்கம். அவர் தயக்கத்தை அறிந்து பார்வதி ஒரு யோசனை வைக்கிறாள். அவர்கள்இங்கு வராவிட்டால் என்ன நாம் அங்குசென்று அவர்களிடம்வாக்குப் பெறலாம் என. ரசூலின் சுயநலமோ அல்லது பார்வதியின் விதியோ ஏதோ ஒன்று அவளை அங்கு இழுத்துச் செல்கிறது..
தீடீர் கடல் கொந்தளிப்பில் படகு கவிழ அனைவரும் பாதுகாப்புஜாக்கெட் அணிந்திருப்பதால் கடலில் மிதக்கிறார்கள்..பாதுகாப்பு ஜாக்கெட் அவிழ்ந்து கண்ணெதிரே இன்ஸ்பெக்டர் தண்ணீரில் தத்தளித்து இறக்கிறார்..பார்வதியின் மனோதைரியமும் , வயித்திலுள்ள சிசுவைப்பற்றிய நினைவும் அவளை நினைவிழக்க செய்யாமல் கரையில் தள்ளுகிறது..அவள் கரை ஒதுங்கிய பகுதியோ லெமூரியா என்று
ரசூலால் சொல்லப்பட்ட பகுதி. அங்குள்ள பழங்குடிகள் நிக்கியின் இச்சைக்கு பலியாக இருந்த அவளை காப்பாற்றுகிறார்கள். அத்தீவில் அவர்ளுடன் சில நாட்கள் இருக்கவேண்டிய சூழல், மொழி தெரியாத இடத்தில் அவள் எப்படி இருந்தாள்., முடிவில் தன் கணவனுடன் சேர்ந்தாளா என்பதுதான் கதை..
கதை அலசல் : –
இந்த கதையின் பெரும்பகுதியை தன் முதுகில் தாங்கி செல்பவள் பார்வதி. “சாதியை முன்னெடுப்பதில் பெண்ணே முன்நிற்கிறாள். ஆண்களை விடப் பெண்களே சாதிப் பித்தும், சாதித் திமிரும் அதிகம் கொண்டவர்கள். சாதி வேற்றுமை பார்ப்பதில், அதன் அடிப்படையில் பிறரை அவமதிப்பு செய்வதில் அவர்களே முன் நிற்கிறார்கள்.” என்றொரு முறை முருகன் பார்வதியிடம் சொல்வான். ஆனால் காதல் என்ற பித்து சாதிப்பித்து ஜெயித்திருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது.
பொதுவாக நிறைய மனிதர்களுக்கு அட்வென்சர் மனோ நிலை அதிகம் இருக்கும் .அந்த மனோ நிலை பார்வதிக்கும் . யாராலும் ஓட்டுப் போடவைக்க முடியாத ஓங்கோ பழங்குடி மக்களை தான் ஓட்டுப் போட வைக்க வேண்டும் என்ற மனோ நிலை தான் அவளை அவ்வளவுரிஸ்க் எடுக்க வைக்கிறது. சீதை லட்சுமணின் கோட்டைத் தாண்டியதால் தான் ராமாயணம் பிறந்தது என்பார்கள். பார்வதியும் ரிஸ்க் எடுத்ததால் தான் கன்னித்தீவு கதையும் பிறந்திருக்கிறது.
பார்வதியின் நினைவுகளின் வழியாகவே நாம் முருகனைப்பற்றி நாம் அறிந்து கொள்கிறோம். மிகவும் முன்னேறிய சிந்தனைகள் உள்ளவன். மனைவியைத் தோழியாய் மதிக்கக்கூடியவன்.ஆனாலும் அதிகமாக முருகனைப் பற்றி நினைக்கும் போது கடைசியில் உடல் உறவு சம்பந்தமாகத்தான் முடிகிறது என்பது சற்று முதலில் நெருடலாக இருந்தது. ஆனாலும் தம்பதியினரின் பெரும்பாலான இனிமையான கணங்கள் உடலைப் பற்றியோ அந்த அந்தரங்க உறவைப்பற்றியோ இருக்கும் என்பதை உணர்வதால் அந்த நெருடல் சற்றே மறைந்தும்விடுகிறது. எல்லாக் கடினமான நேரத்திலும் கவசம் சொல்வது எனக்கு மிகப்பிடித்த ஒன்று . ஏனெனில் பல கடின சூழல்களில் நானும் அதை செய்வதால்.கடின சூழலில் ஏதாவதை ஒன்றைப் பற்றிக் கொள்ளும் நம்பிக்கை அது.
மரியா மொழி அறியாத அன்பின் தேவதை. வேற்றுலக மக்களை அவர்கள் வெறுத்த போதிலும் சூல்கொண்ட பெண்ணைக் காப்பாற்றுவதன் மூலம் அன்னை மரியாவாக பார்வதிக்கு தோன்றுகிறது. இயற்கையின் மொழிகள் புரிந்து விடின் மனிதர்க்கு மொழியே தேவையில்லை என்பார்கள். அதுதான் பார்வதிக்கும் மரியாவுக்குமான மொழி தாண்டிய அன்பு. அந்த அன்புதான் தான் விரும்பும் கருமன் பார்வதியை முயங்க விரும்பும் போது அவளைக் காப்பாற்ற அவனை ஈட்டி எறிந்து கொன்றது. மிக நெகிழ்ந்த தருணம் என்றால் மரியாவின் மகன் பார்வதி கிளம்பும் போது அவள் பலநாட்களாக சொல்லிக் கொடுத்த அம்மாஎன்று அழைத்த தருணம்.
குறைகள் :
நிக்கியைப் பெண்பித்தனாக காட்டியதில் தவறில்லை. ஆனால் உயிர் பிழைத்து நிற்கும் சூழலில் அடுத்து என்ன ஆகும்என்று தெரியாத சூழலில் ஒரு மனிதனுக்கு காமம் கிளர்ந்திடுமா என்று கேள்வி எழுகிறது.
பழங்குடிகள் நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பவர்களாக இருப்பார்கள் என்றாலும் மரியாவின் மகன் நோய்த்தொற்றால் நிமோனியா வந்து இறப்பது மனதை மிகவும் வாட்டுவதாக இருந்தது. அதை கதையில் தவிர்த்து இருக்கலாமோஎன்று மனம்
ஏங்கியது.
காடுகளில் கிடைத்த பழங்களை உண்டு வாழ்ந்து கொண்டிருந்த குரங்குகளை உணவுப் பொருட்களை கொடுத்து சாலைகளில் யாராவது உணவுப் பொருட்களை தருவார்களா என்று ஏங்க வைத்த அவலம் அந்தமான் பழங்குடிகளுக்கும் நம் மக்கள் செய்வதை பார்த்தால் மனதுகலங்கும்.இயற்கையோடு ஒன்றி வாழும்அவர்களை அப்படியே விட்டுவிட்டால் போதுமானது.
Arockia Antonyraj –
04/22 – புவி தினம் – நம் அறிவியலின் வளர்ச்சி பூமிக்கு என்று ஒரு நாளை உருவாக்கி அதையும் வலைதளங்கள் மூலமாக நமக்கு நியாபக படுத்தி பூமி/இயற்கையை பாதுகாப்பதை பற்றி நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. இத்தகைய நாளில் இந்த புத்தகத்தின் மதிப்புரை எழுதுவதை பொருத்தமாக கருதுகிறேன். இன்னுமொரு சிறப்பு 04/23 – உலக புத்தக தினம்.
கன்னித்தீவு – இந்தபெயரை பார்த்த உடனே தினத்தந்தி படிக்கிறவங்களுக்கு அந்த தினசரி செய்தித்தாளில் வரும் சித்திரக் கதைத் தொடர் கண்டிப்பாக நியாபகத்துக்கு வரும். இன்றைய எழுத்தாளர்களில் பலர் தலைப்பும், அட்டைப் படமும் வித்தியாசமாக இருக்க வேண்டுமென ஏதோதோ முயற்சிகள் செய்து தலைப்புக்கும் அட்டைப் படத்துக்கும் புதினத்துக்கும் தொடர்பே இல்லாதவாறு செய்துவிடுகிறார்கள். கதையை படிச்சிட்டு காத சொறிஞ்சு கிட்டே யோசிச்சாலும் கதைக்கும், அட்டைப் படத்துக்கும், புத்தகத்தின் பெயருக்கும் தொடர்பே இருக்காது. ஆனால் இந்த நாவலின் முன்னுரையை படித்து விட்டு அட்டை படத்தை பார்த்தாலே உங்களால் கதையை ஓரளவு யூகிக்க முடியும்.
அந்தமான் நிகோபார் தீவுகளில் வெளி உலகத் தொடர்பே இல்லாத பழங்குடியின மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வெளி ஆட்கள் யாரையும் சந்திக்க விரும்புவதும் இல்லை, தாங்கள் வாழும் தீவுக்குள் யாரையும் அனுமதிப்பதும் இல்லை என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இப்படியான ஒரு வெளி உலக தொடர்பற்ற பழங்குடி மக்களை பற்றியதுதான் இந்நாவல். ஒரு குறிப்பிட்ட கற்கால சமுதாயத்தை பற்றி எழுதும் போது திரட்டும் செய்திகள் அனைத்தையும் கட்டுரை வடிவில் எழுதிவிடுவது எளிது, ஆனால் எழுத்தாளர் அவர்கள் தான் திரட்டிய அத்தனை கருத்துக்களையும் ஒரு கதையோடு கோர்த்து ஒரு உயிரோட்டமான படைப்பான கன்னித்தீவை உருவாக்கியுள்ளார்.
மனித குலம் எப்படி தோன்றியது என்பது பற்றி பல கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் அந்த கருத்துக்களில் எதுவும் அதிகார பூர்வமாக அல்லது அறிவியல் ரீதியாக சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க படவில்லை. அதே போல் தான் மொழிகளும். இன்று எழுத்து மற்றும் பேச்சு வழக்கில் இருக்கும் மொழிகள் எப்படி தோன்றியது, எல்லாவற்றிற்கும் முதல் மொழி எது என்பது இன்னும் விடை தெரியாத கேள்விதான். சரி, மொழியேஇல்லாத காலகட்டத்தில் மனிதர்களுக்கு இடையே கருத்து பரிமாற்றம் எப்படி நடந்திருக்கும்?
தன்னலமற்ற அன்பு மட்டுமே மொழிகளை கடந்து சக மனிதனுடைய தேவைகளை புரிந்து கொண்டு உதவி செய்ய தூண்டுகிறது. இரு உயிர்களுக்கு இடையில் பிரதி பலன் பார்க்காத அன்பு இருக்கும் பொழுது மொழிகளின் தேவை இல்லாமல் போய்விடுகிறது. இது தாய்க்கும் பிறந்த குழந்தைக்கும் போன்றதான ஒரு உறவு. இப்படி அன்பு, பாசம் கலந்த உறவுகளுக்கிடையே மொழிகளையும் தாண்டிய பாசப் பகிர்தல் தான் இந்த கதை.
இன்றைய உலகத்தின் கண்கள் வணிக மயமாக்கப்பட்டு விட்டன. தனி மனிதனில் இருந்து, கார்பொரேட் நிறுவனங்கள், மற்றும் அரசு நிர்வாகம் வரை எல்லாமே பார்ப்பதையெல்லாம் எப்படி காசாக்கலாம் என்ற எண்ணத்துடனே பார்க்கின்றது. அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றங்களினால் இயற்கைக்கு நாம் ஏற்படுத்தும் விளைவுகளை பார்க்கும் விசாலமான பார்வைகள் யாரிடமும் இல்லை.பெரும்பாலான திட்டங்கள் அனைத்தும் குறுகிய கால நோக்கத்துடனே நிறைவேற்றப் படுகின்றன. அதனால் இந்த முன்னேற்றங்கள் தேவை இல்லை என்பதற்கில்லை ஆனால் இந்த மாற்றத்தில் இருந்து சிறிது விலகி நிற்க முயலும் எல்லோருமே ஒருவகையில் சிறு பான்மையினர்களாவே பார்க்கப்படுகிறார்கள். தகவல் தொழில் நுட்பங்களால் உலகை சுருக்கிவிட்ட நாம் அந்த சுருக்கத்திற்குள் இயற்கையை போட்டு புதைத்து விட்டோம் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
உயிர் வாழ்வதற்கு (survival) தேவையானவற்றை மட்டுமே வைத்து வாழ்ந்த மனித இனம் இன்று ஆடம்பரமான வாழ்க்கையை (luxury) நோக்கி ஓட ஆரம்பித்திருக்கிறது. எல்லையே இல்லாத இந்த ஓட்டத்தின் வேகத்தில் தன் கால்களுக்கு அடியில் இருக்கும் புல் வெளியையோ, விரல்களில் விழுந்து தெறிக்கும் பனித் துளியையோ கவனிக்க நேரமில்லை. இந்த ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லாத அனைவரையும் நாம் வாழ தகுதியற்றவர்கள் என்றோ கலாச்சாரத்தில் பின் தங்கியவர்கள் என்றோ முத்திரை குத்தி விடுகிறோம். ஆனால் இந்த மாதிரியான வரைமுறைகளை வகுத்தது யார்? எந்த அளவுகோல் கொண்டு மனித இனம் இவ்வாறு பிரிக்கப்பட்டது? அறிவியலும், பொருளாதாரமும் மட்டுமே மனிதனை தன் சக மனிதனிடமிருந்து உயர்த்திவிடுமா? நீங்கள் இப்புதினத்தை வாசிக்கும் கண்டிப்பாக இந்த மாதிரியான கேள்விகள் உங்களுக்குள் எழும்.
கருத்து சொன்னது போதும், கதைக்கு வருவோம்…
குழந்தை பிறப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு இளம் தம்பதியின் டாக்டர் விசிட்டில் ஆரம்பிக்கிறது கதை. அப்படியே அவர்கள் எப்படி தம்பதியானார்கள் என்று சின்ன ஃப்ளாஷ்பேக். இந்த கதை ஒரு 15 வருசத்துக்கு முன்னாடி நடக்குற கதை. கதைப்படி பார்த்தா தம்பதி தங்களோட முதல் குழந்தயை எதிர் பார்க்கிறார்கள். கூட்டி கழிச்சி பார்த்தாலும் இது ஒரு 80’ஸ் கிட்ஸ் கதைதான் 🙂 இந்த கதையின் திருப்பு முனையே பார்வதியும் முருகனும் தாங்கள் செய்யும் வேலை மீது வைத்திருந்த அளவுகடந்த பற்றுதான். வேல செய்யிற கம்பெனியையும் வேலையையும் குருட்டு தனமா நேசிக்கிற ஒரு கூட்டம் கண்டிப்பா 80’ஸ் கிட்ஸ் தான். இப்ப இருக்கிற ஜெனரேஷன் இந்த விசயத்துல ரெம்ப தெளிவா இருக்காங்க, சம்பளம் மட்டுமே பிரதானம்.
இளம் எழுத்தாளர்கள் தங்கள் அரசியல் பார்வையை பற்றி எழுத தயங்க கூடாது. அந்த வகையில் எழுத்தாளர் சரவணகார்த்திகேயன் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சம கால அரசியல் நிகழ்வுகளை கதையோடு சேர்த்து குறிப்பிட்டுள்ளார்.அதேபோல சாதி எதிர்ப்பு கருத்துகளை பற்றியும் கதைக்குட்பட்டு தயங்காமல் எழுதியுள்ளது கண்டிப்பாக பாராட்ட பட வேண்டிய விஷயம்.
கதையின் முதல் பகுதியான “நில பர்வம்” வாசிக்கும் போது நீங்கள் உங்கள் முதல் குழந்தையின் பிறப்பை எதிர்பார்த்து இருந்த காலங்கள் கண்டிப்பாக நினைவலையில் வந்து போகும். முதல் பகுதியிலே காதல், சாதி மறுப்பு திருமணம், கலவி, தனிக்குடித்தனம், வேலைன்னு எல்லா விஷயத்தையும் கலந்து கொடுத்துறார். இந்த கதையில் மிகவும் பிடித்தது, பார்வதி மற்றும் முருகனின் பாத்திர படைப்பு. அதிலும் முருகனுக்கும் பார்வதிக்கும் இடையிலான சின்ன சின்ன காதல் சீண்டல்கள், கொஞ்சல்கள், படுக்கை அறை பகிர்வுகள் எல்லாம் அட்டகாசம். இவை எல்லாத்தயும் தாண்டி அவர்களுக்கு இடையேயான புரிதல். வார்த்தைகளால் வெளிக்காட்டாமலே தன்னுடைய துணையின் தேவைகளை புரிந்து கொள்ளும் தருணங்களில் அந்த அப்பழுக்கற்ற அன்பு மொழிகளை ஊமையாக்கி விடுகிறது.
பார்வதி முருகனிடம் தான் சொன்ன அந்த ஒரு பொய்யை நினைத்து வருந்தும் தருணங்கள் அவர்களுக்கு இடையேயான அன்பை, புரிதலை கதை முழுவதும் நமக்கு சொல்லிக் காட்டிக் கொண்டே இருக்கிறது. பார்வதி கடலில் செல்லும் அந்த ஆபத்தான பயணத்தில் கூட நிக்கியின் காம பார்வையில் இருந்து தப்ப முடியாமல் தவிப்பது கட்டுக்கடங்காத காமம் எப்படி மனிதனை மிருகமாக மாற்றுகிறது என்பதையும், ரஸூல் போன்ற சுய நலவாதிகள் தங்களுடைய காரியம் வெற்றி பெற எதையும் செய்ய தயாராக இருப்பார்கள் என்ற நிகழ் கால நிஜங்களை எடுத்துரைக்கிறது.
மனித உருவில் வந்த மரியாள் தான் இந்த கதையை ரட்சிக்கிறாள். நாம் அழகுக்கு வரைந்து வைத்திருக்கும் எல்லைகளை தன்னுடைய அன்பு மற்றும் கருணையினால் உடைத்தெறிகிறாள் இந்த கறுப்பழகி. கர்ப்பிணியான பார்வதியை தன்னுடைய லெமூரிய குழுவிடம் இருந்து காப்பாற்றியவள் அதோடு தன்னுடைய கடமை முடிந்தது என்று விட்டு விடாமல் தன்னோடு வைத்து பார்வதியை பாதுகாத்து தங்களுடைய வாழ்க்கை முறையை அவளுக்கு வாழ கற்றுக் கொடுக்கிறாள். பார்வதிக்காக தன்னுடைய இன மக்களேயே எதிர்த்த மரியாள் ஒரு கட்டத்தில் தன்னுடைய குழந்தைக்கு தகப்பனையும் கொன்று விடுகிறாள். இவை அனைத்தையும் மரியாள் பார்வதி மேலும் அவளுடைய வயிற்றில் இருக்கும் குழந்தை மேலும் இருந்த பாசத்தில் செய்கிறாள். பார்வதிக்கும் மரியாளுக்கும் இடையே பேச்சு மொழி கிடையாது, அவர்களின் மொழிப் பரிமாற்றம் அன்பு மட்டுமே. ஒரு கட்டத்தில் மரியாளை பார்வதி பிரிந்து வரும் போது அவர்கள் இருவரும் உணரும் அந்த வெறுமை தான் அன்பு.
லெமூரியர்களின் வாழ்க்கை முறையின் நோக்கமே உயிர் வாழ்வது மட்டும் தான். அதைத் தாண்டிய அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். உணவு, உடை, காமம் இருப்பிடம் அனைத்தையுமே தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் இயற்கையோடு பேசுகிறார்கள், இயற்கையின் மாற்றங்கள் அவர்களுக்கு அடுத்து நடக்கப் போகும் விஷயங்களை சொல்லி விடுகிறது. இந்த கதையின் உள்ளே லெமூரியர்களின் வாழ்க்கை முறை பற்றி எண்ணற்ற செய்திகள் கொட்டிக் கிடக்கிறது. அனைத்தையும் கதையோடு சேர்த்து அள்ளி எடுப்பது தான் ஒரு வாசிப்பாளரின் வெற்றி.
பார்வதி கிளம்புவதற்கு முன்னால் லெமூரியர்களுக்கு நெருப்பை அறிமுகப்படுத்துகிறாள். இயற்கையோடு ஒன்றி வாழும் இந்த இனம் இயற்கையின் அழிவில் இருந்து காத்துக் கொள்ளும், ஆனால் மனிதன் உருவாக்கிய இந்த நெருப்பில் இருந்து இயற்கை இந்த இனத்தை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இந்த கதையில் இருந்து வெளியே வருவோம்.
முதல் பாகத்தில் இருந்து கடைசி பக்கம் வரை, கருத்தரிப்பு, கர்ப்பக் காலத்தில் கவனிக்க வேண்டிய பின் பற்ற வேண்டிய விஷயங்கள், பிரசவம், குழந்தை வளர்ப்பு என இளம் தம்பதிகள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்கள் கதையினூடே சொல்லப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு.
சரி எல்லாமே சிறப்பு தானா, என்னுடைய பார்வையில் சில விஷயங்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் அல்லது கொஞ்சம் வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கலாம். கதையின் முதல் பகுதியில் நிறைய ஆங்கில வார்த்தைகள், தேர்தல் கூட எலெக்க்ஷன் என்றுதான் எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் பேச்சு மொழி என்று ஆங்கில வார்த்தைகளை நிறைய சேர்த்திருக்கிறார். தமிழில் புதினம் எழுதும் போது இது காலம் கடந்து வாசிக்கப்படலாம். ஏன் நாமே 50 வருடங்களுக்கு முன்னால் உள்ள புத்தகங்களை வாசிக்கிறோம், அடுத்த தலை முறைக்கு இந்த ஆங்கில வார்த்தைகளின் தமிழ் வடிவம் தெரியாமலே போய் விடும். அடுத்தது, சில இடங்களில் பாலியல் (sex) கருத்துக்கள் திணிக்கப்பட்டது போல தெரிகிறது. ஒரு பெண் சிறுநீர் கழிப்பதை கூட நாடாவை உருவினாள், பேண்டை கழட்டினாள் ரீதிக்கு விரித்து எழுதணுமா என்று தெரியவில்லை. இன்னொரு இடத்தில் நிலநடுக்கத்தை பூமாதேவியின் யோனி பிளந்து நடுங்குகிறது ன்னு எழுதியிருப்பார். வேறு மாதிரியான புனைவில் கூட எழுதி இருக்கலாம். பார்வதியை மட்டுமே சொல்லும் கதையில் ஒரு கட்டத்தில் முருகனை மறந்து விடுகிறோம். ஒரு அந்நியோன்யமான தம்பதியின் கதையில் முருகனின் பதறுதலும் தேடலும் இடை இடையே சில பக்கங்களில் சொல்லப் பட்டிருக்கலாம்.
படித்ததில் பிடித்த வரிகள்….
எவ்வளவு உயரம் போனாலும் சாதி போகாது. ஜனாதிபதிக்கே இங்கே அது தான் நிலைமை. என் கூட இருந்தா உன்னையும் அவமானம் அவமானம் துரத்தும்.
முதல் பொய் சொல்கையில் தான் கூச்சமும் குற்றவுணர்ச்சியும் குத்த வைக்கும். அடுத்தடுத்த பொய்களில் தப்பிக்கும் துடிப்பு தான் ஆக்ரமித்துக் கொள்ளும்.
பெண்களுக்கு சிங்கம் மாதிரி காதலன் வேண்டும், ஆனால் அவன் நாய் போல் அவர்கள் காலடியில் குழைய வேண்டும்
இது பனிக்குடம் உடைந்து வெளிவரும் நீர் தான். சந்தேகமே இல்லை. என் மகவின் வருகையை கட்டியங்கூறி அறிவிக்கும் நிறமற்ற திரவமுரசு இஃது!
தமிழ் மதி –
கன்னித்தீவு நாவல் விமர்சனம்!
கன்னித்தீவு நாவல் என்னவெல்லாம் செய்தது?!
கதையோட்டத்தோடு, வாசிப்பின்பத்தையும் அளித்தது.
நாவலின் அமைப்பு, அதாவது அது பிரிக்கப்பட்ட விதமும், அதன் தலைப்புகளும் கதையோடு பொருந்துவது மட்டுமில்லாது, ரசனையாக இருந்தது.
கதைநாயகியின் கணவன் மூலமாக, முற்போக்கு கருத்துக்களை ஊட்டியது.
சாதிமறுப்பு திருமணம் மூலமும், அவர்கள் நன்கு வாழ்ந்து காட்டியதன் மூலமும், பாஸிட்டிவ் எனர்ஜியைக் கொடுத்தது. சமுதாய மாற்றத்துக்கு வழிவகுத்தது.
கதைகளம் மூலமாக, அந்நிலத்தைப்பற்றியும், அம்மக்களின் நாகரீகம் பற்றியும் தெளிவான தரவுகளை அளித்தது.
கதைக்களத்தின் மூலம் அரசியல்,சினிமா,கிரிக்கெட், எழுத்தாளர் இத்துறை சார்ந்தவர்களின் பெயர்கள் மற்றம் அவர்களின் பங்கு பற்றியும் எதிர்க்காலத்தினர் அறிய முடியும்.
நல்ல தமிழ்வார்த்தைகள் மட்டுமன்றி, ஆங்கிலம், அறிவியல், புவியியல், வரலாறு, மருத்துவம் சார்ந்த விசயங்களையும் அறிய முடிந்தது.
தேர்தல் சார்ந்த நடைமுறைகள், தேர்தலின் போது தேவைப்படும் பொருட்கள் முதற்கொண்டு,
மற்றும் தேர்தல் பணிகள், தேர்தல் அதிகாரியின் அதிகாரம், கடமை பற்றியும் தெளிவாக்கியது.
நாம் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை சீற்றம் பற்றி எதிர்கால சந்ததியினர் அறியும் வகையில் நாவலைப் பரிசளித்தது.
மதநல்லிணக்கத்தைப் பேசியது.
இஸ்லாத்திடம் கற்க வேண்டியதை சொன்னது. கிறிஸ்தவர்களின் தெய்வஙகளின் பெயரை கதை மாந்தர்க்கு சூட்டியதன் மூலம், கதைமாந்தர்களின் இயல்பைப் பற்றிய தெளிவைக் கொடுத்தது.
செக்யூலர் தேசமான நம் நாட்டின் சிறப்பை எடுத்தியம்பியது.
கதைமாந்தர்களின் பெயர்த்தேர்வுகள் மூலமும் கதையைச் சொல்லியது அழகு.
மொழிப்பிரச்சனையைப் பேசியது.
உணவு அரசியலைப் பேசியது.
கருணையைப் பேசியது.
காதலைப் பேசியது.
காமத்தை பேசியது.
நாவலில் எங்குமே எழுத்துப்பிழையில்லாமல் (ஓரிடம் தவிர்த்து) இருப்பது சிறப்பு. கருத்துப்பிழையும் இல்லாதிருப்பது அதனினும் சிறப்பாக இருந்தது.
ஆசிரியரின் பின்குறிப்பு, சமுதாயத்தின் மீது அவர் கொண்டுள்ள அக்கறையைக் காட்டியது.
கதையில் எங்கு தேடினும், ஒரு குற்றமும்,குறையும் காணவியலாதவாறு ஆசிரியரின் உழைப்பு வியக்க வைக்கிறது. உதாரணமாக, கதையில் வரும் கிழமைகள், திகதிகள், தரவுகள், காலநிலைகள்(பௌர்ணமி) மற்றும் நிகழ்வுகளின் கோர்வைகள் என எதிலும் தெளிவு.
இறுதியாக, இயற்கையோடு இயைந்து வாழ்தலின் இன்பத்தையும், அவசியத்தையும் உணர்த்தியது.
நாவல் பேசாத பகுதி எது?! எனும் கேள்வியோடு முடிக்கிறேன்.
ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றி!
நாவலின் கதைச்சுருக்கம் சொல்வதில் கூட விருப்பமில்லை. அதையொட்டி, மனம் ஒரு கதைகட்ட ஆரம்பித்து விடும் அபாயம் உள்ளதால், இதுவரையிலும் கதைமாந்தர் தம் பெயர்களைக்கூட சொல்லவில்லை. ஆயினும் மேற்கூறிய ஒவ்வொன்றுக்கும் நாவலில் இருந்து அநேக சான்றுகளை அளிக்க முடியும்.
*********************************************************
இதற்குமேலும் இதை வாசிப்பவர்களின் கவனத்திற்கு,
ஸ்பாய்லர் அலெர்ட் பகுதிகள் இனிவருவது!
கன்னித்தீவின் கதைமாந்தர்களான,
பார்வதி, முருகன், இசை, மித்தாலி, நமசிவாயம், பார்வதி அம்மா, தாத்தா, பாட்டி, முருகன் அப்பா, வள்ளி, ரஸுல், ரத்னம்,நிக்கி, ஆதித்யா, டேராடூன் மாமா, ரஞ்சனி, சஷிகலா, இந்துமதி, பூவிழி, காயத்ரி, ஃபிரான்சிஸ் தாமஸ், மரியா, மரியாவின் குழந்தை, கருமன், மூப்பர், மூப்பரின் ஆள் (சிறுமி), கப்பல் கேப்டன், அமர், மீனவர்கள், ஓங்கே மொழிபெயர்ப்பாளன், படகோட்டி, இன்ஸ்பெக்டர் மேனன், கான்ஸ்டபிள், ஹனுமந்த் சிங், கோ பைலட், மற்றும் 30 ஓங்கே பழஙகுடி மக்கள், புது ஹாஸ்பிடல் டாக்டர், நர்ஸ், ரஸுல் இன் பி.ஹச்.டி மாணவி,
இவர்களோடு,
பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், காந்தி, மனுஷ்யபுத்திரன், சச்சின், கிளியோபாட்ரா, விக்டோரியா மகாராணி, இளையராஜா, கமல், ரஜினி, ஸ்ரீதேவி, ரம்யா கிருஷ்னன், வசுந்தரா, பிளைஸ் பாஸ்கல், ஐன்ஸ்டீன், கல்பனா,ஆர்க்கிமிடீஸ், நேரு, இந்திரா,கலைஞர் கருணாநிதி, முரசொலி மாறன், அவர் மகன், வாஜ்பாயி, ஜெயலலிதா,ஜனாதிபதி, கலாம், ரஞ்சன், குல்தீப், கே.கந்தசாமி, ஆர்தர் மேக்கன்ஸி, திரிலோக்நாத் பண்டிட், கௌரவர்கள், அர்ஜுனன், சுபத்திரா, அபிமன்யு, ராமன், சீதா, ராவணன், அரக்கிகள், கௌதம முனிவர், அகல்யை,மரியாள், இயேசு, நபிகள், குழந்தை கிருஷ்ணர், ராஜேந்திர சோழன்,
ஆகியோரும் சேர்ந்து வலம்வரும் கன்னித்தீவு நாவல் நல்ல முழுமை வடிவம் பெற்று, நம்மைப்பற்றி எதிர்காலத்தினர் தெளிவாக புரிந்து கொள்வார்கள். ஆம், இந்த நாவல், மானுடவியல் புனைவு தான்.
இத்துணை பேர்களை தன் நாவலில் தலைகாட்ட செய்த ஆசிரியர் அனுசித்தாராவை மறந்தது ஏனோ?! ஆச்சரியம்! (தப்பித்தோம்)
இத்துணை பேரிலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் இப்போ பார்க்கலாம்.
1. நாயகியின் கணவன்:
இந்நாட்டில் காலங்காலமாக கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சமுகத்திலிருந்து வரும் நாயகனின் கல்வியறிவு, படித்த உயர்ந்த கல்லூரி,அவனது முற்போக்கு சிந்தனை, பெண்களை மதிப்பது, அவன் செய்யும் உயர்ந்த அரசுப்பணி, அவனுடைய கருத்துகளுக்கு மாறுபட்ட மனிதர்களிடம் கூட, அவன் காட்டும் மனிதாபிமானம், அவனது ஜனநாயகத்தன்மை, அவன் கொண்டாடும் காதல்(couple goal), காமம், நாயகியின் மீதான் அக்கறை, அவனுடைய அரசியலறிவு, கல்யாணத்திற்கு முன் அவன் கொண்டுள்ள (ராணுவ) ஒழுக்கம், அவன் சொல்
மற்றும் செயல் மூலம் மனைவியிடம் அவன் ஏற்படுத்திய தைரியம், அரசியலறிவு, சூழ்நிலையைக் கையாளும் திறன்… என சொல்லிக் கொண்டே போகலாம்.
ரசித்த இடங்கள் சில:
கருப்பு என்ற வார்த்தையில் நாவல் துவங்கியது.
கருநீல உறையிட்ட கந்த சஷ்டி
நீலக்கைப்பை
நீலக்கனவு
கருநீல சுடிதார்
நீலக்கடல்
செல்பேசியில் மல்லாக்க இருக்கும் நீலக்கோடு
ஊதா நிற காய்
ரைட்டர் டச்:
வாய்ப்பாட்டுக்கு வாய்ப்பூட்டு.
ஆம்லெட் சாப்பிடாத அத்லெட்.
மக்களுக்கு திட்டுவதற்கு கூட அணுக்கமாய் இருப்பது திமுகவே!
சிகரெட்டும் (பு)கையுமாக இருந்தான்
கிரானைட் கல்லில் பொறிக்கப்பட்ட
ஐஐடி மெட்றாஸ் – இல் இருந்த சந்திப்பிழை.
எப்பலருந்து லீவு போடனும்? – நேத்துல இருந்து
கலைஞர்- நவீன தமிழகத்தின் சிற்பி!
Etc.
புது தகவல்கள்/வார்த்தைகள்:
நக்காவரம்
ஃபேஸன் ஜார்கன்
அவோமின்
நியூமிஸ்டேடிக் ஆசாமி
கேப்கொமரின்
ஸ்வாட் அனலைஸிஸ்
பார்க்
குல்மொஹர்
ஃபஜ்ர், துஹ்ர், அஸ்ர், மக்ரிப், இஷா
Etc.
புதிதாக அறிந்து கொண்ட மாந்தர்கள்:
ஆர்தர் மெக்கன்ஸி
திரிலோக்நாத் பண்டிட்
பிலிப் ஸ்கேலேடர்
ப்ளைஸ் பாஸ்கல்
Etc.
புதிதாக அறிந்து கொண்ட இடங்கள்:
ரிச்சர்ஸன்ஸ் லைட்ஹவுஸ்
ஹட் பே
பீனிக்ஸ் பே
டுகாங் க்ரீக்
ஃபெர்ரி
சௌத் பே
டப்கன் பாஸேஜ்
10° சேனல்
Etc.
சில அழகிய தமிழ்வார்த்தைகள்:
ஈரிழைத்துண்டு
நெகிழ்குடுவை
சுயசமாதானம்
ஒட்டுவாரொட்டி
Etc.
பிடித்த வாக்கியங்கள் சில:
உடம்பை விட்டு பெண்கள் வெளியே வந்தால் தான் முன்னேற முடியும்.
கற்பு- சொற்றிறம்பாமை
பனிக்குடம்- மகவின் வருகையை அறிவிக்கும் திரவமுரசு.
i-girl–> வர்ணனை
இருளையும், கண்மையையும் சேர்த்து பிசைந்தாற் போன்றதொரு நிறம்
கண்ணுக்கினியதும், கதைக்குத் தேவையான கருத்தும் கொண்ட அட்டைப்படமும், அழகிய தலைப்பும் சிறப்பு!
ஆசிரியரிடம் எனக்குக் கேள்விகளும் உண்டு.
ஐன்ஸ்டீன் பேச்சிலரா?
மரியாவுக்கு பார்வதியால் பேர் வைக்கப்பட்டது. கருமனுக்கு என்ன நீங்களே பேர் வைத்து விட்டீர்களா? (மிஷ்கின் போல என்ட்ரி)
போகிறபோக்கில் மரியாவை மூப்பரின் வித்து என்றது.(how do u know that writer sir?) 🙂
கொஞ்சூண்டு கடவுள் மறுப்பு பேசிவிட்டு நாவல் முழுவதும் கந்த சஷ்டி பாட வைத்து விட்டீர்களே உங்கள் வாசகர்களை, ஆம் நீங்கள் நல்லவரா? கெட்டவரா?அதுமட்டுமா கடைசியாக பார்வதியை மீட்க வந்த பைல்ட்டின் பெயர் ஹனுமந்த்.
(ஏமிரா இதி! மொமண்ட்)
எல்லாம் முடிந்து கடைசியாக பாருவை சந்திக்கும் போது முருகன் எப்படி நடந்து கொள்வான் என எதிர்பார்ப்பில் இருந்த வாசகருக்கு ஏமாற்றம். ரொம்ப நார்மலாக.ஒரு இமோசனலே இல்லாது. 🙁 (ஒரு வேளை மாமி மாமனார் இருந்ததாலா?)
குழந்தை பிறந்த நிகழ்வை நீங்கள் இப்படி உவமைப்படுத்துவீர்கள் என எதிர்பார்க்கவில்லை. வருத்தம்.
முருகனுடன் பழகும் எவரும் அவனைக் காதலிக்காமல் இருக்க முடியாது என தற்குறிப்பேற்ற அணியிலக்கண பாடம் வாசகர்களுக்கு.
(என்ன ஒரு புது உருட்டு அல்லது நூல் விடுதல்)
🙂
பின்வரும் பொருட்களும்(வஸ்து)
கதைக்கு வலு சேர்க்கின்றன
கருமனின் ஈட்டி, பாதுகாப்பு ஜாக்கெட், மரத்தொன்னை, பார்வதி பரிசளிக்கும் குழல், லைட்டர், ஹெலிகாப்டர், கயிறு ஏணி
மேற்சொன்னவற்றில், பார்வதியைக் காப்பாற்றியது எது என தொலைக்காட்சி விவாதம் போல் ஒன்றை வாசகர்களுக்கிடையே நடத்தலாம்! 🙂
அதுபோலவே எத்தனை பள்ளியின் பெயர்கள், அந்தமான் நிலம் மற்றும் பழங்குடிகள் பெயர்கள், எந்த கல்லூரி, லைட்ஹவுஸின் பெயரென்ன, என ரேபிட் குவிஸ் உம் நடத்தலாம்!
ரஸூல் பாத்திரத்தை அறிமுகப்படுத்தலின் போது ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் அவர்களோடு ஒப்பிடுகிறார்.
மனுஷ் குரலின் வழியாக ஹிப்னாடிசம் செய்கிறார் என சொல்வது,
ஆசிரியர் மனுஷ் மீது கொண்ட அன்பினாலே!
தற்குறிப்பேற்ற அணிக்கு எ.கா
நன்றி நவிழல்,
முற்றிலும் உண்மையே
– என போல்(poll) ஒன்றை நடத்தலாம். விறுவிறுப்பாக இருக்கும். (சமூக ஊடகத்திற்கும் கண்டெண்ட் கிடைத்து விடும்).
என்ன! நாவல் ஆசிரியர் ஒரு ஆணாதிக்கவாதியா?!
ஆம், எதற்கெடுத்தாலும் முருகன் சொன்னான், முருகன் சொல்வான் என அவன் பாதம் பற்றியே நடக்கும் பாருவாகக் காட்டியது வருத்தமே! 🙂
பாவம்,நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாருவை சிக்கலில் (கருமனோடு) மாட்ட வைத்ததும் இல்லாமல், அவளை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது, முருகனை ஒரு அப்பழுக்கற்ற ஒழுக்கவாதியாக காட்டியதால் ஆசிரியர் ஒரு ஆணாதிக்கவாதி! 🙂
கன்னித்தீவில் ச்சீய் பக்கங்கள்!
கதை நாயகனும், நாயகியும் கொண்டாடும் காதல் அழகியலோடு இருக்கும் ச்சீய் பக்கங்கள்!
நாயகிக்கும் மரியாவுக்கும் இடையே நடக்கும் உரையாடலின் வடிவம் நண்பர்கள் பேசும் ச்சீய் பக்கங்கள்!
நிக்கி வரும் பக்கங்களெல்லாம் அருவெறுக்கத்தக்க ச்சீய் பக்கங்கள்!
ஆதித்யா வரும் இடம், அறியாத வயதின் ச்சீய் பக்கங்கள்!
கருமன், நாயகியை தொந்தரவு செய்வது வாசகரை ஆசிரியரோடு முரண் கொள்ளும் ச்சீய் பக்கங்கள்!
நிறைமாத கர்ப்பிணிக்கு நடக்கும் இந்த நிகழ்வு இம்ப்பாஸிபில் ச்சீய் பக்கங்கள்!
இன்ரோவெர்ட் சுபாவம் மூலம், சுயசமாதானம் அடைய வைத்துவிட்டார்.
வார்த்தை கவுச்சிகளைக் குறைத்தால், சைவபட்சி வாசகர்களுக்கு, சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே வாசிக்க வேண்டிய நெருக்கடி இல்லை.
மிஷ்கின் படத்தில் எல்லோரும் மிஷ்கின் போல, ஆசிரியர் எட்டிப்பார்க்காத இடமே நாவலில் இல்லை எனலாம். பாருவாக, முருகனாக, மரியாவாக, ரஸூலாக
என எல்லோரும் தனக்குள்ளே பேசிக் கொள்கிறார்கள்
(All r introverts)
ஆனால் இங்கு சிறுமாற்றம்.
பேரன்பும் உள்ளது. லாஜிக்கும் உள்ளது.
மொத்தத்தில் நாவல் முருகனின் குறுநகை போல் அல்லாது, முருகனின் மூக்கு போல் உள்ளது!
இனி வர போகும் ஜெய் பீம் நாவலில், பிக் பேங்க் நிகழ்த்தி, இசைத்துறையின் இளையராஜா போல், உங்கள் விருப்பபடியே, எழுத்துத்துறையில் பிரகாசிக்க வாழ்த்துகள்.
புத்தகம்: கன்னித்தீவு
ஆசிரியர்: சரவண கார்த்திகேயன்
அமேசான், கிண்டில் இரண்டிலுமே கிடைக்கிறது.