3 reviews for சோளகர் தொட்டி
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹300.00.₹290.00Current price is: ₹290.00.
ச.பாலமுருகன் தன்னை மனித உரிமைச் செயல்பாடுகளுடன் இணைத்துக் கொண்டவர். பி.யூ.சி.எல். அமைப்பில் செயல்படுபவர். வழக்குரைஞர். கடந்த பத்து ஆண்டுகளாய் பழங்குடிமக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடுகளை இயக்கமாக்கியவர்களுள் முக்கியமானவர். பழங்குடி மக்களின் பண்பாடு, வாழ்க்கை, தொன்மங்கள் மற்றும் வனம் போன்றவற்றுடன் தனக்குள்ள பினணப்பை இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார்.
Delivery: Items will be delivered within 2-7 days
Kathir Rath –
சோளகர்தொட்டி
ச.பாலமுருகன்
இந்நாவலின் பெயரை பல இடங்களில் அவ்வபோது கேள்விப்பட்டதுண்டு. சரி வாங்கலாமா என்று யோசித்து அதைப்பற்றி தேடி பார்த்தால் அட்டைப்படமும் கதைக்களமும் பயமுறுத்தும். வீரப்பனை தேடப்போன அதிரடிப்படையினரால் பாதிக்கப்படும் பழங்குடியினர் பற்றிய ஆவணம் என்று குறிக்கப்பட்டிருந்தால் எப்படி வாங்க மனம் வரும்?
சொந்த வாழ்க்கையில் இருக்கும் கொடுமைகள் போதாதா? எதற்காக மற்றவர்களுக்கு நடக்கும்/நடந்த கொடுமைகள் பற்றி வேறு படித்துக் கொண்டு என தோன்றும். ஆனால் நாஞ்சில் நாடன் அவர்கள் “உங்களால் வாழ முடியாத, உங்களால் பொருந்துப் பார்க்க முடியாத களங்களை கொண்ட புத்தகங்களை தவறாமல் வாசியுங்கள். ஏனென்றால் அந்த வாழ்க்கையினை உங்களால் வாசிப்பில் மட்டுமே நுகர முடியும்” என சொல்லி 3 புத்தகங்களை குறிப்பிட்டிருந்தார். அவர் சொன்ன மூன்றில் முதல் புத்தகம் #பாக்ஸ் வாசித்து விட்டேன். இரண்டாவதாக சோளகர் தொட்டி.
நான் வாசிக்க முடிவெடுக்கும் வரை கண்களில் அவ்வபோது தென்பட்டு வந்த புத்தகம், தேடும்போது எங்கேயும் சிக்காமல் ஒளிந்து கொண்டே இருந்த்து. நானும் பிடிஎப் பகிரப்படும் தளங்கள் வரை இறங்கி தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. என் தேடலை அறிந்து கொண்டு அய்யா Prasancbe Thamirabarani அவர்கள் எனக்கு இந்த நூலை அனுப்பி வைத்தார். (அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி) எனக்கு கிடைத்ததை அறிந்த பிறகு சிலர் ஜெராக்ஸ் போட்டு அனுப்ப சொல்லி கேட்டிருக்கிறார்கள். பேசாமல் ஸ்கேன் செய்து உலாவ விட்டுவிடலாமா என்று கூட தோன்றுகிறது.
தாளவாடி பக்கத்தில் இருக்கும் தொட்டி என்ற வனவோர கிராமத்தில் வசிக்கும் சோளகர்கள் என்ற பழங்குடியின மக்களின் கதை இது. காலம் காலமாக காட்டோடு கைக்கோர்த்து திரியும் இனம். ராகி விதைத்து அறுத்து வெள்ளாமை செய்வது, காடுகளில் விறகு பொறுக்கி விற்பது, கிழங்கு அகழ்ந்து உண்ணுவது என்று இயற்கையை தொந்தரவு செய்யாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
வனவிலங்குகள் மட்டுமே அவ்வபோது தொந்தரவு செய்து வந்த சோளகர்களை நிலவிலங்குகள் சோதிக்க துவங்குகின்றன. பொய் சொல்லி ஏமாற்றி உழுவதற்கு நிலம் பெற்று உள்ளே வரும் ஒரு குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக சோளகர்களின் நிம்மதியை கெடுக்கிறது. ஒருவழியாக அவர்கள் தொல்லை தீரவும் அடுத்து அரசாங்கம் நுழைகிறது. காட்டில் சந்தனமரம் திருடும் வீரப்பனை பிடிக்க உதவி கேட்டு நுழைபவர்கள் செய்யும் விசயங்களை படிக்கையில் அவ்வளவு வெறுப்பு வருகிறது.
படித்து பட்டம் பெற்றவனுக்கே காவல் துறையை எப்படி கையாள வேண்டும் என்று தெரியாத நிலையில் பழங்குடியினருக்கு என்ன தெரியும்?
இரண்டு பாகமாக கதை போகிறது. முதலில் சோளகர்களின் வாழ்க்கை, கலாச்சாரம் என சொல்லப்படும் கதைகளுக்குள் அவ்வளவு சுவாரசியங்கள். இரண்டாம். பாகத்தில்தான் அதிரடிப்படை வருகிறது.
சிறுவயதில் வெளிச்சத்திலேயே நடந்து போகையில் வழியில் இருட்டான ஒரு பகுதி வரும். அப்போது மட்டும் வேகமாக கண்ணை மூடிக் கொண்டு தாண்டுவோமே, அப்படி அதிரடிப்படையினர் செய்த கொடுமைகளை கடந்து விடலாம் என திட்டமிட்டுத்தான் வாசித்தேன். ஆனால் அவ்வளவு சிரம படுத்தாமல் ஓரளவு மேம்போக்காகத்தான் சொல்லி இருக்கிறார். இருந்தும் அது தரும் மன அழுத்தம் தவிர்க்கவே முடியாத ஒன்று.
எவ்வளவு கொடுமைகள் அனுபவித்தாலும் கிளைமாக்சில் நாயகனும் நாயகியும் சேர்ந்து விட்டால் நடந்த்தை மறந்து நம்மால் பெருமூச்சு விட முடிவதை போல, இந்த கதையும் ஒரு காத்திருப்புடன் முடிவது ஆசுவாசத்தை அளிக்கிறதெ
கதைப்படி வீரப்பனுடன் இருந்து விட்டு கோர்ட்டில் சரண்டையும் கதாபாத்திரம் உண்மையில் தனது 20 வருட சிறை தண்டனையை முடித்துவிட்டு 2017ல் விடுதலை அடைகிறது. அதை முன்னிட்டு எழுத்தாளர் பாலமுருகனும் பத்திரிக்கையாளர்களும் அந்த கிராமத்திற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்று பார்க்கிறார்கள்.
அது குறித்து இந்து தமிழில் வெளியான கட்டுரைதான் என்னை இந்த புத்தகத்தை வாசித்தே தீரவேண்டும் என்ற வேட்கையை அதிகம் தூண்டியது. அதன் இணைப்பு
https://www.hindutamil.in/news/literature/208579–1.html
தமிழில் இலக்கியம் என்று எவற்றை வேண்டுமானாலும் வாசியுங்கள். ஆனால் சமகால மனிதர்களின் வடுக்களின் வரலாற்றை முதலில் வாசியுங்கள்.
கலைஞர் டிவி வழங்கப்பட்டதால் என்ன நன்மை என தெரியாமல் கேட்பவர்களுக்கு இந்நாவலை பரிந்துரைக்கிறேன். இப்படி இருந்த பல பழங்குடியின மக்கள் பொது நீரோட்டத்தில் கலக்க தொலைக்காட்சி எவ்வளவு உதவியது என்று அம்மக்களை கேட்டால்தான் புரியும்.
நான் கதையின் களத்தை பற்றி மட்டும்தான் கூறி இருக்கிறேன். கதையோட்டம் வாசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்று. அதனால்தான் கதாபாத்திரங்களின் பெயர்களை கூட கூறவில்லை.
தவறாமல் வாசிக்க வேண்டிய நூல் இது…
சீ.ப்பி. செல்வம் –
சோளகர் தொட்டி – ஓர் ஆவணம்
தங்களுக்கான வாழ் நிலத்தில் எல்லாவற்றையும் இழந்து நிலப்பிரபுத்துவ அதிகார வர்க்கத்திற்கும், தேடுதல் வேட்டையில் இரையாகிப் போன #சோளகர் எனும் #பழங்குடியின மக்களின் வாழ்க்கை நிலையை எந்தவிதமான திருத்தம் இன்றி உள்ளபடியே நம் கண் முன்னாடி #சோளகர்_தொட்டி என்ற நாவலை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளாருமான #ச_பாலமுருகன் அவர்கள். நாவல் முழுவதும் மனிதர்கள் நிரம்பி வழிகிறார்கள். தொட்டியின் தலைவன் #கொத்தல்லிக்கிழவன், முதல் #பேதன், #சிவண்ணா, #ஜடையன், #கரியன், #ஜோகம்மாள், #கெம்பம்மா, #புட்டன், #கரியன், #சென்நெஞ்சா, #துரையன், #சாந்தா, #சிக்கையா_தம்பி, #மாதி, #சித்தி, #ஜவணன், #கெஞ்சன் என நாவல் முழுவதும் அவர்கள் நிஜமாகவே வாழ்கிறார்கள். வனமும் வனம் சார்ந்த சூழலும் சோளகர்களுக்கு எவ்வாறு இருந்தது என்பதனை பற்றி முதல் பாகத்திலும், இரண்டாம் பாகத்தில் வீரப்பனை தேடுவதற்காக காவல்துறை தங்களுடைய அதிகாரத்தை எளிய மனிதர்களிடமும் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்தது என்பதனை அசலாக பதிவு செய்திருக்கிறார். நாவல் முழுவதும் படிக்க படிக்க எளிய மனிதர்களின் அன்பினால் சூழப்பட்டுள்ள இந்த உலகத்தில், இவ்வளவு கொடுமைகளையும் சித்திரவதைகளையும் அவர்கள் எவ்வாறு அனுபவித்திருப்பார்கள் என்று நினைக்கும் போது கண்களை கண்ணீர் துளிகள் மறைக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் நாவலின் இரண்டாம் பாகத்தில் இருந்தே அடக்கமுடியாத அழுகையை அடக்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் துளிகள் புத்தகத்தில் விழுந்து அதனை ஈரப்படுத்துகிறது. மனம் முழுதும் ஈரமாகி கனத்து போகிறது. எளிய மக்களிடமிருந்து அவர்கள் வைத்திருந்த சிறு நிலப்பகுதியை எவ்வாறு பிடுங்கிக் கொண்டார்கள், அதற்குப் பிறகு அவர்களுடைய வாழ்வாதாரம் எவ்வாறு மாறிப்போனது என்பதை பற்றியும், தேடுதல் வேட்டையில் அவர்களுடைய வாழ்க்கைச் சூழலை நிலைகுலையச் செய்த அந்தப் போக்கினையும் நம்மால் இந்த நாவலில் உணர முடிகிறது. நாவலின் இறுதி கட்டத்திற்கு ஒரு இடத்தில் சுபாஷ் என்கிற ஒரு போலீஸ்காரர் இங்கிருக்கின்ற இறுக்கமான சூழலை மாறுவதற்காக பாட்டு பாடும்பாடி கூறும்போது அங்கு இருக்கக்கூடிய மேஸ்திரி “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே; எங்களுக்கு உறவு சொல்ல யாரும் இல்லையோ இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ” என்று அழுதுகொண்டு பாடும்போது நம்மில் எழும் அந்த சோகம் மனம் முழுவதும் உறைந்து போகிறது. தமிழ்நாடு கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழ்கின்ற சோளகர் மக்களினுடைய எதார்த்தமான வாழ்வு நிலையை அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறார் ச.பாலமுருகன் அவர்கள். சோளகர் மனிதர்களுடைய வாழ்க்கை நிலை எப்படி எல்லாம் இந்த காலத்தால் கரைந்து போகிறது எண்ணும்போது மனம் விம்முகிறது. இன்னும் சொல்லப்போனால் சோளகர்களுடைய உண்மை நிலையை பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு ஆவணமாக இந்த நூலை நான் பார்க்கிறேன்.வாசியுங்கள் நண்பர்களே, எளிய மக்களின் உண்மையான வாழ்க்கை நிலையை அறிந்து கொள்ளவும், அவர்களை நெஞ்சோடு நாம் அணைத்து கொள்ளவும் இந்த நாவல் நமக்கு பயன்படும்.
நூலின் பெயர்: சோளகர் தொட்டி ஆசிரியர்: ச.பாலமுருகன்
எதிர் வெளியீடு
Niveditha –
வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட அதிரடிப்படை காவலர்கள் தமிழக வனத்தில் கர்நாடக எல்லைப் பகுதியிலிருந்த மலைவாழ் மக்களுள் ஒருவரான சோளகர்களிடத்தில் காட்டிய அதிகாரத்தின் கோரமுகத்தின் ஆவணமே இந்த நாவல்.
“நான் சுமந்த அம்மக்களின் கதைகள் பாறையைவிட கனமானவை. இருளைவிட கருமை மிக்கவை. நெருப்பினைவிட வெப்பமானவை. பல சமயங்களில் நான் உள்வாங்கியவற்றை சுமக்கும் பலமற்றவனாய் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அவற்றுள் சிலவற்றையாவது பதியாமல் விட்டுவிட்டால் கால ஓட்டத்தில், பின்னொரு காலத்தில் நான் சுமக்க இயலாத அவை கற்பனையாகக்கூட கருதப்படும்” என என்னுரையில் ச.பாலமுருகன் எழுதியிருப்பதைப் போல அம்மக்களின் கதை பாறையை விட கனமானவை தான். இருளை விட கருமையானவை தான், நெருப்பினைவிட வெப்பமானவை தான். அவற்றுள் சிலவற்றை மட்டுமே இந்நாவலில் ஆவணப்படுத்தியுள்ளார். அந்த சிலவற்றைக் கூட எதோவொரு நாவலைப் படித்து முடிப்பதைப்போல் கடந்துவிட முடியவில்லை. சுமக்க முடியாத பாரமாய் இருந்து, அழுத்தம் தந்து, தூக்கம் தொலைக்கச் செய்கிறது.
இரண்டு பாகங்கள்.
சொளகர் தொட்டியிலுள்ள சோளகர்களின் வாழ்வியல் முறையையும்; சமதளத்தில் வாழ்ந்து வந்த கீழ்நாட்டவர்கள் (நாம் தான்) அவர்களிடத்தில் செய்து வந்த நிலஅபகரிப்பையும் விவரிக்குக் கதையினூடே வீரப்பனாலும், வீரப்பனைத் தேடி வரும் காவலர்கள் விடுத்த கட்டுப்பாட்டினாலும், வனத்தினுள் சுதந்திரமாய் சுற்றித் திரிந்தவர்கள் தொட்டியினுள்ளேயே முடங்கிப்போனதுடன் முடிகிறது முதல் பாகம்.
எந்தத் தவறுமிழைக்காத மலைவாழ் மக்களுக்கு, தமிழ்நாடு மற்றும் கர்நாடக போலீஸின் அதிகாரத்தினால் ஏற்பட்ட காயங்களின் வலி தான் இரண்டாம் பாகம்.
லத்தியும்; பூட்ஸ் கால்களும்; சிறுமியோ, கற்பவதியோ, முதியவளோ, யாராக இருப்பினும் வன்புணர்வு செய்யும் ஆண்குறிகளும்; அடித்தே கொல்லப்பட்டவர்களுக்கு/ சாவின் விளிம்பில் இருப்பவர்களுக்கு பச்சை நிறத்தில் புதிய சட்டையைத் தைத்து, வனத்தின் நடுவே எடுத்துச்செல்லப்பட்டு அடுத்த நாள் செய்தியில் “வீரப்பன் ஆட்களுக்கும் போலீஸாருக்கும் ஏற்பட்ட மோதலில் வீரப்பன் ஆட்கள் சுட்டுக் கொலை” என அச்சிடப்பட்டிருக்கும் தினசரிகளும், போலீஸ் ஜீப் / வேனின் சத்தம் கேட்டாலே பயம் தொற்றிக்கொள்ளும் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களும் நிறைந்த இரண்டாம் பாகத்தை முடித்தபோது அம்மக்களின் வலி அலறல்களாய் ஒலித்தது.
நூல்: சோளகர் தொட்டி
ஆசிரியர்: ச. பாலமுருகன்
வெளியீடு: எதிர் வெளியீடு