பிம்பச் சிறை எம்.ஜி.ராமச்சந்திரன் -திரையிலும் அரசியலிலும் “எம்.ஜி.ஆர். நாற்பது ஆண்டுகாலம் தமிழ்சினிமாவை ஆண்டார். பத்து ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக நடித்தார்”,என்று பாரதி கிருஷ்ணகுமார் ஒரு மேடையில் சொன்னார். எம்.ஜி.ஆர். என்ற கனவு உலகுக்குப் போய் கனவைக் கலைத்து அறிவை இழுத்து வருகிறது எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் சிந்தனைகள். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகம். பாண்டியன் இறந்த பிறகு தமிழுக்கு வருகிறது. கனவுக்கும், அறிவுக்கும் காலம் இல்லை. ஆனால் காலத்தை அறிவு தீர்மானிக்கும். – ப.திருமாவேலன், ஆசிரியர், ஜூனியர் விகடன் கிராம்சி, இ.பி. தாம்ப்ஸன் சாபல்டரன் ஸ்டடீஸ் உள்ளிட்ட சிந்தனை களங்களின் தொடர் இழையாக பாண்டியன் மேற்கொண்ட இந்த முயச்சி இருபத்தைந்து ஆண்டுகள் கழித்தே தமிழில் வெளிவருகிறது என்றாலும் இன்றைக்கும் ஒரு வரலாற்று ஆவணமாக சிந்தனை சிறப்பாக இளைஞர்களுக்கு விளங்கும் என்பதில் ஐயமில்லை. ” ராஜன் குறை. அம்பேத்கர் பல்கலைக்கழகம் பதவி, அதிகாரம் இவற்றிற்கு சிறிதும் மதிப்பு கொடுக்காத, அச்சமற்ற வணங்காமுடி பாண்டியன், எந்த ஒரு பிரச்சினையிலும் தனது நிலைப்பாட்டை தயக்கமின்றி வெளிப்படுத்தியவர். அவரது இத்தன்மையை இந்நூலிலும் காணலாம். “எம்.ஜி.ஆரின் 11 வருட ஆட்சிகாலம் சந்தேகமே இல்லாமல் தமிழகத்தின் சமகால வரலாற்றின் இருண்ட காலங்களில் ஒன்றாகும்” என்றெழுத மனத்திண்மை வேண்டும். நியாயம் என்று தனக்கு பட்டதற்காகப் பரிந்துப் பேசுவார். இந்திய வரலாற்றியலுக்கும் தமிழ்சினிமா வரலாற்றிற்கும் முற்போக்கு சிந்தனையாளர் பாண்டியனின் முக்கியப் பங்களிப்பு இந்நூல்.
பிம்பச் சிறை
Publisher: பிரக்ஞை வெளியீடு Author: எம்.எஸ்.எஸ். பாண்டியன், தமிழில் பூ.கொ.சரவணன்₹400.00
Bimba Sirai
2016 ஏப்ரல் 23- ஜெயலலிதா திருச்சியில் இருந்தார். நானும் திருச்சியில் இருந்தேன். கூடியிருந்தவர்களில் பாதிப்பேர் இளைஞர்கள். எம்.ஜி.ஆர். இறந்து போன பிறகு பிறந்தவர்கள். ஆனால் வாத்தியார் பாட்டுக்கு அவர்கள் ஆடிய ஆட்டம், இன்னும் கால் நூற்றாண்டுக்கு எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மூச்சாகத்தான் இருக்கும் என்று என்னைச் சொல்லச் சொல்கிறது.
நடிகர்களை நாகரிகக் கோமாளி என்றார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். ஆனால் எம்.ஜி.ஆர். காரியக் கோமாளி. சமூக வளர்ச்சியைத் தனது படங்களின் நூல் இழையாக வைத்து தனது வளர்ச்சியை கவனத்தோடு நகர்த்தியவர். தொழிலாளியாக நடித்தார். தொழிலாளியாக வாழ்பவர்களுக்கு அது மிகவும் பிடித்து இருந்தது. தன்னையே எம்.ஜி.ஆராகவும், சரோஜாதேவியுடன் தான் ஆடுவதாகவும் ரசிகன் நினைத்தான். உருண்ட மஞ்சள் மார்பை பார்க்க ரசிகை துடித்தாள்.இப்படி ஒரு புருஷன், இப்படி ஒரு அண்ணன் கிடைக்க மாட்டானா என்று தவித்தாள். இதைத்தான், ‘எம்.ஜி.ஆரின் புனைப்பட்ட வாழ்க்கை’ என்கிறார் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். அடித்தட்டு வர்க்கத்தின் அறிவுப்பூர்வ வெற்றிடத்தை எம்.ஜி.ஆர். என்னும் மயக்கும் மாய உலகம் சுருட்டிக் கொண்டது. நேற்று மட்டுமல்ல. இன்று வரை. நாளையும்.
எம்.ஜி.ஆரை இறுதிவரை ஹீரோவாக வைத்திருந்தவர்கள் அவருக்கு வாய்த்த வில்லன்கள். அரிதாரத்தில் நம்பியார். அரசியலில் கருணாநிதி. இவர்கள் இருவரும் இல்லாவிட்டால் எம்.ஜி.ஆர். இல்லை. ‘எம்.ஜி.ஆரும் ஆற்றல் படைத்த விளிம்பு நிலை வில்லன் தான்’ என்கிறார் பாண்டியன். உண்மைதான். சுயநலத்துக்காக கொலை செய்பவர்களை வில்லன்களாகவும் அதையே பொதுநலனுக்காகச் செய்பவர்களை ஹீரோக்கள் ஆகவும் கட்டமைப்பது உண்டு. ‘எங்களால் கடத்தப்பட்ட பெண்ணைக் காப்பாற்றி துரத்தித்துரத்தி காதலிப்பவர்கள் தான் ஹீரோக்கள்’ என்று ஒருமுறை நம்பியார் சொன்னார். வில்லத்தனம் இல்லாத ஹீரோக்களை யாரும் விரும்புவது இல்லை. எம்.ஜி.ஆரை இன்றுவரை எல்லாருக்கும் பிடிக்கக் காரணம் இந்த வில்லத்தனமான ஹீரோத்தனம் தான்.
இப்படி எல்லாம் சினிமாவில் இருந்தவர் ஆட்சியில் அப்படி இல்லையே ஏன்? எம்.ஜி.ஆர். ஆட்சி காலம் இருண்ட காலம் என்று எம்.எஸ்.எஸ்.பாண்டியன் பட்டியலிடுகிறார். எம்.ஜி.ஆருக்கு கருணாநிதியை வெற்றிபெற வேண்டும், கருணாநிதிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் தவிர வேறு நோக்கம் இல்லை. ரசித்து ரசித்து, யோசித்து யோசித்து கதை பண்ணியவர், ஆட்சி நடத்துவதைப் பற்றி சிந்திக்கவே இல்லை. வில்லனை வீழ்த்துவிட்டு படம் முடிவதைப் போலவே கருணாநிதியை வீழ்த்துவதோடு ஆட்சி முடிந்துவிடுவதாக எம்,ஜி.ஆர். நினைத்தார்.
பாரதி கிருஷ்ணகுமார் ஒரு மேடையில் சொன்னார்: ‘‘எம்.ஜி.ஆர். நாற்பது ஆண்டுகாலம் தமிழ்சினிமாவை ஆண்டார். பத்து ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக நடித்தார்” என்று. எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை ஆட்சியும் கட்சியுமே சினிமா தான். அரசியலை சினிமா தான் என்று ரசிகன் நினைப்பது மாதிரியே எம்.ஜி.ஆரும் நினைத்தார். அதுதான் சிக்கல்.
எம்.ஜி.ஆர்.என்ற கனவு உலகுக்குள் போய் கனவைக் கலைத்து அறிவை இழுத்து வருகிறது எம்.எஸ்.எஸ். பாண்டியனின் சிந்தனைகள். எம்.ஜி.ஆர். இறந்தபிறகு எழுதிய புத்தகம், எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இறந்த பிறகு தமிழுக்கு வருகிறது. கனவுக்கும் அறிவுக்கும் காலம் இல்லை. ஆனால் காலத்தை தீர்மானிக்கும்! தீர்மானிக்கும்!தீர்மானிக்கும்!
-ப.திருமாவேலன்
Delivery: Items will be delivered within 2-7 days
Ramamurthy –
நூல் அறிமுகம்:
பிம்பச் சிறை- எம்.ஜி.ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்.
ஆங்கிலத்தில் :எம் எஸ் எஸ் பாண்டியன்
தமிழில்: பூ கொ சரவணன்
பிரக்ஞை வெளியீடு
பக்கங்கள்:248
விலை:225/-
1977 முதல் 1987 வரை பத்து ஆண்டுகால எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தை தமிழக வரலாற்றில் ஓர் இருண்ட காலம் என்று சொன்னால் உங்களுக்கு சட்டென்று கோபம் வருகிறதா?
அப்படியெனில் நீங்களும் எம்ஜிஆர் என்ற பிம்பச் சிறையில் சிக்கி உள்ளீர்கள் எனலாம்.
பொதுவாக எம்ஜிஆர் பற்றி வெளிவந்துள்ள நூல்கள் அனைத்தும் அவரின் புகழ் மட்டுமே பாடும். ஆனால் இந்த பிம்பச்சிறையானது தமிழ்நாட்டில் தெய்வமாக பல பேரால் கொண்டாடப்படும் எம்ஜிஆரின் ஆட்சிக்காலம் தமிழக வரலாற்றில் ஒரு இருண்ட காலம் என துணிச்சலாகப் பதிவு செய்கிறது.
இந்நூல் மேம்போக்காகவோ, அரசியல் காரணங்களுக்காகவோ எழுதப்பட்ட நூல் அல்ல. இந்த நூலானது பேராசிரியர் எம் எஸ் எஸ் பாண்டியன் அவர்களால் ஆங்கிலத்தில் “The Image Trap” என்னும் தலைப்பில் எம்ஜிஆர் இறப்புக்குப் பிறகான 1992ஆம் ஆண்டில் பல்வேறு நூல்கள் மற்றும் இதழ்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. நூலாசிரியர் திராவிட இயக்க வரலாற்று ஆசிரியர்களில் குறிப்பிடத்தகுந்த வர்த்தக. புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆய்வுகளுக்கான மையத்தில் பேராசிரியராக பணியாற்றியவர்.
இந்த நூலானது எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றை காலவரிசைப்படி தொகுத்துத் தரவில்லை. பல்வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களை கோட்பாட்டு ரீதியில் அணுகி தன் முடிவுகளை சிறு சிறு கட்டுரைகளாக்கித் தந்துள்ளார் நூலாசிரியர்.
இந்நூலினை தமிழில் மொழிபெயர்த்து உள்ளவர் பூ.கோ. சரவணன்.
நேர்கோட்டு பாணியில் அல்லாமல் கருத்துக்கள் முன்பின் சென்றுவரும் பாணியில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
எம்ஜிஆரின் மரண ஊர்வலத்தில் இருந்து நூல் தொடங்குகிறது. பின் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சீரழிந்துபோன பொருளாதாரத்தால் ஏழை எளிய மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பதைப்பற்றிப் பேசுகிறது. பிறகு தமிழக வரலாற்றிலேயே அதிகமாக நிகழ்ந்த என்கவுண்டர் காலமாகவும், லாக்கப் மரணங்கள் அதிகம் நிகழ்ந்த காலகட்டமாகவும் எம்ஜிஆர் ஆட்சிக்காலம் இருந்ததை நூல் ஆதாரத்துடன் விளக்குகிறது. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் தொடர்ந்து மக்கள் ஆதரவை பெற்று எவ்வாறு தேர்தல் வெற்றிகளைப் பெற்றார்? அதற்கான பின்புலத்தை இவ்வாறு தனது சினிமா வாழ்விலிருந்து அமைத்துக்கொண்டார் என்பதை கோட்பாட்டு ரீதியாக நூலில் பிற பகுதிகளில் உள்ள சிறுசிறு கட்டுரைகளில் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
எம்ஜிஆர் ஆட்சிக்கான சினிமா அடித்தளம்…
1.தனது வீரமான சண்டைக்காட்சிகளால் நீதியைத் தானே நிலைநாட்டும் உரிமை.
2. கல்வி குறித்த உரிமை
3. பெண்களைக் கவரும் திறன்
இந்த மூன்று திறன்களும் எம்ஜிஆர் திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இவை தவிர இன்னும் நுட்பமான, உறுதியான முறைகளில் பிற அதிகார அடையாளங்களான ஆடை, மொழி, உடல் மொழி ஆகியவற்றிலும் தன் உரிமையை நிலை நாட்டுகிறார். மற்ற ஏழைகள் திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் கட்டிய கரங்களோடு பணக்காரர்களிடம் சரணடையும் போது , எம்ஜிஆர் மிக இயல்பாக தனக்கென்று ஒரு பாணியில் நிமிர்ந்த முதுகுடன் அவர்களை எதிர்கொள்கிறார். பணக்கார்ர்களுக்கு பயந்து தோளில் போடும் துண்டை இடுப்பில் கட்ட மறுக்கிறார். அதற்குப் பதிலாக அதை தன்னுடைய தலைப்பாகையாக கட்டிக் கொள்கிறார் அல்லது அதை அப்படியே தோளிலேயே கிடக்கும்படி விடுகிறார். எம்ஜிஆரின் உடல் மொழி அடங்கிப் போவதல்ல. அது அதிகாரத்தின் மொழி. மேலும் எம்ஜிஆர் தனது படங்களின் வசனங்கள் பாடல்கள் தனிக் கவனம் செலுத்தினார்.
தமிழக நாட்டுப்புற கதைப்பாடல்களில் பல நாயகர்கள் உண்டு. எடுத்துக்காட்டாக முத்துப்பட்டன், மதுரை வீரன், சின்னத்தம்பி, சின்ன நாடன், ஜம்புலிங்கம் போன்றோர். இவர்களின் கதைப்பாடல்கள் எடுத்துக்கொண்டு அதை தனக்கேற்ற வடிவில் திரைப்படங்களில் எம்ஜிஆர் பயன்படுத்திக்கொண்டார். ஏற்கனவே கிராமப்புற மக்களின் எண்ணங்களில் ஊறிப்போன இந்த நாட்டுப்புற கதாநாயகர்களின் வடிவங்களை ஏற்று எம்ஜிஆர் நடித்த போது அவர் கிராம மக்களின் மனங்களுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டார்.
“அந்நாளில் திரையரங்குகளின் வளர்ச்சி பிரமிக்கத் தக்கதாக இருந்தது. மேலும் திரையரங்கம் தான் தமிழர்கள் ஒரே கூரையின் அடியில் இணைந்து உட்கார்ந்த முதல் இடமாகும். புரவலரின் சமூகப் படிநிலையைப் பொறுத்து இல்லாமல், ஒருவரின் வாங்கும் திறன் அடிப்படையிலேயே இருப்பிட வரிசை தீர்மானிக்கப்பட்டது”
அதுவரை தெருக்கூத்து முதலிய நிகழ்த்துக் கலைகளின் போது சாதியப் படிநிலை அடிப்படையில் அமர வைக்கப்பட்டனர். ஒடுக்கப்பட்ட சாதிகள் விளிம்பிலேயே அமர வைக்கப்பட்டனர். இச்சூழலில் சமத்துவமாக வாங்கும் சக்திக்கு ஏற்ப திரையரங்குகளில் அமரும் சூழல் நிறைய பேரை திரையரங்குக்கு அழைத்து வந்தது. இக்காலகட்டத்தில் எம்ஜிஆர் அதுவரை சமூக அங்கீகாரத்தை அடையாத ஒடுக்கப்பட்ட மக்கள் தொழிலாளிகள் விவசாயிகள் மீனவ மக்கள் போன்றோரின் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தது அவரை அம்மக்களின் மனதில் நிரந்தரமாக குடியேற்றியது.
நிறைய எம்ஜிஆர் திரைப்படங்கள் ஆணாதிக்கமே பேசின. இருந்தும் அவருக்கு சினிமாவிலும் அரசியலிலும் பெண்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது என்றால் அதற்கு தமிழ் கலாச்சாரத்தின் தலையாய பண்பாக இருந்த தந்தைவழி சமூக அமைப்பே காரணமாகும் என்கிறார் நூலாசிரியர்.
” நட்சத்திர வழிபாடு ஏற்பட்ட பிறகு தமிழ் திரையுலகின் 2 முன்னணி நட்சத்திரங்களாக எம்ஜிஆரும் சிவாஜிகணேசனும் வழிபடுகின்றனர்.
ஒவ்வொரு படத்துக்கும் ஒப்பந்தம் போடும்போது சென்னை மாநகரின் விற்பனை உரிமை இவர்களிடமே இருந்தது. சிவாஜி கணேசனுக்கு சொந்தமாகத் திரையரங்கும், எம்ஜிஆருக்கு ஸ்டுடியோவும் இருந்தன. தங்கள் கையிலிருந்த சட்டையின் மூலம் ஒட்டுமொத்த சினிமா துறையையும் தவறுகள் கட்டுப்படுத்தினர். ஒரு தயாரிப்பாளருக்குக் கால்ஷீட் கொடுப்பதன் மூலமோ, தள்ளி போடுவதன் மூலமோ அத்தயாரிப்பாளரை வாழவும் அழியவும் வைக்க அவர்களால் முடிந்தது. ஒட்டுமொத்த திரைத் துறையும் அவர்களின் கருணையை நம்பி இருந்ததது. பல தயாரிப்பாளர்களின் பொருளாதார நிலையை முடிவு செய்யும் இடத்தில் அவர்கள் இருந்தபடியால், அவர்களால் தங்களுக்கான அரசியல் பிம்பத்தைக் கவனமாக உருவாக்கிக் கொள்ளவோ, தாங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு அரசியல் செய்தியை மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கவோ முடிந்தது. இதில் சிவாஜி நடிப்பில் தன் திறமையைக் காட்ட, எம்ஜிஆர் தன்னுடைய பிம்பத்தை நிறுத்துவதே தன்னுடைய நடிப்பாற்றலை திரையில் காட்டுவதை விடவும் முக்கியம் என்று எண்ணினார். பயமின்மை, ஆண்மை, இளமை ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய தமிழ் கலாச்சாரத்தின் பிரிவுகள் ஆகும். எம்ஜிஆர் எப்பொழுதுமே பொது வெளிகளில் தோன்றும்போது தன்னை மாறாத உடையவராகக் காட்டிக்கொள்வதில் கவனமாக இருந்தார். எம்ஜிஆரின் பண்புகளாக நம்பப்பட்ட வெல்லவே முடியாத தன்மை, அழியா இளமை ஆகியவற்றை ஊடகங்கள் வழியாகவும், சிறுசிறு புத்தகங்கள் வாயிலாகவும் தொடர்ந்து அவரது நலம் விரும்பிகள் பரப்பிக் கொண்டே இருந்தனர்”
இவ்வாறு திரையில் எம்ஜிஆர் உருவாக்கிய பிம்பத்தை அடித்தட்டினர் உண்மை என்றே நம்பினர். இந்த நம்பிக்கையே எம்ஜிஆருக்கு அரசியலில் வாக்குகளாக மாறின.
இவ் வாக்குகளின் மூலம் தொடர்ந்து அரசியலில் வெல்ல முடியாத அரசியல் தலைவராக எம்ஜிஆர் திகழ்ந்தார். மேலும் எம்ஜிஆரின் அரசியல் வெற்றிக்கு அடிப்படையாக அவரது ஆரம்பகால அரசியல் கட்சியான திமுகவின் பின்புலம் மிகவும் இன்றியமையாதது.
இவ்வாறு எளிய நாடக நடிகராக தன் வாழ்வைத் தொடங்கி மிகவும் புகழ்பெற்ற நடிகராக உயர்ந்து, தன் இறுதிக் காலம் வரை வெல்ல முடியாத அரசியல் தலைவராகத் திகழ்ந்தவர் வாத்தியார் எம்ஜிஆர்.
ஆனால் இவ்வாறு பெற்ற ஆட்சியின் மூலம் எம்ஜிஆர் சாதித்தது மிகக்குறைவே என பல்வேறு ஆய்வுகளின் மூலமும் தரவுகளின் மூலமும் நூலாசிரியர் நிறுவுகிறார்.
“பத்தாண்டு கால(1977-87) எம்ஜிஆர் ஆட்சிக்காலம் ஏழைகளிடம் மகத்தான ஆதரவைப் பெற்ற, ஆனால் பணக்காரர்களின் நலன்களுக்குப் பாடுபட்ட ஒன்றாகும். அவரின் 11 வருட ஆட்சிக்காலம் சந்தேகமே இல்லாமல் தமிழகத்தின் சமகால வரலாற்றின் இருண்ட காலங்களில் ஒன்றாகும். அவரின் ஆட்சிக்காலத்தில் சாராய முதலாளிகள், ரியல் எஸ்டேட் பெரும்புள்ளிகள், எங்கும் நிறைந்திருக்கும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் பெரிதும் கொழித்தார்கள். அதேசமயம் வீழ்ச்சி அடையாவிட்டாலும் தேங்கிப் போன பொருளாதாரம் எம்ஜிஆரின் முக்கிய ஆதரவாளர்களான ஏழைகளைத் தாங்க முடியாத துயரத்துக்குள் தள்ளியது. நன்கு கொம்பு சீவி விடப்பட்ட தமிழகக் காவல்துறை தன்னுடைய கருணையற்ற அராஜகமிக்க பண்புகளால் எம்ஜிஆரின் அப்பட்டமான ஆசிகளோடு அடித்தட்டு மக்களான தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் மற்றும் வேலை பார்க்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இவர்களிடமிருந்து எழுந்த மிக மெல்லிய எதிர்ப்பை கூடக் கடுமையாக அடக்கியது. திராவிட இயக்கத்தின் முற்போக்கான ஆரம்பக் காலத்தில் நடைபெற்ற அயராத போராட்டங்களால் அடித்தட்டு மக்கள் பெற்ற கலாச்சாரப் பயன்கள் பெருமளவில் சீரழிந்து போவதும் இவர் ஆட்சியில் நடந்தேறின. ஆரம்பகாலப் பகுத்தறிவின் இடத்தில் மத மீட்பு கோலோச்சியது.”
மேல ஒரு மேலே உள்ள வரிகளே நூலாசிரியர் எம் எஸ் எஸ் பாண்டியன் எம்ஜிஆர் ஆட்சியின் மீதான தன் தீர்ப்பாக எழுதிச்செல்கிறார்.
ஒரு நடிகர் தனக்கே உரிய பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு, அதன் மூலம் மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சியில் அமர்ந்தது வரலாறு. ஆனால் அவர் ஊழல் இல்லாத, ஏழைகள் பயன்பெறும் வகையில் மக்கள் நல அரசாக ஆட்சி செய்தாரா? என்ற கேள்வி எழுப்பி அதற்கு “இல்லை… அவரது பத்தாண்டு கால ஆட்சிக்காலம், தமிழகத்தின் இருண்ட காலம் என்கிறது இந்நூல்”
சிறுசிறு தலைப்புகளில் கோட்பாட்டு ரீதியாக மிகப்பெரிய ஆய்வினை உள்ளடக்கி ஆங்கிலத்தில் The Image Trap என்னும் பெயரில் 1992ல் வெளிவந்த இந்நூலின் தமிழாக்கம் 2016ல் வெளிவந்துள்ளது.
பிம்பச்சிறை- பெயர்க்காரணம்…
எம்ஜிஆர் தனக்குத் தானே உருவாக்கிக்கொண்ட பிம்பத்தில் இருந்து அவராலும் வெளிவரமுடியவில்லை. அவர் நடிகராக உருவாக்கிய மாய பிம்பத்தில் இருந்து மீள அவரது ரசிகர்களாலும் முடியவில்லை. அந்த பிம்பமே சிறையாகிப் போனது.
மிகச்சிறந்த ஆய்வு நூல்…. தவறவிட்டு விடாதீர்கள்…
நன்றி!
இவண்…
இராமமூர்த்தி நாகராஜன்.
muthukumari sangappillai –
நூல்: பிம்பச்சிறை – எம்.ஜி.ஆர் திரையிலும் அரசியலும்
நூலாசிரியர் : எம்.எஸ்.எஸ். பாண்டியன்
தமிழில் : பூ.கோ.சரவணன்
பதிப்பகம்: பிரக்ஞை
எம்.எஸ்.எஸ்.பாண்டியனால் ஆங்கிலத்தில் “Image trap” எனும் பெயரில் எழுதப்பட்டு, 25 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் பூ.கோ.சரவணன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்.
*எம்.ஜி.ஆர் தங்க பஸ்பம் சாப்பிடறனாலதான் மினுமினுக்கிறாரு.
*வாத்தியார கத்திச் சண்டையில மிஞ்ச ஆளே இல்ல.
* தலவருக்கு வயசே ஆகல பாரேன்…
*தலைவரப் பார்க்கப்போனா வயிற நிரப்பாம அனுப்ப மாட்டாரு.
* இந்த காலத்துல கருணமகாராஜா நம்ம எம்.ஜி.ஆர் தான்.
இதெல்லாம் நாம் எம்.ஜி.ஆர் பற்றி கேள்விப்பட்ட வதந்திகள்.
எம்.ஜி.ஆரை தொப்பி, கண்ணாடி இல்லாமல் பார்த்திருக்கிறோமா? ஒரு நிழற்படமாவது உண்டா என வலைதளத்தில் பலவாறு தேடியுள்ளேன். ஹீம் கிடைக்கவில்லை.
உண்மையான தோற்றத்தில் அவர் நிழற்படம் கிடைக்க வாய்ப்பில்லை என்பது திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளது என்பது இந்நூலை வாசித்துப் பிறகுதான் புரிகிறது. அத்தகைய இளமையான தம் பிம்பத்தை அவரே உருவாக்கியதும், அதற்கு சினிமாவைப் பயன்படுத்தியதும் புரிகிறது.
அருப்புக்கோட்டைக்கு முதன்முதலில் வந்தபின் ஒட்டப்பட்ட சுவரொட்டியைப் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சியானேன். “மனிதக்கடவுள் எம்.ஜி.ஆர்” என வாழ்த்தப்பட்டு, அதே பெயரில் படிப்பகம் இருந்தது.
இந்நூலின் நோக்கம் என்ன?
சிறு சிறு அத்தியாயங்களில் ஆதாரங்களுடன் எம்.ஜி.ஆர் தம் பிம்பத்தை கட்டமைக்க சினிமாவை எப்படி ஒரு கருவியாக உருவாக்கினார் என்பதை தெளிவுப்படுத்துகிறது. (Success formula)
அவரின் மரணத்தில் இருந்து ஆரம்பிக்கும் நூலானது மனிதக்கடவுளாக அடித்தட்டு மக்களிடம் சென்றுச் சேர்ந்தது வரை தரவுகளுடன் சுவாரசியமாக விளக்குகிறார்.
அவர் இறந்த அன்று மட்டும் சுமார் 20 லட்சம் மக்கள் சென்னையில் கூடினர். 31 நபர்கள் தீக்குளித்தனர். 65-75 % ஆதரவை அடித்தட்டு மக்களிடையே ( நிலமற்றவர்கள், தினக்கூலிகள்) பெற்ற எம்.ஜி.ஆர் உண்மையில் அவர்களை யதார்த்தத்தில் தோற்கடித்தார்.
சினிமா எப்படி அரசியலின் நுழைவுச்சீட்டானது?
சாதிவாரியாக அமர்ந்து பார்த்த தெருக்கூத்துக்கு மாற்றாக, பணமுள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்த்த டூரிங்டாக்கிஸ்கள் சுதந்திரத்திற்குப் பிறகு கிராமங்களில் அதிகமாக உருவானது.
தமிழகத்தில் திமுக அனைத்துவித கலை வடிவங்களையும் தம் கொள்கைகளை
சென்று சேர்க்கும் விதமாக நேரடியாகவோ, மறைவாகவோ பயன்படுத்தியது. அப்படி பயன்படுத்தியவர்கள் நாம் ஏற்கனவே அறிந்த அறிஞர் அண்ணா, எம்.ஆர்.இராதா, எம்.ஜி.ஆர், கருணாநிதி. இதில் எம்.ஜி.ஆர் தம் படங்களுக்கான தன் பிம்பத்தை திமுகவில் இணைந்த பின் தனக்கேற்ற வடிவத்தில் மாற்றிக்கொண்டார்.
எம்.ஜி.ஆரின் பிம்பம்:
* உணவு( படங்களில் பழைய சாதம், கூழ் மட்டுமே சாப்பிடுவதுபோல் வரும்)
* உடை ( சிவப்பு, கருப்பு வண்ணங்கள் அதிகம் பயன்படுத்துவார்)
*தன் உடலை காட்டும் விதமாக காட்சிகள் அமைத்தல்
* நாட்டார் தெய்வங்களின் கதைகளை பயன்படுத்தல்
* பெரும்பாலும் ஏழையாக, நிலமற்றவராக இருந்தும் அதிகார, நிலப்பிரப்புத்துவ, பணக்கார முறையை எதிர்ப்பது
*கத்திச் சண்டை
* தங்கை, தாய் பாசத்தில் திளைப்பது
* தன்னை தியாகம் செய்யும் கதாபாத்திரம்
இதுதான் அவர் படங்களில் அவராக உருவாக்கிய பிம்பங்கள்.
அடித்தட்டு மக்கள் இந்த பிம்பத்திற்குள் மாட்டிக்கொண்டு தங்களுள் ஒருவராக எம்.ஜி.ஆரை வரித்துக்கொண்டனர்.
1977,1980,1984 என தொடர்ச்சியாக முதல்வர் பதவியில் அமர்ந்தும், தமிழக பொருளாதாரம் முன்பு இருந்ததை விட மோசமானது.
அதற்கு பல தரவுகளை முன்வைக்கிறார். முக்கியமாக படத்தில் பணக்காரர்களை எதிர்த்தவர், உண்மையில் பணக்காரர்களுக்காக நடுத்தர, ஏழைமக்கள்மீதான வரியினை அதிகப்படுத்தினார்.உதாரணமாக
1960-65 யில் 15.5% என பணக்காரர்கள், நிலச்சுவான்தார்கள் கட்டிய வரி, 1980-85யில் வெறும் 1.9% ஆக அவரால் குறைக்கப்பட்டது.
காவல்துறை விசாரணை கைதிகள் மரணங்கள் ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் ஒரு கைதி என மரணித்ததை ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார்.
அன்றைய மக்கள் கண்மூடித்தனமாக அவரை நம்பினர். 1980-85 ஆட்சிக்காலத்தில் நிலைமை மோசமானதை மக்கள் உணர்ந்தாலும் அதற்கு அதிகாரிகளை குற்றம் சாட்டினார்களே ஒழிய, எம்.ஜி.ஆருக்கு தெரியாமல்தான் லஞ்சம், ஊழல்நடக்கிறது என்பதை உறுதியாக நம்பினார்கள்.
ஓரிடத்தில் எம்.எஸ்.எஸ். பாண்டியன் குறிப்பிடுகிறார்,” 40 வருடங்கள் சினிமாவை ஆட்சி செய்த எம்.ஜி.ஆர், அரசியலில் 10 வருடங்கள் மக்களிடம் நடித்தார்”.
என் வகுப்பு மாணாக்கர்களிடம் பிரெஞ்ச்புரட்சி பாடம் நடத்துகையில், புரட்சி என்னும் சொல்லை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? என கேட்க, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் டீச்சர் என கூற வகுப்பறையே கலகலப்பனது. என்ன புரட்சி செய்தார்? என் கேள்வி எழுப்ப, வகுப்பறை பிம்ப அரசியலில் இருந்து யதார்த்த அரசியலுக்கு நகரந்தது.
கட்டாயமாக வாசிக்கப்பட வேண்டிய நூல்.