பின்நவீனத்துவ பாணியில் அமைந்த நாவல். ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைக் கதையை விவரிக்கிறது. ஒரு நுாற்றாண்டு கால ஓட்டத்தில் கதை நிகழ்கிறது. கேரளத்தின் முன்னும் பின்னுமான வளர்ச்சியையும், பாத்திரங்களின் சிந்தனை வளர்சிதை மாற்றத்தையும் எதார்த்தமான பாணியில் சித்திரிக்கிறது. மூன்று தலைமுறைக்கு ஏற்ப எண்ணற்ற பாத்திரங்கள், நாவலின் ஊடே நகர்கின்றன.
நாவலின் கட்டமைப்பு நான்கு பகுதிகளாக,- அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற வகையில் அமைந்து, ஒவ்வொன்றுக்கும் 10 உட்பிரிவுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. தன்மை கூற்றில் ஒருவர் கதை சொல்வது போல கதையைக் கொண்டு செல்கிறார்.
இந்த நாவலில் நாரா பிள்ளை, அய்யா பிள்ளை, குஞ்ஞி அம்மா, ஜிதேந்திரன் ஆகியோர் மறக்க முடியாத பாத்திரங்களாக உள்ளனர். நாரா பிள்ளை மற்றும் ஜிதேந்திரன் ஆகியோர் நாவலில் பெரும்பங்கை ஆட்கொள்கின்றனர். நாரா பிள்ளையின் இளமைக்கால சில்மிஷங்கள், அவரது மரணம் என்றும் நினைவில் நிற்கும். அய்யா பிள்ளையின் மரணமும், ஜிதேந்திரனின் மரணமும் வித்தியாசமானவை.
கேரளத்தில் புகழ் பெற்ற நாடக ஆசிரியரான பிரேம்ஜி, நாவலாசிரியர்கள் தகழி, பொற்றேகாட், ஆன்மிக குரு நாராயண குரு மற்றும் தேசப் பிதா மகாத்மா காந்தி ஆகியோர் கதைத் தளத்தில் வந்து போகின்றனர். முதல் பகுதியான அறம், தருமத்தின் உருவமாக நாராயண குருவையும், அதர்ம உருவமாக நாராயண பிள்ளையையும் உணர்த்துகிறது.
பொருள் என்ற பகுதியில் காரல் மார்க்சும், இன்பம் என்ற பகுதியில் சிக்மன்ட் பிராய்டும், வீடுபேறு என்ற இறுதிப் பகுதியில் ஜிதேந்திரனும், நிகழ் களத்தில் நாவலாசிரியரின் பார்வையாக விரிகிறது. நாவலைப் படித்து முடித்த பின், அக்கேரளக் குடும்பங்களைப் போய் பார்த்துவிட்டு வந்தது போன்ற உணர்வைத் தருகிறது. தமிழில் நிர்மல்யா எளிய நடையில் மொழிபெயர்த்துள்ளார்.
– ராம.குருநாதன்
தினமலர்
Reviews
There are no reviews yet.