பங்குக்கறியும் பின்னிரவுகளும்
மழையற்ற ஒரு நாளில்தான் இப்புத்தகமும் நிறைவு பெறுகிறது. நீண்ட நாட்களாய் ஒரு துளி மழைக்காய் காத்துக்கிடக்கிறோம். அவள் இரக்கமற்றவள். இப்புத்தகத்தை அச்சுக்கு அனுப்புவதன் மூலம் நானும் அவளை இன்று இரக்கமற்று நிராகரிக்கிறேன்.
சீ.ப்பி. செல்வம் –
மனிதர்களை கொண்டாடும் தோழர் பவா…
பதினொரு #கதைகளின் தொகுப்பு நூலாக இல்லை இல்லை பூங்கொத்துகளாக கோர்க்கப்பட்டிருக்கிறது தோழர் #பவா_செல்லதுரை அவர்களின் மனத்தோட்டத்தில் பூத்த #நட்சத்திரங்கள்_ஒளிந்த_கொள்ளும்_கருவறை என்னும் கதை பூ மாலை.
தோழர் பவாவை ஒரு #கதைசொல்லியாக தங்களின் மனதில் ஏற்றுக் கொண்டு நட்பு பாராட்டும் நண்பர்களுக்கு, தோழர் ஒரு சிறந்த #சிறுகதை_எழுத்தாளர் என்பதனை இந்த கதைத் தொகுப்பினை முடிவில் நாம் அறியலாம். புத்தகத்தினை வாசித்து முடித்தவுடன் தோழர் பவாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு #வெவ்வேறு_மனிதர்கள் என்ற கதையில் வரும் “அந்த மான் மார்க் குடை வைத்திருக்கும் #ஜேக்கப்_சார் இப்ப எப்படி இருக்காரு பவா” என்று கேட்க வேண்டும் என தோன்றுகிறது.
ஒரு கலைஞனை இந்த பரந்து விரிந்த உலகம் ஒருபோதும் கைவிடாது என்ற நம்பிக்கை ஒளியினை பற்ற வைக்கிறது #ஏழுமலை_ஜமா என்னும் சிறுகதை.
#சிங்கார_குளம் ஏன் அவ்வளவு வன்மத்தோடு காத்தவராயன் மக #மல்லிகாவை பலி கொண்டது?. அதற்கு மேலும், ஒரு தலைமுறை கனமாய் கனத்தது மல்லிகாவின் உடல் மட்டும் தானா? என கேட்டுவிட்டு முடித்து விட முடியாமல் அடுத்த நிமிடமே கனத்துப் போகிறது நம்முடைய மனசும்.
ம்…ம்…ம்… என்ற #ஊமையனின் ஒலியினால் ஒரு மனம் படுகின்ற தவிப்பினை அடுத்து வருகின்ற எல்லா நிமிடங்களையும் தருணங்களையும் கடந்து இறுதியில் “தாயும் சேயும் பூரண நலம்” என்று #நட்சத்திரங்கள்_ஒளிந்து_கொள்ளும்_கருவறை எனும் சிறுகதையினை முடிக்கும் போதும் தன் முத்திரையைப் பதித்து விடுகிறார் அன்புக்குரிய தோழர் பவா அவர்கள்.
இப்படி இன்னும் பல கதைகளிலும் நம்மை மனிதர்களின் மனதோடு பேசவைக்கும் லாவகம் தோழர் அவர்களுக்கு இயல்பாகவே இருக்கிறது என்பதனை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது ஒவ்வொரு கதையின் முடிவிலும். மனிதர்களை நேசிக்கும் ஒரு பண்பினை இந்த மானுட தேசம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்னும் ஒரு சிந்தனையை இந்தக் கதைகள் முழுவதும் கடத்த வேண்டும் என்ற விருப்பம் அவ்வளவு சாதாரணமானவை அல்ல. இன்னும் தொடர்ச்சியாக பல்வேறு கதைகளை இந்த சமுதாயத்திற்கு தோழர் தர வேண்டும் என்பது இந்த புத்தகத்தின் வாசிப்பின் முடிவில் என்னை ஒரு வேண்டுகோளாக தோழரிடம் கேட்க வைக்கிறது.
#பங்குக்கறியும்_பின்னிரவுகளும்…
தன்னோடு ஏதோ ஒரு புள்ளியில் இணையும் நண்பர்களின் உறவினை எந்த ஊரு பாரபட்சமின்றி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவர்களை கொண்டாடும் மனசிருக்கே அது எல்லோருக்கும் வாய்க்குமா என்ன…?
தோழர் பவா அவர்கள் எழுதிய #பங்குக்கறியும்_பின்னிரவுகளும் என்ற தன்னுடைய வாழ்வனுபவக் கட்டுரைகளின் தொகுப்பில் ஓவியர் பாலசுப்ரமணியன், எழுத்தாளர் ஜெயமோகன், எழுத்தாளர் கோணங்கி, இயக்குனர் ராம், எழுத்தாளர் பிரபஞ்சன், இயக்குனர் மகேந்திரன் போன்ற பல்வேறு தோழமைகளோடு கொண்ட நட்பினை ஒரு கொண்டாட்ட மனநிலையோடு எழுதி இருக்கிறார். தோழமைகளை தூக்கி வைத்துக் கொண்டாடும் மனம் ஒன்று போதும், நம் வீடும் மனதும் மனிதர்களின் பேரன்பின் வழிய. எடுத்ததுமே புத்தகத்தை முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் எளிமையான எழுத்து முறையும், ஒவ்வொரு நிகழ்வையும் வருணித்த விதமும் நம்மை நெகழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இன்னும் பல கதைகளைக் கேட்க பவாவின் குரலும், கதைகளை வாசிக்க பவாவின் புத்தகங்களும் நம்மோடு இருப்பதே பெரும் வரமாக தான் இருக்கிறது இந்த தருணம் வரை. நிச்சயமாக இந்த இரு புத்தகங்களையும் வாசியுங்கள் நண்பர்களே. நம் நிகழ்காலத்தில் மானுடத்தை போற்றும் ஒரு மகத்தான கலைஞனிடம் பேசவும், அவரை கொண்டாடவும்…
நூல்கள்:
1. நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
2. பங்குக்கறியும் பின்னிரவுகளும்
ஆசிரியர்: பவா செல்லதுரை