ராஸ லீலா
சாரு நிவேதிதா எழுதிய இந்த புத்தகம் இரண்டு பாகங்களைக் கொண்டது. இந்நாவலை இரண்டு பாத்திரங்கள் எழுதுவதைப் போல சாரு எழுதினாலும் படிக்கையில் ஸீரோ டிகிரி போல பல அடையாளங்களில் சாரு எழுத முற்பட்டது தெரியும். முதல் பாகம் கண்ணாயிரம் பெருமாள் என்ற தன்னடையாளத்தைப் பற்றி சாரு கூறுவது. இரண்டாம் பகுதி- முதல் பகுதியில் வந்த பெருமாள் என்ற கதாப்பாத்திரம் எழுதும் நாவலாக விரிகிறது. சமூக மற்றும் உளவியல் புத்தகமாக தன் நாவல் அமைந்திருப்பதாகவும்,இந்நாவலை வாசகர்கள் எந்த தொகுப்பில் வகைப் படுத்தலாம் என்றும் பெருமாள் வழியே சாருவே கூறுகிறார். I hate all women because they deny me sex… சாரு தன் தபால்துறை அனுபவங்களை, அதிகாரிகள் சகா மனிதன் மீது செலுத்தும் அடக்குமுறைகளையும், அதனால் தனி மனிதன் படும் அவமானங்களையும் தனக்கே உரிய humor உடன் பல கதைகளாக நாவலின் முதல் பகுதியான கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் சில பின் குறிப்புகளில் வருகிறது. நாவல் non -linear ரில் செல்கிறது. ஒரு கதை – அதற்குப் பின் குறிப்பு அந்தப் பின் குறிப்பிற்கு வேறொரு பின் குறிப்பிற்கு மற்றொரு பின்குறிப்பு. இப்படியாக labyrinth உள்ளே மாட்டிக்கொண்டார் போல் தான் இருக்கிறது. மற்றொரு அத்தியாயம் நடுவாக்கியத்தில் இருந்து ஆரமிக்கிறது, கதை வளர்ந்து மறுபடியும் ஆரமித்த இடத்திற்கே வந்து முடிகிறது.
Kathir Rath –
ராஸலீலா
சாரு நிவேதிதா எழுதிய புத்தகம் என்று சொன்னாலே மேற்கொண்டு வாசிக்காமல் ஸ்க்ரோல் செய்து விடும் நபர்கள் அதிகம் நிறைந்த வாசிப்பாளர்களை கொண்டது தமிழ் சமூகம்.
ஏனென்றால் அவரை ஏதோ மஞ்சள் பத்திரிக்கை எழுத்தாளர் என்ற நிலையில் தான் வைத்து பார்க்கிறார்கள்.
சரி புத்தகத்திற்கு வருவோம்
இது ஒரு பின் நவீனத்துவ ரக நாவல்.
பின் நவினத்துவம் என்றால் எதையும் மையப்படுத்தாமல் எதையும் புறக்கணிக்காமல் எழுதப்படும் ஒன்று.
இது இரண்டு பாகமாக உள்ளது
கண்ணாயிரம் பெருமாளின் 40 கதைகளும் பின்குறிப்புகளும்
ராஸலீலா
அஞ்சலக துறையில் 20 வருடங்கள் அதிகாரத்தின் அடக்குமுறைக்கு ஆளானதை அவல நகைச்சுவை பாணியில் விவரித்துள்ளார்.
யோசித்து பார்த்தால் இவ்வளவு இரசனை உள்ள மனிதர் எப்படித்தான் இத்தனை வருடங்கள் தாக்கு பிடித்தார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.
ஒவ்வொரு கதைகளிலும் இடையிடையே வரிசை எண்கள் கொடுக்கப்பட்டு வரும், எழுத்து நடையில் பின்பக்கம் திருப்பி பார்க்காமல் தொடர்ந்து படிப்போம், படித்து விட்டு அந்த வரிசை எண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களை படித்தால் அத்தனை சுவாரசியமாக அதுவே தனிக் கதையாக போய்க் கொண்டிருக்கும். அதை வாசித்து விட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்த கதையை படித்தால் பாதி கனவில் எழுந்து நிகழ் உலகில் குழம்பி நிற்பதை போல் நிற்போம். உண்மையில் அந்த குழப்பமே ஒரு மது தரும் போதைக்கு நிகராக இருந்தது.
கண்ணாயிரம் பெருமாள் தான் சாரு, ஆனால் இடையிடையே பெருமாள் சாரு பற்றியும் சாரு பெருமாள் பற்றியும் சொல்லி மெட்டாபிக்சன் பாணிக்கு மாறுகிறார்கள்.
பெருமாளின் அதீத காமத்தின் தேவை, வாழ்க்கை முழுக்க வெறுமனே வந்துப் போகும் தோழிகள், விரும்பும் வாழ்க்கை & அமைந்த வாழ்க்கை, ஆற்றாமை என போகும் கதைப்போக்கில் எங்குமே நிறுத்த முடியாத எழுத்து நடை.
எனக்கு தெரிந்து ஒரு புத்தகத்தை வாசிக்கும் வாசிப்பாளனின் இரசனையை அடுத்தடுத்த கட்டத்திற்கு இழுத்து செல்லும் புத்தகமாக இதைத் தவிர வேறு எதையும் சொல்ல இயலவில்லை, இந்த புத்தக்த்தினுள் குறிப்பிடப்பட்டுள்ள கவிதைகள், நாவல்கள், திரைப்படங்கள், இசை ஆல்பங்கள் ஏன் அதர்வண வேதமும் அர்த்த சாஸ்திரத்துலும் கூட இவ்வளவு கலவி சார்ந்த சிந்தனைகள் குறீப்பிடப்பட்டுள்ளதை இந்த நாவல் மூலம் தான் அறிந்துக் கொண்டேன்.
வழக்கமாக மறுவாசிப்பு என்பது எனக்கு ஒத்து வராத ஒன்று, நேரமின்மைதான் முக்கிய காரணாம், வாசிக்காத புத்தகங்கள் நிறைய இருக்கையில் வாசித்த ஒன்றினை எதற்கு மீண்டும் வாசிக்க வேண்டும் என்ற கேள்விதான் எழும்,ஆனால் இந்த புத்தகத்தை கட்டாயம் மறு வாசிப்பு செய்தாக வேண்டும், தனியே ஒரு நோட்டு போட்டு சாரு சொல்லும் புத்தக்ங்கள், படங்கள், இசை ஆல்பங்கள் குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும்.
தொடர்ச்சியாக கணிணியில் வேலை பார்க்க வேண்டிய சூழல், அத்தனையையும் ஒதுக்கி விட்டு வேலையில் ஆழ்ந்தாலும் இந்த நாவலை புறந்தள்ள முடியவில்லை, கண் எரிச்சலிலும் முழுமையாக முடித்து விட்டுத்தான் வைத்தேன்.
குறைந்த பட்சம் 24 வயதிற்கு மேலுள்ளவர்கள் தான் வாசிக்க வேண்டும்.
வீட்டில் யார் வேண்டுமானாலும் இந்த புத்தகத்தை எடுத்து வாசித்து விடுவார்கள் என்ற நிலையில் உங்கள் பேர் கெட்டு விட வாய்ப்பு அதிகம், ஜாக்கிரதை
மிக முக்கியம், உங்களுக்கு வாழ்க்கையில் கொஞ்சமாவது கருமை பக்கங்கள் இருந்தால் தான் இந்த நாவல் சொல்ல வருவது புரியும், கருமை பக்கங்கள் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை, நீங்கள் விரும்பியதற்கும் கிடைத்ததற்கும் இருக்க கூடிய வித்தியாசமே அதன் அளவு.