பிம்பச் சிறை

Publisher:
Author: ,
(2 customer reviews)

Original price was: ₹299.00.Current price is: ₹280.00.

பிம்பச் சிறை

Original price was: ₹299.00.Current price is: ₹280.00.

Bimba Sirai

2016 ஏப்ரல் 23- ஜெயலலிதா திருச்சியில் இருந்தார். நானும் திருச்சியில் இருந்தேன். கூடியிருந்தவர்களில் பாதிப்பேர் இளைஞர்கள். எம்.ஜி.ஆர். இறந்து போன பிறகு பிறந்தவர்கள். ஆனால் வாத்தியார் பாட்டுக்கு அவர்கள் ஆடிய ஆட்டம், இன்னும் கால் நூற்றாண்டுக்கு எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மூச்சாகத்தான் இருக்கும் என்று என்னைச் சொல்லச் சொல்கிறது.

நடிகர்களை நாகரிகக் கோமாளி என்றார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். ஆனால் எம்.ஜி.ஆர். காரியக் கோமாளி. சமூக வளர்ச்சியைத் தனது படங்களின் நூல் இழையாக வைத்து தனது வளர்ச்சியை கவனத்தோடு நகர்த்தியவர். தொழிலாளியாக நடித்தார். தொழிலாளியாக வாழ்பவர்களுக்கு அது மிகவும் பிடித்து இருந்தது. தன்னையே எம்.ஜி.ஆராகவும், சரோஜாதேவியுடன் தான் ஆடுவதாகவும் ரசிகன் நினைத்தான். உருண்ட மஞ்சள் மார்பை பார்க்க ரசிகை துடித்தாள்.இப்படி ஒரு புருஷன், இப்படி ஒரு அண்ணன் கிடைக்க மாட்டானா என்று தவித்தாள். இதைத்தான், ‘எம்.ஜி.ஆரின் புனைப்பட்ட வாழ்க்கை’ என்கிறார் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். அடித்தட்டு வர்க்கத்தின் அறிவுப்பூர்வ வெற்றிடத்தை எம்.ஜி.ஆர். என்னும் மயக்கும் மாய உலகம் சுருட்டிக் கொண்டது. நேற்று மட்டுமல்ல. இன்று வரை. நாளையும்.

எம்.ஜி.ஆரை இறுதிவரை ஹீரோவாக வைத்திருந்தவர்கள் அவருக்கு வாய்த்த வில்லன்கள். அரிதாரத்தில் நம்பியார். அரசியலில் கருணாநிதி. இவர்கள் இருவரும் இல்லாவிட்டால் எம்.ஜி.ஆர். இல்லை. ‘எம்.ஜி.ஆரும் ஆற்றல் படைத்த விளிம்பு நிலை வில்லன் தான்’ என்கிறார் பாண்டியன். உண்மைதான். சுயநலத்துக்காக கொலை செய்பவர்களை வில்லன்களாகவும் அதையே பொதுநலனுக்காகச் செய்பவர்களை ஹீரோக்கள் ஆகவும் கட்டமைப்பது உண்டு. ‘எங்களால் கடத்தப்பட்ட பெண்ணைக் காப்பாற்றி துரத்தித்துரத்தி காதலிப்பவர்கள் தான் ஹீரோக்கள்’ என்று ஒருமுறை நம்பியார் சொன்னார். வில்லத்தனம் இல்லாத ஹீரோக்களை யாரும் விரும்புவது இல்லை. எம்.ஜி.ஆரை இன்றுவரை எல்லாருக்கும் பிடிக்கக் காரணம் இந்த வில்லத்தனமான ஹீரோத்தனம் தான்.

இப்படி எல்லாம் சினிமாவில் இருந்தவர் ஆட்சியில் அப்படி இல்லையே ஏன்? எம்.ஜி.ஆர். ஆட்சி காலம் இருண்ட காலம் என்று எம்.எஸ்.எஸ்.பாண்டியன் பட்டியலிடுகிறார். எம்.ஜி.ஆருக்கு கருணாநிதியை வெற்றிபெற வேண்டும், கருணாநிதிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் தவிர வேறு நோக்கம் இல்லை. ரசித்து ரசித்து, யோசித்து யோசித்து கதை பண்ணியவர், ஆட்சி நடத்துவதைப் பற்றி சிந்திக்கவே இல்லை. வில்லனை வீழ்த்துவிட்டு படம் முடிவதைப் போலவே கருணாநிதியை வீழ்த்துவதோடு ஆட்சி முடிந்துவிடுவதாக எம்,ஜி.ஆர். நினைத்தார்.

பாரதி கிருஷ்ணகுமார் ஒரு மேடையில் சொன்னார்: ‘‘எம்.ஜி.ஆர். நாற்பது ஆண்டுகாலம் தமிழ்சினிமாவை ஆண்டார். பத்து ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக நடித்தார்” என்று. எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை ஆட்சியும் கட்சியுமே சினிமா தான். அரசியலை சினிமா தான் என்று ரசிகன் நினைப்பது மாதிரியே எம்.ஜி.ஆரும் நினைத்தார். அதுதான் சிக்கல்.

எம்.ஜி.ஆர்.என்ற கனவு உலகுக்குள் போய் கனவைக் கலைத்து அறிவை இழுத்து வருகிறது எம்.எஸ்.எஸ். பாண்டியனின் சிந்தனைகள். எம்.ஜி.ஆர். இறந்தபிறகு எழுதிய புத்தகம், எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இறந்த பிறகு தமிழுக்கு வருகிறது. கனவுக்கும் அறிவுக்கும் காலம் இல்லை. ஆனால் காலத்தை தீர்மானிக்கும்! தீர்மானிக்கும்!தீர்மானிக்கும்!

-ப.திருமாவேலன்

Delivery: Items will be delivered within 2-7 days