Chinnanjchiru chinnanjchiru ragasiyamae
பிரார்த்தனா கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தாள். நெற்றியில் வைத்திருந்த குங்குமம், மூக்கில் லேசாக சிதறியிருந்ததைக் காண அழகாக இருந்தது. மஞ்சள் நிற காட்டன் சேலையில், சற்று முன்பு தோட்டத்திலிருந்து பறித்த பூ போல பளிச்சென்று இருந்தாள். டிவியில் ஏதோ வடிவேலு ஜோக் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த தனது கணவன் அருணைப் பார்த்து , ” என்னங்க.. நான் எப்படி இருக்கேன்? என்றாள். திரும்பி ஒரு வினாடி இயந்திரம் போல் பார்த்துவிட்டு, “நல்லா இருக்க..” என்று கூறிவிட்டு மீண்டும் டிவியைப் பார்த்தான். வேகமாக பாய்ந்து அவன்கண்களைப் பொத்திய பிரார்த்தனா, ” இப்ப நான் என்ன கலர் சேலை கட்டியிருக்கேன்?” என்றாள்.
“ம்…” என்று தடுமாறிய அருண் ,பச்சை கலர்..” என்றான். மனதில் மெலிதாக கசிந்த துக்கத்துடன் பிரார்த்தனா, ” என்ன கலர் சேலை கட்டியிருக்கன்னு கூட மனசுல பதியல நான் கேக்குறன்னு கடனன்னு சொல்றீங்க” என்றாள்.
பத்து வருடம் பார்த்து பார்த்து சலித்துப் போன பழைய வடிவேலு ஜோக்குகளிடம் இருக்கும் ஈர்ப்பு கூட இரண்டு வருடம் ஆன மனைவிகளிடம் ஏன் கணவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது?
————————————————————————————————————————————————————–
நெற்றி முடியை ஒதுக்கிவிட்டபடி அழகாக சிரித்த ஆரண்யாவிடம் ஆனந்த்,” பெண்கள் சிரிக்கறதுல ரெண்டு விதம் இருக்குங்க. சிவப்புத் தரையில மல்லிகைப் பூ மூட்டைய அவிழ்த்துக் கொட்டினது மாதிரி. ஒரு நொடியிலேயே பளிச்சுன்னு முகம் மலர்ந்து, தன்னோட முழு சிரிப்பையும் காட்டுறது ஒரு விதம். அடுத்த டைப்பு.. முதல்ல உதட்டோரத்துல லேசா சிரிக்க ஆரம்பிச்சு. அப்புறம் மெள்ள மெள்ள அந்த சிரிப்ப முழு உதட்டுக்கும் கொண்டு வந்து. அப்புறம் லேசா முன் பல்லக் காட்டி அப்புறம் கொஞ்சம், கொஞ்சமா மத்த பற்களையும் காமிச்சு சிரிக்கிறது. இது .. கடல்லருந்து சூரியன் மெள்ள மெள்ள உதிக்கிறது மாதிரி இருக்கும்” என்றான்.
“நான் எப்படி சிரிக்கிறேன்?”
“நீங்க சூரியோதயம்ங்க..” என்றபோது ஆரண்யாவின் முகத்தில் தெரிந்த வெட்கத்தை பேனாவால் தொட்டு லட்சம் கவிதைகள் எழுதலாம்.
Reviews
There are no reviews yet.