’ஒரு மரத்தின் பெருமை என்பது அதன் பழத்தினால் அறியப்படும்’ என்று சொல்லுவார்கள். அதைப்போல திராவிடப் பேரியக்கத்தின் சாதனைகளை நூலாசிரியர் கோவி.லெனின் நிரம்ப எடுத்து விவரித்துக் கூறியிருக்கிறார். காலத்திலிருந்து தி.மு.க. காலம் வரை அ.இ.அ.தி.மு.க.வை உள்ளடக்கி இத்திராவிடக் கட்சிகளின் சாதனைகளை காய்தல் உலத்தலின்றி ஆசிரியர் விளக்கிச் சொல்லுகிறார். இதுமட்மின்றி இக்கட்சிகளின் உள்ளும் புறமுமான பல செய்சிகளைச் சுருக்கமாக கூறியிருப்பது ஆசிரியர் ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது. இந்நூல் ஆசிரியர் திராவிடர் இயக்கம் பற்றிய வரலாற்று நூலை எழுத முற்றிலும் தகுதியுடைய ஒருவரே என்பதில் துளியும் அய்யமில்லை.
– க. திருநாவுக்கரசு (திராவிட இயக்க ஆய்வாளர்)
P.Nagarajan. –
இது என்னுரை 43.
**********************
திராவிடர் இயக்கம். நோக்கம் தாக்கம் தேக்கம் – கோவி. லெனின் – நக்கீரன் வெளியீடு.
★ ” தாத்தா, அது என்ன திராவிடம் ” என பேரன் தனது தாத்தாவிடம் கேட்பது போல புத்தகம் துவங்குகிறது. விவரமறிந்த தாத்தாவோ பேரனிடம் ….. ” திராவிடம் என்ற சொல் – ஆங்கிலேய பாதிரியான ராபர்ட் கால்டுவெல் 1856ல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் பயன் படுத்தப்பட்டது. மநுதர்ம சாஸ்த்திரத்தில் 44வது சுலோகத்தில் – திராவிடம் என்ற தேசம் குறிப்பிடப் பட்டுள்ளது. ரவீந்திரநாத் தாகூரின் ஜனகன மண பாடலில் – திராவிட உத்கல வங்கா என பாடியுள்ளார். சைவ சமயத்தை சேர்ந்த திருஞான சம்பந்தரை – திராவிட சிசு என்று புகழ்ந்தார்கள் ” ….. என்று விளக்கமாக ஆதாரங்களுடன் கூடிய உரையாடல்களாக இந்த புத்தகம் முழுவதையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.
★ நூலின் ஆசிரியர் கோவி. லெனின், நக்கீரன் இதழின் துணையாசிரியர். திராவிட இயக்கங்கள் பற்றி நிரம்ப படித்தவர். நூற்றாண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட திராவிட இயக்கம், தற்போது அது வளர்ந்து பெரிய ஆலமரமாகி, பல கிளைகள் உருவாகி, ஆழமாகவும் அகலமாகவும் உயரமாகவும் கம்பீரமாக நிற்கிறது என்பதை திராவிட இயக்கத்தின் தோற்றம் முதல் இன்றைய நிலை வரையான நிகழ்வுகளை ஒன்று விடாமல் தொகுத்தளித்துள்ளார்.
★ ஒரு நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் வரலாற்றை துவக்திலிருந்து இறுதி வரை படித்த பின்பு, அது கடந்து வந்த பாதையை அறியும்போது – எத்தனை நிகழ்வுகள், எத்தனை போராட்டங்கள், எத்தனை சோதனைகள், எத்தனை அர்ப்பணிப்புகள், எத்தனை துரோகங்கள், எத்தனை தலைவர்கள், எத்தனை தியாகங்கள் இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல எத்தனை சாதனைகள், எத்தனை சரித்திரங்கள்…..படிக்க படிக்க, வரலாற்று சுவடுகளிலிருந்து வெளிவரும் வலியும், வலிமையும் மனதை கனக்க செய்கிறது.
★ திராவிடம் என்பது எவ்வளவு பெரிய ஆயுதம் என்பது விளங்குகிறது. கோவி. லெனின் இந்த படைப்பிற்காக பாராட்டப்பட வேண்டியவர் !
★ ஆசிரியர் தந்துள்ள புள்ளி விவரங்களுக்காவது இந்த புத்தகத்தை, திராவிட கொள்கைகளில் ஈடுபாடுயில்லாதவர்கள் கூட படித்து அறியலாம்.
★ சிந்தனையாளர் அயோத்தி தாசர் 1890ல் திராவிட மகாஜன சங்கத்தை உருவாக்கினார்.
★ தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஜான் ரத்தினம் 1892ல் திராவிடர் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார்.
★ பார்ப்பனரல்லாத அதிகாரிகள் தங்கள் உரிமைகளைப் பெற 1912ல் டாக்டர் சி.நடேசன், தி மெட்ராஸ் யுனைடெட் லீக்கை உருவாக்கினார்.
★ டாக்டர் சி.நடேசன் திருவல்லிக்கேணி அக்பர் சாகிப் தெருவில், பிராமணரல்லாத மாணவர்களுக்காக திராவிடர் சங்க விடுதியை துவக்கினார்.
★ டாக்டர் சி.நடேசன், டாக்டர் டி.எம். நாயர், சர்.பிட்டி. தியாகராயர் மூவரும் – திராவிட இயக்கத்தின் முன்னோடிகள்.
★ 1916 நவம்பர் 20ம் நாள் டாக்டர் நடேசன், டாக்டர் நாயர், பிட்டி தியாகராயர் மற்றும் பிராமணரல்லாத பல முன்னோடிகள் கூடி, நீதிக்கட்சி அல்லது ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்ட – தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை தோற்றுவித்தார்கள்.
★ 1920ல் துவங்கி 1937வரை 17 ஆண்டுகள் நீதிக்கட்சியின் ஆட்சியில் – சமூக நீதிக்கான ஆணைகள், சமஸ்கிருத ஆதிக்க தகர்ப்பு, பெண்களுக்கான உரிமை களும் பிரதிநிதித்துவமும், கல்விதுறையில் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட சமுதாய மாற்றங்களுக்கான திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன.
★ திராவிட முன்னோடிகள் – டாக்டர் நாயர் 1919லிம், பிட்டி தியாகராயர் 1925லிம், பனகல் அரசர் 1928லிம், டாக்டர் நடேசன் 1937லிம் இயற்கை எய்தினார்கள்.
இந்த சூழலில் தந்தை பெரியார் திராவிட இயக்கத்திற்கு புத்துயிர் தர இயற்கையான தலைமையானார்.
★ காங்கிரஸ்ஸை விட்டு வெளிவந்த பெரியார் 1925ல் சுயமரியாதை இயக்கத்தை துவக்கி நடத்தி வந்தார். 1938ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் – இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் இருந்த பெரியாரை, சென்னையில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்.
★ 1944ல் சேலத்தில் நடந்த மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரை மாற்றி – பெரியாரின் தளபதியாக இருந்த அண்ணாவின் தீர்மானத்தை ஏற்று, திராவிடர் கழகம் என்ற பெயரில் இயக்கம் இயங்க ஆரம்பித்தது.
★ ஒரு நூற்றாண்டு திராவிட இயக்கத்தின் ஆரம்ப காலகட்ட வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை எடுத்து காட்டினேன்.
முழு விவரங்களையும் அறிய இந்த புத்தகத்தை வாசியுங்கள்.
★ திராவிடம் என்ன செய்து கிழித்தது என கேட்கும் அரை வேக்காட்டுகளை கிழித்து தொங்க விடுவதற்கு இந்த ஒரு புத்தகம் போதும். கோவி. லெனின் பாராட்டுதலுக்குரியவர் !
பொ.நாகராஜன். சென்னை.
05.06.2021.
*************************************