இந்திய நடிப்பு இலக்கணம்
தமிழ் ஸ்டுடியோ அருண், பேசாமொழி பதிப்பகம் மூலம் சில முக்கியமான சினிமா தொழில்நுட்ப நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் ‘இந்திய நடிப்பு இலக்கணம் – ஜென் இன் தியேட்டர்’ நூல் மிக முக்கியமானது.
வீதி நாடகங்கள் வழியே தன் கலையுலக பயணத்தைத் தொடங்கியவர் ஜெயராவ் சேவூரி. கூத்துப்பட்டறையில் பெற்ற பயிற்சியோடு, நவீன நடிப்பு முறைகளை கற்றுத்தேர்ந்த இவர், தன் 30 ஆண்டுகால நடிப்பு அனுபவத்தை ‘இந்திய நடிப்பு இலக்கணம்’ என்ற ஒற்றை நூலில் பரிமாறியுள்ளார். தெரு நாடகங்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரப் படங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்த ஜெயராவ், ‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்தியின் தந்தையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநராகட்டும், திரைக்கதை ஆசிரியராகட்டும், நடிகனாகட்டும் முறையே பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி பயிற்சி பெற்றவர்களால்தான் சினிமாவைக் காப்பாற்ற முடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஜெயராவ், நடிப்பு பயில்வதற்கான எளிய பயிற்சிகளை இந்நூலில் வழங்கியுள்ளார்.
கலை என்றால் என்ன, நடிப்பு என்றால் என்ன, சினிமா என்றால் என்ன போன்ற விஷயங்களில் அக்கறை கொண்ட ஒரு சமூக சிந்தனையுள்ள மனிதன் தான் நடிகனாக தன்னைத் தயார்படுத்திக்கொள்ள முடியும் என்பதை இந்திய ‘நடிப்பு இலக்கணம் – ஜென் இன் தியேட்டர்’ நூல் விளக்குகிறது.
சினிமாவில் பேர், புகழ், பணத்தை சீக்கிரம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்து நீங்கள் சினிமாவுக்கு வராதீர்கள். இது கள்ள நோட்டு அடிக்கிற இடம் இல்லை என்றும் கடிந்துகொள்ளும் ஆசிரியர், தரமான நடிகன் ஆவதற்கு என்னவெல்லாம் கற்றிருக்க வேண்டும் என்பதையும் பட்டியல் போட்டு பயிற்சிகளாகத் தந்துள்ளார்.
மனிதரில் இருந்து நடிகர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும், உடலுக்கும் நடிப்புக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்பதை விளக்கும் நூலாசிரியர் ஜெயராவ், இந்திய நடிப்பில் தனித்துவத்தை வளர்க்கும் விதத்தையும் அழகாகச் சொல்கிறார்.
சுய முன்னேற்றம், சுய அடையாளம், ஆன்மிக ஞானம், இலக்கிய ஞானம், யதார்த்த சூழலின் ஞானம், சமூகத்தில் உள்ள ஆறு பொறுப்புகள் என நடிகனுக்குத் தேவையான ஆறு அம்சங்களைப் பட்டியலிட்டு பயிற்சி முறைகளைக் கூறுகிறார்.
குரலில் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள், கட்டாயம் பயிற்சி செய்ய வேண்டிய நடைகள், நடிப்பில் உள்ள இரு வித்தியாசங்கள், கதாபாத்திரத்தின் ஆறு நிலைகள், பயிற்சித் துணுக்குகள் என நடிப்புப் பயிற்சிகளுக்கான அடுத்தடுத்த நிலைகளைப் பதிவு செய்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது.
சுமார் 15 ஆண்டுகளாக நடிகர்களுக்குப் பயிற்சி கொடுத்து வரும் ஜெயராவின் இந்தப் புத்தகத்தை நடிகர்கள் மட்டுமல்ல, சினிமாவில் இருப்பவர்கள், படிப்பவர்கள், சினிமா பார்ப்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் அவசியம் வாசிக்க வேண்டும்.
நன்றி – இந்து தமிழ் திசை
Reviews
There are no reviews yet.