மர்லின் மன்றோ
லியனார்டோ டாவின்சியின் உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்தை அறியாதவர்கள் இருக்கவே முடியாது.மறுமலர்ச்சி ஓவியர்கள் எல்லோரிடமும் டாவின்சியின் தாக்கம் இருக்கிறது. மோனாலிசா பிரபுத்துவ காலத்துப் பெண்களின் வாழ்க்கை விழுமியங்கலின் மொத்த உருவமாக லிசா கெரார்டினி எனும் இத்தாலி நாட்டுப் பெண்ணை மாதிரியாகக் கொண்டு வரையப்பட்ட ஓவியம். அதை மாதிரியாக வைத்துக்கொண்டு 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் 300க்கும் மேற்பட்ட ஓவியங்கள் 2000த்தைத் தாண்டிய விளம்பரப்படங்கள் தயாரிக்கப்பட்டாகிவிட்டன. ஆனால் யாரும் அவள் அடையாளத்தின் குறியீட்டை, அதற்கான காலம் கடந்தும் மாற்ற முற்படவில்லை. அந்த மரபை முதல் முதலில் உடைக்கத் துணிந்தவர் ஆண்டி வார்ஹால் எனும் அமெரிக்க ஓவியர். பாப் இசைக் கலாச்சாரத்தில் போப்பாக அவர் திகழ்ந்தார். அவரை அந்த உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்த ஓவியத்திற்கு அவர் தேர்ந்தெடுத்த மாதிரி ‘நோர்மா ஜீன்’ எனும் பெண். அவர் தீட்டிய ஓவியத்தின் பெயர் ‘மர்லின் மன்றோ’. அவளது அகால மரணத்திற்குப் பின் பொதிந்துள்ள மர்மங்களைப் பதிவு செய்யும் விதம் அவள் நடித்து வெளிவந்த நயகரா படத்தில் வரும் புகைப்படத்தை பட்டுத்திரை ஓவியமாக்கினார். வாழும் காலத்தில் மர்லின், மோனாவைப் போல் குடும்பம் என்ற சட்டகத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் சிறகடித்துப் பறந்த உல்லாசப் பறவை. வெடித்து சிரிப்பவள். தன் நடை உடை பாவனையில் காட்டிய கட்டற்ற கவர்ச்சியையும் அதன்பால் ஏற்படும் கவன ஈர்ப்பையும் அணு அணுவாய் அனுபவித்தவள். உலகின் அரியவை அனைத்தையும் ஆனந்தக் கூத்தாடி ரசித்தவள். ஆண்வழி சமூகத்தின் அடக்குமுறைகளைத் தன் கால்களின் இடுக்கில் போட்டு புதைத்தவள். அதனால்தான் அவளை ஒரு கலாச்சார சின்னமாக நிறுவுவதில் வார்ஹலால் ஓவியத்தில் அவருக்கிருந்த பாண்டித்தியத்தை சரியாகப் பிரயோகித்து வெற்றியடைய முடிந்தது. மர்லின் மன்றோவின் தொழில்முறை வாழ்க்கை வன்னமயமானதாக இருந்தது. தனிப்பட்ட் வாழ்க்கையின் மேல் இருள் மேவியிருந்தது. அந்த உயிர் வாங்கிடும் ஓவியத்தின் பின் இருந்த பெண் , எப்படி 21ஆம் நூற்றாண்டில் பெண்ணியப் போக்குகளை வரையறுக்கும் ஆளுமையாக மாறினால் என்பதை சுவைபடச் சொல்லும் இரத்தின சுருக்கமான தொகுப்பே இந்த சரிதை!
ART Nagarajan –
மர்லின் மன்றோ
குகன்
வானவில்
நோர்மா ஜீன், ஆம்
அதுதான் அவளது இயற்பெயர்.
திரையுலகம் தந்த பெயர்
“மர்லின் மன்றோ ”
கருப்பு வெள்ளை காலத்தில் நடித்தவள்தான், ஆனால்
பலரின் கனவுகளுக்கு
வண்ணம் கொடுத்தவள்.
உலகிற்கே
மர்லின் மன்றோ என்றால்
அவளது வெள்ளை ஸ்கர்ட் முட்டிக்கு மேலே பறக்கும்
படம் தான் நினைவுக்கு வரும்.
உள்ளத்தை அள்ளித்தா என்ற தமிழ் சினிமாவில்
அழகிய லைலா என்ற பாடலுக்கு ரம்பாவை, மர்லின் மன்றோ
நினைப்பிலேயே சுந்தர். சி இயக்கியிருப்பார்
மர்லினின் அழகிய
வாழைத்தண்டு கால்களை
பார்க்க, பார்க்க அப்படியே பார்வை மேலெழுந்து முட்டிவரை சென்றால் நெஞ்சம் பதைபதைக்கும்,
ஆடையை பறக்கவிடுவதற்காக பிறவியெடுத்தது போல்
சுற்றிச் சுழலும் அந்த மின்விசிறிக்கும் மூச்சிறைக்கும்!
முட்டியை முத்தமிட அவளது குட்டைப் பாவாடை கூட முயற்ச்சிக்கும்,
மர்லினை
படம் பிடிக்கும் கேமராவுக்கும்
கண் கூசும்!
அவளது வெள்ளை ஸகர்ட் இன்னும் கொஞ்சம் மேலே பறக்காதா என்று
பார்ப்பவர் மனது
கிடந்து தவிக்கும்.
அறிந்தும், அறியாதது போல அனிச்சையாக
அவளது இடது கையால் அலைநுரைகளை
அள்ளி நெய்தது போன்ற மேலாடை கொண்டு
தன் முட்டிவரை மூடி மறைப்பாள் மர்லின்.
மூடிய அவளது இடது கையின்மீது அளவிட முடியாத கோபம் வரும். அதே நேரத்தில்
தனது வலது கையால்
பறக்கவிடும் முத்தங்களை காற்றில் மிதக்கவிடுவாள்
மர்லின் தனது ரசிகனின்
மனதை புரிந்து கொண்டு கள்ளங்கபடமற்ற ஒரு மந்திரப்புன்னகை வீசுவாள்
கல்மிஷக் கண் கொண்டு பார்ப்பவரையும்
கன்னத்தில் போட்டுக்கொள்ள வைக்கும் வசீகரமுடையது மர்லினின் புன்னகைக் கீற்று!
கணக்கு வழக்கு பார்க்காமல் சிந்திய முத்தங்களினால் சிவப்பேறிக் கிடக்கும்
மர்லினின் உதடுகள்
இறுதிவரை
களைப்படைந்ததே இல்லை.
எத்தனையோ நடிகைகளை, நடிகர்களை அறிமுகம் செய்த இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் தனது அறையில்
மாட்டி வைத்திருப்பது “மர்லின் மன்றோ” புகைப்படத்தை
மட்டும் தான்
மர்லினோடு நெருக்கமாக இருந்தவர்கள் 36பேர் அதில் தகுந்த ஆதாரங்களுடன் உள்ளவர்களை மட்டுமே இந்த நூல் நம்மோடு பேசுகிறது!
நயாகரா என்ற திரைப்படத்தில் தனது பிங்க் கலர் ஸ்கர்ட், கைகளில் க்ளவுஸ், லிப்ஸ்டிக், கவர்ச்சி, காந்தக் கண்கள், என்று சகல அம்சங்களிலும் ரசிகர்களை மட்டுமல்ல, பத்திரிக்கையாளர்கள், மற்றும், பெருமுதலாளிகளையும் கிறங்கடித்தார் மர்லின்!
இந்தப் படத்தின் அழகியலை விமர்சித்தவர்கள் வளைவு, நெழிவுகளில் நயாகராவையும், மர்லினையும் பிரித்தறிவது கடினம் என்றே எழுதினார்கள்!
மர்லினின் இழையோடும் புன்னகைக்கு பின்னால் வஞ்சமும், சூழ்ச்சியும், வக்கிரமும், வன்மமும், குரோதமும், துரோகமும் பின்னிப் பிணைந்து புரையோடிப் போயிருந்தன!
30 படங்கள் கூட நடித்து முடிக்காமல்,
தனது 36 வயதிலேயே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட மர்லின் மன்றோவை
50 வருடங்கள் கழித்து உலகின் தலைசிறந்த சினிமா நட்சத்திரமாக,
இருபதாம் நூற்றாண்டின் கலாச்சார சின்னமாக உலகமே கொண்டாடும் இந்த நேரத்தில் மர்லின் தனது பால்ய வயது முதல் 36 வயது வரை அவர் பட்ட துயரங்களை அறிந்து கொள்வது இன்றியமையாதது!
அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர்
ஜான் கென்னடி தனக்கு மிக நெருக்கமாகவே மர்லினை கொண்டாடி மகிழ்ந்தார்.
அமெரிக்க அதிபர்
ஜான் கென்னடி தனது 45வது பிறந்தநாளை வெள்ளை மாளிகையில் 1962 மே 19தேதி கொண்டாடினார்!
மர்லின் மன்றோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
ஜான் கென்னடியை வாழ்த்தி தனது மயக்கும் குரலில் பாடல் பாடினார்!
1962 ஆகஸ்ட் 6ம் தேதி தனது இல்லத்தில் படுக்கை அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்!
புன்னகையை வெளியிலும்
கண்ணீரை தனக்குள்ளும் வைத்துக்கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்தவர் மர்லின் மன்றோ!
மர்லினோடு உற்சாகமாக சுற்றிவிட்டு, கண்ணீரோடு விடைபெற்றேன் நான்!
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART. நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை