2 reviews for ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
Add a review
You must be logged in to post a review.
₹375.00
Oru Manithan Oru veedu Oru Ulagam
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது. எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளைக் கடந்த பின்னரும் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது.
Delivery: Items will be delivered within 2-7 days
Poonkodi Balamurugan –
புத்தகம்: ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.
ஆசிரியர் : ஜெயகாந்தன்.
நிறைய பேர் இந்த புத்தகத்தைப் படிச்சு போடற பதிவுகளைப் படித்து இந்த புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.படித்ததும் தான் தெரிந்தது ஏன் படித்த அத்தனை பேரும் இந்த புத்தகத்தை கொண்டாடுகிறார்கள் என்று.
மகாபாரத்தில் ஒரு கதை வரும் .ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டு அன்று முழுவதும் வரும் நல்லவர்கள் , கெட்டவர்கள் எண்ணிக்கையை கணக்கு எடுக்க வேண்டும் என்று தருமனுக்கும் துரியோதனனுக்கும் துரோணர் கட்டளையிடுகிறார். துரியோதனன் நிறைய கெட்ட மனிதர்களைப் பார்த்தாக சொல்ல , தருமனோ கெட்ட மனிதர்களைப் பார்க்கவேயில்லை என்று சொல்கிறான்.அதாவது மனிதனின் எண்ணமும் , அவன் பார்க்கின்ற பார்வையும் தான் மற்றவற்றின் குணாதியசங்களை தீர்மானிக்கிறது என்று.அதே போல இந்த நாவலில் அகண்ட விசாலமான பார்வையால் கதை மாந்தர்கள் அனைவரும் நல்ல மேன்மையான மனிதர்களாகவேஇருக்கிறார்கள்.
அதிகமான போக்குவரத்துகள் இல்லாத கிராமங்களுக்கு அப்போது பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் தான் பல நேரங்களில் மனிதர்களின் பயணத்திற்கும் ஏற்றதாக இருந்திருக்கிறது. அப்படி ஹென்றி என்ற ஆங்கிலோ இந்தியன் லாரியில் பயணிக்கிறான். கூடவே தேவராசன் என்ற பள்ளி ஆசிரியரும். அங்கே ஒரு திருப்பத்தில் உள்ள ஆற்றில் ஒரு பெண் பிறந்தமேனியோடு குளிக்கிறாள். அவளை லாரியில் உள்ள அனைவரும் ஒரு கணம் பார்க்கின்றர்.ஹென்றியோ திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு வருகிறான்.உடனே லாரி டிரைவர் துரைக்கண்ணு கோபத்துடன் ஏன்தொரை ஒரு பெண்ணை இப்படி வெறித்து பார்க்கறீங்களே தப்பில்லையாஎன்று கோப்படுகிறான். அதற்கு அங்கே துள்ளி ஓடிய மான் உங்களுக்கு தெரியலையா ? தாவிக்கொண்டு சென்ற குரங்கு தெரியவில்லையா ? என்று கேட்கும் போது ஹென்றியின் தூய்மையான உள்ளத்தை காட்டுகிறார் எழுத்தாளர்.அந்த இடத்தில் தேவராசனின் மனதிலும் ஹென்றி தங்கிவிட்டான்.
யானையைப் பார்த்து அதிசயத்து , பட்டாம்பூச்சி பார்த்து வியந்து , பார்க்கும் பொருட்களை எல்லாம் ரசிக்கும் குழந்தை மனது வாய்க்கப்பட்ட ஹென்றி தேவராசனின் இல்லத்தில் தங்குகிறான். முன்பின் பழக்கமில்லாத ஹென்றியை எப்படி தேவராசன் நம்பி தன் வீட்டில் தங்க வைக்கிறான் என்ற கேள்விக்கு ஒரு மனிதனை பார்த்தவுடன் வருகின்ற அதீத நம்பிக்கையின் பால் உன்னோடு நட்பு கொண்டேன் என்ற பதிலின் மூலம் நம்மையும் உணரவைக்கிறான்.
தம்பி தான் யாரோ ஒருவனை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறான். அவன் யார் என்ன என்று அதிகம் நோண்டாமல் நல்ல முறையில் உணவளித்து தன் தம்பியைப்போல பார்த்துக் கொள்ளும் அக்கம்மா..
அந்த கிராமத்தில் இருந்து வெளியேறிய சபாபதி பிள்ளையின் வளர்ப்பு மகனாகிய ஹென்றி தன் தந்தையின் மறைவிற்கு பிறகு அவர் பிறந்து வளர்ந்த மண்ணில் வாழ்ந்தால் அவருடன் வாழும் திருப்தி கிட்டும் என்ற நம்பிக்கையில் அந்த கிராமம் வருகிறான். அந்த சொத்துக்களை அதுவரை அனுபவித்து வந்த சபாபதி பிள்ளையின் தம்பி துரைக்கண்ணுவிடம் இருந்து சொத்துக்களை வாங்கி எப்படி ஒரு வளர்ப்பு மகனுக்கு தருவது என்ற குழப்பம் ஊர் பெரியவர்களுக்கு. ஆனால் பிள்ளையில்லாசொத்தை வாரிசா இருக்கறேன்னு குற்றவுணர்வோடு இருந்தேன். ஆனா சொத்துக்குரியவன் வந்துட்டான். அவனுக்கே சொத்தை எழுதிடுங்க எனச் சொல்லும் போது அதுவரை முரடனாகவும் , குடிகாரனாகவம் காட்டப்பட்ட துரைக்கண்ணு ஒரேடியாக நம்மனதில்உயர்ந்து விடுகிறான். அவன் மனைவி நவநீதமும் கணவனுக்கு ஏற்ற மனைவியாகவே இருக்கிறாள்.தன் மூத்தாரின் வளர்ப்ப மகனை தன் மகன் போலவே பாவிக்கிறாள்.
பிறந்தமேனியாக திரியும் அந்த பெண் எப்படி ஹென்றியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கிறாள்என்பது ஆச்சரியம். ஒருவேளை ஹென்றி அக்கம்மா சொன்னது போல இறைநிலை மனிதனோ..ஹென்றியைப் போல ஒரு மனிதனை வாழ்வில் சந்திக்க வேண்டும் ..நட்பு கொள்ள வேண்டும் என்ற ஏக்கம் புத்தகம் படித்த அனைவருக்கும் ஏற்படும்.ஹென்றி போன்ற ஏன் வெளியே தேட வேண்டும்? நம் மனதையும்ஹென்றியின் மனதை போல கள்ளமற்று எல்லவற்றையும் நேசிக்கின்ற மனதாக மாற்றிக் கொண்டால் நம்மிலும் ஹென்றியைக்காண்போம்.
பெய்கின்ற மழை இந்த இடத்தில் இவ்வளவு பெய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் பெய்வதில்லை.அது பெய்ந்து கொண்டோ போகிறது. அந்தப் பெருமழை போல எதிர்ப்படும் மனிதரிடம் எல்லாம் , பயணிக்கின்ற மனிதர்களிடம் எல்லாம் அன்பை மட்டுமே பொழிந்துகொண்டே செல்வோம் என்பதைத்தான் இந்நாவலின் வாயிலாக நான் உணர்கிறேன்.
Mubarak –
அவரது கால எழுத்தாளர் உலகின் சிங்கம் திரு #ஜெயகாந்தன் அவர்களின் #ஒருமனிதன்_ஒருவீடு_ஒருஉலகம்.
Anybooks என்னும் செயலியில் பல நாட்களாக படிக்க வேண்டும் என்றிருந்த புத்தகம்.
#ஜெயகாந்தன் அவர்களோட கதைகள் பொதுவாகவே பாராட்டை பெறும், குறிப்பாக இந்த கதை “அவரது படைப்புகளில் அவருக்கு மிகவும் பிடித்து” என அவரே பலமுறை சொல்லியிருக்கிறார். அப்படியானால் இந்த நாவல் எப்படி இருக்கும்?
முன்னுரையில் அவரது கருத்துக்கள் மிக அருமை. அப்படியே கதைக்குள்ள போனால், “லாரியில் மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள்” இப்படி ஆரம்பித்த கதை “அந்த வீட்டுக்குள் மேளதாளத்துடன் ஒரு கிராமமே சஞ்சரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறது” இப்படி முடியும் போது தான் தெரிஞ்சுது, ஆசிரியர் நம்மள அந்த கதை மாந்தர்களிடமிருந்து விடைபெற்று போய் அடுத்த வேலைய பாக்க சொல்றாருனு…
கதையின்படி பார்த்தால் ஹீரோ ஆங்கிலோ இந்தியனா இல்ல பர்மாகாரனா சொல்ல முடியல, ஆனால் அற்புதமான மனிதன். ஹென்றி தன் வளர்ப்பு தந்தை இறந்த பிறகு அவரது ஊருக்கு வருகிறான். அங்கு அந்த தந்தையின் சொத்துக்கள் இவனுக்கு சேர்கிறது. அந்த ஒரு பகுதியை மட்டுமே விமர்சிக்க பல மணி நேரம் ஆகலாம். தரமான காட்சி அது.
அப்புறம் அந்த ஊரில் ஏற்கனவே இருக்கும் சித்தப்பாவின் குடும்பம், அச்சச்சோ அவரோட நண்பர் தேவராஜ் மறக்க முடியுமா? இப்படி பல முக்கிய கதாபாத்திரங்களோட கதை தொடர்கிறது. ஒரு நல்ல மனிதனின் கண்களுக்கு அனைத்தும் நல்லவையாக தெரியும், அவன் இருக்கும் இடம் நல்லவர்காளாலும், மகிழச்சியாலும் திழைத்திருக்கும்.
கதையின் இடையிடையே, பல சஷ்பென்ஸ், தூக்கு போட்ட நாவிதனின் கதை தெரிஞ்சு போயிடுமோ? இந்த கதாபாத்திரம் ஏன் இங்க வருது? அடடே இது அப்போ அங்க வந்த கதாபாத்திரம் ஆச்சே!
இப்படி பல விறுவிறுப்பு. கதை சத்தியமா சஷ்பென்ஸ் த்ரில்லர் இல்லை.
சிம்பிளா சொல்லனும்னா, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் இதை விட சிறந்த தலைப்பு இந்த கதைக்கு கொடுக்க முடியாது. ஹென்றி நல்ல மனிதன் என்பதை விட சிறந்த மனிதன். கதைய முடிஞ்சவங்க இல்ல, எல்லோரும் கண்டிப்பாக படியுங்க!
கதை எழுத ஆரம்பித்தபோது இருந்த தன்னுடைய போக்கில் இருந்து கதையின் போக்கில் அதை எழுதியிருப்பதாக ஆசிரியர் முன்னுரையில் சொல்கிறார். அது உண்மை தான் தவழ்ந்து பழகிய குழந்தை போல, கதை அதனுடைய போக்கில் பயணிக்கிறது. அதை பார்க்கும் நமக்கு அதன் போக்கு மிக அழகாக தெரிகிறது.
இதை தொடர் நாவலாக எழுத இருந்ததாக ஐயா #ஜெயகாந்தன் சொல்லியிருக்கார். கதை முடியும் போது, அதற்கான காரணமும், கதை இப்படியே முடிந்ததற்கான வருத்தம் கலந்த மகிழ்ச்சியும் உண்டாகும்.
நன்றி
#muba