Be the first to review “சாதிகளின் உடலரசியல்”
You must be logged in to post a review.
₹75.00
ஜாதி ஒழிப்பு: நம்பிக்கை விதைக்கும் நூல்கள்
இந்தியச் சூழலில், சாதியை சந்திக்காமல் எவரும் வாழ்க்கை நடத்திவிடமுடியாது. சாதியை வெளியில் சொல்லிக் கொள்வது அநாகரிகம். இன்னொருத்தர் சாதியைக் கேட்பது அவமரியாதை என்ற உணர்ச்சிகளுக்கு, இன்றைய இந்திய சமூகத்தில் இடமில்லாமல் போய்விட்டது.
மாறாக தன் சாதியின் ‘பெருமை‘யை பெரிதாகப் பேசித் திரிவது, தன்னை இன்ன சாதி இல்லை என்று அடையாளம் காட்டுவதில் பெருமைப்படுவது போன்ற உணர்ச்சிகள் எல்லாம் இயல்பாகிக் கொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில், சாதிகளை ஒழித்தாலன்றி இங்கே சமூக சமத்துவம் ஏற்படாது என்று முடிவு செய்தவர்களும் சரி; ஒழிக்க முடியாவிட்டாலும் சாதிகளுக்கிடையே சமத்துவமும், இணக்கமும், நட்பும் ஏற்பட்டால் போதும் என்று விரும்புபவர்களும் சரி; இங்கே எப்படி சாதி முறை இவ்வளவு வேர் ஊன்றி வளர்ந்தது என்பதை அறியவேண்டியது முதல் தேவையாகும். அந்தத் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில், இரு சிறு நூல்கள், கடந்த ஓராண்டுக்குள் வெளியாகியுள்ளன.
நூல்வனம் வெளியிட்டிருக்கும், ‘சாதிகளின் உடலரசியல்‘ என்ற, 94 பக்க நூலை எழுதியிருப்பவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின், மாநில செயற்குழு உறுப்பினரான உதயசங்கர்.
சாதியை அன்றாடம் நாம் சமூகத்தில் சந்தித்தாலும், அதன் வேர், வீடு, குடும்பம் ஆகியவற்றிற்குள்ளேயே இருக்கிறது என்ற புரிதலுடன், தன் நூலை எழுதியிருக்கிறார் உதயசங்கர். சாதி என்றால் என்ன? என்று கேட்ட தன் மகளுக்கு, அதை விளக்க வேண்டிய கட்டாயத்தை சந்தித்த ஆசிரியர், குடும்ப நடைமுறைகளிலிருந்தே சாதியின் இருப்பை, அவளுக்கும் நமக்கும் சேர்த்து விவரிக்கிறார்.
ஒரு சராசரி குடும்பத்தின் அனைத்து சடங்குகளிலும், தன் முத்திரையைப் பதித்திருக்கிறது சாதி. அதற்கு முன்னோடியாக வர்ணம். ஆதாரமாக கடவுளும் மதமும். இந்தச் சூழல் எப்படி உருவாயிற்று எ்னபதை, வரலாற்றுப் பூர்வமாகவும் ஆசிரியர் சித்தி்ரிக்கிறார்.
ஆரம்பத்தில் வர்ணம் என்பதும் சாதி என்பதும் பிறப்பின் அடிப்படையில் இல்லாமல், தொழில் அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் மட்டுமே அமைந்ததாகக் கருதும் ஆகிரியர், அது பின்னர் பிறப்பு அடிப்படையிலானதாக மாற்றப்பட்ட வரலாற்றையும், அதற்குப் பின்னே இருக்கும் ஆதிக்க சாதியின் சதியையும் வர்ணிக்கிறார்.
சாதி ஏற்றத்தாழ்வு, ஆண் – பெண் சமத்துவமின்மை இரண்டுக்கும் பின்னால் இருக்கும் தீண்டாமை தீட்டுக் கோட்பாடே, சாதியத்தின் அடித்தளமாக இருப்பதாக, ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். இதை பல்வேறு சடங்குகள் பற்றிய விவரங்கள் மூலம் நிறுவுகிறார்.
இந்த வரலாற்றைப் படிக்கும் போது, எவர் மனதிலும், எழும் ஒரு முக்கியமான கேள்வி, ‘சாதி எப்போதிலிருந்து இப்படி மாறியது? தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று ஆவணமான சங்க இலக்கியத்தில் தீட்டும் தீண்டாமையும் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் உண்டா? உண்மையில் சாதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்படி இருந்து வருகிறதா அல்லது இப்போதைய இறுக்கமான ஒடுக்கு முறை வடிவம், சில நூறு ஆண்டுகள் முன்னர்தான் ஏற்பட்டதா?‘
இந்தக் கேள்விக்கு பதில் தேடுவதுதான் இன்னொரு நூல். மணற்கேணி வெளியிட்டிருக்கும் ‘சங்கப்பாடல்களில் சாதி, தீண்டாமை, இன்ன பிற…‘ என்ற நூலை எழுதியிருப்பவர், தமிழ் அறிஞர் வீ.எஸ்.ராஜம்.
தீண்டாமை தொடர்பாக இன்று பயன்படுத்தப்படும் பல சொற்கள், சங்க இலக்கியத்திலும் பயிலப்பட்டவை தான். ஆனால், அவை இன்றைய பொருளில் தான் அன்றும் பய்னபட்டனவா என்று நுணுக்கமாக ஆராய்கிறார் ராஜம்.
இன்று, சேரி என்ற சொல், பரவலாக பொதுப் புத்தியில் தாழ்த்தப்பட்ட, வறிய மக்கள் வாழும் குடிசைப் பகுதி என்று மட்டுமே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், சங்க இலக்கிய சான்றுகளின் படி பரதவர் சேரி, பார்ப்பனர் சேரி எல்லாமே இருந்துள்ளன. சேரி மக்கள் ஏழைகள் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை.
இது போலவே, புலையன், புலைத்தி, இழிசினன், இழி பிறப்பாளன், இரவலர், புரவலர் போன்ற சொற்கள் குறிக்கும் பொருளுக்கும் சாதி, தீண்டாமைக் கோட்பாடுகளுக்கும் தொடர்பு உண்டா என்று ஆசிரியர் ஆராய்கிறார். பல சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள்காட்டி, சங்கப்பாடல்களில் சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமை இரண்டு்க்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று நிறுவுகிறார் ஆசிரியர்.
சாதியும் சாதியமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருப்பவை. அவற்றை எளிதில் மாற்ற இயலாது என்று நம் மனங்களில் ஏற்படும் முதற்கோணலை நீக்கி, ‘இவையெல்லாம் தொன்மை மரபின அல்ல; அண்மை மரபின தான். மாற்றத்துக்குரியவையே‘ என்ற நம்பிக்கையை விதைக்கும் சிறுவிதைகளாக, இந்த நூல்கள் அமைந்திருக்கின்றன.
– ஞாநி (10.04.2016)
நன்றி: தினமலர்
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.