இந்தப் புத்தகத்தில் காணக்கிடைப்பது, கால அளவில் ஒரு தொலைநோக்காக அமைந்த பின்னோக்குப் பார்வையாகும். ஆனால் பிற்போக்குப் பார்வையன்று. அந்த வகையில் இதுவும் ஒரு தூரதரிசனமே.
இளம் பாலகனின் நினைவில் பதிந்த சின்னஞ்சிறு வயது நிகழ்வுகளை ஆசிரியர் விவரிப்பது நம்மையும் அந்தப் பருவநிலைக்கே இட்டுச் செல்கிறது. பல இடங்களில் பாலப்பருவ நினைவோட்டத்தில் நாமும் சேர்ந்து நீந்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
முற்போக்கு என்ற பெயரிலும், பிழைக்கத் தெரிந்த புத்திசாலித்தனம் என்ற பெயரிலும், கள்ளமற்ற வெள்ளை உள்ளத்தையும், சமூக விழுமியங்கள் பலவற்றையும் நாம் தொலைத்துவிட்டோம் என்ற உண்மையைப் பட்டவர்த்தனமாக நாம் தரிசிக்கும் வகையில் நரசிம்மன் தம் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார்.
கல்வியை இலவசமாக வழங்கிய காமராஜ் ஆட்சிக்காலம் அது என்ற உண்மையையும், கல்வியையே வியாபாரமாக மாற்றிவிட்டு, இலவச வண்ண தூர்தர்ஷன் பெட்டிகளை வழங்கியதன் மூலம் கல்வியை மேம்படுத்தினோம் என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட உத்தமர்கள் கற்பித்த வியாபார தர்மத்தின் ஆட்சிக் காலமே நிகழ்காலம் என்ற உண்மையையும் ஒப்பிடும்போதுதான் நமது வீழ்ச்சியின் வீச்சு புரியும். அவ்வகையில் கழிவிரக்கத்தைத் தூண்டும் ஒரு காலப் பதிவேடு என்று இந்நூலினைச் சொல்லலாம். இன்னொரு வகையில் பாடம் கற்பிக்கிற பதிவேடு என்றும் சொல்லலாம்.
எஸ்.இராமச்சந்திரன்
(நிறுவனர் – தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
Reviews
There are no reviews yet.