விரும்பத்தக்க உடல்
உய்பெர் அதாத்
சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
பத்ரகாளி கோயில் தேர்த் திருவிழா நாளில் ஒரு பெண் மீது ஆசைப்பட்டு ஒருவன் காளியிடம் வேண்டுகிறான்: ‘அந்தப் பெண் என்னை மணந்துகொண்டால், என் தலையை உன் பாதார விந்தத்தில் செலுத்துகிறேன்.’ அவன் வேண்டியது நடக்கிறது. சொன்னபடி, கோயிலுக்கு எதிரில் இருக்கும் மரத்தின் கிளையில் முடியை முடிந்துகொண்டு கழுத்தை அறுத்து மாய்ந்துபோகிறான். அவனைத் தேடி வரும் அந்தப் பெண்ணின் சகோதரன், பிரேதத்தைக் கண்டு வருந்தி, அவனும் அதேபோல தலையைத் துண்டித்துக்கொள்கிறான். தமையனும் கணவனும் பிணமாகக் கிடப்பதைக் கண்டு, அந்தப் பெண்ணும் சாகத் துணியும்போது, உடலைத் தலையோடு பொருத்திக்கொள்ள காளி வரம் தருகிறாள். இருவரின் தலையையும் உடலோடு ஒட்டவைக்கும்போது, அந்தப் பெண் தமையனின் தலையைக் கணவனின் உடலோடும், கணவனின் தலையைத் தமையனின் உடலோடும் பொருத்திவிடுகிறாள். “இந்த இருவரில் யாருக்கு அவள் மனைவி?” என்பதுதான் விக்ரமாதித்தனிடம் வேதாளம் கேட்கும் கேள்வி.
சுவாரஸ்யமான கேள்வி. இனி தமையனோடும் கணவனோடும் அவள் எப்படி வாழ்க்கை நடத்தப்போகிறாள் என்பது ஒரு நாவலுக்கான, நீண்ட தத்துவ விசாரணைக்கான களம்தான், இல்லையா? வேதாளம் கேட்ட இந்தக் கேள்வியின் ஆதார அம்சத்தை, ‘விரும்பத்தக்க உடல்’ எனும் நாவலாக்கியிருக்கிறார் பிரெஞ்சு எழுத்தாளர் உய்பெர் அதாத். பிரான்ஸில் உய்பெர் அதாத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர். இதே கேள்வியை வேறு சில தொன்மக் கதைகளும் கையாளுகின்றன. அந்தத் தொன்மங்களை அடிப்படையாக வைத்து தாமஸ் மன் எழுதிய ‘தி ட்ரான்ஸ்போஸ்டு ஹெட்ஸ்’ குறுநாவலும், கிரீஷ் கார்னாட் எழுதிய ‘ஹயவதனா’ நாடகமும் குறிப்பிடத்தக்கவை.
மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவனின் உடலை, பல உறுப்புகள் செயலிழந்த நிலையில், விபத்துக்குள்ளாகியிருக்கும் செதெரீக்கின் தலையுடன் பொருத்திவிடுகிறார்கள். மூளைச்சாவு ஏற்பட்ட உடலுக்குச் சொந்தமானவனைக் காதலித்த பெண் ஒருத்தி (அனந்தா) இருக்கிறாள்; அந்த உடலில் பொருத்தப்பட்ட தலைக்குச் சொந்தமான செதெரீக்கைக் காதலித்த பெண் ஒருத்தி (லோர்னா) இருக்கிறாள். இரண்டு பெண்களையும் வெவ்வேறு தருணங்களில் செதெரீக் சந்திக்கும் சூழல் வாய்க்கிறது. இரண்டு பெண்களும் அந்த உடலை எப்படி எதிர்கொள்கிறார்கள், செதெரீக்கே அவனுடைய புதிய உடலை எப்படி எதிர்கொள்கிறான் என்று விரிகிறது ‘விரும்பத்தக்க உடல்’ நாவல். செதெரீக்கின் தலையில் வேறொரு உடல் பொருத்தப்பட்டதும் லோர்னா அவனிடமிருந்து விலகிப்போய்விடவே விரும்புகிறாள். அவளுக்கு அவன் அந்நியமாகிவிடுகிறான். இன்னொரு ஆணோடு அவளுடைய அடுத்த உறவைத் தொடங்க முடியும். லோர்னாவால் செதெரீக்கை வேறொரு ஆணாக நினைத்துக்கூட நெருங்க முடியவில்லை. அவனுக்கும்கூட அவ்வுடல் அந்நியமாகிவிடுகிறது. புதிய உடலைப் பெற்றுக்கொண்ட பின், அவன் இருப்பை அவனாலேயே சகித்துக்கொள்ள முடிவதில்லை. “ஒரு தலையை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது?” என்கிறான். “மிகவும் அந்தரங்கமான ஒரு நெருக்கத்தில் அந்நியன் ஒருவனைச் சங்கடத்தோடு விரும்ப முடியுமா?” என்று புலம்புகிறான். இன்னொருபுறம், அனந்தாவோ செதெரீக்கோடு உறவுகொண்டு பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறாள். அந்த உடல் தன் காதலனுடையது என்று பரிபூரணமாக நம்புகிறாள். அனந்தாவின் நெருக்கம் செதெரீக்கை மேலும் சங்கடத்துக்குள்ளாக்குகிறது.
உடலும் ஆன்மாவும் ஒரே பொருளாக இருப்பதால் எது செதெரீக்கிடம் எஞ்சியிருக்கிறது? உங்கள் உடலில் வேறு ஒரு வரலாறு குடிகொண்டிருக்கும்போது, உங்களுக்கே உரிய கடந்த காலம் மட்டுமல்ல; உங்கள் உணர்வுகளைக்கூட எப்படி நம்ப முடியும்?
– த. ராஜன்
நன்றி – இந்து தமிழ் திசை
Reviews
There are no reviews yet.