NANGOOZH
கவிதைகள் பெரும்பாலும் நிரந்தர அர்த்தம் உடையவை அல்ல. அவை காலந்தோறும், நிலந்தோறும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அவரவருக்குத் தக்கவாறு தனித்துவமான நுகர்ச்சியை வழங்கக்கூடியவை. இவற்றைக் கடந்து கவிதைகளுக்குச் சில பொதுவான பண்புகள் உண்டு என்பதும் மறுக்க இயலாது. படைப்பிலக்கிய வகைமைகளில் மற்ற எல்லாவற்றையும்விடக் கவிதைகளின் பங்கே இவ்வுலகில் கணிசமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இயற்கையோடு இணைந்து வாழும் விருப்பமுடைய மனித மனம் ஏராளமான ரகசியங்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. ரகசியங்களில்தான் கடவுளும் படைப்பும் இருக்கின்றன. ரகசியங்களில்தான் காதலும் வன்மமும் இருக்கின்றன. ரகசியங்களை நாம் பகிரங்கப்படுத்திவிட முடியாது. அதற்காக ரகசியங்களை நாம் நீண்ட நாட்கள் ரகசியங்களாகவும் வைத்திருக்க முடியாது. அவற்றை நாம் வெளிப்படுத்தியாக வேண்டும். ரகசியங்கள் வெளிப்படும் பல தளங்களில் ஒன்றை நாம் கவிதைமனம் எனக் கொள்ளலாம். இலங்கை மட்டக்களப்பையைச் சேர்ந்த கவிஞர் மின்ஹாவின் ‘நாங்கூழ்’ கவிதைத் தொகுப்பானது பேரனுபவமாக இருக்கிறது. வார்த்தைகளுக்கு உள்ளிருந்து வெளியேற முடியவில்லை. மௌனம் துரத்துகிறது. புழுதி குடித்த பனைவிசிறி என்பது உருவாக்கும் சித்திரங்களில் அகப்பட்டுக் கிடக்கிறேன். நீண்ட அனுபவமுடையவரைப் போன்ற இவரது எழுத்துமொழியின் பூரணத்துவம் வியக்க வைக்கிறது. இதுதான் இவரின் முதல் கவிதை நூல் என்பது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
கவிதையில் படிமங்களைக் கொண்டு சிந்திக்கிறார் கவிஞர். “கவிதைகளை உருவாக்குவது என்பது படிமங்களை உருவாக்குவது, படிமங்களை அலகுகளாகக் கொண்டு சித்திரம் வரைவது” என்று திறனாய்வாளர் பத்தேப்னியா குறிப்பிடுகிறார். மின்ஹாவின் கவிதைகள் அதற்கு உதாரணம். அவருடைய கவிதைகளை வாசிக்கும் நேரத்தில், கனவுகளிலும் கவிதைகளிலும் ஆசைகள் சுதந்திரமாகச் செயல்படுவதாகத் தோன்றியது. ‘நாங்கூழ்’ மனதின் ரகசிய வெளிகளில் நிகழும் ஒரு சுதந்திரச் செயல்பாடுதான். சூக்குமமான மற்றும் ஸ்தூலமான படிமங்களால் கவிதைவெளி உருவாகியிருக்கிறது. பசுமையின் ஒரு பிடி பச்சையத்தில் வரைந்த வனத்தின் வகிடாகவும், ஓராயிரம் மோனச்சிறு வாதைகளாகவும் ஈர்த்தெடுத்துக்கொள்கின்றன மின்ஹாவின் கவிதைகள்.
நாம் கவிதைகளுக்குள் செல்லவில்லை என்றால் கவிதைகளுக்கு அர்த்தமே கிடையாது. மின்ஹாவினுடைய கவிதைகள் கால தேச வர்த்தமானங்களைக் கடந்து அதீத அர்த்தம் உடையதாக இருக்கின்றன. கவிதைகள் நம்மை ஏமாற்றவில்லை. ‘மொழியின் வழமைப் புள்ளியைப் போன்றதொரு பொருளாய்க் கவிதை தேங்கிவிடுமோ என்கிற ஆதங்கங்கள் மேலோங்கும் காலத்தில் சோர்வைப் போக்குகிறது இந்தக் கவிதை தொகுப்பு’ என்கிற பதிப்பாளர் நீலகண்டனின் வரிகள் மிகவும் நிதர்சனமானவை. கடலும் மீன்களும் பிரதான குறியீடுகளாகக் கோலோச்சும் மின்ஹாவின் கவிதைகளில் கடல்கள் நகர்கின்றன. மீன்கள் பூக்கின்றன. பெரும் சொல்லாடல்கள் புதிய உருவங்களைச் சூடிக்கொள்கின்றன. ஒடுக்கப்பட்ட அறிவின் எழுச்சியாகப் புதிய அவதாரம் எடுத்து காலத்தோடு இழை பின்னிக்கொண்டிருக்கின்றன.
‘கண்ணாடி குவளையில்/ பூத்திருக்கும் மயிர்த்துளைப்பிளவு/ நெறிகட்டிய விரகம்/ நன்னீர் மீன்களை/ உவர்ப்புக்குள் அமிழ்த்தும்/ அரூபமொழி/ குமிழும் சுவாசச் சிமிழ்களில்/ மீச்சிறு சுடர்/ ஜீவனற்ற உடல் தகர்க்கும்/ அநாதிக்குரலின் ஓசை/ வெதும்பிக் கரை புரண்டு/ ஓர் நாள் அடங்கும்.’ மனித வாழ்க்கைச் செயல்பாடுகளில் அகமும் புறமும் இணைவாக இயங்குகின்றன. நம்முடைய கண்களுக்குப் பின்னாலும் காதுகளுக்குப் பின்னாலும் நம்முடைய வாழ்வு இருக்கிறது. இதன் நுட்பங்களில் நம்மிடையே நமக்கான அனேகக் காட்சிகள் நிறைந்துகொள்கின்றன. மின்ஹா இந்தக் காட்சிகளை ஒரு பெண்ணின் சுவாசத்தில் தோன்றும் ரகசியச் சித்திரமாக்கியிருக்கிறார். படிமங்களும் குறியீடுகளும் இந்த வரைதலோடு வலுவாக ஒன்றிசைந்திருக்கின்றன.
காட்சிக்கும் காட்சியற்ற தன்மைக்குமிடையே கவிதைகள் வரைந்துகொள்கிற உலகம், வெறும் தனிமனித அகவயப்படுத்துதல் மட்டுமல்ல; சுரண்டப்படுகிறவர்களின் துயரங்களாக நம் புலனுக்கு வருகின்றன. மின்ஹாவின் கவிதைகள் தனித்த, அதே நேரத்தில் ஒரு திரளின் குரலாக வெளிப்படுகின்றன. தனித்தனியாகப் பல பாடுகளைக் கொண்டிருக்கும் கவிதை நூல்கள் வரிசையில் ‘நாங்கூழ்’ தொகுப்பின் ஒட்டுமொத்த கவிதைகளும் தனித்தனியாகவும் ஒரே புள்ளியில் மையம் கொண்டும் இயங்குவது இதன் பெரும் சிறப்பு.
– மீரான் மைதீன்
நன்றி – இந்து தமிழ் திசை
Reviews
There are no reviews yet.