ஓநாய் குலச்சின்னம்:
ஜியோங் ரோங் எழுதிய Wolf Totem சீன நாவலை “ஓநாய் குலச்சின்னம்” எனும் பெயரில் சி.மோகன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகமெங்கும் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் விற்பனையான 21-ம் நூற்றாண்டின் மகத்தான நூலாக இது கருதப்படுகிறது. இந்நாவல் நம் வாழ்வுக்கான சுடர். ஞான சிருஷ்டி என்று புகழப்படுகிறது. இந்த நாவலை ஒரு கருத்தாகப் புரிந்து கொள்ள, காந்தியின் வரி ஒன்றே போதுமானது. இயற்கையால் ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும், ஆனால் ஒற்றை மனிதனின் பேராசையை கூட அதனால் பூர்த்தி செய்ய முடியாது. இங்கே ஒற்றை மனிதன் என்பதை, ஒற்றைப்பார்வை கருத்தியல் (visone dimensional ideology) என்று கூட இட்டு நிரப்பலாம். வாசகன் தன் வாழ்வை ஏதோ ஒரு புள்ளியில் படைப்புடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தால், அது ஒரு நல்ல இலக்கியம். இந்த நாவல் உங்களை அப்படி உணரச் செய்யும் அளவிற்கு நம்மைச் சுற்றிக் காரணங்கள் நிரம்பி இருக்கின்றன. ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் ஜென்சென்னைப் போல, இயற்கையைப் புரிந்துகொள்ள நினைத்தோ, சீன விவசாயிகளைப் போல புரிந்து கொள்ள மறுத்தோ/முயலாமலோ அதைச் சுரண்டி, அழிக்கும் வேலையையே செய்கிறோம். நம்மிடையே இயற்கையை உணர்ந்த பில்ஜிகள் குறைவு, அதனால் – டெஞ்ஞருக்கு வேலை அதிகமிருப்பதாகவே தோன்றுகிறது.
வினோத் –
மங்கோலிய மேய்ச்சல் நில நாடோடி மக்களின் வாழ்வியலைப் பற்றிய நூல் தான் இந்த ஓநாய் குலச்சின்னம் இது ஒரு சீன மொழிப்பெயர்ப்பு நாவல்.
நமது இந்திய காடுகளில் புலிகளின் எண்ணிக்கையை பொறுத்தே அந்த காடுகளின் வளத்தை தீர்மானிப்பார்கள். ஒரு காட்டில் அதிகமாக புலிகள் இருக்குமானால் அந்தக் காடு வளமையானது என்று கொள்ளலாம்.
அதே போன்று மங்கோலிய மேய்ச்சல் நிலங்களில் ஓநாய் முக்கிய பங்கு வகிக்கிறது. மேய்ச்சல் நிலங்களை பாதுகாப்பது, உணவுச் சங்கிலியை சமநிலையில் வைப்பதில் ஓநாய்களின் பங்கு மிக முக்கியமாக இருந்துள்ளது.
அந்த நாடோடி மக்கள் ஓநாயை ஒரு போர்க் கடவுளாகவும் நினைத்து வணங்கி வந்துள்ளனர்.
மக்கள் உயிர் வாழ்வதை விட மேய்ச்சல் நிலமும் இயற்கையும் உயிர் வாழ வேண்டும் என்பதிலும் அதை பாதுகாப்பதிலும் நாடோடிகள் கவனமாக இருந்தனர். பெரிய உயிர் இல்லாவிட்டால் சிறியது அழிந்துவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை.
ஆனால் வேளாண்மை மக்கள் சிறிய உயிர்களை பாதுகாப்பவர்களாகவும், மக்களே மிகவும் பெறுமதியானவர்கள் என்றும் கருதினர். அதனால் அவர்கள் ஓநாயின் முக்கியத்துவத்தை உணரவில்லை.
மாவோவின் புரட்சிகர நடவடிக்கையால் மேய்ச்சல் நிலங்களில் உள்ள ஓநாய்கள் அழிக்கப்பட்டது, அதன் விளைவு உணவுச் சங்கிலியின் சமநிலை குழைந்து புல்வெளிகள் திரிந்து பாலையாக மாறியது.
இந்த நாவல் மங்கோலிய நாடோடிகளின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நரேஷ் –
மங்கோலிய பேரரசன் செங்கிஸ்கானை பற்றி கேள்விபட்டுருப்பீர்கள்.
ஒரு காலத்தில் ரஷ்யா, சீனா, பாரசீகம் முதற்கொண்டு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளையெல்லாம் கைப்பற்றி தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்தவர். இந்தியாவின் மீதுகூட படையெடுப்பை மேற்கொண்டு எல்லை வரைக்கும் வந்தார். சிந்து நதியினதும், இமயமலையினதும் இயற்கையான அரணை தாண்டி
உள்நுழை முடியாமல் போனதால் தப்பித்ததாக வரலாறு.
அந்த குறையை பின்னர் அவரின் வம்சாவளியில் வந்த துருக்கிய மங்கோலியனான தைமூர் நிவர்த்தி செய்தான். சிந்து நதியில் படகுகளை தொடர்ச்சியாக நிறுத்தி பாலம் போல அமைத்து இலகுவாக பாரதத்தினுள் நுழைந்து டெல்லியின் மீது படையெடுத்து தன் போர் தந்திரங்களால் இலகுவாக வெற்றி அடைந்தான். அதற்கு பிறகு
அவன் நிகழ்த்திய வெறியாட்டத்தில் கிட்டதட்ட மூன்று தொடக்கம் ஐந்து லட்சம் பேர் வரைக்கும் கொடூரமாக வெட்டி சாய்க்கபட்டார்கள்.
செங்கிஸ்கானின் படை வருகிறது
என்றால் காலுடன் மூத்திரம்
போய்விடும் அளவுக்கு அச்சப்பட்டு
போய்விடுவார்களாம் எதிரி நாட்டு
வீரர்கள். அது நியாயமான பயம்தான்.
ஒரு தேசத்தின் மீது செங்கிஸ்கானின் பார்வைபட்டால் பிறகு அவரின் வீரர்களின் கால்படும். அதற்கு பின் நிகழும்
யுத்தத்தில் கொஞ்சங்கூட ஈவிரக்கமற்ற
வெறியாட்டம் நிகழும். ஒப்பீட்டளவில்
சிறிய மங்கோலிய படை சீனா, ரஷ்யா, பாரசீகம் போன்ற பெரிய இராச்சியங்களை வீழ்த்த முடிந்தமைக்கு அவர்களின் போர்திறன் மிகமுக்கிய காரணம்.
ஒரு மங்கோலிய வீரன் எதிரியின் பத்து வீரர்களுக்கு சமனானவன்.
பிறவி போர்வீரன். மங்கோலிய படை தூரத்தில் வரும்போது குதிரைகளின் குலம்படி இடியென ஏற்படுத்தும் அதிர்வுக்கு மத்தியில் அவர்கள் பயங்கர ஒலிகளை எழுப்பி வெறிக்கொண்டு முன்னேறிவரும் போது அவர்களுக்கு முன்பு காற்றில் கலந்துவரும் பிணவாடையில்
எதிரிகளுக்கு மரணவாசல் கண்முன்னே தெரிந்துவிடுமாம். ஆமாம்!
மந்தைகளின் உரிக்கப்பட்ட
அழுகிய தோள்களை தங்களுடன் கொண்டுவருவார்கள். அதிலிருந்து
கிளம்பும் துர்நாற்றம் எதிரிகளுக்கு நரகத்தை கண்முன்னே காட்டிவிடும்.
அந்த கணமே மனதளவில் தோற்று மரணபயம் வந்து விடுமாம். அதற்கு
பிறகு அவர்களால் எப்படி எதிர்த்து
நின்று சண்டை போட முடியும்!?
மங்கோலியர்களின் போர் யுத்திகளை மட்டும் நீண்ட தனி கட்டுரையாக எழுதலாம். மேல நான் குறிப்பிட்டது எல்லாம் மிக சொற்பமே !
மங்கோலியர்களை இத்தனை போராட்ட குணமுடையவர்களாவும் வலிமை மிக்கவர்களாகவும் மாற்றியது ஓநாய்கள்
தான். அவர்களின் யுத்த வெற்றிகளில் துணைநின்ற மங்கோலிய குதிரைகளை
கூட தீரம் மிக்கதாக மாற்றிய பெருமையும் அவற்றையே சாரும்.
மங்கோலிய மேய்ச்சல் நிலத்தில்
பிறக்கும் ஒவ்வொரு குதிரையும்
தப்பிப்பிழைத்து வளரும் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஓநாய்களின் வெறித்தனமான தாக்குதலை எதிர்கொள்ளவேண்டும்.
அந்த போராட்டமே ஓர் சாதாரண
குதிரையை முரட்டுத்தனமான போர்க்குதிரையாக மாற்றுகிறது.
ஓநாய்கள் மங்கோலியர்களின் வாழ்வியலுடன் மிகநெருங்கிய தொடர்புடையது. போராட்ட குணத்தையும், யுத்த நுணுக்கங்களையும்,
தந்திரங்களையும் அவற்றிடம்
இருந்துதான் கற்று கொண்டார்கள்.
ஓநாய் அவர்களின் குலச்சின்னம்.
செங்கிஸ்கானின் வழித்தோன்றல்களாக
வந்த மேய்ச்சல் நிலத்தை சேர்ந்த மங்கோலியர்கள் ஓநாயிடம் இருந்து
தங்கள் மந்தைகளை பாதுகாத்து கொள்ள வாழ்நாள் முழுவதும் அவற்றுடன் யுத்தம் செய்துவந்தார்கள். அதே நேரம் அவற்றை கடவுளுக்கு நிகராக மதித்தார்கள். வாழ்நாளில் ஓநாய்களை கொல்ல நேர்ந்தமைக்காக இறந்தவுடன் தங்கள் உடலை ஓநாய்க்கு உணவாக அர்ப்பணித்து விடுவார்கள். அதன் மூலமே அவர்களின் இறப்பு பூரணமடையும். எரிப்பதோ அல்லது நிலத்தில் புதைப்பதோ அவர்களின் ஆன்மாவை சிதைப்பதாக நம்பினார்கள்.
ஓநாய்களின் மூலமே மேய்ச்சல் நிலம்
மான், எலி, மர்மொட்டுகள் இன்னும் பிற காட்டு தாவரபட்சினிகளிடம் இருந்து பாதுகாக்கபடுகிறது. ஓநாய்கள் அவற்றை உணவாக்கி கொல்வதன் மூலம் அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்து
இயற்கை சமநிலையை பேணுகிறது.
அந்த இயற்கை சூழலில் ஒன்று இன்னொன்றுடன் இணைந்து
மேய்ச்சல் நிலத்தின் நிலைத்திருத்தலை தீர்மானிப்பதன் மூலமாக மங்கோலியர்களின் மரபான வாழ்வுமுறையை தொடர்முடிக்கிறது.
ஒரே நேரத்தில் ஓநாய் அவர்களின் எதிரியாகவும், நண்பனாகவும் இருக்கிறது. இந்த சிக்கலான உறவை இன்னும் இலகுவாக புரிந்துகொள்ள நீங்கள்
இந்த நாவலை வாசிக்க வேண்டும்.
மங்கோலியா சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு இன்றைய திகதியில் இருந்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சீன மாணவர்கள் மாவோவின் சுகந்திர இயக்கத்தின் கட்டளையின்படி மங்கோலிய மேச்சல்நில பழங்குடியினருக்கு
உதவுவதற்கு அனுப்ப படுகிறார்கள்.
அங்கு ஆடு, மாடு, குதிரை மேய்ப்பர்களாக சில வருடங்கள் அந்த மக்களுடன் தங்கி வாழவேண்டும். அந்த கூட்டத்தில் ஓர் இளைஞன் மங்கோலியர்களின் கலாசாரத்தையும் வாழ்வியலை மதித்து, மேய்ச்சல் நிலம் தொடர்பாகவும், அங்கு ஓநாய்களின் முக்கியத்துவம் தொடர்பாகவும். ஓநாய்களுக்கும் மங்கோலியர்களுக்கும் இடையேயான பிணைப்பையும் அறிந்து, பிறப்பில்
ஹென் இன சீனனாக இருந்தாலும்
மனதில் ஓர் பூர்விக நாடோடி மேய்ச்சல்
நில மங்கோலியனாகவே மாறிப் போகிறான். சீன அரசின் தான்தோன்றிதனமான நடவடிக்கைகளால் அந்த பசும் புல்வெளி எப்படி பாழ்பட்டு பாலையாகி போனது என்ற கதையை வரலாற்று புனைவு நாவலாக எழுதுகிறான். பின்பு அது உலக புகழ் பெறுகிறது.
கனத்த மனதுடன் புத்தகத்தை
வாசித்து முடித்தேன். நீங்கள்
பயம் கொள்ளவேண்டாம்.
சோக கதையில்லை, சுவாரசியமான
நாவல்தான். கடைசிக்கும் முதல்
அத்தியாயம் தான் என் கவலைக்கு
காரணம். விலங்கு பிரியன் என்பதால்
அந்த இடத்தை இலகுவாக கடந்துவர முடியவில்லை. இந்த உயிர்ப்பான
படைப்பை ஒரு தடவையெனும் வாசித்து விடுங்கள்.
நூல்: #ஓநாய்_குலச்சின்னம்
ஆசிரியர்: ஜியோங் ரோங்
(சீன நாவல்)
தமிழில்: சி.மோகன்