‘அமெரிக்க மக்கள் வரலாறு’ நாம் ஏன் வாசிக்க வேண்டும்?
நவீன செவ்வியல் படைப்புகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிற அமெரிக்க மக்கள் வரலாறு என்ற நூலை ஆங்கிலத்தில் வாசித்து, தமிழுக்கு கொண்டுவரவேண்டும் என்கிற பெரும் வேட்கை (passion) மேலோங்கி அந்த முயற்சியில் ஈடுபட்டோம். இந்த தகவலை சிலத் தோழர்களிடம் பகிர்ந்துகொள்ளும்போது “அமெரிக்க வரலாறை நாம் ஏன் வாசிக்க வேண்டும்?” என்கிற கேள்வியை உடனடியாக எதிர்கொண்டோம். சமூக மாற்றத்தை, சோசலிசத்தை லட்சியமாக ஏற்று செயல்படுகிற செயல்பாட்டாளர்கள், தீவிர முற்போக்கு வாசகர்கள் என்று நான் அறிந்த பலரிடமிருந்தும் இந்த கேள்வியை எதிர்கொண்டோம். கேள்வியின் ‘நியாயம்’ ‘நியாயமின்மை’ ஒருபுறமிருக்கட்டும். இந்த கேள்வி ஏன் எழுகிறது என்பதை லேசாக கடந்து செல்ல முடியுமா? அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அமெரிக்க மக்களையும் வேறுபடுத்தி பார்க்கத் தவறியதிலிருந்தே இந்தக் கேள்வி எழுவதாகத் தோன்றுகிறது.
அடுக்கடுக்கான சோகம்…
அமெரிக்க மக்கள் வரலாறு… அடுக்கடுக்கான சோகம் நிறைந்ததாக… அப்பலேசியன் மலைத்தொடர்கள், இமயமலைத் தொடர்களைவிட அதிகமான சோகம் நிறைந்ததாக இருக்கிறது. கொலம்பசும் அவரைத் தொடர்ந்து ஐரோப்பிய கண்டுபிடிப்பாளர்களான சாகச பயணிகளும் மனித வசிப்பற்ற வெறும் வனாந்திரத்தில் போய் இறங்கவில்லை. அங்கே பல லட்சக்கணக்கான மக்கள் தொகையைக் கொண்ட பழங்குடி இனங்கள் வசித்து வந்தன… அரவாக்குகள், ஆஸ்டெக்குகள், செரோக்கிகள், பெக்கோக்கள், நாராகான்செட்கள், வாம்பநோகுகள், மஹாக்ஸ்கள், ஓனைடஸ்கள், ஓனன்டக்ஸ்கள், காயுஸ்கள், கிரீக்குகள், ஷானிஸ்கள், செமினோல்கள், சொக்டாவ்கள், சிக்காஸாக்கள், இரிக்வை கூட்டமைப்பினர் என பல இன மக்கள் லட்சக்கணக்கில் வசித்து வந்தனர். ஐரோப்பிய ஆங்கிலோ சாக்சன் மக்கள் காட்டுமிராண்டிகளாக, கடல் கொள்ளையர்களாக இருந்த காலத்திலேயே இந்த பழங்குடி இன பண்பாடுகள் உயர்ந்தவையாக இருந்தன. பல நாகரிகங்களை படைத்திருந்தன. படுகொலைகள் மட்டுமின்றி, பால்வினை நோய்களைப் பரப்பி, பெரியம்மை கிருமிகள் பூசிய போர்வைகளை விநியோகித்து இந்த பழங்குடிகள் அழித்தொழிக்கப்பட்டனர். பல லட்சம் பேரை கொண்ட இனங்கள் சில நூறுபேர் அளவிற்கு அழிக்கப்பட்டன.
அமெரிக்கக் கொடுங்கனவு…
உயர் நடுத்தர வர்க்க இளைஞர்களை அமெரிக்க வண்ணக் கனவு இன்றும் வேட்டையாடுகிறது. நுழைவுத் தேர்வில் முதல் வரிசையில் தேர்ச்சிப் பெற்று, ஐ.ஐ.டி.யில் சிறப்பாக பட்டம் பெற்று, அமெரிக்க விசா கிடைத்து, குபேர பூமியின் சுகபோகங்களைப் பறந்துப் பறந்து அனுபவப்பதாக ஒரு வண்ணக் கனவு. இந்தக் கனவு கம்யூனிஸ்ட் குடும்பங்களையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் கப்பல் கப்பல்களாக பிடித்துச் சென்று, விலங்கிடப்பட்டு, நிர்வாணமாக சந்தைகளில் நிறுத்தி விற்கப்பட்ட ஆப்பிரிக்க கறுப்பின அடிமைகளுக்கு அது கொடுங்கனவு. வேர்களை வெட்டியெடுத்த கொடுங்கனவு. சாட்டையடிகள், வேட்டை நாய்களை ஏவி சதை பியித்தெடுத்தல், உறுப்புகள் துண்டித்தல், உறவுகளை பிரித்து விற்பணை என ஒவ்வொரு வினாடியும் வேதனையும் அவமானமும் நிறைந்த கொடுங்கனவு. கப்பல் கப்பல்களாக கொண்டு வந்து இறக்கப்பட்ட ஐரோப்பிய
வெள்ளையின ஒப்பந்த பணியாளர்களுக்கும் அது கொடுங்கனவே. பூர்வீகங்களிலிருந்து பிடுங்கி நடப்பட்ட கொடுங்கனவு. அடிமை உழைப்பு, ஒப்பந்த பணியாளர் உழைப்பைத் தொடர்ந்து இஸ்பானியர்கள், சீனர்கள், இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய மக்களின் கடும் உழைப்புச் சுரண்டலில்தான் அமெரிக்க செல்வம் உயர்ந்து நிற்கிறது. பலருக்கு அமெரிக்கா இன்றும் கொடுங்கனவாகவே நீடிக்கிறது.
அமெரிக்கத் தொழிலாளிவர்க்கம்…
உலகின் வேறெந்த நாட்டைவிட திரட்டப்பட்டதாக, போர்க்குணமிக்கதாக அமெரிக்க தொழிலாளிவர்க்கம் இருந்து வந்தது. நைட்ஸ் ஆஃப் லேபர், அமெரிக்கத் தொழிற்சங்க சம்மேளனம், ரயில்பாதை பிரதர்வுட், சர்வதேச மெக்கானிக்குகள் சங்கம், யுனைட்டெட் மைன் ஒர்க்கர்ஸ் தொழிற்சங்கம், இன்டர்ஸ்டிரியல் ஒர்க்கர்ஸ் ஆஃப் வோர்ல்ட், சர்வதேச ஆயத்த ஆடை பெண் தொழிலாளர் சங்கம், காங்கிரஸ் ஆஃப் இன்டஸ்டிரியல் ஆர்கனைசேஷன் என எண்ணற்ற தொழிற்சங்க அமைப்புகள் துறைவாரியாகவும் தேசிய அளவிலும் வளர்ந்தன. இந்த தொழிற்சங்க அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கத் தொழிற்சங்கங்களின் திரட்டும் திறன் மற்றும் போர்க் குணத்தைக் கண்டு 1872 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த முதலாம் அகிலத்தின் ஹேக் மாநாட்டில் அகிலத்தின் தலைமையகத்தை அமெரிக்காவின் நியூ யார்க் நகருக்கு மாற்றும் தீர்மானத்தை ஏங்கெல்ஸ் முன் மொழிந்தார். முதலாம் அகிலத்தின் முடிவுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். அமெரிக்க தொழிற்சங்க த¬லைமையிடம் பொருளாதார வாதம் மேலோங்கியது. தொழிற்சங்க வியாபாரம் மேலோங்கியது. அது தொழிற்சங்கத் தலைவர்களை பிஸினஸ் ஏஜெண்டுகள் என்று அழைக்கும் அளவிற்கு சென்றது. தொழிற்சங்கத் தலைவர்கள் ‘லாபியிஸ்ட்’களாக மாறினர். இரு கட்சி ஆட்சி முறையில் ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்கு சேர்ப்பவர்களாக மாறினர். தொழிலாளிவர்க்கத்தின் ஒரு பகுதியை சலுகைப் பெற்ற வர்க்கமாக மாற்றி பெரும்பகுதியை முறைசாரா தொழிலாளர்களாக வைத்து அமெரிக்க ஆளும் வர்க்கம் சமாளித்து வந்தது. இந்தியா உள்ளிட்டு உலகின் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கு இதுவே முன் மாதிரியானது.
அமெரிக்க சோசலிச இலக்கியம்…
சோவியத் சோசலிச இலக்கியங்கள், அரசியல் – தத்துவ படைப்புகள் பரவலாக தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாகி உள்ளன. சோவியத் சோசலிச இலக்கியங்களுக்கு இணையாகவே, ஒப்பீட்டளவில் சற்று அதிகமாகவே, சமகாலத்திற்கு முந்தையவையாகவே பல அமெரிக்க சோசலிச இலக்கியங்கள், அரசியல் – தத்துவ படைப்புகள் இருந்து வந்துள்ளன. இந்த நூலில் ஆங்காங்கு குறிப்பிட்டப்பட்டவை, இறுதியில் நூல் பட்டியலில் இடம் பெற்றவை பெரும்பகுதி அந்த வகைப் படைப்புகளே. இவற்றில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், வேறெந்த நாட்டில் இல்லாத அளவிற்கு தொழிலாளி வர்க்க சார்புடைய, மக்கள் இயக்கச் சார்புடைய ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்துள்ளன. இவை அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்து வந்தன. ஆங்கில அறிவை அதிகமாகவே பெற்றிருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் சோசலிஸ்ட் அறிஞர்களின் கவனத்தை இந்த இலக்கியப் படைப்புகள் பெறவில்லை. அதற்கான காரணம் ஆராயப்பட வேண்டும்.
நழுவி தப்பும் அமெரிக்க ஆளும் வர்க்கம்…
உலகிற்கு ஒரு மாற்று அமைப்புமுறையாக முன் நிறுத்தப்பட்ட சோவியத் யூனியனும் பல சோசலிச நாடுகளும் பின்னடைவை சந்தித்து இப்போது சோசலிசத்தை கைவிட்டன. ஆனால் அமெரிக்க முதலாளித்துவம் நிலைத்து நீடிக்கிறது. கடுமையான பல நெருக்கடிகளை எதிர்கொண்டு மீண்டெழுந்து ஏகாதிபத்தியமாக நீடிக்கிறது. அமெரிக்க மக்கள் தொகையில் பெரும்பகுதியினரான வெள்ளையர்கள் துப்பாக்கிகளை வைத்திருந்ததுதான் பிரிட்டனுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம். தொடர்ந்து இன்று வரை அமெரிக்க மக்கள் தொகையில் கணிசமானவர்கள் ஆயுதங்களை வைத்திருக்கின்றனர். பல அடிமை கிளர்ச்சிகள், விவசாய கிளர்ச்சிகள், தொழிலாளர் போராட்டங்கள் ஆயுதப் போராட்ட வடிவம் பெற்றிருந்தன. ஆனாலும் அமெரிக்க ஆளும் வர்க்கம் தப்பி நழுவியது. இரண்டு உலக யுத்தங்களிலிருந்து சேதாரமின்றி தப்பி நழுவியது மட்டுமின்றி உலக ஆதிக்கச் சக்தியாகவும் உருவெடுத்தது. எதிர்க்கொண்ட ஒவ்வவொரு நெருக்கடியிலிருந்தும் தப்பி நழுவி வருகிறது. அமெரிக்க ஆளும்வர்க்கத்தின் இந்த தப்பி நழுவும் உத்திகளை பல நாட்டு முதலாளித்துவ – பிரபுத்துவ ஆளும் வர்க்கங்கள் அவரவர்கள் நிலைமைகளுக்கேற்ப பின் பற்றி வருகின்றன. உழைக்கும் மக்கள் இயக்கங்கள் இந்த ஆளும் வர்க்க உத்திகளை ஆராய்ந்து புரிந்து, அதற்கு தக்க வகையில் தமது போராட்ட உத்திகளை வடிவமைக்காமல் முன்னேற்றம் சாத்தியமில்லை. அந்த வகையில் ‘அமெரிக்க மக்கள் வரலாறு’ பயன்படும் எனக் கருதுகிறோம்.
சோசலிச சவால்…
ஜனநாயகத்திற்கு ஆபத்தான ‘கம்யூனிச சர்வாதிகாரம்’ என ஒரு கற்பனை எதிரியை முன் நிறுத்தி, ‘மெகார்த்தியிச’ அடக்குமுறை மற்றும் ‘பனிப்போர்’ மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் ‘சோசலிச சவாலை’ எதிர்க்கொண்டது. வேவுபார்த்தல் சட்டம் போன்ற பல ஆள்தூக்கி சட்டங்களை இயற்றியது. தலைமைகளை விலைப்பேசி, தொழிலாளிவர்க்க இயக்கங்களை சீர்குலைத்தது. அறிஞர்களை விலைக்குவாங்கி கம்யூனிச, சோசலிச தத்துவங்களை சீர்குலைக்கும் கருத்து உற்பத்தி பணியை திறம்பட செய்தது. தகவல் தொடர்பு ஊடகங்களை முதலாளித்துவ கார்ப்பரேட் ஏகபோக நிறுவனங்களாக்கி கம்யூனிச எதிர்ப்பைக் கட்டமைத்தது. கேப்டன் அமெரிக்கா போன்ற பல கதாபாத்திரங்களை உருவாக்கியது. ஜனநாயகம், தேச ஒற்றுமை, தேச நலன், தேச பக்தி என்கிற உணர்ச்சிகளை தூண்டும் வாய்சவடால்களுக்கு ‘கம்யூனிச அரக்கனை’ முன் நிறுத்தியது. இதற்கு ஏற்ற வகையில் அந்தந்த காலத்தில் நாட்டுக்கு வெளியே ஒரு எதிரியை பராமரித்து வந்தது. அந்த எதிரி எப்போதுமே கம்யூனிசத்துடன் தொடர்புப் படுத்தப்பட்டவனாகவே இருந்து வருகிறான்.
பயன்தந்த உத்திகள்…
மக்கள் தொகையில் சிறுபகுதியை சலுகைப்பெற்ற வர்க்கமாக மாற்றியது. தொழிலாளர்களில் ஒரு பகுதி, தொழில்வல்லுநர்கள், வியாபாரிகள், அலுவலக ஊழியர்கள், ஆசிரியர்கள், நிலவுடைமையாளர்கள், சிறு உற்பத்தியாளர்கள், சேவைத்துறையினர் என ஒரு நடுத்தரவர்க்கம் வளர்த்தெடுக்கப்பட்டது. இந்த நடுத்தரவர்க்கம் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலில் ஒரு அடிதாங்கியாக (buffer) நிறுத்தப்பட்டது. ஆளும் வர்க்கத்திற்கு கருத்தாதரவு திரட்டும் வகையிலும் இந்த வர்க்கம் செயல்பட்டு வருகிறது. இந்தியர்களுக்கு எதிராக வெள்ளை குடியேற்றக்காரர்கள். கறுப்பின அடிமைகளுக்கு எதிராக வெள்ளை ஒப்பந்த பணியாளர்கள். அமெரிக்காவில் பிறந்தவர்களுக்கு எதிராக புலம் பெயர்ந்தவர்கள். இஸ்பானியர்கள், சீனர்கள், இந்தியர்கள் என மக்கள் பிரிவுகளை ஒருவருக்கு எதிராக ஒருவரை மோதவிட்டு கோபங்களை திசைதிருப்பும் உத்திகள் தற்காலிகமாக பயன்தந்து வருகின்றன. ஒரே ஆளும் வர்க்க நலன்களை பிரதிபலிக்கும் இரு அரசியல் கட்சிகள், அவற்றுக்கிடையே ஆட்சி மாற்றங்கள் என ஒரு அரசியல் முறையை வளர்த்தெடுத்ததன் மூலம் மக்கள் அதிருப்திகளை வாக்கு பெட்டிகளில் நிரப்பும் உத்தி பயன் தந்தது. வியட்நாம் யுத்தத்தில் தோல்வி, வாட்டர்கேட் ஊழல் இது போன்ற நெருக்கடிகளிலிருந்து மீள சிலத் தனிநபர்களை பொறுப்பாக்கும் உத்தி பயன்தந்தது. ஆப்பிள் பழங்களை கொண்ட பெட்டியில் சில ஆப்பிள்கள் கெட்டு விட்டால் அவற்றை மட்டும் வெளியில் வீச வேண்டும். பெட்டியை வீசக்கூடாது என்கிற நடைமுறையை அமெரிக்க ஆளும்வர்க்கம் திறமையாகக் கையாண்டு வருகிறது.
பெட்டியை பாதுகாத்தல்…
பெட்டியை (அரசமைப்புமுறையை) பாதுகாக்க வேண்டும். சோசலிச அமைப்பின் தோல்விக்கான காரணங்களை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய முதலாளித்துவம் நீடித்திருப்பதிலும் தேட முடியுமா? இதன் பொருள் சோசலிசத்தை விட முதலாளித்துவம் சிறந்தது என்பதல்ல. ஆனால் சோசலிச அமைப்பு
முறையிலிருந்து சேமநல அரசு திட்டங்களின் பகுதியாக, ஒரு பகுதி மக்களில் சிலருக்கும் உதவும் வகையில் பல திட்டங்களை அமெரிக்க அமைப்புமுறை உள்வாங்கியது. நியாயமான வேலைவாய்ப்பு நடைமுறை குழு, தேசிய தொழிலாளர் உறவு வாரியம், விவசாய ஒத்ததுழைப்பு நிர்வாகம், பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம், சுற்று சூழல் பாதுகாப்பு முகமை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சட்டம், சார்ந்திருக்கும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கான உதவி திட்டம் போன்ற சிலவற்றை அவ்வாறு உள்வாங்கப்பட்டவை எனக் கூறலாம். அமெரிக்க மற்றும் மேற்கத்திய முறையில் சோசலிச அமைப்புமுறை உள்வாங்கத் தக்கவை ஏதாவது இருந்தனவா என்பது ஆராய வேண்டிய விஷயம். ஆனால் பெட்டியை பாதுகாத்தல் உத்தியையாவது கட்டாயம் உள்வாங்கி இருக்க வேண்டும்.
நிரந்தர எதிர்ப்பு பண்பாடு…
அமெரிக்க மக்கள் வரலாறு… முழுவதும் உழைக்கும் மக்களின் போராட்ட வரலாறு… பழங்குடி இந்தியர் போர்கள், அடிமைக் கிளர்ச்சிகள், குத்தகை விவசாயிகள் கிளர்ச்சிகள், தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டங்கள், பெண்ணுரிமை கிளர்ச்சிகள், நிறவெறி எதிர்ப்பு கிளர்ச்சிகள், சிறைச்சாலை கிளர்ச்சிகள், குடிமை உரிமைப் போராட்டங்கள், அமைதி இயக்கப் போராட்டங்கள், வியட்நாம் உள்ளிட்ட யுத்த எதிர்ப்புக் கிளர்ச்சிகள், வால்ஸ்டீரீட் கைப்பற்றுதல், கொரோனா பீதியையும் மீறி பல லட்சம் பேர் பங்கேற்ற ‘கறுப்பு உயிர்களும் பொருள்பட வேண்டும்’ (Black Lives Matter) போராட்டம் உள்ளிட்டு முழுவதும் உழைக்கும் மக்களின் போராட்ட வரலாறே. மக்கள் கிளர்ச்சிகளை மட்டுப்படுத்த அமெரிக்க ஆளும் வர்க்கம் பல தந்திரங்களைக் கையாண்டு வந்த போதிலும் அமெரிக்க வரலாறு நெடுகிலும் ஒரு ‘நிரந்தர எதிர்ப்பு பண்பாடு’ இருந்து வருகிறது. அது அவ்வப்போது கிளர்ச்சிகளாக வெடித்துக்கொண்டே இருக்கிறது. இந்த ‘நிரந்தர எதிர்ப்புப் பண்பாடு’ அமெரிக்காவும் ஒரு நாள் மாறும் என்னும் நம்பிக்கையை உயிருடன் வைக்கிறது.
இந்த வரலாற்று நூல்…
‘அமெரிக்க மக்கள் வரலாறு’ பள்ளி – கல்லூரி பாடபுத்தகங்களில் காணும் வழக்கமான வரலாறு அல்ல. கொலைக்காரர்களை, கொள்ளையர்களை, ஆக்கிரமிப்பாளர்களை கொலம்பஸ்களை கதாநாயகர்களாக போற்றி கொண்டாடும் வரலாற்று நூல் அல்ல. இந்த நூல் மக்கள் இயக்கங்களை போற்றி பதிவு செய்கிறது. மரபான வரலாறுகளில் பதியப்படாத பல எதிர்ப்பியக்கங்களைத் தேடித் தேடி பதிவு செய்கிறது. இந்த வரலாற்று பதிவுகள் பெரும் வெற்றியாளர்களின் கோணத்திலிருந்து அல்ல… தோல்வியடைந்த தருணங்களின் உணர்வுகளை பதிவு செய்கிறது. பதியப்படாமல் விடுபட்ட களப்போராளிகளின் கூற்றுகளை, சாதாரண மக்களின் கூற்றுகளை பதிவு செய்கிறது. மக்கள் இயக்கங்கள் சார்ந்த உண்மைகளை பதிவு செய்கிறது. ஆகவே இந்த நூல் வித்தியாசமான வாசிப்பு சுவையை கொண்டிருக்கிறது. அதே வேளையில் புறக்கணிக்க முடியாத சான்றாதாரங்களை கொண்டிருக்கிறது. இந்த நூலை தமிழுக்கு கொண்டுவருவதில் சிந்தன் புக்ஸ் பெருமைகொள்கிறது.
அமெரிக்க மக்கள் வரலாறு
Publisher: சிந்தன் புக்ஸ் Author: ஹாவாட் ஜின்
₹900.00 Original price was: ₹900.00.₹820.00Current price is: ₹820.00.
America Makkal Varalaru
Delivery: Items will be delivered within 2-7 days
Description
Reviews (0)
Be the first to review “அமெரிக்க மக்கள் வரலாறு” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அரசியல் / Political
Rated 5.00 out of 5
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Reviews
There are no reviews yet.