எரியும் பனிக்காடு:
உழைக்கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட ஓர் அத்தியாயத்தைப் பற்றிப் பேசும் ‘ரெட் டீ’ ஆங்கிலத்தில் எழுதப்பட்டு முப்பத்து எட்டு ஆண்டுகள் கழித்து முதல்முதலாக ‘எரியும் பனிக்காடாக’த் தமிழுக்கு வருகிறது.
இன்றைய எழில்மிகுந்த மலைநகரங்களையும், அன்னியச் செலாவணியை அள்ளித்தரும் தேயிலைத் தோட்டங்களையும் கட்டியமைக்கக் கூட்டங் கூட்டமாகப் பலிகொடுக்கப்பட்ட, அந்தக் கண்கவரும் பசிய சரிவுகளில் புதையுண்டு போன ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களின் கதைதான் ‘எரியும் பனிக்காடு.’
தமிழ் இலக்கியம் மிக அரிதாகவே தீண்டிய அந்த இருண்ட, இரத்தம் தோய்ந்த வரலாற்றை, அந்த மக்களின் கற்பனைக்கெட்டாத சோகங்களை, அவல வாழ்வை நம் கண்முன் நிறுத்துகிறது ‘எரியும் பனிக்காடு’.பிரிட்டிஷ் அரசும் அந்நாட்டுத் தொழில் நிறுவனங்களும் வேறு வேறு அல்ல என்றிருந்த காலத்தில் அவை ஒன்றிணைந்து அரங்கேற்றிய கொடுமைகள்தான் இந்நவீனமாக உருப்பெற்றன.
இன்று தொழிலாளர்களின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்பட்டு கேம்ப் கூலி முறை போன்ற நவீன கொத்தடிமை முறைகள் பல்வேறு அலங்காரமான பெயர்களில் தொழில் துறையின் மையத்திற்கு வந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் இப்போக்கு நிறுத்தப்படாவிட்டால் அது எதில் சென்று முடியும் என்பதற்கான எச்சரிக்கையே இந்நூல்.
1925ஆம் ஆண்டு, ஒரு டிசம்பர் இரவு…
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமம் மயிலோடை. கிராமம் முழுவதிலும் சேர்த்து சுமார் முப்பது வீடுகளே இருந்தன. ஓடு போடப்பட்ட ஒரேயொரு செங்கல் வீட்டைத் தவிர மற்றவை அனைத்துமே பனையோலையால் வேயப்பட்ட, ஒற்றை அறை களைக் கொண்ட குடிசைகள்தான். சுவர்கள் மண்ணால் கட்டப்பட்டவை. சில குடிசைகளில்தான் மலிவான மரங்களாலான கதவுகள் காணப்பட்டன. மற்றவற்றில் மூங்கில் தட்டிகளையும், பனை யோலைகளையும் கொண்டு கைகளால் செய்யப்பட்ட படல்களே கதவுகளாகப் பயன்பட்டு வந்தன. மக்கள் அத்தனை பேரும் தாழ்த்தப் பட்டவர்கள். பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்களின் நிலங்களில் கூலி வேலை செய்தே தங்கள் வயிற்றுப்பாட்டைக் கவனித்து வந்தார் கள்.இந்தக் குடிசைகளில் ஒன்றில் ஒரு கிழிந்த பாயில் கருப்பன் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தான். இரவின் நிசப்தத்தினூடே அவ்வப்போது யாரோ உலுக்கி விட்டது போல அவனுடல் தூக்கித் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது. நெடுநேரத்துக்கு முன்பே விழிகளிலிருந்து உறக்கம் விடைபெற்றுச் சென்றிருந்தது. இரவெல்லாம் ஊமை எரிச்சலாக இருந்த பசி அதிகாலை நேரத்தில் புதுவேகம் பெற்று குடல்களைப் பிடுங்கியெடுக்க மனது மட்டும் குடும்பத்தின் அவசரத் தேவைகளுக்காக இரண்டு மூன்று ரூபாய் புரட்டுவதற்கான திட்டங்களைப் பரபரப்புடன் வகுத்துக் கொண்டிருந்தது.
துணிந்தவனையே அதிர்ஷ்டம் தேடி வரும்
– அனீய்ட் – விர்ஜில்
Reviews
There are no reviews yet.