கானகன்
Publisher:
எழுத்து பிரசுரம் Author:
லஷ்மி சரவணக்குமார்
₹300.00 Original price was: ₹300.00.₹280.00Current price is: ₹280.00.
புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி.
– எஸ்.வி.ராஜதுரை
Delivery: Items will be delivered within 2-7 days
Sumi Hari –
மனிதர்களால் மட்டுமே இவ்வளவு அகம்பாவத்தாலும்,சுயநலத்தாலும் காட்டை அழித்து உயிரினங்களைக் கொன்று தீர்க்க முடியும்.இதில் மிருகங்கள் நிச்சயம் கருணையுடயவைதான்.
ஒரு பனிக்காலத்தில் தொடங்கும் கதை நம்மையும் காட்டினுள்ளேயே வாழச் செய்கிறது.காடுதான் வாழ்க்கை என்று வாழும் பளியக்குடி மக்கள்.பளிச்சியை தெய்வமாக வணங்கும் அவர்களுக்கு ,தேவைக்கு அதிகமாக ஒன்றையும் காட்டிலிருந்து பெறக்கூடாது என்பதே கொள்கை.ஆனால் சுயநலத்தாலும் பணத்தாசையிலும் பெருமுதலாளிகள் செய்வதோ மரத்தை வெட்டுவதும் ,மிருகங்களை வேட்டையாடிக் கொல்வதும்தான்.வாசிக்கும்போதே தாங்க முடியாது நமக்கு.
தங்கப்பன் ஒரு புலியை வேட்டையாடுவதில் துவங்குகிறது நாவல்.குட்டிகளின் தாய்புலிதான் வேட்டையாடப்பட்டது என்றறியும் போது கண்நிறைந்துவிடும்.அவன் கதையின் நாயகன் என்ற பிம்பத்தையும் உடைத்துவிடும்.அவனின் மூன்றாவது மனைவி செல்லாயி,பளிச்சி குடியைச் சேர்ந்தவள்.அவளுக்கும் பளியன் சடையனுக்கும் பிறந்த மகன் வாசியே கதாநாயகனாய் மனதில் நிற்பான்.அவனின் இரத்ததில் ஊறிய காட்டைக் காக்கும் குணம் நிறைய தருணங்களில் வெளிப்படும்போது ,நெகிழ்ச்சியுடன்அவன்மேல் அன்பைக் கூட்டும்.அவன் தந்தை சடையனோ தான் இறந்தாலும் தன் உடலை மிருகங்கள் மட்டுமே தின்ன வேண்டும் ,காட்டைச் சாராத எதற்கும் தன் உடல் கூட பயனளிக்கக் கூடாது என்ற மனதுடையவன்.காட்டின் மேல் பெருங்காதல் கொண்டவன்.
காட்டிலேயே வாழும் பளியக்குடி மக்களை அதிகார போதையிலும் முதலாளிகளின் கட்டளையாலும் கொடுமைப்படுத்துகிற அதிகாரிகள்.முதலாளிகள் செய்யும் தவறுகளுக்கு மக்களை பலியாக்குகிறார்கள் எப்போதுமே.ஒருகட்டத்திற்கு மேல் தாங்கமுடியாமல் கோபத்தில் ,அதிகாரிகளைத் தாக்கி மன்னிப்பு கேட்கச் செய்வது சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப்போலத்தான்.
கதையில் புலி வேட்டையும், யானை வேட்டையும் சொல்லப்படுகிற விதம் அருமை.ஒரு ஜமீன் வேட்டைக்கு வரும்போது நிறைமாத கர்பிணியான மானைக் கொல்கிறார்.அந்த குற்றவுணர்ச்சி தாங்காமல் காட்டிற்குள் காணாமலே போய்விடுகிறார்.அந்த மான்குட்டியை வாசி வளர்ப்பது அவனின் இரக்கத்தையும் காட்டின் மேல் கொண்ட அன்பையும் காட்டும்.அந்த மான்குட்டி வளரும்போது வாசியின் மேலான கோபத்தில் அதனை அடித்துக்கொல்லும் தங்கப்பனின் மேல் சொல்லவே முடியாத வெறுப்பும் கோபமும் வந்துவிடும்.
பளியக்குடியை யானைகளை ஏவி அழிக்க முற்படும்போது ஒற்றை யானையைக் கொண்டு மற்ற யானைகளை விரட்டி யானை மீதேறிச் செல்லும் சடையனை, வாசி வணங்கி நிற்பது நெகிழ்வும், நிம்மதியும்.
பழி வாங்குவது மனிதனுக்கு மட்டும் உள்ள உணர்வல்ல என்பது,புலி தங்கப்பனை கொல்லும்போது நம்மால் புரிந்துகொள்ள முடியும்.புலியை தங்கப்பன் கொல்வதில் துவங்கிய நாவல் தங்கப்பனை புலி கொல்வதில் முடிகிறது.அந்தப் புலிக்கு உதவுபவன் வாசி.வாசித்து முடித்த பின்னும் காட்டிலுருந்து வெளியேற முடியாது.அருமையான வாசிப்பனுபவம்.
இந்துமதி கணேஷ் –
அந்த புற்களில் இன்னும் பன்னீர் துளி மிச்சமிருந்தது நான் கால் வைத்ததும் இரவின் குளிர்ச்சி என் பாதவழி பயணித்து என் உடலை வியாபித்தது. இடையன் குருவிகளும் மைனாக்களும் கூவியபடியே இருந்தது. இரவெல்லாம் பொழிந்த மழை மிக மென் தூரலாய் மாறியிருந்தது. சூரியன் இருள் கலைந்த நொடி வயிற்றில் ஒரு வினோத பட்டாம்பூச்சி படபடப்புடன் யானை மேலேறி உயர்ந்த விருட்சங்களைஇ கடந்து மேகங்களுடன் பயணித்துக்கொண்டிருந்தேன். மழை விழுந்த சுனைகளில் தரையிறங்கி கைநிறைய மழையள்ளி பருகினேன்.சருகு மான்களை துரத்தி ஓடினேன். பகலில் பளியர்களின் குடிலில் கதைபேசியபடியே சுடச்சுட கம்பங்கூழ் குடித்தேன். பௌர்ணமி இரவில் குகை போடவுகளில் சித்திரங்களை ரசித்தபடி உறங்கிபோனேன். இப்படியே வாழ்நாளை அகமலையிலேயே களிக்க நினைத்த என்னை மூன்றே நாளில் என் வீட்டில் விட்டுவிட்டு போய் விட்டார் லட்சுமி சரவணகுமார். இன்னும் சில பக்கங்கள் நீண்டிருக்கலாம் இந்த புத்தகம். மரங்களின் பச்சையும் காட்டாற்றின் சலசலப்பும் இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது என் காதுகளில்.
ஒருபுறம் மரங்களை வெட்டி சுனைகளை மூடி கஞ்சா பயிரிட்டு காட்டை அழிக்கும் பணமுதலைகளிடமும் இன்னொருபுறம் வன அதிகாரிகளின் மிரட்டல்களாலும் துண்டாடப்பட்டு வனத்தை காக்க போராடும் பளியர்களின் வாழ்வியல் அவலங்களை எடுத்து சொல்லும் நூலாகவே இருக்கிறது கானகன். எவ்வளவு மாற்றங்களுக்கு உட்படுத்தினாலும் வனம் அதன் ஆதிஅழகை இழக்காமல் சிறிது பசுமையை மிச்சம் வைத்திருக்கிறது. தங்கப்பன் போன்ற வேட்டைக்காரர்கள் கூட மனிதத்துடனே நடக்கின்றனர். என்னதான் கொம்பனையும் புலியையும் வேட்டையாடினாலும் அவன் மனதில் கூட தாய் புலியை கொன்ற குற்றவுணர்வு வந்துபோகிறது. தங்கப்பனின் மூன்றாம் மனைவி செல்லாயியின் மகன் வாசி பளிகர் இனத்தின் மிச்சமாய் இருக்கிறான். அவனுக்குள் அவன் தந்தை சடையனின் அம்சங்களே நிறைந்திருக்கின்றன , அவனுக்கு வேட்டையில் ஆர்வமே இல்லை தங்கப்பனுக்கும் வாசிக்குமான போராட்டம் வேட்டைக்காரனுக்கும் காட்டாளனுக்குமானதாய் இருக்கிறது.
இந்த கதையில் என்னை கவர்ந்த சில விஷயங்கள் உண்டு. ஒரு புலி மனிதர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் போது அதை கொல்லவே நாம் நினைப்போம் எனினும் கொன்ற பிறகு அது ஒரு தாய் புலி அதற்கு இன்னும் வளராத குட்டிகள் உண்டென்று தெரிந்தால் எவ்வளவு குற்றஉணர்விற்கு ஆளாவோம் அந்த கோணத்தில் நம்மை சிந்திக்க தூண்டுகிறது கானகன். வேட்டைக்காக காட்டுக்குள் வரும் ஜமீன்தார் கொன்று குவிக்கும் விலங்குகளின் ரத்தம் கண்டு உறைந்து போகும் பளியர்களின் நடுக்கம் நமக்குள்ளும் பரவுகிறது. எவ்வளவு தடுத்தும் கேளாமல் அவர் கொல்லும் சினை மானின் வயிற்றை கிழித்து மான்குட்டியை வாசி வெளியே எடுக்கும் தருணம் வாசிக்கும் போதே எனக்கு கண்கள் குளமானது.
காடெங்கும் காமம் காட்டாறாய் பெருகி ஓடியபடி இருக்கிறது. ஒருவரின் மகிழ்ச்சி இன்னொருவரை மகிழ்விப்பதாகவே இருக்கிறது. காட்டில் வாழ்வதாலேயே இவர்கள் பரந்த மனம் படைத்தவர்களாய் இருக்கிறார்கள் போல. அன்சாரியுடன் போகும் சகாயமேரியாகட்டும் வாசியையே சுற்றிவரும் குயிலம்மாள் ஆகட்டும் யாவருமே அன்பிற்காக மட்டுமே ஏங்குகிறவர்களாய் இருக்கிறார்கள்.
சுனைகளை எல்லாம் அழித்து கஞ்சா பயிரிட்டதால் கோடை காலத்தில் நீருக்காக சுனை தேடி வரும் யானைகள் வெறி கொள்கின்றன. அவை வெறியுடன் அந்த கஞ்சா தோட்டங்களையும் அங்குள்ள குடி இருப்புகளையும் அளித்து போடும் இடத்தில் ஒரு பொயடிக்கல் ஜஸ்டிஸ் கிடைத்ததை போல் மனம் குதூகலிக்கிறது. இந்த இடத்தில் ஒரு பொருளை தேடி நாம் எப்படி வீட்டை கலைத்து போடுவோமோ அதே போல் தான் யானைகளும் சுனைகளை தேடி குடியிருப்புகளை அழிக்கிறது என்று லட்சுமி சரவணகுமார் சுட்டும் இடம் கிளாசிக். யானைகளும் புலிகளும் கூட நாவலில் கூரறிவுடன் திரிகின்றன. சடையனை அனைவரும் பைத்தியம் என்று பார்த்திருக்கையில் பளிகர் குடியிருப்பை அழிக்க வரும் யானைகளை பெரிய ஒற்றை கொம்பனை கொண்டு அடக்கி திசைதிருப்பும் தருணம் பிரமிப்பின் உச்சம். அகமலை காட்டை விட்டு நான் இன்னும் திரும்ப வில்லை என் கணுக்காலில் ஒட்டிய அட்டையாய் பிரித்தெடுக்க முடியா நினைவுகளுடன் வாசியும் சடையனும்.
Kmkarthi kn –
கானகன்
லஷ்மி சரவணக்குமார்
எழுத்து பிரசுரம்
நான் வாசிக்கும் லஷ்மி சரவணக்குமாரின் முதல் புத்தகம் இது தான். அதுவும் #இயற்கை மற்றும் #சூழியலின் தலைப்புக்காக என்னிடம் அதிகமாக பரிந்துரைக்கப்பட்ட புத்தகம் என்பதால் மட்டுமே இப்போது கூட வாசித்தேன். இன்றைக்கு இருக்கும் இளம் எழுத்தாளர்களுக்கு மத்தியில் லஷ்மி தன் இருப்பை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார் கானகனின் மூலம் என்றே தோன்றுகிறது. அதுவும் இன்றைக்கு இருக்கும் காலகட்டத்திற்கு இது போன்ற களத்தை, கதையைப் பேச வேண்டிய தேவை இருக்கிறது என்று கண்டுணர்ந்ததுக்காகவே லஷ்மியை எத்தனை பாராட்டினாலும் தகும்.
சில புத்தகங்களை மட்டும் தான் கையிலிருப்பதே தெரியாமலும், பக்கங்கள் கடப்பதை கவனிக்காமலும் வாசிக்க முடியும் அப்படியான புத்தகம் தான் இந்த கானகன்.
ஆரம்பமே புலி வேட்டையில் இருந்து தான் தொடங்குகிறது. எப்போதுமே ஒரு வேட்டையைப் படிக்கறதோ பாக்கறதோ சலிப்பே தட்டாத விஷயம். அதனாலோ என்னைவோ புத்தகத்துக்குள்ள உங்களால எளிமையா நுழைத்துக்கொள்ள முடிகிறது. அதன் எளிமையான எழுத்துகளின் வழி இலகுவாக பயணிக்கவும் முடிகிறது.
புலி வேட்டையில் ஆரம்பமாகும் கதை ஒருவித ஆர்வத்தைக் கொடுத்தாலும், வேட்டையாடப்பட்ட புலியின் நிலையை விளங்கிக் கொள்ளும் போது ஒரு வித பரிதாபத்தைக் கொடுக்கிறது. நாவல் முழுவதும் இதே தான் நிலை. படிக்க படிக்க கீழே வைக்கவே தோன்றாத ஆர்வத்தாலும், அந்தக் கதை நமக்குள் ஏற்படுத்தும் ஒருவித குற்றவுணர்வாலும் பின்னிப் பிணைந்திருப்பது தான் நாவலின் வெற்றி.
இதற்கு முன் வாசித்த சாயாவனம் நாவலில் வனத்தின் தாவரங்களின் மீது பெரும் அக்கறை காட்டப்பட்டிருக்கும் அது போலவே இந்த நாவலில் வனத்தின் உயிரினங்களின் மீதும், பழங்குடிகளின் மீதும் பெரும் அக்கறை காட்டப்பட்டிருக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பளியர்குடி மக்கள் தான் நாவலின் பிரதான மாந்தர்கள். மனிதர்களுக்கு எதைப்பார்த்து அச்சம் தோன்றுகிறதோ அதையே கடவுளாக வணங்கி விடுவார்கள். இந்த பளியர்குடி மக்கள் கடவுளாக, வனத்தின் பாதுகாவலானாக புலியை “பாட்டா” என்று வணங்குகின்றர். அப்படிப்பட்ட புலியைத்தான் தங்கப்பன் கொன்று விடுகிறான். அதனால் அந்த வனத்தில் உணவுச்சங்கிலி எவ்வாறு பாதிப்படைந்தது என குறிப்பால் உணர்த்துகிறார் ஆசிரியர்.
இதனால் அந்த வனத்திற்குள் என்னவெல்லாம் நடந்தது என்பதே கதை.
இதுபோக மலையில் கஞ்சாத்தோட்டம் போட்டு பெரும் லாபம் பார்க்கும் முதலாளிகள் அங்கிருக்கும் மக்களுக்கும், இயற்கைக்கும், விலங்குகளுக்கும் என்னென்ன இடையூறுகளை விளைவிக்கிறார்கள் அதற்கு அவைகளின் பதிலடி என்ன என்பதை விறுவிறுப்பாக மயிர்க்கூச்செரியும் விதத்தில் நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. நாவலில் பல விலங்குகளைப் பற்றி சொல்லப்பட்டிருந்தாலும் புலியும், யானையும் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அதுவும் யானைக் கூட்டத்தை விரட்டி விரட்டி வேட்டையாடும் தங்கப்பன், அதை காப்பாற்ற போராடும் வாசி இருவருக்குமான போராட்டம் ஒரு வேட்டைக்காரனுக்கும், ஒரு வனக்காப்பாளனுக்கும் நடக்கும் போராட்டமே.
நாவலில் வரும் பெண் கதாப்பாத்திரங்களை தவிர்த்து விட்டு இந்த நாவலைப் பற்றி பேசவே முடியாது என்று நினைக்கிறேன். அத்தனை முக்கியத்தும் வாய்ந்தவர்கள் செல்லாயி, மாரி, சகாயராணி, குயிலம்மா, சுப்பு. வேட்டையை வெறுக்கும் பளியர்குடியில் பிறந்து வேட்டையை கௌரவமாகப் பார்க்கும் செல்லாயி. அன்பு கிடைக்காவிட்டாலும் அன்பைக் கொட்டிக் கொடுக்கும் மாரி, என பெண்களை வனதேவதைகளாகவே உலாவ விட்டிருக்கிறார் லஷ்மி.
முடிவில் விலங்குகளின் பதிலடி, பழியுணர்ச்சி என ஒருவித சினிமா பாணியில் இருப்பது சற்று ஏமாற்றம். ஆனால் இன்றைய காலத்திற்கு நிச்சயம் அதிமுக்கியமான ஒரு கதை. பேராசைகளைக் குறைத்துக்கொண்டும் தேவைகளை சுருக்கிக் கொண்டும் என்றைக்கு இந்த மனித இனம் வாழப்பழகுதோ அன்னைக்கித்தான் இயற்கை சமநிலைக்கு வரும். இல்லைனா இயற்கை அடிக்கு அடி, ஒதைக்கு ஒதைனு தான் இறங்கும்.
#Kmkarthikeyan_2020-52