இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல். இது காகிதத்தில் பதிக்கப்பெற்ற வெறும் எழுத்துகள் கொண்ட தொடர் வரிசைகளின் அணிவகுப்பு அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம். ஆதிகாலத்தில் கூடி வாழ்ந்துகொண்டிருந்த மனித இனம் மாபெரும் சமூகமாக உருவெடுத்த பிறகு பிரிவுகள் ஏற்பட்டன. தொழிலின் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டன என்று சொல்லப்பட்டு வந்த காலத்தில் களவும் ஒரு தொழிலாகிப் போனதுதான் பரிதாபம். ஒடுக்கப்பட்ட சமுதாயமொன்று களவு செய்வதை தனது தொழிலாக்கிக்கொண்டது. அந்த சமுதாயத்தின் முன்னோர்கள் காட்டிய வழியில் அந்த இனத்தின் வகையறாக்கள் பிரிந்தன. அந்த வகையறாக்களைத்தான் சமூகம், குற்றப் பரம்பரைகள் என அடையாளம் காட்டியது. வடஇந்தியாவில் சுமார் 300 ஆண்டு காலமாக ‘டக்கி’கள் எனப்படும் குற்றப் பரம்பரை மிகப் பெரிய வழிப்பறிக் கொள்ளைக் கூட்டமாக நடமாடி வந்தது. அவர்களது வாழ்வியல் என்பது பிறரை ஏமாற்றி அவர்களது சொத்துக்களை கொள்ளையிடுவது, அந்தப் பணத்தைக் கொண்டு சுகபோகங்களை அ-னுபவிப்பது என்பதே! ஆனால், நூலாசிரியர் சு.வெங்கடேசன் ‘காவல் கோட்டம்’ என்ற இந்த நூலில் குறிப்பிடும் குற்றப் பரம்பரையினர் யாரையும் நம்பவைத்துக் கழுத்தறுத்தது கிடையாது. காவல் தொழில் பார்த்தவர்கள் ஆடுகளை கிடையில் இருந்து திருடும் கொள்ளைக் கூட்டமாக உருவானது பெரும் சோகம். இந்த குற்றப் பரம்பரையின் வரலாற்றில் எத்தனை வீரம்? எத்தனை சோகம்? எத்தனை நெகிழ்ச்சி? இதோ நம் தமிழகத்தில்… மண் மணக்கும் மதுரையில் நிலைகொண்டிருந்த ஒரு சமுதாயத்தின் வரலாறு இந்தக் காவல் கோட்டம். இதன் மூலம் மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றைத் தரிசிக்கலாம். தமிழ்ச் சமுதாயத்தில் உழைக்கும் மக்கள் கூட்டம் ஒன்று ஏன் குற்றப் பரம்பரையாக உருவானது? அந்த மக்களின் வாழ்வியல் என்ன? இறுதியாக அந்த மக்கள் அடைந்த இழிப் பெயர் என்ன? கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகைகள் இந்த மக்களின் வாழ்வியலை எப்படி மாற்றின? ‘உரலு நகராம இருக்க அடிக் கல்லு; கை வலிக்காம இருக்க கத சொல்லு’ என இந்த மக்களின் வாழ்வியலை இவர்களது சொலவடைகள் கொண்டே சொல்லாட்சி புரிந்து சிலிர்க்க வைக்கிறார் சு.வெங்கடேசன். இதற்காக அவர் மேற்கொண்ட கள ஆய்வுகள், வாய்மொழிப் பதிவுகள் என ஒவ்வொன்றுக்கும் உயிர்ப்பு இருக்கிறது. ‘இரவெல்லாம் மழை பெய்ததால் எங்கும் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. பூமியால் நீரைக் குடித்து முடிக்க முடியவில்லை’ என ஆங்காங்கே அணிக்கு அணி சேர்க்கும் வார்த்தைக் குவியல்கள் காவல் கோட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகின்றன. வரலாறுகள் வழிவழியாக வாய்மொழியாக சொல்லப்பட்டு வருபவை மாத்திரமல்ல. எனினும் குற்றப் பரம்பரையின் எஞ்சிய கடைசிக் கட்ட வாரிசுகள் தங்கள் பரம்பரையைப்பற்றி தாங்களே சொல்லும் கதைகள் சுவாரசியம் நிறைந்தவை. வீரமும், தீரமும் இந்த பரம்பரையின் சொத்தாக இருந்துள்ளதை காவல் கோட்டம் பதிவு செய்கிறது. நூல் ஆசிரியர் சு.வெங்கடேசனின் பத்தாண்டு கால உழைப்பு இந்த நூல். அவரது உழைப்பின் மேன்மை மகத்தானது. மறைக்கப்பட்ட வரலாற்றை மகத்தான முறையில் வெளிகொண்டு வந்தமைக்காக தமிழ்கூறும் நல்லுலகம் அவரது பெயரை என்றென்றும் உச்சரிக்கும் என்றால் அது மிகையாகாது. ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் பண்பாடுகள், கலாச்சாரங்கள் இயற்கையை ஒட்டி அமைந்திருந்தன என்பதை காவல் கோட்டத்தைப் படிக்கப் படிக்கத் தெரிந்துகொள்வீர்கள். கொம்பூதி புளியமரமும், நல்ல தண்ணீர்க் கிணறும், வெள்ளாடுகளின் சத்தமும் உங்கள் மனதைவிட்டு அகலாது என்பது திண்ணம். வாருங்கள் வரலாற்றில் பயணிப்போம்!
Sale!
காவல் கோட்டம்
Publisher: விகடன் பிரசுரம் Author: சு.வெங்கடேசன்Original price was: ₹750.00.₹720.00Current price is: ₹720.00.
ஆறு நூற்றாண்டுகால மதுரையின் வரலாற்றை [1310 -1910 ] பின்னணியாக கொண்ட நாவல் இது,அரசியல்,சமூகவியல்,இன வரைவியல் கண்ணோடங்களுடன்,அந்த வரலாற்றின் திருப்பு முனைகளையும்,தீவிரமான தருணங்களையும்,திரும்பி பார்க்கிறது. தமிழ் வாசகர்கள் அறிந்திராத வரலாறு இது.
Delivery: Items will be delivered within 2-7 days
Kathir Rath –
காவல் கோட்டம் – சு.வெங்கடேசன்
“ஒரு நல்ல நாவல் எந்த புள்ளியில் எழுதப்பட துவங்குகிறது என்றால் ஏதேனும் ஒரு நல்ல நாவலை படிப்பதில் இருந்து என சொல்லலாம்”
சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசனின் வார்த்தைகள் இவை. ஒரு நல்ல நாவல் எப்படி இருக்க வேண்டும் என்ற வரையறையை யாரால் தரமுடியும்? வாசிப்பவனால் மட்டுமே தர முடியும். வாசித்தபின் அந்த எழுத்தில் இருந்து வெளியே வர மாட்டேன் என கதைசொல்லியை கட்டிப்பிடித்து கதற வைக்கும் புத்தகம்தான் நல்ல நாவலாக இருக்க முடியும். அந்த வகையில் காவல் கோட்டம் எனக்கு நல்ல நாவல்.
முதலில் புத்தகம் வாங்கிய கதையை சொல்கிறேன். ஏனென்றால் காலப்போக்கில் மறந்து விடக்கூடாது என்பதற்காக. மனைவியை முதன்முதலாக துணிக்கடைக்கு கூட்டிச் சென்று அனைத்தையும் வாங்கிக் கொண்டு வரும் பொழுதுதான் சேலம் சென்னை சில்க்ஸ் உள்ளேயே ஒரு நூல் நிலையம் வைத்திருந்ததை கவனித்தேன். ஏதாவது ஒரு புத்தகம் வாங்கலாம் என்ரு தேடினால் அறிமுகமானதாக ஏதுமில்லை. காவல்கோட்டம் மட்டும்தான் கேள்விப்பட்ட பெயர். சாகித்திய விருது வாங்கிய நூல் என்பதால் வாங்கி வந்தேன்.
வாங்கி வந்து இரண்டு வருடங்களாக படிக்கவில்லை.பக்கங்கள் மிரட்டின. 1176 பக்கங்கள். ஒருமுறை தைரியமாக எடுத்து 100 பக்கங்களை விடாமல் வாசித்தேன். கொஞ்சம் கூட கதை என்னை உள்ளே நுழையவிடவில்லை. வேகமாக சுற்றும் குடைராட்டினத்தில் ஏறுவது போல ஏறி வெளியே தூக்கி எறியப்பட்டேன். மூடி வைத்து விட்டு மற்ற புத்தகங்களில் மூழ்கினேன். வாசிப்புப் போட்டி பல நாட்களாக தொடாமல் வைத்திருந்த புத்தகங்களை முடிக்க வைத்திருந்தது. சரி இதையும் தினம் 100 பக்கமாக வாசித்து முடித்து விடுவோம் என் எடுத்தேன்.
கடந்த முறைக்கும் இம்முறைக்கும் இடையில் எனக்கு கொஞ்சம் பொது அறிவு வளர்ந்திருந்தது. நாளிதழ்களும் புத்தகங்களும் இந்திய வரலாறு வெறும் மன்னர்களின் வரலாறு மட்டுமல்ல என்பதை சொல்லித் தந்திருந்தது. இம்முறை எடுத்து முதலில் இருந்து படிக்க படிக்க 50 பக்கங்களுக்குள்ளாகவே கதை என்னை இறுக பிடித்துக் கொண்டது. இரண்டே நாட்களில் மொத்த புத்தகத்தையும் முடித்திருக்க முடியும். ஆனால் இதனுள்ளேயே மூழ்கி கிடக்க விரும்பினேன். தினத்திற்கு 100 பக்கங்கள் மட்டும் வாசித்தேன்.
பிற்கால பாண்டியர்கள் சுல்தான்களிடம் தோற்று இழந்த மதுரையை, விஜய நகரம் மீட்பதில் கதை துவங்குகிறது. புத்தகத்தில் தந்திருக்கும் மேப்பை அவ்வபோது பார்த்து எங்கிருந்து படை எடுத்து வந்து மதுரையை மீட்டுத் தந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கவே பிரம்மாண்டமாக இருந்தது. அடுத்து கிருஷ்ண தேவராயர் (தெனாலிராமன் புகழ்) காலத்தில் விஜய நகர அரசின் சார்பாக மதுரைக்கு போரிட வந்த தளபதி, மதுரையை கைப்பற்றி தானே ஆளப்போவதாக அறிவிக்க, அவரை கைது செய்து அழைத்து வர மன்னனின் வலது கரமும் அத்தளபதியின் மகனுமாகிய விஸ்வநாத நாயக்கர் படையுடன் வருகிறார்.
மதுரையில் நாயக்கர் ஆட்சி விஸ்வநாதர் வழியாக துவங்குகிறது. 72 பாளையங்கள் உருவாகின்றன. அவற்றுக்கிடையிலான அரசியல், ஏற்கனவே நடைபெற்று வரும் தஞ்சை நாயக்கர்களின் பாளையங்கள், அடிக்கடி பழிவாங்க வரும் மைசூர் படை. இவற்றையெல்லாம் சமாளிப்பதுடன் தொடர்ந்து ஆலயங்களும் மண்டபங்களும் கட்டி மக்களை நல்லபடியாக ஆட்சி செய்யும் நாயக்கர்களின் வம்சாவழியை விவரமாக சொல்லிக் கொண்டே கதை நகர்கிறது.
இந்த வரலாற்றுடன் ஓரமாக நம்மை அறியாமல் மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் கதையும் நமக்கு சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. அந்த ஊரின் பெயர் தாதனூர். திருமலை நாயக்கர் ஆட்சியின் போது அத்தனை கட்டுக்காவலையும் மீறி அரசாங்க கஜானாவிலேயே கன்னம் போட்டு விடும் அந்த ஊர்க்காரனை தேடி அழைத்து வரச் சொல்லி கட்டளையிடுகிறார் அரசர் திருமலை நாயக்கர்.
அரசவைக்கு வரும் கள்வனையும் அவனை அழைத்து வந்த பின்னத்தேவனுக்கும் மூன்று உத்தரவு பிறப்பிக்கிறார்.
1. அரசு காவலை மீறியவனுக்கு மூன்று சவுக்கடி கொடு
2. களவாண்டவனை அழைத்து வந்தவனுக்கு நீதி பரிபாலனம் செய்யும் உரிமையை கொடு
3. இத்தனை காவலை கடந்து கன்னம் போட்டவனுக்கு மதுரை நகர் காவலைக் கொடு
ஆம், திருடன் கையில் சாவி தரப்படுகிறது. களவில் இருந்துதானே காவல் பிறக்கிறது. அன்றில் இருந்து மதுரை நகரம் முழுவதுமான காவலை தாதனூர்தான் கையில் வைத்திருக்கிறது.
அடுத்து ஒவ்வொரு அரசராக வருகிறார்கள், வாழ்கிறார்கள், ஆள்கிறார்கள், போகிறார்கள். ஆனால் மதுரை மக்களின் நிம்மதியான உறக்கத்தை தருவது தாதனூர் காவல்காரர்களின் காவக்கம்புதான். திருமலை நாயக்கருக்கு பின் காலம் உருண்டோடி இராணி மங்கம்மாளிடமும் இராணி மீனாட்சியிடமும் நின்று நாயக்கர் வம்சத்தின் இறுதி மூச்சை இழுத்து விடுகிறது.
சந்தா சாகிப்பின் துரோகத்தால் விழும் மதுரை, கூடிய விரைவில் கிழக்கிந்திய கம்பெனியின் கைகளில் சிக்குகிறது. அதற்கிடையில் தான் எத்தனை எத்தனை கதைகள், எத்தனை எத்தனை நாயகர்கள்… கமலஹாசன் எடுக்க முயற்சித்த மருத நாயகம் பற்றி படிக்கையில் புல்லரிக்கிறது. வரி கொடுக்க மறுக்கும் கட்டபொம்மனை பிடித்து தூக்கிலிட்ட கம்பெனி, அவன் தம்பி, வாய் பேச முடியாத, காது கேட்காத ஊமைத்துரையிடம் 4 வருடம் தண்ணி குடிக்கிறது. யோசித்து பாருங்கள், ஒருவன் சைகையிலேயே படையை நடத்தி 4 வருடம் வெள்ளையர்களை கதிகலங்கடித்திருக்கிறான் என்றால் எவ்வளவு பெரிய ஆளுமையாய் இருந்திருக்க வேண்டும்? படைகள் எந்தளவு அவன் கட்டளைகளுக்கு கீழ்படிந்திருக்க வேண்டும்?
எதிர்க்கும் அத்தனை பாளையங்களையும் அழித்து, ஜமிந்தாரி முறையை அமுல்படுத்திவிட்டு மதுரைக்குள் கவனம் செலுத்தும் கம்பெனி அரசாங்கம், நகரை விரிவுப்படுத்த சுற்றியுள்ள கோட்டைச்சுவரை இடிக்க முடிவெடுக்கிறது. குமாஸ்தாக்களாக அக்ரஹாரத்து சிங்கங்கள் நுழைந்திருந்த காலகட்டம். கேட்கவா வேண்டும்? நம் மக்களை எங்கு அடிக்க வேண்டும், எப்படி அடிக்க வேண்டும் என சரியாக காய் நகர்த்திக் கொடுக்கிறார்கள்.
நகரை விரிவுப்படுத்திய பின் கச்சேரிக்காக கட்டிடம் கட்டுகிறார்கள். கச்சேரி என்றால் போலிஸ் ஸ்டேசன். ஏதோ அரசாங்க வேலை என்று அதைப் பற்றி புரிதலே இல்லாமல் நம்மாட்களும் வேலையில் சேர்கிறார்கள். அதிலும் யூனிஃபார்ம் போட செய்யும் கோமாளித்தனங்கள், குறிப்பாக தோலால் செய்யப்பட்ட பெல்ட் அணிய அவர்கள் படும் பாடு இருக்கிறதே..!. சாஸ்திரத்திற்கு விரோதமாயிற்றே? நகராட்சி வரி வசூல் செய்தல், நிலங்களுக்கான பஞ்சாயத்திற்காகத்தான் கச்சேரி என காவலர்களே நம்பிக் கொண்டு, கச்சேரியிலுள்ள பொருட்களை பாதுகாக்க தாதனூர்காரர்களுக்கு காவக்கூலி கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு அப்போது புரிவதில்லை, நாம்தான் நகரத்தை காவல் காக்க வேண்டும் என்று.
வெள்ளையர்களின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் பொறுமை. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்யமாட்டார்கள். தாதனூர்காரர்கள் காவல் காப்பதை நிறுத்த செய்து, நகர் முழுக்க ஐரோப்பிய பாணியிலான காவலை கொண்டு வர திட்டம் போடுகிறார்கள். சட்டம் எழுதுகிறார்கள். கிட்டத்தட்ட 100 வருடம் போராடி தாதனூர்வாசிகளின் பல நூறு வருட காவல் உரிமையை பிடுங்குவதுடன் அவர்களையே களவாளிகள் என்று குற்றப்பரம்பரை சட்டத்தில் பழியெடுக்கிறார்கள்.
நல்லவேளை தாதனூர்காரர்கள் அனுபவித்த வேதனையை ஆழமாக எழுதாமல் விடுகிறார் எழுத்தாளர். ஏற்கனவே தாதனூர் இழவுக்கு தலையில் அடித்துக் கொண்டு அழ தோன்றுகிறது. அவர்கள் பட்ட கஷ்டத்தை விளக்கியிருந்தால் சோறு இறங்கியிருக்காது.
நாவலில் உயிர்க்கதையைப் பற்றி நான் இங்கே கொஞ்சம் கூட சொல்லவில்லை. காவல்காரர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி மட்டும் 500 பக்கங்கள் சொல்லி இருக்கிறார். அத்தனையும் பொக்கிஷம். குழந்தை பிறப்பதிலிருந்து என்னென்ன போட்டிகள் வைத்து எதுஎதுவெல்லாம் கற்றுக்கொண்டால் களவுக்கு போகலாம் என்பதில் இருந்து எந்தெந்த களவுகளில் தப்பித்து வந்தால் காவலுக்கு போகலாம் என்பதைச் சொல்லி காவல் முடித்து ஊர் பெரியாம்பளை ஆகி முறைகளை சரிக்கு சரி காத்து, தினசரி இரவு காவலுக்கு போகிறவர்களையும் களவுக்கு போகிறவர்களையும் இனம் பார்த்து அனுப்பி வைப்பது வரையிலான அத்தனையையும் அவ்வளவு அழகாக சொல்கிறார்.
எங்கிருந்தோ எங்கேயோ படையெடுத்து போனவர்களைப் பற்றி பாடமாக படிக்கிறோம். நம் மொழி பேசி வாழ்ந்த நம் குடிகளை பற்றி எதுவும் தெரியாமல் இருக்கிறோம். குற்றப்பரம்பரை புத்தகம் படிக்கும் முன் எனக்கு கைரேகைச் சட்டம் பற்றி எந்த அறிமுகமும் இல்லை. தீரன் படத்திற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. காவல் கோட்டம் புத்தகம் தான் எனக்கு இக்கூட்டத்தை பற்றி கதையை முழுமையாக சொல்லி இருக்கிறது.
இப்புத்தகம் படித்த 10 நாட்களும் மிக முக்கியமானவை. பொன்னியின் செல்வன் படித்து உறங்கி இரவில் கனவில் குதிரையேறி கத்திச்சண்டை போட்டுத் திரிந்த பிறகு, இந்தப் புத்தகம் தான் என்னை இரவில் காவல் கம்போடு மதுரை வீதிகளில் சுற்ற வைத்தது.
முடிந்தவரை இந்த புத்தகத்தின் மையக்கதையை சொல்லாமல் விட்டிருக்கிறேன். ஏனென்றால் அவற்றை படிக்கும் போது தெரிந்து கொள்ளும் போதுதான் சரியாக இருக்கும்.
தமிழர்களின் ஒரு குடியைப் பற்றி தெரிந்துக் கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் இந்த புத்தகத்தை படிக்கலாம். சும்மா இல்லை 600 வருட வரலாறு.
இதை படிக்காதவர்களெல்லாம் மதுரைக்காரர்கள் என வெளியே சொல்லிக் கொள்ளாதீர்கள்.
kmkarthi kn –
காவல் கோட்டம்
சு.வெங்கடேசன்
விகடன் பிரசுரம்
#சு_வெ
கதை, வரலாறு இருண்டும் வெவ்வேறு சொற்கள். ஆனால் இரண்டிற்குமான பொருள் ஒன்று தான். – சு.வெ
வேள்பாரியின் கரம் பற்றி பறம்பிற்குள் திரியும் பல்லாயிரக்கணக்கானோர்களில் நானும் ஒருவன். பறம்பின் ஆசானுக்கு தனித்த அறிமுகம் வேறு தேவையா!!!
#காவல்_கோட்டம்
பொன்னியின் செல்வனின் 5 பாகத்தையும் ஆறு நாள்ல முடிச்சேன், வேள்பாரிய மூணு நாள்ல முடிச்சேன். ஆனால் இந்த காவல் கோட்டத்த முடிக்க மொத்தம் 12 நாள் ஆயிருக்கு. கண்டிப்பா ஆகும். ஏன்னா மேல சொன்ன ரெண்டும் பந்தயக் களம். ஆனால் காவல் கோட்டம் பரந்து விரிஞ்ச மேய்ச்சல்களம். என்னைப்போல நுனிப்புல்லே மேய்ஞ்சாலும் நிச்சயம் தாமதமாகும்.
1310 – 1910 வரையான 600 ஆண்டு மதுரையின் வரலாறு. சிறு சிறு புற்களாக தின்று தன் வயிற்றை ரெப்பும் ஆடுகளைப்போல, சிறு சிறு கதைகளாக கோர்த்து கோர்த்து, அந்தக் கதைகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, ஆராய்ந்து, இடித்துத் தள்ளபட்ட மதுரை கோட்டைச்சுவரைப் போல இந்த நாவலை கட்டியெழுப்பியிருக்கிறார் ஆசான்.
நாவலை இரண்டு பாகமாக பகுத்திருக்கிறார். முதல் பாகத்தில் நாயக்கர் மன்னர்களின் கீழிருந்த மதுரையும், இரண்டாம் பாகத்தில் பிரிட்டிஷ் கலெக்டர்களின் கீழிருந்த மதுரையும் என இரு வேறு மதுரைகளையும் அதன் தொன்மங்களையும் சுமந்து வந்து இறக்கியிருக்கிறார்.
#முடி_அரசு
முடி அரசான முதல் பாகத்தில் மதுரையின் மீதான இஸ்லாமியப் படையெடுப்பிலிருந்து வரலாறு தொடங்குகிறது. அதற்குப்பின் கிருஷ்ண தேவராயரை அரசராகக் கொண்ட விஜயநகரப் பேரசின் கீழ் மதுரை வருகிறது. மதுரையின் அரசராக விஸ்வநாதன் நியமிக்கப்படுகிறார். அவரிலிருந்து ஆரம்பித்து சொக்கநாதன், மீனாட்சி, மங்கம்மா என மதுரையை ஆண்ட பல அரசர்களையும் அவர்களது ஆட்சியில் மதுரையின் வளர்ச்சியையும் கோழிக்கி தீவனம் போடற மாதிரி வாரி இறைக்கிறார். முன்பே சொன்னது போல இது மேய்ச்சல்களம். இவ்வாறாக நீளும் பட்டியல் கட்டபொம்மன், மருது சகோதரர்கள், ஊமைத்துரை போன்ற பாளையக்காரர்களில் வந்து முடிகிறது. இதை இங்கே வந்து முடித்து வைப்பது பிரிட்டிஷ் படை.
ஏதோ பத்து வரில சொல்லிட்டேன். ஆனால் இந்த நாவலை படிக்கும் போது இந்தப் பகுதிகள் முழுக்க போர், போர், போர் தான். மதுரை எத்தனை எத்தனை தாக்குதல்களைப் பார்த்திருக்கிறது. அதுவும் மைசூர் மகாராஜா ஏதோ திருவிழாக்வுகு கெளம்பற மாதிரி வருஷந்தவறாம மதுரைக்கி படையக் கெளப்பிட்டு வந்துருக்கான்யா.
மதுரை மன்னர் சொக்கநாதன் தஞ்சாவூர் இளவரசி மங்கம்மா மீது காதல் கொண்டு அவளை அடைய ஒரு போர். அந்தப் போரின் உக்திகளை படிக்கும்போது எனக்கு
#Game_of_thrones ல Battle of bastard னு ஒரு போர்க்காட்சி வரும் அதுதான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. நான் பார்த்து மிரண்ட ஒரு போர் உக்தி அது.
கப்பம் கட்டாத மதுரை மன்னர்களை எப்படி வெரட்டி வெரட்டி வேட்டையாடியிருக்கிறது வெள்ளை ராணுவம். அதுவும் ஊமைத்துரையின் வீரம் கண்டு மெய்சிலிர்த்தேன். மதுரையின் கோட்டைச்சுவரை மதுரை மக்களை வைத்தே இடித்துத் தள்ளும் பகுதியைப் படிக்கும் யாருக்குள்ளும் ஒரு மென்சோகம் இழையோடும்.
#குடி_மக்கள்
நாவலின் இரண்டாம் பாகமான குடிமக்கள் எனும் பகுதி தாதனூர் வாசிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது. தாதனூர் களவை மட்டுமே தொழிலாய் கொண்டிருக்கும் கிராமம். இவர்களின் களவுத் திறமையைக் கண்டு திருமலை நாயக்கர் இவர்களுக்கு மதுரையின் குடிக்காவல் உரிமையை வழங்குகிறார். அன்றுமுதல் நகரின் முழுக்காவல் உரிமையும் தாதனூரைச் சேர்கிறது. காவலுக்கு காவக்கூலியும் நகரவாசிகளிடமிருந்து கிடைக்கிறது. காவக்கூலி தர மறுப்பவர்களின் வீடுகளில் கட்டாயம் களவு நடக்கும். அதை மீட்டு வர ஒரு கூலியையும் பெறுகின்றனர். இதற்கு துப்புக்கூலி என்று பெயர். துப்புக்கூலி காவக்கூலியை விட இருமடங்கு அதிகம். பின் அவர்களும் காவக்கூலி தர சம்மதிக்கின்றனர்.
இப்படியா தாதனூர் வாசிகளின் வாழ்க்கை மன்னர்களின் ஆட்சிக்காலம் முழுவதும் எந்தப் பிரச்சனையுமின்றி செல்கிறது. பின் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் போலீஸ் காவல்முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அன்றிலிருந்து வருகிறது தாதனூருக்கு பிரச்சனை. தாதனூர்காரர்களிடமிருந்து முழு முற்றாக காவல் உரிமையை பறிக்க போலீஸ் என்னென்ன முயற்சிகளை செய்தது. அதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள தாதனூர் என்ன செய்தது என்பதே நாவலின் இரண்டாம் பாகம் முழுவதும். இறுதியாக தாததனூரையே அழிக்க போலீஸ் கையிலெடுக்கும் பிரம்மாஸ்த்திரம் தான் குற்றபரம்பரை சட்டம். இந்த சட்டத்திற்குள் சிக்குண்ட அவர்கள் எவ்வாறு தங்களது வாழ்வாதாரத்தை இழந்தும், நாடு கடத்தப்பட்டும், கொலை செய்யப்பட்டும் அடங்கி ஒடுங்கினர் என்பதை வாசிக்கவே பெருஞ்சிரமமாக இருந்தது.
#தாதுப்பஞ்சம்
தாதுப்பஞ்சம் இந்த வார்த்தை கி.ரா வின் எழுத்தில் அடிக்கடி காணப்படும். அப்படித்தான் எனக்கு இச்சொல் பரிச்சயம். ஆனால் இது வெறும் சொல் அல்ல. ஒரு துயர மழை என்பதை இந்த நாவலின் மூலம் தான் தெரிந்து கொண்டேன். தாதுப்பஞ்சத்தை விவரிக்க எண்ணினால் வார்த்தைப்பஞ்சமே மிஞ்சுகிறது.
பகலுக்கு நிழல், இரவுக்கு ஒலி அப்டீனு ஒரு வரியைக் கடப்பதற்குள் என் சிந்தனை பல திசைகளில் பட்டுத்தெறித்தது. சென்ற மார்ச் மாதம் முழுவதும் மாந்தோப்பு இரவுக்காவலுக்கு சென்ற ஞாபகங்களுக்குள் மூழ்கினேன். அந்த இரவின் நிசப்தத்தில் ஒரு தளிரின் சின்ன அசைவு கூட ஏதோ பெரும் மலைச்சரிவின் ஒலியைப் போல காதை நிறைத்ததை நினைவு கூர்ந்தேன். எவ்வளவு சரியான ஒரு வார்த்தை இரவுக்கு ஒலி என்பது.
சு.வெ ஒரு நேர்காணல்ல சொல்லியிருந்தார். காவல் கோட்டம் இன்றைக்கு ஒரு புனைவாக இருக்கலாம், ஆனால் காலத்தின் பெருவெளியில் நிச்சயமாக இது ஒரு ஆவணப்பெட்டகமாக மாறும்னு சொல்லியிருந்தார். எனக்கு இதில் மாற்றுக்கருத்தே இல்லை.
#Kmkarthikeyan_2020-30