TamilNadu
தந்தைப் பெரியார் மீது தமிழ்த்தேசியர்கள் என்ற முகமூடியில் வாழும் சிலர் வைத்து வரும் விமர்சனங்களுக்கான பதில் தேடி நான் அலைந்த காலத்தில் எனக்கு அறிமுகமான பெயர் பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தர்.தமிழ் மருத்துவத்துக்கு புதிய சக்தியை ஏற்படுத்தியவர் என்று பெரியாரால்பாராட்டப்பட்டவர் பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தர்!
பழைய குடிஅரசு இதழ்களின் தொடக்க காலக்கட்டத்தை திருப்பும் போது அதிகமாக இருக்கும் விளம்பரம் ஆனந்தம் பண்டிதரின் வைத்திய விளம்பரங்களாக அமைந்திருந்தன!
குழந்தை வளர்ப்பு குறித்து 1931 இல் ‘பாலர் பரிபாலனம்’ என்ற நூலை பண்டிதர் எழுதி இருக்கிறார். அதற்கு ‘குடிஅரசு’ விமர்சனம் எழுதி உள்ளது. அதில், ”பண்டித எஸ்.எஸ். ஆனந்தமவர்கள் அறிவிலும் ஆராய்ச்சியிலும் வைத்திய பாண்டித்தியத்திலும் வல்லவரென்பதை நாம் தமிழ்நாட்டாருக்கு எடுத்துக் காட்ட வேண்டியதில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.( குடிஅரசு 25.1.1931)
”பகுத்தறிவு இயக்கம் தமிழகத்தில் வேரூன்ற நம் சகோதரர்களின் தொழிற்கூடங்களே காரணமாக இருந்தன. அய்யாவின் அறிவுரைப்படி தான் பகுத்தறிவு,குடிஅரசு முதலிய பத்திரிக்கைகளை
நம் சகோதரர்கள் தொழிற்கூடங்களில் போட்டு வருவோரிடம் எல்லாம் பிரச்சாரம் செய்தார்கள்” என்று சலூன் கடைகள் குறித்து பெரியண்ணன் என்பவர் அளித்த நேரடிப் பேட்டியை கோ.இரகுபதி மேற்கோள்காட்டுகிறார்.
சர்.பி. தியாகராயர் இறந்தபோது ஆனந்தர் வீட்டில் ஒரு இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் மறைமலையடிகள் கலந்து கொண்டு தியாகராயர் பற்றி பேசியதை அடிகளின் நாட்குறிப்பின் மூலம் அறியலாம்.இப்படித் தொடர்ந்து பெரியாருடனும் பெரியாரியக்கத்துடனும் பயணித்தவர் பண்டிதர் ஆனந்தர்.அவரது கட்டுரைகள் குடிஅரசு இதழில் தொடரந்து வந்துள்ளது.
இந்த வரிசையில் வெளியான கட்டுரை தான் ‘தமிழ்நாடு’ என்பதாகும். பண்டிதர் எழுதிய ‘கட்டுரையை’ பெரியார் வெளியிட்டுள்ளார். அந்தக் கட்டுரை என்னை அதிர்ச்சி அடைய வைத்ததற்குக் காரணம், அதில் உள்ள தகவல்கள் அல்ல. அந்தக் கட்டுரை வெளியான ஆண்டு தான்.
அக்கட்டுரை 1943 ஆம் ஆண்டு ‘குடிஅரசு’வில் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகரத்தில் ஆந்திரர் ஆதிக்கம் அதிகமாகி வருவது குறித்தும் தமிழ் எல்லையைக் காக்க வேண்டும் என்றும் 1943இல் எழுதியவர் இவரே. இதனை ‘குடிஅரசு’ இதழில் தொடராக வெளியிட்டுள்ளார் பெரியார்.
ஆந்திரர்கள் சென்னையைக் கேட்பதற்கு முன்னதாக, ஆந்திரர்கள் சித்தூரை தரமறுப்பதற்கு முன்னதாக, ‘புதிய தமிழகம் படைக்க ம.பொ.சி.கள் புறப்படுவதற்கு முன்னதாக பழந்தமிழர் நிலத்தைக் காக்க குரல் எழுப்பியது பண்டிதர் ஆனந்தரே! இன்றைய தமிழ்த்தேசியர்கள் ம.பொ.சி.யின் வரலாற்றில் இருந்து தொடங்குவார்கள். அவர் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு தான் வருகிறார். ஆனால் பண்டிதர் இதனை 1943 ஆம் ஆண்டே எழுதிவிட்டார். அதே ஆண்டே பெரியாரும் வெளியிட்டுவிட்டார்.
எனவே, பண்டிதரைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைத்துத் தேடத் தொடங்கினேன். அப்போது தான் கோ.ரகுபதி எழுதிய நூல்கள் அறியக் கிடைத்தன.
அண்ணல் தங்கோவின் பேரர் அருட்செல்வனிடம் ஒருநாள் பேசிக் கொண்டு இருந்தபோது, பண்டிதர் ஆனந்தரைப் பற்றிச் சொன்னேன். உங்களது சேகரிப்பில் அவரைப் பற்றிய நூல் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னேன். அப்போது அவர் கொண்டு வந்து கொடுத்த நூல் தான், ‘தமிழ்நாடு’.
அருட்செல்வன் கொண்டு வந்து கொடுக்கும் வரை ஆனந்தர், ‘குடிஅரசு’ இதழில் கட்டுரையாக எழுதி இருக்கிறார் என்றே நினைத்தேன். அதன்பிறகுதான் ஆனந்தரின் குறுநூலை பெரியார், தொடராக வெளியிட்டுள்ளார் என்பதை அறிய முடிந்தது.
‘தமிழ் மக்கள் வீரம் மாய்கிறது! தமிழ் நிலப்பரப்பு தேய்கிறது!’ என்ற முழக்கம் முதல் பக்கத்தில் இருக்கும் அக்குறுநூலைத்தான் இப்போது புதிய பதிப்பாக பதிப்பித்துள்ளேன்!
– திருமாவேலன்
Reviews
There are no reviews yet.