பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம்
மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும் இடது சாரியினர் பலர் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றது. சாதி பேதமற்ற , ஆணாதிக்கமில்லாத , மூட நம்பிக்கைகள் அற்ற, எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்கிற தமிழ்த் தேசியமே பெரியாரின் இலக்காக இருந்தது. அதுதான் பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம். இந்த நூல் இன்றைய இளைய சமுதாயத்தில் பல்வேறு ஐயங்களுக்கு விடைகூறும் வரலாற்று ஆவணம்.
வெற்றிச்செல்வன் –
“பெரியார் முன்னெடுத்த இடதுசாரித் தமிழ்த் தேசியக் கொள்கையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய அரசியல் கோட்பாடு என்பது என்னுடைய வலிமையான கருத்து” என்று நூலின் தொடக்கத்திலேயே கூறுகிறார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள்.
பொடா சட்டத்தின்கீழ் சிறையிலிருந்தபோது, இப்படி ஒரு நூலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாகக் குறிப்பிடும் பேராசிரியர் , ஏழெட்டு ஆண்டுகளாகத் தன்னுள் கனன்று கொண்டிருந்த நெருப்பே இந்நூலாக உருப்பெற்றுள்ளது என்கிறார்.
பெரியார் குறித்த அவதூறுகளுக்குத் தக்க பதிலடியைத் தரும் இந்நூல், திராவிட இயக்கம் – தமிழ்த்தேசியம் இரண்டிற்குமான இணக்கத்தையும், தொடர்பையும் அறிய விரும்புபவர்களுக்கான பாலபாடம்.
ம.பொ.சி. அவர்களின் அரசியல் நிலைப்பாட்டைத் தக்க சான்றுகளுடன் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.
தேசிய இனச்சிக்கலும், தமிழ்த்தேசியமும்
தமிழ்த் தேசியத்திற்குத் திராவிடம் முரணா?
தமிழரசுக் கழகமும், திராவிடர் கழகமும்
பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேசியம், இன்றைய சூழலில்
ஆகிய ஐந்து தலைப்புகளின்கீழ்,
நமக்கான அரசியல் களம் குறித்த விழிப்புணர்வைத் தரும் இந்நூல், திராவிட இயக்கப் பற்றாளர் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய நூலாகும்.