1 review for ஏறுவெயில்
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹250.00.₹240.00Current price is: ₹240.00.
1991இல் வெளியான ‘ஏறுவெயில்’ நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பு இது. நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் உறவு கையில் விழுந்த பனிக்கட்டிகளாய்க் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரமுகங்கள் வெளிப்படுவதையும் தன் கொங்குத் தமிழில் பெருமாள்முருகன் சித்தரிக்கிறார். புதியவற்றின் வருகை நிகழ்த்தும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவியலாத மன நிலைக்கும் அவற்றைத் தவிர்க்க முடியாத சூழலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் மனிதர்களின் மனமொழியை நமக்குக் காட்சிப்படுத்துகிறார் முருகன். நேரான யதார்த்தக் கதை சொல்லலின் முக்கியத்துவத்தை இன்னமும் வெம்மை குறையாத ‘ஏறுவெயில்’ மீண்டும் நிரூபிக்கிறது.
Delivery: Items will be delivered within 2-7 days
Sumi Hari –
பள்ளிப் பருவத்திலுள்ள ஒரு சிறுவன் சொல்வதைப்போலவே நகர்கிறது கதை .நகரமயமாக்கலில் காடுகளையும் ,தொழிலையும் இழந்து வேறிடத்திற்கு குடிபெயர்கிறது சிறுவனின் குடும்பமும்,உறவினர் குடும்பங்களும்.இடம் மாறியதில் அவர்களின் வாழ்வியலும் மாறி குடும்பம் நேரிடுகிற நஷ்டங்களும் வருத்தங்களுமே கதை முழுவதும்.
துவக்கமே இடம் மாற முடியாமல் தவிக்கும் மணி என்ற நாயுடன் சிறுவனின் போராட்டம்தான்.வேரோடு நகர்தல் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் முடியாதே.அப்படி அங்கேயே இருக்கும் சிறுவனின் பாட்டியும் தாத்தாவும்,ஏரியில் வெள்ளம் வந்து வீடுகளைச் சூழ்ந்தபோது ,இருட்டில் தடுமாறி மகனின் வீட்டை அடையும் தருணம் அவர்களின் துயரமும்,மனநிலையும் படிக்கும்போதே உணரமுடியும்.
தறி போட்டும், கட்டிட வேலையுமாய் மெல்ல அவர்கள் புதிய வாழ்க்கைக்கு பழகும்போது, சிறுவனின் குடும்பம் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறது.அக்கா ஒருவனுடன் சென்றுவிடுவதும், சாதியவெறியில் ஊறிய அப்பா அவளைப்பிடித்து இரண்டாம்தாரமாய் மணமுடித்துக் கொடுப்பதும்,அண்ணணின் குடிப்பழக்கமும்,எப்போதும் சண்டையில் முடிகிற பெற்றோரின் பேச்சும்,அவனை மனம் வெறுக்கச் செய்கிறது.
பள்ளி முடித்து கல்லூரியில் சேர்கிறான்.வீட்டைவிட்டு போனால் போதும் என்ற மனநிலையில் விடுதியில் தங்குகிறான்..விடுதியின் கொடுமை தாங்க முடியாமல் வேறு வழியே இல்லாமல் வீடு திரும்ப வேண்டியதாகிறது.தாத்தாவின் மரணமும் அதன்பின் நடக்கும் சாதிய பிரச்சனைகளும் ,அவலங்களும் அவனால் தாங்க முடியாமலாகிறது.சின்ன விஷயங்களைக் கூட சாதியின் அடிப்படையில் குத்திக் கிழிப்பது நமக்குமே வாசிப்பில் பெரும் சிரமத்தைத் தருகிறது.ஏன் இப்படி என்ற கேள்வியும்,குடும்பத்தையும் விட்டுக் கொடுக்க முடியாத பாசமுமாய் அவனின் தவிப்பு நம்மையும் பற்றிக்கொள்ளும்.நாய் மணி இறந்ததும் அதை அவன் புதைப்பதோடு முடிகிறது நாவல்.துக்கத்தை மட்டுமே பெரிதாகச் சொல்லும் புத்தகம்.வாசித்து முடிந்தபின்னும் கனமாகவே இருக்கும் மனதெல்லாம்.