உலகப் புகழ் பெற்றப் பிரபஞ்சவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? காலப் பயணம் சாத்தியம்தானா? விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா? செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?’ போன்ற, பிரபஞ்சம் தொடர்பான ஆழமான கேள்விகளுக்குத் தன்னுடைய அறிவார்ந்த கருத்துக்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
பிரபஞ்சத்தைப் பற்றிய நம்முடைய புரிதலை விரிவுபடுத்தவும், அதன் மாபெரும் புதிர்கள் சிலவற்றை முடிச்சவிழ்க்கவும் ஹாக்கிங் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். கருந்துளைகள், காலநேரம், பிரபஞ்சத்தின் துவக்கம் ஆகியவற்றைப் பற்றிய அவருடைய கோட்பாடுகள் விண்வெளிக்கு அப்பால் அவருடைய மனத்தைக் கூட்டிச் சென்றபோதிலும், பூமியின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதில் அறிவியல் ஓர் இன்றியமையாத பங்காற்றுவதாக அவர் நம்பினார். அதனால், பருவநிலை மாற்றம், அணுவாயுதப் போர் குறித்த அச்சுறுத்தல், அதிக ஆற்றல் படைத்தச் செயற்கை நுண்ணறிவு போன்ற, மனிதகுலத்தைத் தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அவசரமான விவகாரங்களை நோக்கி ஹாக்கிங் தன் கவனத்தைத் திருப்புகிறார்.
உலகின் மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர் தன்னுடைய இந்த இறுதிப் புத்தகத்தில், மனிதகுலம் என்ற முறையில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களையும், நாம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதையும் பற்றிய தன்னுடைய அக்கறையையும் கரிசனத்தையும் நம் அறிவுக்குத் தீனி போடுகின்ற விதத்திலும் தன்னுடைய இயல்பான நகைச்சுவையுணர்வோடும் நம்மோடு பகிர்ந்து கொள்ளுகிறார்.
Arun Kumar –
#ஆழமான_கேள்விகள்_மட்டும்_அறிவார்ந்த_பதில்கள்
#ஸ்டீபன்_ஹாக்கிங்_வில்லியம்
#இன்னும் நான்கு வருடங்களில் நீங்கள் இறந்து விடுவீர்கள் என மருத்துவர்கள் தனது உயிருக்கு காலக்கெடு விதித்துள்ளதை பெரிதுபடுத்தாமல் இந்தக் காலத்தில் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்ற தன்னம்பிக்கையுடன் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் வில்லியம் … அவரின் இறுதி நூலான இந்த நூலில் தீர்க்கமுடியாத கேள்விகளுக்கு அறிவியல் ரீதியான பதிலை தந்து விட்டே அவர் உடலை விட்டு அவர் உயிர் பிரிந்துள்ளது…
அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் சுருக்கமாக.
கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா?
கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவர் இந்த அறிவியல் விதிகளின்படியே அவர் இருக்க வேண்டும்.. அப்படி இந்த விதிகளின்படி அவர் இருந்தால் அவர் கடவுளா…
பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது?
இப்பிரபஞ்சம் எந்த கடவுளாலும் தோற்றுவிக்கப் படவில்லை. இப்பிரபஞ்சம் அறிவியலின் விதியின் படியே தோன்றியிருக்கிறது. அந்த அறிவியல் விதியினை நாம் கிட்ட நெருங்கி விட்டோம். இன்னும் பல ஆண்டுகளில் அதற்கான முழு விடையையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்…பெருவெடிப்புக் கொள்கை என்ற கோட்பாடு முழுவதுமாக நிரூபிக்கப்படும்..
அறிவார்ந்த வேறு உயிரினங்கள் இப்பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா?
முதலில் பூமியில் அறிவானந்த உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பி… பூமிக்கு வெளியே அறிவார்ந்த உயிர்கள் இருந்திருந்தால் அது இன்னேரம் பூமியை வந்தடைந்து இருக்கும் . இருக்கும்பட்சத்தில் இந்நேரம் வந்திருக்க வேண்டும் வரவில்லை ஆனால் இருக்கவும் வாய்ப்பு உள்ளது…
வருங்காலத்தில் நாம் இந்த பூமியில் உயிர் பிழைத்து இருப்போமா?
இப்போது இருக்கும் நிலையில் நமது பூமி ஒன்று அணு ஆயுதங்களால் அழிந்துபோகும் அல்லது கட்டுப்படுத்த முடியாத பூமியின் பருவ மாற்றங்களால் நாம் முற்றிலும் அழிந்துவிடுவோம் அதற்குள் இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழ வேறு கோள்களை தேடவேண்டும்…
விண்வெளியை நாம் காலனி படுத்த வேண்டுமா?
உயிர் பிழைத்திருக்க கண்டிப்பாக நாம் காலனிப் படுத்தியே ஆகவேண்டும் ..அதற்கான கோள்களை நாம் தேட ஆரம்பித்து இருக்க வேண்டும் அதனை கண்டுபிடித்து இந்த பூமி முழுவதும் அழிவதற்குள் அங்கு தனது வீடுகளை அமைத்துக் கொள்வது சிறந்தது…
செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சி விடுமா?
செயற்கை நுண்ணறிவு என்றும் அதனை உருவாக்கியவர்கள் கையில் இருப்பதைப் பொறுத்து.. செயற்கை நுண்ணறிவை கொண்டு நமது மனித சமுதாயம் பல்வேறு வகையில் முன்னேற்றம் அடையும்.. ஆனால் அது தீயவர்கள் கைக்கு சென்றால் இந்த பூமி முற்றிலும் அழிந்துவிடும்…
ஒரு ரோபோவின் ஐ உருவாக்கி அதனிடம் அவர்கள் எழுப்பிய முதல் கேள்வி கடவுள் இருக்கிறாரா என்று அதற்கு அந்த ரோபோ சொல்லும் பதில் இருக்கிறார் இப்பொழுது பிறந்து விட்டார் ..