பவுத்தம்: ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம்
எழில். இளங்கோவன்
இந்தியச் சமய வரலாற்றில் பவுத்தம் தொடர்பான ஒரு முக்கிய பிரச்சனையை நூலாசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். பவுத்தம் என்பதை பொதுமைப்படுத்திப் பார்க்காமல் அதில் உருவான பிரிவுகளைப் பாகுபடுத்திப் பார்ப்பதன் அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது.
– பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன்
புத்தரின் மூல உபதேசங்களை அறிய விரும்புகிற எவரும், அந்தப் பெரு நெருப்பை மூடி மறைக்கப் போடப்பட்ட துணிகளைக் காண விரும்புகிற எவரும் இந்த நூலை அவசியம் படித்தாக வேண்டும். அருவிபோல நேரடியாக மனசுக்குள் இறங்கும் சரசர நடையில் இதை ஆசிரியர் ஏழுதி இருக்கிறார்.
– பேராசிரியர் அருணன்
சீ.ப்பி. செல்வம் –
#புரட்சியாளர்_புத்தர்…
புத்தரைப் பற்றிய குறைந்தபட்ச உண்மையான வரலாற்று நிகழ்வுகளை பல்வேறு இடங்களில், பல்வேறு நிகழ்வுகளில், பல்வேறு நபர்களில் இருந்து பெறப்பட்ட செய்திகளிலின் வாயிலாக உண்மையை தெரிந்து கொள்வதற்கான முனைப்பில் இறங்கியபோது பெரும்பாலான இடங்களில் அது தோல்வியின் விளிம்பிற்கு வந்து நிராசையாக முடிந்துபோனது. பல நண்பர்களிடம் புத்தரைப் பற்றிய செய்திகள் வந்தபோதிலும், பாடப்புத்தகங்களிலோ அல்லது அவர்கள் எங்கேயோ கேட்ட செவிவழி செய்திகளையோ அவர்கள் இதுதான் உண்மை என சொல்லிவிட்டு சென்றார்கள். ஆனால் சமீபத்தில் கிடைக்கப்பெற்ற #பவுத்தம்_ஆரிய_திராவிடப்_போரின்_தொடக்கம் என்ற புத்தகம் பௌத்தத்தை பற்றிய ஒரு ஆழமான புரிதலை மிக எளிமையான வடிவில் தந்திருக்கிறார் இந்த புத்தகத்தின் ஆசிரியர் #எழில்_இளங்கோவன் அவர்கள். இந்த புத்தகத்தில் சுமார் 20 தலைப்புகளில் பௌத்தத்தைப் பற்றிய பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறார். புத்தர் ஒரு அரச குடும்பத்தின் இளவரசர் என்பதும், அவர் துறவியாக மாறுவதற்கு மூன்று காரணங்கள் அவருக்கு ஏதுவாக இருந்தது எனவும் படித்து வந்த நமக்கு, புத்தர் ஒரு அரச குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல, புத்தர் அப்போது இருந்த ஒரு இனக்குழுவின் உறுப்பினராக தான் அவர் இருந்திருக்கிறார் எனவும், அதற்குப் பின்பு வந்த வேதங்களும் வேதங்களின் பால் இந்த சமூகத்தில் பிளவுபட்டு இருக்கின்ற மக்களை பற்றியும் அவர் நினைத்து, மக்களை கூட்டி இந்த வாழ்வினுடைய உண்மையினை எடுத்துச் சொல்லும் விதமாகதான் அவர் துறவு வாழ்க்கைக்கு சென்றிருக்கிறார் என்பது இந்த புத்தகத்தில் நமக்கு தெளிவுபட பிறக்கிறது. சமுதாயத்தில் பிளவு படுத்திய ஏற்றத்தாழ்வுகளை புத்தர் கலைந்து இருக்கிறார். சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக அவருடைய குரல் மிக வலுவாக பதிந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பழங்கால இந்தியாவில் புரையோடி இருந்த சாதி, சமய,ஏற்றத்தாழ்வு, மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராக முதன்முதலாக புரட்சியில் இறங்கியவர் புத்தர் என்றே நம்மால் இந்தப் புத்தகத்தின் வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது. மக்களின் மனங்களில் பழகியிருக்கிற அல்லது நம்பிக்கை என அவர்கள் தவறாக நினைத்து இருக்கிற எல்லா விஷயங்களையும் அவர் மக்களிடையே கொண்டு சென்று அதனை சுக்குநூறாக உடைத்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் இன்னும் விரிவான பல செய்திகளை பல்வேறு அறிஞர் பெருமக்கள் இதில் கூறியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக புத்தமதத்தை ஏற்ற அம்பேத்கர் அவர்களும், ஆராய்ச்சி தத்துவ பேரறிஞர் தேவிபிரசாத் சத்தோபாத்யா அவர்களுடைய வரிகளும், ரொமிலா தாப்பர், ஹரி பிரசாத் சாஸ்திரி மற்றும் எஸ்.பொன்னுத்துரை போன்ற இன்னும் பல வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு விஷயங்களை ஆய்வின் அடிப்படையில் இந்த புத்தகத்தில் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்கள். புத்தரை ஒரு ஆய்வு நோக்கில் எடுத்துக் கொண்டால் கூட நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு விஷயங்களை இந்த புத்தகம் பேசுகிறது. ஒவ்வொருவரும் வரலாற்று நோக்கிலும் வரலாற்றின் அடிப்படையாக கொண்டு ஆய்வு நோக்கில் வாசிக்க வேண்டிய ஒரு உன்னதமான புத்தகமாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது. வாசியுங்கள் நண்பர்களே… நம்முடைய வரலாற்று கண்ணோட்டத்தை, வரலாற்று பார்வையை தவறாக கற்றுக்கொடுத்த வரலாற்றுப் புரிதலை, நமக்கு தெளிவுபடுத்துவதற்கு ஒரு ஆய்வு புத்தகமாக இந்த புத்தகத்தை நான் கருதுகிறேன்.
நூலின் பெயர்: பவுத்தம் – ஆரிய திராவிடப் போரின் தொடக்கம்
ஆசிரியர்: எழில்.இளங்கோவன்