Gopalla Gramam
பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி.ராஜநாராயணன்.
Srinivasan –
https://youtu.be/JPvRmDZ483g
C. Patcheammalle –
#Reading_marathon_2021
RM 159
5/50
புத்தகம் :கோபல்ல கிராமம்
ஆசிரியர்: கி ராஜநாராயணன் பக்கம் : 176
பதிப்பகம்: அன்னம்
கதை ராஜன் கி.ரா வின் இலக்கிய படைப்புகளில் இரண்டாவதாக நான் வாசிக்க எடுத்தது கோபல்ல கிராமம். “தமிழில் மிகச் சிறந்த முதல் பத்து நாவல்களில் முதன்மையான நாவல்” என்ற வாசகத்தை தாங்கிக் கொண்டிருந்தது புத்தகத்தின் மேல் அட்டை. உண்மையில் உண்மையான வார்த்தைகள்.
ஒரு நூற்றாண்டு கால வரலாற்றை , அடித்தட்டு மக்களின் அன்றாட மொழியிலே, வாசகர்கள் நெஞ்சை அள்ளும் வகையிலேயே இப்படியும் எளிமையாக ஒரு காவியத்தை படைக்க முடியுமா? என்ற வியப்பே விஞ்சி நிற்கிறது புத்தகத்தின் கடைசி வரிகளை படித்து முடிக்கும்போது.
கட்டபொம்மனுக்கு ஒரு நூற்றாண்டு காலம் முன்பாக ஆந்திராவில் இருந்து அகதிகளாக அடைக்கலம் தேடி தமிழகம் நோக்கி பயணிக்கிறது ஒரு சமூகம். அப்படி அந்த சமூகத்தை பயணிக்க வைத்தது எது? பயணத்தின் போது அவர்கள் கண்ட அனுபவங்கள் என்ன? பட்ட துன்பங்கள் என்ன? அடைக்கலம் தேடி வந்தவர்கள் தஞ்சம் புகுந்தது எங்கே? காட்டை எரித்து கரிசல் காடாக மாற்றியது எப்படி? கோபல்ல கிராமம் உயிர் பெற்றது எப்படி? சுதந்திரமான சமூக அமைப்பைக் கொண்ட கோபல்ல கிராமம் ராணி விக்டோரியாவின் வசம் வந்தது எப்படி? ராணியின் வசம் வந்தாலும் சுதந்திரதாகம் நீறுபூத்த நெருப்பு போல கனன்று கொண்டிருந்ததற்கு காரணம் என்ன? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் தான் கி .ராவின் கோபல்ல கிராமம். இந்த எல்லைக்குள் தான் கதையினை காட்சிப்படுத்தியிருக்கிறார் கி.ரா.
ஒரு சமூகத்தின் வரலாற்றை, வாழ்வியலை, பண்பாட்டை – வீரம் பாசம் நேசம் காதல் நேர்மை கோபம் சோகம் மகிழ்ச்சி என நவரசங்களும் சொட்டச்சொட்ட நமக்கெல்லாம் களி விருந்து படைத்திருக்கிறார் கிரா என்றுதான் சொல்லவேண்டும்.
கோபல்ல கிராமத்தின் விடியலோடுதான் கதை தொடங்குகிறது. இப்படியும் ஒரு கிராமத்தின் விடியலை காட்சிப்படுத்த முடியுமா என்று முதல் பக்கத்திலேயே நம்மை கிறங்க வைத்து விடுகிறார் கி.ரா.
“பச்சிளம் குழந்தைகள் தாலியுடனோ மறுகாம்பை நெருடிக்கொண்டோ முலை உண்ணும் மெல் ஒலிகள்” – இந்த வரிகளைப் படிக்கும் பொழுது உண்மையில் நம் காதோரம் முலை உண்ணும் மெல்லிய ஒலி கேட்கத்தான் செய்கிறது.
ஒரு கிராமம் துயில் கலைவதை இவ்வளவு நுணுக்கமாக எழுத கி.ரா ஒருவரால்தான் முடியும் என்று எண்ணுகிறேன்.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்துகின்ற போதே கிராமத்தின் சூழலையும் அவர்களின் வாழ்வியலையும் சேர்த்தே சொல்லுகின்ற இடங்கள் அருமை.
வித விதமான பறவைகள், விலங்குகள், மரங்கள், செடிகள், கொடிகள் என எதையும் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொன்றுக்குள்ளும் இவ்வளவு விஷயங்களா என்று வியக்க வைக்கிறார் கிரா. இத்தனையும் அவருக்கு எப்படி அத்துப்படியானது?
கதுவாலிப் பறவை குட்டிச்சேர்; ஆ குட்டிச்சேர் என்று கத்துமாமே? இதுவரை நான் கண்டதுமில்லை கேட்டதுமில்லை நிறைய தேடல்களுக்கு வித்திடுகிறார் கிரா.
அதுமட்டுமா? கம்பஞ்சோறு உருண்டை, கலையத்துக்கு மூடி ஒரு சிரட்டை, வத்தல், நார்த்தங்காய் ஊறுகாய், ஒட்டிவைக்கப்பட்ட காணத் துவையல் என்று சாப்பாட்டையும் விட்டு வைக்கவில்லை கிரா.
குரவை மீன் மண்புழுவிற்காக காத்திருக்கிறது. நாரை குரவை மீனுக்காக காத்திருக்கிறது. நரி நாரையை பிடிக்க காத்திருக்கிறது. ஆஹா! உணவுச் சங்கிலி யை இப்படிக் கூட சொல்லித் தர முடியுமா என்ன?
நாவலின் 2 வது அத்தியாயத்தை படிக்கும் போதே, அட! இது முதல் மரியாதை படத்தில் வந்த காட்சி ஆயிற்றே! என்று மனசு கூக்குரலிடுகிறது. ( கொலைகாரனின் கட்டை விரலோடு ஒரு பெண்ணின் பிணம் தண்ணீரில் மிதக்கும் காட்சி)
முதல் மரியாதை மட்டுமல்ல காப்பான் திரைப்படத்தின் கதைக்கருவும் இங்கிருந்துதான் எடுக்கப்பட்டதோ என்றும் நமக்கு தோன்றுகிறது. நாவலில் 36 வது அத்தியாயத்தில் வெட்டுக்கிளிகளின் அட்டகாசமும் வந்துவிடுகிறது. ஊரையே நாசம் செய்து விட்டு வெட்டுக்கிளிகள் வந்தபடியே போய்விடுகின்றன.
கல்யாண கொட்டகையை பிரித்த வீடு மாதிரி ஊரே வெறிச் என்று களை இழந்து இருந்தது . – என்று ஊரை விவரிக்கும் வரிகள் அநாயாசம்.
நாவல் முழுக்க ஒவ்வொரு கதாபாத்திரமும் சொல்லுகின்ற குட்டி குட்டி கதைகள் நாவலுக்கு மெருகூட்டுகின்றன.
கம்மவார் சமூகத்தின் வரலாற்றை சொல்வதற்காகவே வந்த பாத்திரம் மங்கத்தாயாரம்மா. 137 வயதான அந்த பூட்டி அம்மாதான் நமக்கு இந்த கதையை சொல்லிக் கொண்டு வருகிறாள். அவளின் மெல்லிய வருடலையும் தாய்மையின் உணர்வையும் சொல்லுகின்ற இடங்கள் நெஞ்சை நெகிழ வைக்கின்றன.
எல்லா கதைகளைப் போலவே இந்தக் கதைக்கும் ஒரு பெண்ணின் பேர் அழகுதான் காரணமாகி விடுகின்றது.
ஆம் . சென்னா தேவியின் பேரழகில் மயங்கிய துலுக்க ராஜாவின் கொடுமைதான், கம்மவார் சமூகத்தை அகதிகளாக்கி தமிழகத்தை நோக்கி பயணிக்க வைக்கிறது. சேர்த்து வைத்த சொத்துகள், வளர்த்த ஜீவனங்கள் என்று அனைத்தையும் விட்டுவிட்டு யாருக்காக அகதிகள் ஆனார்களோ அவளையும் வருகின்ற வழியிலேயே பறி கொடுத்து விட்டார்கள் இந்த கம்மவார் சமூகத்தினர். அந்த இடத்தில் , நாட்டார் தெய்வ வழிபாடுகள் வந்த கதைகளையும் சேர்த்தே சொல்லிக் கொண்டு வருகிறார் ஆசிரியர்.
கோவிந்தப்பா, அக்கையா, சுந்தரப்ப நாயக்கர், கிருஷ்ணப்ப நாயக்கர், இவர்கள் எல்லாம் கோபல்ல கிராமத்தில் இன்னும் சில முக்கியமான கதாபாத்திரங்கள்.
ஹாஸ்யம் ததும்ப அக்கையா சொல்லும் குட்டி குட்டி கதைகள் அலாதியானவை. மரங்களைக் கூட மனிதன் உயிருள்ள ஒரு உறவாகவே கருதி இருக்கிறான் என்பதை அக்கையா வழியாக மிக அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறார். காய் கனிகளோடு பூத்துக் குலுங்கும் வேப்பமரத்தை , வேப்பம் மாள் குனுக்கு போட்டு இருக்கா என்று சொல்வதும், எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு நிற்கும் வாகை மரத்தை , இந்த வாகைக்கு லச்சை கிடையாது. எல்லாத்தையும் உதுத்துட்டு அம்மணமாய் நிற்கிறதைப் பார் என்று சொல்லும் வரிகளும் இதற்கான ஆதாரங்கள்.
சுதந்திரமாக செயல்பட்ட இந்த சமூகத்தினர் , மக்களின் குற்றத்திற்கு ஏற்ற தண்டனைகளையும் தாங்களே முடிவு செய்கின்றனர். கழுவேற்றம் பற்றிய பதிவு வலி மிகுந்தது.
கோட்டையார் வீட்டை வைத்தே கோபல்ல கிராமத்தை வளைத்துக் கொள்கிறான் வெள்ளையன்.
ஆரம்பத்தில் அவர்கள் ராணி விக்டோரியா வின் ஆட்சியை ஏற்றுக் கொண்டாலும் நாட்கள் உருண்டோட நம்பிக்கையும் ஓடிவிடுகிறது.
நம்ம நிலத்தில் முளைச்ச வெள்ளரிக் கொடியில் இருந்து கூட ரெண்டு பிஞ்சு பிடுங்கி, அவனைக் கேட்காமல் யாருக்கும் கொடுக்கப்படாதாமே! – இந்த வரிகளைப் படிக்கும்போது , புத்தகம் எப்போது எழுதப்பட்டது என்று ஒரு கனம் பக்கத்தைத் திருப்பிப் பார்க்கிறேன். 1976 என்று இருக்கிறது. அட ! அப்போதே உலகமயமாக்கல் பற்றி எழுதி இருக்கிறாரே என்று மனம் சற்றே வியந்து தான் நிற்கிறது. நமக்குத்தான் வெள்ளையனின் சூழ்ச்சி புரியவில்லை.
எல்லா சூழ்ச்சிகளையும் புரிந்து கொண்ட கோபல்ல கிராம மக்களின் சுதந்திர ஆவேசம் நீறு பூத்த நெருப்பாக இருந்தது என்று சொல்லி ஒரு சமூக வரலாற்றை தேசிய வரலாற்றோடு இணைத்தது அருமையிலும் அருமை.
கோபல்ல கிராமம் – காலங்கள் கடந்தாலும் இன்றைக்கும் புதுமையாகவே இருக்கிறது.