மிளிர் கல்
Publisher:
பொன்னுலகம் பதிப்பகம் Author:
இரா.முருகவேள்
சிலப்பதிகார வரலாற்றினூடே இரத்தினக்கற்களின் அரசியலை நாவல் பேசிய போதிலும் இது மீதேன் பேரிலும், கெயில் குழாய் பதிப்பின் பேரிலும், காடுகள் -மலைகள் – நீர்நிலைகள் – தாது மணல் கொள்ளைகள் என அனைத்தின் பேரிலும் நடக்கும் ஆக்கிரமிப்புகளையும், மக்களின் போராட்டங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் புரிந்துகொள்வதற்கு துணை செய்கிறது.
2015 – ல் விகடன் விருது பெற்ற நாவல்.
Delivery: Items will be delivered within 2-7 days
vjsivasankar26 –
மிளிர் கல் – பெயரிலிருந்தே புதிரோடு தான் நாவல் நம்மை பயணம் செய்ய வைக்கிறது. அதாவது, கண்ணகியின் காற்சிலம்பில் உள்ள கற்களின் பின்புலம், அக்காலத்தில் வணகத்தில் ஏன் பெரும் தேவையாய் இருந்தது மற்றும் இக்காலத்தில் இதனை தேடி ஓடும் அளவிற்கு
இதன் அரசியல் என்ன? பின்னணி என்ன? என்பதையெல்லாம் வரலாற்றோடு, தத்துவங்களோடு முன்னிறுத்தி பேசுகிறது.
‘ கொங்குநாட்டுப் பழங்குடியினத்தின் பெயர் கோவலனுக்கு வைக்கப்பட்டிருப்பது தற்செயலானதா?
கண்ணகி எப்படி கொங்கர் செல்வியாக முடியும்?
சேரன் செங்குட்டுவனுக்கு ஏன் கண்ணகியின் மேல் இவ்வளவு அதீத அக்கறை?
என இம்மூன்று கேள்விகளும் நாவலை
வாசிக்க இன்னும் ஆர்வம் கொடுத்தது.
காரணம், சிலப்பதிகாரம் என்னும் இலக்கியம் போட்ட புதிரில் முன்னரே சற்று ஈர்க்கப்பட்டு இதனை வாங்கி வாசித்தேன். முதல் கட்டம் கொஞ்சம் சரியாக போகவில்லையே என நினைத்தேன். ஆனால், ஒரு எண்பது அல்லது நூறு பக்கங்கள் தாண்டி போகும் போது ஒரு நல்ல ஆராய்ச்சியை, தேவைப்படும் அரசியல் களத்தோடு ஒரு நல்ல பயணக்கதையாய் செதுக்குப்பட்டிருக்கிறது.
இதில் அதிகம் பேசப்படுவது
வரலாறும், தத்துவங்களும் நிறைய பக்கங்களை சூழ, நாம் பயணிப்போம்.
இதில், பிளேட்டோவும் வருகிறார்,
நம்மூர் மயிலை சீனிவெங்கடசாமியும்
வருகிறார். கதைக்கு அவ்வளவு தேவையாய் இருக்கிறது.
மீனவர் இனத்தில் தொடர்ந்து, விவசாயம், பழங்குடியினர், தலித்துக்கள், செட்டியார், கவுண்டர் என அனைத்து தரப்பினரின் பெயரும் கதையில் வெளிப்படையாய் இருப்பது, கதைக்கு இன்னொரு பலம்.
ஆம், ஒவ்வொருவரை பற்றி பேசும் போதும், ஒரு கதாபாத்திரம் ஒரு காரியம் செய்ய முற்படும் போதும் வெறுமென நிகழ்வுகளாய் முடிக்காமல் ஒரு அரசியல், கருத்தியல், வரலாறு என பிணைக்கப்பட்டு மெருகேற்றப்பட்டுள்ளது.
ஒரு ஒரு அத்தியாயங்களை படிக்கும் போது, ஒரு கேள்வியோ, ஒரு சிந்தனையோ நம்முள் ஓடிக்கொண்டிருக்கும், இதனால் ஏனோ, நாவலை முழுவீச்சில் முடிக்க மனம் துடிக்கும்.
‘ மான்கள் துள்ளினாலேயே நீலக்கற்கள் வெளிவருதுன்னு புறநானூறு சொல்லுது ‘ என எவ்வளவு எளிதாக அந்த காலத்தில் மணல் மேற்பரப்பில் இந்த கற்கள் கிடைக்கிறது பாருங்கள். இப்போது? என அறிவியல் ரீதியாகவும் சிந்திக்க தூண்டுது.
வணிகர்களுடைய காலத்தில் சமண மதம் எப்படி இருந்தது எனவும். அதனை ஆண்ட பேரரசுகள் இம்மதத்தினை பழங்குடியினரை அடக்குவதற்கு எப்படி உபயோகப் படுத்தினார்கள் எனவும், பின் நிலப்பிரபுத்துவ வரை வந்து புத்தம் தாண்டி, வைணவம், சைவம் என அலசி ஆராய்ந்து நம்மை பலவிதங்களில் தேடலில் ஈடுபடுத்திவிடக்கூடும் வகையில் சிறப்பாய் அமைந்திருக்கிறது இந்நாவல்.
கதையில் வரும் முல்லை என்னும் பெண் எடுத்த அந்த கடைசி கட்ட முடிவு, இன்று இலக்கியம் பயிலும் அனைவரும் எடுத்தால் நன்றாயிருக்கும் என பலவழிகளில் தேடல் மூலம் செயல்பட நினைக்க வைக்கும்.
ஆம், இலக்கிய தேடலில் தொடர்ந்த இவளது பயணம்? முடிவது அந்த இலக்கியத்தின் சிறப்பு?
மக்களை ஒன்றிணைக்கிறதா?
சிந்தனைகளை மேம்படுத்துகிறதா?
ஒடுக்குகிறதா? அப்படி இருந்தால் என்ன செய்ய வேண்டும் என
ஒரு கேள்வியுடன் கதையின் முடிவில் இன்னொரு பயணத்தை தொடருவாள்.
இதோ, அந்த கேள்வி,
‘ கண்ணகி இந்த மக்களுக்கு ஏன் தேவைப்படுகிறாள்?
கற்புக்கரசியா? தெய்வமா? பழிக்கு பழி வாங்குபவளாகவா? .
நாவல் முடியும் விதம், மிகவும் அருமையான களத்தில் ஒரு சிலிர்ப்பை தந்து முடிந்தது.
யார் அவள்?
வேறு யார்? காளியாக, கொற்றவையாக, அம்மனாக…காலங்கள் கடந்து நிற்கும் அவள்தான்.
என முடிகிறது!!
கட்டாயம் வாசிக்கப்பட வேண்டியவை.,
ART Nagarajan –
மிளிர்கல்
இரா. முருகவேள்.
சிலப்பதிகாரம் மறுவாசிப்பு
புகாரிலிருந்து,
கொடுங்கலூர் வரை பயணம்செய்த நண்பர் இரா.முருகவேள்
கண்ணகி,கோவலன் ஆகிய இருவரும் மதுரையை நோக்கிய பயணம் எவ்வாறு நடந்ததோ அதன் வழியே பயணம் செய்து கல்லூரியில்
ஆராய்ச்சி மாணவரும்,
மாணவியும்,
ஒரு பேராசிரியரும்
காங்கேயத்தில் கிடைத்த ரத்தினக்கற்களான
மாணிக்கம், மரகதம் போன்றவைகளை
வணிகம் செய்யும் விதமும்,
தமிழ்நாட்டோடு
ரோமாபுரி வணிகர்கள் தொடர்பு எப்போது ஏற்பட்டது
2என அறியவரும் போது இப்போது போலவே ஒரு மாபியா கும்பல் ஒன்று கதையின் ஊடே வந்து செல்வதை மிகத் துல்லியமாக நிலை நிறுத்தியுள்ளார்
வாசிப்பாளரோடு
கதையின் நாயகர்கள் உரையாடுவது போல வீச்சாக நகர்கிறது!
இந்த நூல் தமிழகத்தின் பல
பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது
இந்நூல்
சிலப்பதிகாரத்தை
வணிக மாபியாக்கள்
எப்படி இயக்குகிறார்கள் என்பதையும்,
கதைக்குள் இருக்கும் அரசியலை
உள்ளங்கை நெல்லிக்கனி போல் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்
அறிவுலகம்
நண்பர் இரா.முருகவேள் அவர்களை
கொண்டாடி மகிழ்கிறது!
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்.
ART. நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை.
இரா.கோமதிசங்கர் திருநெல்வேலி –
“மிளிர்கல்”
புதினம்
ஆசிரியர்: முருகவேள்
அமேசான் கிண்டிலும் முகநூல் நண்பர்கள் கொடுக்கும் அறிமுகங்களும் வீட்டிற்குள் முடக்கிப் போட்டுவிட்ட தொற்றுச் சூழலில் முன் தீர்மானமற்ற வாசிப்புகளை முன்னெடுத்து விடுகின்றன. நூலகங்களிலும் புத்தக விழாக்களிலும் நான் தேர்ந்தெடுத்த புத்தகங்களிலிருந்து கிண்டில் தேர்வுகள் முற்றிலும் மாறுபடுகின்றன. அதற்குக் காரணம் கிண்டிலில் அறிமுகமாகும் நூல்களின் புதிய படைப்பாளிகளும் அவர்களின் கதையாக்கமும்..
படைப்பூக்கமும் பரந்த வாசிப்பும் அவர்கள் படைப்புகளில் பளிச்சிடுகின்றன. அத்தகைய புதினங்களில் இதுவும் ஒன்று..
முருகவேளின் படைப்பொன்றை முதன்முதலாக வாசிக்கலானேன்..காரணம் தோழன் பிரசன்னா அனுப்பியிருந்த ‘இடது சாரிகளுடன் என்ன சர்ச்சை’ என்ற திரு.ஜெயமோகனின் பதிவொன்று..அந்தப் பதிவில் திரு.இரா.முருகவேளை இடதுசாரி எழுத்தாளர் என்று அடையாளம் காட்டி முருகவேளின் படைப்பை ஜெயமோகன் அவர் பாணியில் ‘மிகுந்த நாகரிக’த்துடன் விமர்சித்திருந்தார்..மேலும் இடதுசாரி வாசகர்கள் என்றொரு ‘வகைமை’யைக் கண்டுபிடித்து அவர்கள் எல்லோரும் வாசிப்பு ரசனையற்ற படைப்புகளை (அதாவது ஜெமோ குறிப்பிடும் ‘இடது சாரி’ப் படைப்புகளை)‘கசடு’களாக வடிகட்டி தமக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் ‘அரிப்பான்கள்’ என்று முடித்திருந்தார். இந்தப் பதிவுதான் என்னைக் கிண்டிலில் முருகவேளைத் தேட வைத்தது..கூடவே ‘எரியும் பனிக்காடு’ என்ற இவரது மொழி பெயர்ப்பு நூலொன்றையும் ‘முகிலினி’ என்ற மற்றுமொரு படைப்பினையும் இறக்கி வைத்திருக்கிறேன்.
இந்த நூலறிமுகம் ஜெயமோகனின் பதிவுக்கு பதிலல்ல என்பதை முதலிலேயே சொல்லி வைக்கிறேன். கண்ணகியின் பாதையைத் தேடி ஓடுகையில் மிளிர்கல்லின் அரசியலைக் கணடுகொண்ட முருகவேளின் கதாபாத்திரங்களைப் போல ஜெமோவின் இடதுசாரிகள் பற்றிய பதிவிலிருந்து நான் திரு.முருகவேளைக் காணலானேன் என்றறிக.
இனி நூலுக்குள் போகலாம்.
வாழ்க்கையிலும் படைப்பாக்கங்களிலும் வலதுசாரித் தன்மையும் இடதுசாரித் தன்மையும் உமையொரு பாகன் உருவம் போல சேர்ந்து தெரிவதை இந்நாவல் சொல்லிவிடுகிறது..சொல்ல முடியாத தருணங்களில் ஒரு படைப்பாளி தனது பாத்திரங்களோடு ஒரு பக்கம் சார்ந்து வாசகனையும் இழுத்துப் பார்க்கிறான். வாசகன் அசைந்து கொடுப்பது படைப்பின் அறச்சீற்றத்தை படைப்பாளி கடத்தும் திறனில் இருக்கிறது..இத்தன்மையை இந்தக் கதையின் கூடவே ஓடிவரும் ‘சிலப்பதிகார’க் கதையினோடும் பொருத்திப் பார்க்க முடியும்..
“நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்து” ( புலியூர் கேசிகன் ‘எழுநிலை மாட கட்டிடத்தின் நடுமாடத்தில் இருந்து’ என்று உரை எழுதியுள்ளார்) வந்த செல்வ மகள் கண்ணகி. “செவ்வேள்” போலும் அழகுவாய்ந்த கோவலனைக் கணவனாகப் பெற்றவள. மாதவியின்பால் சென்று செல்வமெலாம் தொலைத்து வந்திருக்கும் கணவனைச் “சிலம்பு உள”.. கவலை வேண்டாம.. வாழ்ந்துவிடலாம் என்று சினமில்லாமல் ஆறுதலுடன் ஏற்றுக் கொண்டவள்..கணவன் பின்னோடு புகார் நகர் நீங்கி “ஆறு ஐங்காதம்”(முப்பது காதங்கள்) நடந்து “மாண்புடை மரபின் மதுரைக்கு” வந்து அமைதியும் அடக்கமும் பொலியும் கண்ணகி தன் கணவன் அரண்மனைச் சிலம்பினைக் கவர்ந்த “கள்வனாம் என்றே” கொலையுண்டான் என்றதும் சீறி எழுகிறாள். இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் அரசவையில் தன் கணவன் கள்வனில்லை என்று தன் சிலம்பிலிருந்த ‘மிளிர் கல்லை’க் (மாணிக்கம்) காட்டி நிரூபித்த பின்னே மதுரையை சினத் தீயினால் எரித்தாள். கண்ணகி காளியானாள் அல்லவா..
புகாரிலிருந்து கணவன் மற்றம் கவுந்தி அடிகளுடனும் மதுரையிலிருந்து சேர நாட்டிற்குத் தனியாகவும் கண்ணகி நடந்து போன பாதையோடு போய் கள ஆய்வு செய்து ஒரு ஆவணப் படம் தயாரிப்பது என்ற திட்டத்தோடு சென்னைக்கு வரும் டெல்லிப் பெண் முல்லை..சிலப்பதிகார வாசிப்பிலிருந்து கண்ணகியை, அவள் காலத்துப் பெண்களை, ஈராயிரம் ஆண்டுத் தொன்மைத் தமிழுலகப் பண்பாட்டை ஆராய்ந்து ஆவணப் படுத்தலாம் என்ற ஆசையையும் பத்திரிகை உலகப் பணி அனுபவத்தையும் மட்டுமே கொண்டிருக்கும் ஒரு நவீன நகர வாசி.
முல்லையோடு பத்திரிகை இயல் படித்த பழைய தோழன் நவீன்..புகைப்படக் கலைஞன்..சென்னையில் ஒரு கம்யூனிஸ்ட் குழுவின் செயல்பாட்டாளன். முல்லை தன் ஆவணப் பட வேலைக்கு அவனைத் துணைக்கழைக்கிறாள். கட்சியின் வேலைத்திட்டங்களில் சற்று ஆர்வம் குறைந்த தருணத்தில் இருந்த நவீன் ஒரு மாற்றம் போல அவ்வழைப்பை கட்சியின் அனுமதியோடு ஏற்றுக்கொள்கிறான்.
பேராசிரியர் ஸ்ரீகுமார் ரத்தினக் கற்களைப் பற்றிய ஆய்வாளர். செல்வம், மனைவி, புதல்வி என எல்லாம் சரியாக அமைந்துவிட்ட குடும்பத்தலைவர்..கீழைக் கடற்கரையிலிருந்து மேலைக் கடற்கரை வரை செல்லும் பழைய இராசகேசரிச் சாலை என்ற வணிகப் பெருவழியை அதாவது ‘மிளிர்கல்லின்’ பாதையை ஆராய விழைகிறார்..அவர் பயணமும் பூம்புகாரில் தொடங்குகிறது.
காங்கேயம் கரூர் சேலம் உள்ளிட்ட கொங்கு பூமியில் தரை மட்டத்தில் பரவலாகக் கிடைத்து வரும் தரம் குறைந்த ரத்தினக் கற்களை வியாபாரம் செய்து கொள்ளையாய் பணம் திரட்டி நிலங்களை வளைத்துப் போட்டு அரசியலிலும் அமைச்சரவை வரை வந்துவிட்ட ‘ஐயா’.
நஷ்டமடைந்து வரும் ஒரு வட இந்திய ரத்தினக் கற்கள் வியாபாரம் செய்யும் நிறுவனத்தை விழுங்கிக் கொண்ட சர்வவேச பகா நிறுவனமொன்று கொங்கு நாட்டில் சுரங்கக்களுக்காய் நிலங்கள் வாங்கி தமிழகத்தில் கால் பதிக்க வருகிறது..ஸ்ரீகுமாரின் ஆராய்ச்சியை தன் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு பயன் படுத்த எண்ணுகிறது.
முல்லையும் நவீனும் பேராசிரியர் ஸ்ரீகுமாரை பூம்புகாரில் சந்தித்த பிறகு கதை விறுவிறுப்பாகிறது.. தொல்தமிழ் பண்பாடு குறித்த விவாதங்களும் இரத்தின வணிகத்தின் தொன்மையும் பயணத்தின் வழியே எளிமையாக முன்வைக்கப் படுகின்றன. அவ்விவாதங்கள் சமகால சமூக அரசியல் சூழலையும் ஒப்பிடுகின்றன.
“பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்” என்று இளங்கோவடிகள் சிலம்பின் ஆரம்பத்தில் போற்றும் காவிரி புகும் பட்டினம் இன்று மிகச் சிறிய ஊராகக் குறுகிக்கிடக்கிறது..
இந்திரவிழவு எடுத்த காதையில் இளங்கோ வர்ணிக்கும் “மறு இன்றி விளங்கும்(விளங்கிய)மருவூர் பாக்கமும்” “பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்” இல்லை..
“வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலையக் கடற்காவிரி” என்று பட்டினப்பாலை கூறும் கடற்காவிரி மணல்காவிரியாய்…
ஈராயிரம் ஆண்டுக்கு முந்தைய தென்படாத தடங்களைத் தேடும் இவர்களின் பயணத்தில் மெதுவாக நாம் இணைந்து கொள்கிறோம்..
பூம்புகார், காவேரியின் வடகரை, திருவரங்கம், திருச்சி, அழகர்மலை, மதுரை, கரூர், கண்ணகிக் கோவில், கொடுங்களுர் என்ற சிலம்பு வழிப் பயணத்தின் ஊடே மாணிக்கக் கற்களுக்கான வேட்டையின் சலசலப்புகளும் தொடர்கின்றன..மூன்று பாத்திரங்களும் அறச் சீற்றம் கொள்ளுவதான தருணம் வருகிறது..பகாசுர நிறுவனமும் ஐயாவும் அதிகார வர்க்கமும் கைகோர்த்து கொங்கு பூமியை ரத்தின வேட்டைக் களமாக்கப் போவதின் சூசகங்கள் புரியத் துவங்குகின்றன. ஆய்வாளர் ஸ்ரீகுமார் அந்தத் தருணத்தில் மற்ற இருவரிடமும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு விடைபெறுகிறார்..நவீன் என்ற செயல்பாட்டாளன் நேரடி நடவடிக்கைக்கு தயாராகிறான்..அவனே எதிர்பாரா வண்ணம் முல்லை ‘கண்ணகி’ யாய் அவனை முந்தியிருப்பதை காண்கிறான்..
முருகவேள் போர் முரசம் கொட்டி கதையை நிறைவு செய்கிறார்…
புதினம் நிறையப் பேசுகிறது…கதைக்கு வெளியேயும்.. படைப்பாளி தனது சமகாலச் சார்பு நிலைகள் எல்லாவற்றையும் ஒரே புதினத்தில் திணிக்க முயல்வது வாசிப்பனுபவத்தை தடுக்கிறது.
முருகவேளின் அடுத்த படைப்பை சௌகரியமாக எதிர்கொள்ள வைக்கிறது இந்த “மிளிர்கல்”லின் ஒளி..