முகலாயர்கள் :
பாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் திணித்து விடுகிறது நம் பாடப்புத்தகம்.
உண்மையில் அது ஒரு பிரம்மாண்டமான சரித்திர சமுத்திரம். நாம் இதுவரை பார்க்காத பக்கங்கள் மிக நிறைய! அத்தனையும் அற்புதம் சுமந்த பக்கங்கள்.
பல கைக்குட்டை கிராம ராஜ்ஜியங்களாக இருந்த துணைக் கண்டத்தை முதல் முதலில் ஒரு பிரம்மாண்டமான தேசமாக்கும் முயற்சி முகலாயர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது. ஆந்திர எல்லை வரை ஔரங்கசீப் படையெடுத்திருக்காவிட்டால் இந்தியா (அன்றைக்கு ஹிந்துஸ்தான்) உருவாக இன்னும் நாளாகியிருக்கும்! நமது இன்றைய மதச்சார்பின்மை, அன்றைய அக்பரின் மத நல்லிணக்கத்தின் தொடர்ச்சியே.
இன்னும் சொல்லலாம். முகலாயர்களின் முன்னூறு ஆண்டுகால ஆட்சி, நவீன இந்தியாவின் முதல் மாதிரி வடிவம்.
இந்நூல் பேரரசர்களின் வண்ணமயமான வாழ்வை விவரிப்பதுடன் நின்றுவிடவில்லை. ‘இந்திய தேசியம்’ என்னும் கருத்தாக்கம் தோன்றி, வலுப்பெற்று, எழுந்து கோலோச்சத் தொடங்கிய கதை இதன் அடிநாதமாக இருப்பதே சிறப்பு.
கடுமையான ஆராய்ச்சி, துல்லியமான விவரங்கள், விறுவிறுப்பான நடை. யூதர்கள், செங்கிஸ்கான், அகம் புறம் அந்தப்புரம் வரிசையில் முகிலின் அடுத்த முக்கியமான வரலாற்றுப் பதிவு இந்த நூல்.
Kathir Rath –
முகலாயர்கள்
முகில்
இந்திய ஆட்சி பணிக்கு படிக்கறவங்களுக்கு என்னென்ன புத்தகங்கள் படிக்கனும்னு ஒரு பொதுவான பட்டியல் இருக்கும். அதுல கார்ட்டுனிஸ்ட் மதன் எழுதுன “வந்தார்கள் வென்றார்கள்” இருக்கும். அந்தளவு நாடு முழுக்க பிரபலமான முகலாயர்கள் பற்றின புத்தகம் அது. நான் திரும்ப திரும்ப வாசிக்கும் நூல்களில் அதுவும் ஒன்று. அந்த மாதிரி ஒரு புத்தகத்தை படிச்சுட்டு அதே முகலாயர்களை பத்தி என்ன பெருசா எழுதிருக்க போறாங்கன்னு ரொம்ப நாளா இந்த புத்தகத்தை படிக்கலை. படிக்கறப்பதான் அப்படி தள்ளிப் போட்டுருக்க கூடாதுன்னு தோணுச்சு.
மதன் முகலாயர்களை பத்தி மட்டுமில்லை, டெல்லி சுல்தான்களை பத்தியும் சொல்லி இருப்பார். ஆனா இந்த புத்தகத்தை படிச்ச பிறகுதான் அவர் ரொம்ப சுருக்கமா மேலோட்டமா சொல்லிருக்கார்னு தெரிஞ்சது. இந்த புத்தகம் முழுக்க முழுக்க முகலாயர்களை பத்தி மட்டும்தான் அதிகம் பேசுது, அதிகதாகவும் பேசுது.
முகலாயர்கள் இல்லைன்னா இந்தியா இல்லைங்கறதுதான் உண்மை. அசோகருக்கு பிறகு துண்டு துண்டாக இருந்த தேசத்தை ஒருங்கினைச்சு ஒரே மாதிரியான நிர்வாகத்தை கொண்டு வந்த முகலாயர்கள் யார், எங்கே இருந்து வந்தாங்க, எப்படி வென்றார்கள்னு பெரும்பாலும் எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும். ஆனா எப்படி வீழ்ந்தார்கள்னும் இதுல தெளிவா விளக்கப்பட்டுருக்கு…
மதன் அவர்களோட துள்ளல் நடைல படிச்சுட்டு ஒப்பீடு செய்யாம இருக்க முடியாதுதான், ஆனா அதிகபடியான தகவல்கள் இருக்கப்ப எழுத்து நடைய பத்திலாம் யோசிக்கறது தப்பு. தன்னால முடிஞ்ச வரை யாரையும் தூக்கி படிக்காம எல்லாரை பத்தியும் கிடைச்ச, பேசப்படற தகவல்களை சொல்லிட்டே இருக்கார் முகில்.
சிவாஜி சத்ரியர் இல்லைங்கறதுக்காக பட்டம் சூட்ட மறுக்கப்பட்டதயும் அதுக்காக செய்யப்பட்ட பரிகாரங்கள், சத்ரியரா ஏற்று கொண்ட பிறகு திரும்ப முதல்ல இருந்து பூணூல் போட்டு, மனைவிகளை திரும்ப திருமணம் செஞ்சுன்னு பயங்கர கலாட்டா நடந்துருக்கு. இது எனக்கு புது தகவலா இருந்தது.
குஷ்வந்த் சிங் எழுதுன டெல்லி நாவல் படிச்ச பிறகுதான் உண்மையிலேயே முகலாயர்கள் கால வாழ்க்கைய புரிஞ்சுக்க ஆர்வம் அதிகமாச்சு. மதனும் சரி, முகிலும் சரி, தகவல்களை மட்டும்தான் கொடுத்துட்டு போறாங்க. எஸ்.ரா எழுதுன இடக்கை ஔரங்கசிப் கால மக்கள் வாழ்க்கைய பேசுதுன்னு சொல்லி கேள்விப்பட்டேன். அதையும் வாசிக்கனும். இன்னும் சொல்லப்போனா மொகலாயர்கள் கால ஷியா, சன்னி பிரிவு பிரச்சனைகளை பத்தி தெரிஞ்சுக்க ஆசைப்படறேன். ஷெர்ஷாசூரி பத்தி முழுசா படிக்க விரும்பறேன். அகமது ஷா அப்தாலி பத்தின தனி நூல் படிக்க விரும்பறேன்.
விஜயநகர ஆட்சி பத்தி தெரிஞ்சுக்கனும். காவல்கோட்டம் ரொம்ப சின்னதா சொல்லிட்டு நாயக்கர்களுக்கு வந்துருது. இன்னும் தெரிஞ்சுக்க வாசிக்க வேண்டியத நினைச்சாலே மலைப்பா இருக்கு.
வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தை முகலாயர்களுக்கான துவக்கப்புள்ளியா வச்சு இந்த புத்தகத்தை இரண்டாவதா வாசிக்கலாம். ஆனா அந்த கால கட்டத்தை அப்போதைய இந்தியாவ முழுதாக புரிந்துக் கொள்ள இதெல்லாம் பத்தவே பத்தாது.
Poonkodi Balamurugan –
புத்தகம்: முகலாயர்கள்
ஆசிரியர்: முகில்.
வரலாறு என்பது சிறுவயது முதலே எனக்கு மிகவும் பிடித்தமான பாடம். வரலாறு தாய் என்றால் அரசியலும் , அறிவியலும் அதன் பிள்ளைகள். திரும்ப திரும்ப நம்மிடம் நிகழும் தவறுகளை களைய வரலாறு உதவுகிறது. அதனால் வரலாறு முக்கியம் அமைச்சரே..
கிட்டத்தட்ட 330 ஆண்டுகள் நம்மை ஆண்டவர்கள் தான் இந்த முகலாயர்கள். அதுக்கு அப்புறம் பிரிட்டிஷ்காரங்க ஆண்டாங்க..இதுல ஆண்ட பரம்பரைன்னு நெறைய பேர் சொல்றாங்களே..அது எப்படி ?. நமக்கு எதுக்கு வம்பு ? இருக்கற இடம் தெரியாம இருந்துக்கலாம்..நாம முகலாயர்களைப் பத்தி ஆசிரியர் என்ன சொல்லி இருக்கார்னு பார்ப்போம்.
இதே மாதிரி முகலாயர்களின் வரலாற்றை மதனின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்திலும் படிச்சிருப்போம். அதில் அவர் முகலாயர்கள் மட்டும் அல்லாமல் டெல்லியை ஆண்ட மாமூல்க் ஆட்சி , கில்ஜி வம்ச ஆட்சி , துக்ளக் வம்ச ஆட்சி மற்றும் லோடி வம்ச ஆட்சி எல்லாவற்றையும் சொல்லியிருப்பார். ஆனால் இந்த நூல் முழுவதும் பாபர் காலத்தில் ஆரம்பித்து ரங்கூனில் மரணம் அடையும்இரண்டாம் பகதூர் ஷா வரை விரிவாக விளக்குகிறது. அதோடு மட்டும் அல்லாமல் எப்படி அத்தனை பெரிய பேரரசு வீழ்ச்சியடைந்தது எனவும் விளக்குகிறது. மேலும் அவர்களின் ஆட்சியில் சமுதாய பொருளாதார நிலை , மக்களின் வாழ்வு மற்றும் சமயம் , அந்தபுர மகளிர்களைப் பற்றிய விரிவான செய்திகள் , மற்றும் உலகப் புகழ் பெற்ற தாஜ்மகால் பற்றிய செய்திகள் என முகலாயர்களின் ஆட்சி பற்றிய கையேடாக இருக்கிறது.
தௌலத்கானும் ரானாசங்காவும் அழைத்துதான் பாபர் இந்தியாவிற்கு வந்து 1526 ல் முதலாம் பானிபட்போர் இப்ராஹீம் லோடியுடன் நடத்தி இந்தியாவில் காலடி வைத்தார் என்பதுதான் நாம் படித்திருக்கிறோம்.ஆனால் 1505 ஆம் ஆண்டு முதலே பல தடவைகள் இந்தியாவிற்கு வந்து கொள்ளையடித்து சென்றிருக்கிறாராம். 1526 ஆம் ஆண்டு தன்னை பேரரசராக முடிச்சூட்டிக் கொண்டு பிறகு நான்கு ஆண்டுகள் உயிரோடு இருந்திருக்கிறார். பின்பு ஆட்சிக்கு வந்த ஹூமாயூன் ஷெர்ஷாவால் ஆட்சியை இழந்து நாடோடியாக அலைந்து பின் ஆட்சியைக் கைப்பற்றினார். அக்பரின் காலத்தில் தான் முகலாயர்களின் பரந்த ஆட்சி தொடங்கியது எனலாம்.முகலாய ஏகாதிபத்திய அமைப்பானது 1600 களில் பாபரின் பேரன் அக்பர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஏகாதிபத்திய அமைப்பு கி. பி. 1720 வரை நீடித்தது. முகலாயப் பேரரசின் கடைசி முக்கியமான பேரரசரான அவுரங்கசீப்பின் இறப்பிற்கு பிறகு சிறிது காலம் வரை நீடித்தது.மேலும் அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில்தான் முகலாயப் பேரரசு தனது பரப்பளவில் அதிகபட்ச அளவை எட்டியது என்கிறார்கள். . பின்னர் படிப்படியாக சிதைய ஆரம்பித்தது.கிழக்கிந்திய கம்பெனி பெரும்பாலான இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் பழைய டெல்லியைச் சுற்றியிருந்த பகுதிகளில் மட்டுமே முகலாய அரசு இருந்தது. 1857ல் சிப்பாய் கலகத்திற்கு பிறகு பிரிட்டிஷ் அரசால் முகலாயப் பேரரசானது அதிகார பூர்வமாக நீக்கப்பட்டது.1858 ஆம் ஆண்டு கடைசி முகலாய மன்னர் இரண்டாம் பகதூர்ஷா கைது செய்யப்பட்டு ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார் . 1862 ஆம் ஆண்டு ரங்கூனில் இறந்தார்.
1483 ஆம் ஆண்டு பாபர் பிறந்ததிலிருந்து 1862 ஆம் ஆண்டு வரை முகலாயர்களின் ஏற்றம் , ஆட்சி , வீ்ழ்ச்சி எலலாவற்றையும் இந்நூல் விலாவரியாக விளக்குகிறது. ஆட்சிப்பணி போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் இது.
Art Nagarajan –
முகலாயர்கள்
முகில்
கிழக்கு.
மத்திய ஆப்கானிஸ்தான் கவர்னராக இருந்த
முஹம்மது கோரி
1191முதல் படையெடுத்து
ரஜபுத்திர மன்னர்களை
வெற்றி கொண்டு
இஸ்லாமிய மதத்தை இந்துஸ்தானில்
பரப்ப விரும்பிய
கோரி முஹம்மது
1206ல் இறந்து போனார்!
கோரி முகமதுவிற்கு பின் குத்புதின் ஐபெக்
சுல்தானாக பதவியேற்றபின்
டெல்லியில்
இஸ்லாமிய சின்னங்களை,
(குதுப்மினார்) உருவாக்கினார்.
தொடர்ந்து
லோடி வம்ச ஆட்சியில் தான்
சிக்கந்தர் லோடி
1504ல் “ஆக்ரா”என்ற
அழகிய நகரை உருவாக்கினார்.
இவர் ஆட்சியில் தான்
“ஜிஸியா” வரி விதிக்கப்பட்டது.
“ஜிஸியா” வரி என்பது
இஸ்லாமியர்
ஆட்சியின் கீழ் வாழும்
இஸ்லாமியர்
அல்லாத மக்கள் அங்கே வாழ்வதற்கும்,
அவர்களின் பாதுகாப்பிற்கும்
“ஜிஸியா”
வரி கட்ட வேண்டும்.
வரி கட்ட முடியாதவர்கள் “இஸ்லாம்” மதத்திற்கு மாறவேண்டும் என
கட்டாயப்படுத்தப்பட்டது”
ஈரானை மையமாக கொண்டு இயங்கியவர்கள்
மத்திய ஆசியா முழுவதும் ஈராணிய – துருக்கிய கலாச்சாரத்தை வளர்த்தார்கள்.
இப்படியாக
துருக்கி வழிவந்த
செங்கிஸ்கான் பரம்பரையினரையும்,
ஆதி மங்கோலியர்களையும் குறிக்கும் சொல் “மொகல்”.
மொகலிஸ்தான் என்பது உண்மையான மங்கோலியாவை
குறிக்கும் சொல்.
அதிலிருந்து
தோன்றிய சொல் தான் “மொகலாயர்கள்”.
பதினான்காம்
நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்
உண்மையான இஸ்லாமியர்கள்.
மங்கோலியர்கள்
வழிவந்தவர்கள்
இஸ்லாமிய மதத்தை தழுவினார்கள்,
அவர்களை
முறையான
இஸ்லாமியர்களாக ஏற்றுக்கொள்ள வில்லை.
சமர்கண்ட், மற்றும் புகாராவில்
வாழ்ந்தவந்த அந்த
பாதி இஸ்லாமியர்களை
மொகலாயர்கள் என்று
பிரித்து
அழைக்கத் துவங்கினார்கள்.
மொகலாய மன்னன்
பாபர் 1483 முதல்
இந்துஸ்தான் மீது
படையெடுத்து
இப்ராஹிம்லோடியை
வென்றவர்.
அந்தப் போர்
பானிபட்டில் நடந்தது.
இந்தியாவில்
முதன்முறையாக
வெடிமருந்தை
பானிப்பட் போரில்
பயன்படுத்தியே பாபர்,
இப்ராஹிம் லோடியை
வென்றார்!
பாபரின் படைகளில்
பீரங்கிகள் இருந்தன,
4000க்கும் மேலான
துப்பாக்கி வீரர்கள்
இருந்தனர்!
1526ல் முகலாய அரசை துவக்கிவைத்த பாபர்,
தனது மகன் ஹுமாயூன் வசம் நாட்டை ஒப்படைத்துவிட்டு
1530 டிசம்பர் 26ல் மறைந்தார்.
பாபர், பானிபட்,
தீன் இலாஹி, தாஜ்மஹால், ஒளரங்கசீப், தேஜ்பகதூர்,
சிவாஜி, மாம்பழக் கூடை,
என்று முகலாய வரலாறுகளை, வேர்க்கடலை தோலுக்குள் திணித்து விடுகிறது
நம் பாடப்புத்தகம்.
பெண்குழந்தைகள்
பிறப்பதையே வெறுத்த
அந்தக் காலத்தில் மொகலாய பேரரசர்கள் பெண் வாரிசுகளை முழு மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.
நூர்ஜஹான், மும்தாஜ் போன்றவர்கள் அரசியலில் பங்கேற்றார்கள், ஒளரங்கசீப் தனது மகள்களை இளவரசிகளாக்கி திருமணம் செய்து வைத்தார்.
உண்மையில் இது ஒரு பிரம்மாண்டமான
சரித்திர சமுத்திரம்.
இதுவரை
நாம் படிக்காத பக்கங்கள்,
அத்தனையும்
சரித்திரம் நிறைந்த
அற்புத பக்கங்கள்,
கைகுட்டை கிராமங்களாக
இருந்த துணைக்கண்டத்தை
முதன்முதலில் ஒரே பிரம்மாண்டமான தேசமாக்கும் முயற்சி மொகலாயர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது.
ஆந்திர எல்லைவரை
ஒளரங்கசீப்
படையெடுத்து
வந்திருக்காவிட்டால்
இந்தியா உருவாக
(அன்றைக்கு இந்துஸ்தான்)
இன்னும் பல ஆண்டுகளாகியிருக்கும்!!
நமது இன்றய
மதச்சார்பின்மை,
அன்றய அக்பரின்
மத நல்லிணக்கத்தின் தொடர்ச்சியே!!
முகலாயர்களின்
முன்னூறு ஆண்டுகால ஆட்சி,
நவீன இந்தியாவின்
முதல் மாதிரி வடிவம்.
மொகலாய பேரரரசர்களின் வண்ணமயமான வாழ்வை விவரிப்பதோடு நிற்காமல்,
“இந்திய தேசியம்” எனும் கருத்தாக்கம் தோன்றி, வலுப்பெற்று,
கோலோச்சத் தொடங்கிய வரலாறு இது!
முகலாயர்களின்
எழுச்சி முதல் வீழ்ச்சி வரை முழுமையாக,
வரலாற்று குறிப்புகளோடு விவரிக்கும்
மிகச் சிறந்த புத்தகம்.
பிடிபடாத
முன்னூறு ஆண்டுக்கால வரலாறுகளை
புரிபட எழுதி
மனதை நிறைத்தீர்கள்!
சலாமலைக்கும் முகில்!!
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்,
ART. நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை.
27.05.2020.