இந்த நூல் அண்ணாவின் பொருளதாரச் சிந்தனைகளைத் தெள்ளத் தெளிவுற விளக்கும் நூல், -நரேன் ராஜகோபாலன்.
ஒவ்வொரு தமிழரும் படிக்கவேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது. அறிஞர் அண்ணாவின் எண்ணற்ற படைப்புகளில் ஒப்பற்ற படைப்பு.
இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில், புது தில்லியில் ஒரு பார்ப்பன அரசு அமைகிறது என்று தந்தைப் பெரியார் சுட்டிக்காட்டினார். அந்த அரசு ஒரு பனியா அரசாகவும் இருக்கிறது என்பதை இந்த நூலில் அண்ணா துல்லியமாகச் சுட்டிக்காட்டுகிறார். மிகச்சிறந்த பொருளாதார நிபுணராகவும் அரசியல் பொருளாதார மேதையாகவும் அண்ணா இருந்திருக்கிறார் என்பதற்கு இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தை அவர் இந்த நூலில் விளக்கியிருக்கும் விதமே போதுமான சான்றாகும்.
சுதந்திர இந்தியாவில் தென்னாடு மட்டும் எப்படிச் சுதந்திரம் பெறாமலிருக்கிறது என்பதையும் அண்ணா அம்பலப்படுத்துகிறார். அவரைப் போன்ற தலைவர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை நாம் இன்று இழந்து கொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில், இந்த நூலை மீண்டும் படிக்கவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம்.
Kathir Rath –
பணத்தோட்டம்
அறிஞர் அண்ணா
கலைஞர் பரிந்துரைத்த பத்து புத்தகங்கள்ல இதுவும் ஒன்று என்பதால் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் பட்டியலில் வைத்திருந்தேன். இன்று எடுத்ததும் கடகடவென ஒரு மணிநேரத்தில் முடிக்க முடிந்தது.
இது ஒரு கட்டுரைத்தொகுப்பு நூல். அரசியல் பேசினாலும் இது முழுக்க பொருளாதாரம் தொடர்பானது.
சுதந்திரம் பெற்ற காலத்தில் எழுதப்பட்ட இந்த நூல் பேசும் விசயம் இப்போதும் மிக முக்கியமாகவே கருதப்படுகின்றன. ஏனென்று பார்க்கலாம்.
முதலில் பணத்தோட்டம் என்றால் என்ன? வங்கிகளைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார். இந்திய அரசு சட்டம் 1935 ன் படி ரிசர்வ் வங்கி உருவாக்கப்படவும் அதன் கீழ் பல தனியார் வங்கிகள் துவங்குவதற்கான வாய்ப்பு உருவாகிறது. ஆனால் 90% வடநாட்டு வங்கிகளுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது. தென்னாட்டில் அனுமதி பெற்ற வங்கிகளின் பணமதிப்பும் அவற்றில் பத்தில் ஒரு பங்குதான்.
அதே போலத்தான் இன்சூரன்ஸ் கம்பெனிகளும், தரவுகளுடன் வடநாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் அனுமதியும் மூலதன உதவிகளும் தென்னாட்டு நிறுவனங்களுக்கு மறுக்கப்படுவதை நிருபிக்கிறார்.
அடுத்தடுத்தாற் போல் விமான நிறுவனங்கள், துணி மில், கப்பல் கம்பெனிகள், வனஸ்பதி என அனைத்து விசயங்களிலும் வடநாட்டாரின் ஏகாதிபத்தியத்தின் கீழ் தென்னாடு இருப்பதை விளங்க வைக்கிறார்.
இதில் இருந்து கூறப்படுவதுதான் “வடக்கே வாழ்கிறது, தெற்கே தேய்கிறது”
சமதர்மம் பேசிய நேருவும் இந்திராவும் வங்கிகளையும் காப்பீட்டு நிறுவனங்களையும் தேசிய மயமாக்கினார்கள். ஆனால் இப்புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் இருந்து பார்த்தால் வெள்ளையருக்கு பதிலாக பனியாக்கள் பக்காவாக நமக்கு மேல் அமர்ந்திருக்கிறார்கள். இப்போதும் வங்கிகள் வழியாகத்தான் நம் மக்களின் பணம் வாராக்கடனாக அவர்களுக்கு போய் கொண்டிருக்கிறது.
காப்பீட்டு நிறுவனம் என்று எடுத்துக் கொண்டால் கூட இப்போது அரசு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய எடுத்த முடிவை சுட்டிக்காட்டலாம். எல்லாம் யாருக்கு லாபம்? அம்பானி அதானிகளுக்குத்தானே?
இதில் எனக்கு மிகவும் ஆச்சர்யம் தந்த விசயம் பிரகாசம் முதல்வராக இருந்த காலத்தில் சென்னை மாகாணத்தில் இருந்த மில்களை மூடிவிட்டு கட்டாய கதர் ராட்டை திட்டத்தினை செயல்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்பதுதான்.
அவரது வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், “திராவிடத்தின் செல்வத்தைச் சுரண்டும், வடநாட்டு வணிக வேந்தர்களின் பணபலம், தொழில் பலம் இவற்றினுக்கு அரணாக அவர்களுக்கு அமைந்துள்ள அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைக் கண்டால், எவ்வளவு வேகமாக புதியதோர் பொருளாதார ஏகாதிபத்தியம் உருவாகிக் கொண்டு வருகிறது என்பது விளங்கும்.
மேலும் அவர், “வியாபாரத்தோடு இந்த ஆதிக்கம் நின்றுவிடவில்லை. உற்பத்தித் தொழிலே, ஒரு நாட்டின் உயிர்நாடி; அது இன்று பெரிதும் வடநாட்டவரிடம். பணத்தை தேங்கி இருக்குமிடத்திலிருந்து பெற்று, தேவையான இடத்தில் செலுத்தும் தொழில், ஒரு உடலில் இரத்த ஓட்டத்துக்குச் சமானம்; அது பெரிதும் வட நாட்டவரிடம்தான். தமிழன் உயிர்நாடி, இரத்தக் குழாய் இரண்டையும் வடநாட்டவரிடம் ஒப்படைத்துவிட்டு, ‘வாழ்வாவது மாயம்’ என்று வானை நோக்கிப் பாடியபடி இருக்கிறான்” என்கிறார் அண்ணா.
நூல் வெளியாகி 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் இலவசமாகவும் பல தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.
திராவிட சிந்தனையில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும். பொருளாதார ஆர்வலர்களும் வாசிக்கலாம்.