பசி
நட்ஹாம்சன்
“ஏழைக்கு மனசாட்சி இருப்பது அடுக்குமா? பசி தீரச் செய்யவேண்டியதைச் செய்ய வேண்டும்.”.
**
வெட்கமும் பசியும் என்னைப் பிடுங்கித் தின்ன வெளியேறினேன். பசி காரணமாக நான் நாயாகி விட்டேன். கெஞ்சியும் கிடைக்கவில்லை. இதுவும் முடிவுற வேண்டியதுதானே, ஏற்கனவே தாங்க முடியாத அளவுக்கு வந்துவிட்டது. பிச்சையும் கேட்டுப் பார்த்து விட்டேன். இந்த ஒரு நாளில் என் ஆன்மாவே துடித்துப் போய்விட்டது. கெஞ்சிப் பல்லைக் காட்டிவிட்டேன். பயன் இல்லையே..
எனக்கே என்னைப் பிடிக்கவில்லையே! எப்படியாகிவிட்டேன் நான்.
*
என்னென்ன அவமானங்கள்…… பிச்சைக்காரனின் சொத்தைக் கூடத் திருடத் தயாராகிவிட்டேன். நான் அவன் பாத்திரத்திலிருந்து எடுத்து வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ளக் கூட தயாராகி இருந்தேன்.
*
பசி அதிகரித்தது. ஆனால், உணவை நினைத்தால் வயிற்றைப் புரட்டியது. என்னையே தின்று விடும் போல இருந்தது. இரக்கம் காட்டாமல் பசி எனக்குள் அரித்தது. குடலுக்குள் மாயமாக வேலை செய்தது. குடலை அரித்துத் தின்னும் பல லட்சம் பூச்சிகளாகப் பசியை அறிந்து கொண்டேன்.
நூலிலிருந்து….
Janaki Ramaraj –
வாசிப்பு அனுபவம்:
நூல்: பசி
ஆசிரியர்: க.நா.சு. (மொழிபெயர்ப்பு நாவல்)
நோபல் பரிசு பெற்ற நட் ஹாம்சன் அவர்களின் ‘Hunger’ நாவல் தமிழில் திரு. க.நா.சு அவர்களால் ‘பசி’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
‘பாடாத தேனீ உண்டா, உலவாத தென்றல் உண்டா, பசிக்காத வயிறு உண்டா’ என்ற பாவேந்தரின் வரிகள் நினைவுக்கு வந்தன இந்நாவலை படித்த பிறகு. மனித வாழ்வில் கொடுமையிலும் கொடுமை பசிக்கொடுமையே. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது நாமறிந்ததே. பசி எந்த ஒரு நல்ல மனிதனையும் எவ்வளவு கீழ்மையான வேலையையும் செய்ய வைத்துவிடும்.
பசி கொண்ட ஒரு இளம் எழுத்தாளனின் கதையே இந்நாவல். போதிய வருமானம் இல்லாமல் தன் பசியைப் போக்கிக்கொள்ள ஒவ்வொரு நாளும் அவன் படும்பாடு மிகவும் உணர்ச்சி பூர்வமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அவனிடம் இருக்கும் அனைத்தையும் அடகுக் கடையில் விற்கிறான். தன் உள்சட்டை உட்பட. ஆயினும் பசியின் கோரத்திலிருந்து அவனால் விடுபட முடியவில்லை. கடவுளை சபிக்கிறான், தனக்குத் தானே பேசிக் கொள்கிறான், தனது துரதிருஷ்டத்தை நினைத்து அழுகிறான், ஒவ்வொரு நாளையும் கடப்பதென்பது பெரும் போராட்டமாக இருக்கிறது. பசி தாங்க இயலாமல் தனது விரலை சப்புகிறான், மரத்துண்டை சுவைக்கிறான், ஒரு சமயத்தில் தனது விரலைக் கடிக்கிறான் இரத்தம் வருகிறது, அவனுக்கு வலியை விட பசியாறுவதே பெரிதாகத் தெரிகிறது. பசி பொறுக்க இயலாமல் அவன் படும் அவதியை வார்த்தைகளால் ஆசிரியர் விவரித்திருக்கும் விதம் ஆழமானது. இது அத்தனையும் அவனின் உணர்ச்சிகளால் விவரிக்கப்பட்டுள்ளது.
புத்தகம் வெளியிட ஒவ்வொருவராக சந்திக்கிறான். அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன. பத்திரிக்கைகளில் கட்டுரை எழுதும் வாய்ப்பு மட்டுமே கிடைக்கிறது. அதுவும் தொடர்ந்து கிடைப்பதில்லை. அதற்கு கிடைக்கும் சொற்ப வருமானம் ஓரிரு நாள் வயிற்றுப்பாட்டை கழிக்கவே உதவுகிறது. மற்ற நாள்களில் பசியின் பிடியிலிருந்து அவனால் மீள இயலவில்லை. அவனெடுக்கும் முயற்சிகளும் அவனது மனநிலையும் ஒரு எழுத்தாளன் படும் பாட்டை தத்ரூபமாக பதிவு செய்கிறது.
ஆனால் எந்தவொரு நிலையிலும் தான் பரம ஏழை என்று எவரிடத்திலும் காட்டிக்கொள்ள விரும்பவில்லை அவன். அவ்வளவு பசியிலும் நாணயஸ்தனாகவே வாழ விரும்புகிறான். கட்டுரைகளுக்குக் கூட முன்பணம் கேட்க விரும்புவதில்லை அவன். வாடகை கேட்கிறாள் வீட்டுக்காரி. அதை கொடுக்க முடியாததை எண்ணி வருந்துகிறான்.
அவனது அழுக்கான ஆடையையும், ஒட்டிய வயிற்றையும், குழி விழுந்த கன்னங்களையும், மெலிந்த தேகத்தையும் கண்டு இந்த உலகம் அவனை அணுகும் விதமும், ஒவ்வொரு நாள் வயிற்றுப்பாட்டுக்கும் அவன் உதவி கேட்டு தட்டப்படும் கதவுகள் எந்தவித கருணையுமின்றி சாத்தப்படுவதும் உலகின் முகத்தை அறியச் செய்கின்றன.
ஆனால் அவனோ தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்திலும் தன்னைப் போல் பசியில் வாடுபவனுக்கு உதவுகிறான். பசியிலிருப்பவன் படும் துன்பத்தை உணர்கிறான்.
இளம்பெண் ஒருத்தியை சந்திக்கிறான், அவளது சந்திப்பு அவனது மனதிற்கு மகிழ்வூட்டுகிறது. இருள் வந்த பிறகான மாலை நேரங்களிலே தான் அவளை சந்திக்கிறான். வெளிச்சத்தில் அவனது தோற்றத்தைக் கண்டால் வெறுத்துவிடுவாளோ என அஞ்சுகிறான்.
அவனது மனப்போராட்டங்களையும் பசித்த வயிற்றை நிரப்ப இயலாத நிலையில் அவனது உணர்ச்சிகளையும் நமக்கு கடத்தியதில் மிகுந்த வெற்றி பெற்றுள்ளார் ஆசிரியர். எல்லாரும் வாசிக்கக்கூடிய தரமான நாவல்.
ஜானகி ராமராஜ்