1 review for பித்தப்பூ
Add a review
You must be logged in to post a review.
₹70.00
எல்லா சம்பவங்களும் கற்பனை – பாத்திரங்களும் பொய் என்று சொல்வது நாவல் மரபு. மாறாக, இதில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் எனக்குத் தெரிந்தவரையில் முழு உண்மை. இதில் சம்பந்தப்பட்ட யாரையும் குற்றம் சாட்டுவதற்கோ, குறை சொல்வதற்கோ எழுதப்பட்டதல்ல. தங்களைத் தான் சொல்லியிருக்கிறேன் என்று நினைப்பவர்கள்கூட என்னைத் தப்பாக நினைக்கக் கூடாது என்பதற்காக இதைக் கூறுகிறேன்.
தியாகு என்பவன் இருந்ததும், இறந்ததும் பழங்கதையாகப் போய்விட்டது. அது நினைவிலிருப்பவர்கள் – அந்த அல்பாயுசில் போய்விட்ட முழு மனிதனின் நினைவில், அதில் தங்கள் குறைபாடு என்ன என்று கருதிப்பார்க்க வேண்டிய அவசியமே கிடையாது. ஒரு மனிதனைப் பற்றிய முழு உண்மையும் நெருங்கியிருப்பவர்களுக்குக்கூட பூரணமாகத் தெரிவதில்லை இதில் தவறு ஒன்றுமில்லை. சம்பந்தப்பட்டவர்களின் மன்னிப்பை – நானும் தியாகுவிடம் ஏராளமான மதிப்பு வைத்திருந்தவன், அவனுக்கு என்னாலான அளவில் நண்பனாக இருக்க முயன்றவன் என்கிற அளவில் முன்கூட்டியே மன்னிப்புக் கேட்டுக்கொண்டு விடுகிறேன். தவறு ஏதாவது இதில் இருந்தால் தவறு என்னுடையதுதான். தவறு என் அறிவிற்கெட்டாத, எனக்குத் தெரியாத விஷயங்களில்தான் இருக்க வேண்டும். மன்னிக்கவும்.
Delivery: Items will be delivered within 2-7 days
kmkarthi kn –
#பித்தப்பூ
க.நா.சு
நற்றிணை பதிப்பகம்
*எனக்கு பைத்தியமா சார்?
*எங்கப்பாவைச் சிலபேர் என் காதில் விழும்படியாகப் பைத்தியம் என்று சொல்கிறார்களே! நிஜமா சார்?
*எங்கண்ணாவும் சிலசமயம் பைத்தியக்காரர் மாதிரி நடந்து கொள்வான் என்று அந்த நாட்களில் அவரைத் தெரிந்தவர்கள் சொல்கிறார்களே?
*என் அத்தைக்கும் பைத்தியம் பிடித்துக் கட்டிப்போட்டு வைத்திருந்தார்களாமே!?
இதுபோன்ற கேள்விகளை ஒவ்வொரு அத்தியாயத்திலும் தியாகு கேட்கிறான். அதற்கு நாவலின் ஆசிரியரும், தியாகுவின் சிநேகிதருமான க.நா.சு அவர்கள் கூறும் பதில்கள் என நாவல் முழுவதும் உரையாடல்களே. அந்த உரையாடல்கள் அனைத்தும் பைத்தியம், பைத்தியக்காரத்தனம், பைத்தியக்காரர்களைச் சுற்றியே மையம் கொண்டிருக்கிறது.
தியாகு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கடைக்குட்டி. இப்போது அரசு உத்தியோகத்தில் இருப்பவன். மனைவி மருத்துவர். ஒரு மகளும் உண்டு. இப்போது அவனுக்கு வந்திருக்கும் இந்த மனக்குழப்பத்தினால் அவன் என்னவானான் என்பதை க.நா.சு அவர்கள் அவனருகிலேயே இருந்து அவன் நிலையை நேரிலேயே கண்டு ஒருவித மன ஆற்றாமையில் தான் இந்த நாவலை எழுதியிருக்கிறார்.
அவர் முன்னுரையிலேயே இவ்வாறு கூறுகிறார்.
“எல்லா சம்பவங்களும் கற்பனை – பாத்திரங்களும் பொய் என்று சொல்வது நாவல் மரபு. மாறாக, இதில் வருகிற எல்லாக் கதாப்பாத்திரங்களும், சம்பவங்களும் முழு உண்மை. இதில் சம்மந்தப்பட்ட யாரையும் குற்றம் சாட்டுவதற்கோ, குறை சொல்வதற்கோ எழுதப்பட்டதல்ல. தங்களைத் தான் சொல்லியிருக்கிறேன் என்று நினைப்பவர்கள் கூட என்னைத் தப்பாக நினைக்கக் கூடாது. தவறு ஏதாவது இதில் இருந்தால் தவறு என்னுடையது தான்”
இது ஒரு மனப்பிறழ்வுகளின் தொகுப்பு. தான் சந்தித்த, கேட்ட பைத்தியங்ளையும், அவர்களது வாழ்க்கையையும் இதில் ஒன்று கூட்டியிருக்கிறார். ஒரு மனிதன் இத்தனை பைத்தியக்காரர்களை தன் வாழ்நாளில் கடந்து வந்திருக்க முடியுமா? என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். எத்தனை பைத்தியக்காரர்களை கண்டும் காணால் கடந்து வந்திருக்கிறேன். அவர்களின் மனப்பிறழ்வுக்குக் காரணமென்ன சிந்தித்திருக்கிறேனா!!! அது அவசியமற்ற ஒன்று என்ற எண்ணமே அதை புறக்கணித்தற்கான காரணமோ?
யார் பைத்தியக்காரர்கள் மற்றவர்களைப் போல் நடந்து கொள்ளாதவர்கள் பைத்தியக்காரர்களா?
எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பவனை புத்தகப் பைத்தியம் என்கிறார்கள், எப்போதும் சினிமா பார்த்துக் கொண்டிருப்பவனை சினிமாப் பைத்தியம் என்கிறார்கள், பெட்டி பெட்டியாக நகைகளை வாங்கி சுமந்து கொண்டிருப்பவளை நகைப் பைத்தியம் என்கிறார்கள். இப்படி உலகில் பல விதமான பைத்தியங்கள் இருந்தாலும் தனக்குத்தானே பேசிக் கொண்டிருப்பவனை, நம்பகமான பேச்சில்லாதவன் என்பவனையெல்லாம் உலகம் பைத்தியம் என்று பெயர் சூட்டுகிறது.
ஒருவன் எப்படி பைத்தியமாகிறான், ஏன் பைத்தியமாகிறான். புறக்காரணங்களாலா இல்லை அகக் காரணங்களாலா.. என்று ஒரு மனோ தத்துவ பாடம் எடுத்திருக்கிறார். மனப்பிறழ்வுகளைப் பற்றி அறிய வேண்டியவைகளை அறிமுகப்படுத்துகிறார்.
இந்நாவலை வாசிக்கும் பொழுது எஸ்.ரா அவர்களின் உறுபசி நாவல் ஞாபகத்துக்கு வந்தது. நான் மீண்டும் ஒருமுறை படிக்க பயக்கும் ஒரு நாவல் உறுபசி. அதில் வரும் சம்பத்தையும், இதில் வரும் தியாகுவையும் ஒப்பீடு செய்து பார்த்ததில் ஒன்று மட்டும் விளங்குகிறது நம் எல்லோருக்குள்ளும் ஒரு பைத்தியம் ஒழிந்திருக்கிறது.
எனக்கு பைத்தியமா சார்!!!
#Kmkarthikeyan_2020-33