Rooh
அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த நேரமது. தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட தோல்விகளால் கடுமையான தற்கொலை எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தேன். மாதக்கணக்கில் உறங்கமுடியாமல் தவித்ததோடு கடுமையான மன உளைச்சல்களால் மனநல மருத்துவரிடம் சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருந்தேன். நெருங்கிய சில நண்பர்கள் என்னை அரவணைத்து பாதுகாத்து வந்தனர்.
அச்சமயத்தில் கடப்பாவிலுள்ள அமீன் பீர் தர்காவிற்கு இயக்குநர் வசந்தபாலன் அழைத்துச் சென்றார். தர்காவில் அந்த இரவு கேட்ட ஹவ்வாலி பாடல்களும் அதிகாலை பிரார்த்தனையும் அடுத்த நாளில் நான் பார்த்த புத்தம் புதிய சூரியோதயமும் மனதில் பல மாதங்களாய் நிறைந்திருந்த வேதனைகளை கரைந்து போகச் செய்தது. அதன்பிறகு அஜ்மீரிலும், ஏர்வாடியிலும் அதே போன்ற அபூர்வ தருணங்களை நான் எதிர்கொள்வதுண்டு. வழிபாடுகளை சடங்கார்த்தமான ஒன்றாக நினைத்து ஒதுக்கியவனுக்கு சமாதானத்தையும் நேசத்தையும் உணர்ந்த கணங்கள் முக்கியமானவையாய்ப் பட்டன. அந்தப் புள்ளிதான் ரூஹ் எழுதுவதற்கான துவக்கப்புள்ளி.
கொமோராவின் ஒரு பகுதியாகவே இந்தக் கதையை முதலில் திட்டமிட்டிருந்தேன். வெறுப்பின் பிரதியான கொமோராவுக்குள் நிபந்தனையற்ற அன்பை மட்டுமே பேசும் ரூஹின் கதை பொருந்திப் போகாததால் தவிர்த்துவிட்டேன். ஒரு நாவலை எழுதத் துவங்குவதற்கு முன்பாகவும் எழுதும்போதும் எனக்கிருக்கும் மனநிலையை நான் நம்புகிற உண்மைகளை அந்த காலகட்டத்தைய வாழ்விலிருந்து பெறும் படிப்பினைகளை எழுதும் கதைக்குள் பிரதிபலிக்க விரும்புகிறேன். கொமோராவை எழுதக் காரணம் நீண்ட காலம் மனதிற்குள் கிடந்து அரித்த வெறுப்புணர்வு. அந்த நாவலை எழுதியதன் பலனாய் கடந்த காலத்தின் வெறுப்புணர்வுகளில் இருந்து கொஞ்சம் மீள முடிந்தது.
அதற்கு முற்றிலும் வேறான மனநிலையில்தான் ரூஹை எழுதத் துவங்கினேன். ஆனால் யதார்த்தம் இன்னும் முழுமையாய் வெறுப்பைத் தூக்கியெறிய முடியாமலும் பொறாமையிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாமலும் வைத்திருக்கிறது.
இந்த கதைக்காக நிகழ்ந்த உரையாடல்கள், வாசித்த புத்தகங்கள் சங்கடங்களோடு யாருடனாவது பழக நேர்ந்தால் அவை வெறுப்பாவதற்கு முன்னால் விலகிப் போய்விடும் பக்குவத்தை உருவாக்கியிருக்கின்றன. எல்லோரையும் நேசிக்கும்படியான பெரியதொரு இதயத்தை வேண்டிப் பெற்றுவிட வேண்டுமென்பதுதான் எனது ஒரே பிரார்த்தனை.

காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
Dravidian Maya - Volume 1
One Hundred Sangam - Love Poems
Arya Maya (THE ARYAN ILLUSION)
PFools சினிமா பரிந்துரைகள்
ARYA MAYA - The Aryan Illusion
1975
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
English-English-TAMIL DICTIONARY Low Priced
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு" 
Selva kumar –
Good novel..
Hari –
This book was super..
MAYA –
லஷ்மி சரவணக்குமார் கலக்கிட்டிங்க
Rufina Rajkumar –
கிண்டிலில்
நாவலின் பெயர் : ரூஹ்
ஆசிரியர் பெயர் : லஷ்மி சரவண குமார்
ஆசிரியரின் பிற நூல்கள்:
உப்பு நாய்கள்
கானகன்
நீலப்படம்
கொமோரா
கதையின் ஹீரோ ஜோதி. அவன் பால்ய வயதில் நளினமாக நடக்கிறான். இதனால் பிறரால் கேலி செய்ய படுகிறான். அதனால் முயற்சி செய்து நளினத்தை மாற்ற முயல்கிறான். அப்போதே அவன் மேல் நமக்கு ஒரு ஈடுபாடு வந்து விடுகிறது. உடற் பயிற்சிகள் செய்து உடலை பலப் படுத்தினால் நளினம் போகுமா எனப் பார்க்கிறான். தோல்வி தான். பக்கத்து வீட்டு அக்கா ராபியா அவனை அவன் இயல்போடு ஏற்று அன்பு செய்கிறாள்.
அவனது பலவீனம் படிப்படியாக சொல்லப் படுகிறது. கதை முழுவதும் மாயா ஜாலக் கதைகள் போல் ஆசிரியரின் கற்பனை வித்தியாசமாக இருக்கிறது. அஹமது என்னும் கப்பல் ஓட்டுபவரின் பகுதியும் வாசிக்க ரசனையூட்டுவதாகவே இருக்கிறது.
ஒருவரை மனதுக்கு நெருக்கமாக வைத்து விட்டால் அவர்கள் செய்யும் தவறுகள் எவ்வளவு கனமானதாக இருந்தாலும் மன்னித்து மறந்து பழையபடி நெருக்கமாக வைத்து கொள்வோம். அதன் படி ராபியா ஜோதி ஒவ்வொரு தவறு செய்யும் போதும் கடுமையாக கோபித்து விலகினாலும் மறுபடி மேலும் நெருக்கமாகவே அன்பு செய்கிறாள்.
கதையை எந்த ஒரு விகல்பமும் இல்லாமல் அழகாக முடித்திருக்கிறார்.
கதையில் நான் ரசித்து ருசித்தவற்றுள் சில:
“பெரும் மழைக்கு பிறகான குளிர்ந்த காற்றைப் போல அவளிடம் தனித்துவமானதொரு வசீகரமிருந்தது”
“ஒரு நாள் அந்த மலையேறி முகடில் நின்று இந்த வீட்டில் தனித்திருக்கும் தன்னைப் பார்க்க வேண்டும்”
“தனித்து விடப்பட்ட மனிதர்கள் கை விடப் படுவதில்லை என் கிற உண்மையை ஜோதி புரிந்து கொண்டான்”
“ராபியாவின் நினைவு உடலில் பற்றி எரியும் சந்தோஷத்தின் ஜ்வாலைகளாய் மாறின”
“வறண்ட நிலப்பரப்பில் இவ்விரவில் நீல மலர்களைச் சூடிய பெண் சர்ப்பங்கள் உன்னை விரகத்தோடு தீண்டக்கூடும்”
“நேசத்துக்கு உரியவர்களிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதைப் போல துக்கத்தையும் தோல்விகளையும் இயல்பாய் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை.”
“அசாதாரணமானது ரொம்பத் தூரமானது என்றும் சிக்கலானது என்றும் நாம் நினைக்கிறோம். அதனால் நமக்கு வெகு அருகிலேயே இருக்கும் அதைப் பார்க்கத் தவறி விடுகிறோம்”
“வலிகள் சூழ்ந்த மனிதர்கள் ஆறுதலின் பேராற்றைக் கண்டடையும் போது அங்கு இளைப்பாறிக் கொள்ள நினைப்பதில்லை. அவ்வாற்றின் கரையிலேயே தன்னை எல்லா காலத்திற்கும் ஒப்புக் கொடுக்க விரும்புகிறார்கள்.”
“விருப்பமானவர்களை வெறுத்து ஒதுக்கும் கணங்களைப் போல துயரமானது வேறில்லை”
நான் மிகவும் ரசித்து வாசித்த ஒரு நாவல். ராபியாவின் கடலளவு அன்பையும், ஜோதியின் சஞ்சலம் கலந்த அன்பையும் சமமாகவே ரசித்தேன்.
Kathir Rath –
#ரூஹ்
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
சொல்றது எளிதுன்னு வள்ளுவர் சொல்லிருக்கார். ஆனா அதுல கொஞ்சம் மாறுபடறேன். என்னன்னா கதை சொல்றது எளிது கிடையாது. அது அரிது தான்.
அதுலயும் தலைய பிடிச்சு தண்ணிக்குள்ள அழுத்தி மூச்சு முட்டற நேரத்துல கண்ணை திறந்து பாக்கற உணர்வ கதை சொல்லி கொண்டு வர முடியறதுலாம் எளிதா? கிடையவே கிடையாது
லட்சுமி சரவணக்குமாருக்கு இலக்கிய உலகில் அறிமுகம் தேவையில்லை. அடுத்த தலைமுறை இலக்கிய ஜாம்பாவனுக்கான ரேசில் ஓடிட்டு இருக்கறதுல முக்கியமான நபர்.
அமேசான் போட்டில மனுசன் தன்னோட கதைய இறக்குனதும் போட்டியோட தன்மை அப்படியே மாறிப்போனதுதான் நிஜம். அதுவரை சீரிய செவ்வியல் படைப்புலாம் அமேசானுக்கு செட்டாகாதுன்னு சொல்லிட்டுருந்த வாய்லாம் டப்புன்னு மூடிக்கிச்சு.
உண்மையிலேயே அமேசான் போட்டி வாசகர்களுக்கு நல்ல விருந்துதான் வச்சுருக்குங்கறது என்னோட எண்ணம். சரி கதைக்கு வருவோம்.
ஒரு புத்தகம், ஒரு கதை என்ன சொல்லனும்? வாழ்க்கைய சொல்லனும். அதுல வேணுங்கறத எடுத்துக்கறது வாசிக்கறவங்க விருப்பம். ருஹ் என்ன சொல்லுது? அதுவும் வாழ்க்கைய சொல்லுது, யாரோட வாழ்க்கைய ஜோதிலிங்கத்தோட வாழ்க்கைய, ஜோதி யாரு?
தன்னோட வாழ்க்கைல தன்னை முதல் முதல்ல பார்த்த அம்மால ஆரம்பிச்சு எதிர்ல வர எல்லாராலயும் வெறுக்கப்படற, ஏளனம் செய்யப்படற ஒருத்தன், அவனுக்கு ஒரே ஒரு ஜீவன் பாசங்காட்டுது, ராபிதா
அது யாரு? அவங்களுக்குள்ள என்ன உறவு? அவங்க வாழ்க்கையத்தான் சொல்லுது இந்த கதை, அவங்க வாழ்க்கைய மட்டும்தான் சொல்லுதான்னா கிடையாது. லசகு எப்ப அதோட விட்டுருக்காரு? மனசுக்குள்ள மறைச்சு வச்சுருக்கற அழுக்க வழிச்சு வெளிய கொட்டிடறாரு, இதோ இதைத்தான் உள்ளே வச்சுட்டுருந்த, இந்த நாத்தத்துலதான் படுத்து கிடந்த, யாரை ஏமாத்த பாக்கற? இதான் நீ ன்னு செவள்ல அறையறார். யாரை? அது வாசிக்கறவங்களுக்கு தெரியும்.
லசகுவோட உப்பு நாய்களை எல்லாரும் படிக்க சொல்லுவாங்க, நானும் படிச்சேன். ஆனா எனக்கென்னவோ அது பெரிசா ஈர்க்கலை. ஆனா இது ரொம்ப பிடிச்சுருந்த்து. உண்மையிலுமே உப்பக்கடலோட ஆழம் தர அமைதியான உணர்வு இந்த நூல் கொடுத்தது.
ஒரு அத்தியாயம் படிச்சுட்டு புக்கை வச்சுட்டு கொஞ்ச நேரம் கடல் ஆழத்துல இருந்து மிதந்து மேல வந்து யதார்த்த உலகத்தோட சத்தம் கேட்க ஆரம்பிச்சதும் திரும்ப வாசிச்சு உள்ளே மூழ்கி மூழ்கி முக்குளிச்சு விளையாடுன அனுபவத்தை ருஹ் தந்தது.
எழுத்து ஒரு தந்திரம். ஒரு கண்கட்டி வித்தை. வாசிக்கறவனை எல்லாத்தையும் மறக்க வச்சு கதைக்குள்ள கூட்டி போற செப்பிடு வித்தை. அதுல இந்த முறையும் லசகு ஜெயிச்சுருக்காரு.
போட்டில்லாம் ரெண்டாம் பட்சம். இதை லசகுவோட மாஸ்டர் பீசா நான் சொல்லுவேன்.
இந்த புத்தகத்தை பத்தி நிறைய சொல்லலாம். சிறந்த விமர்சனத்துக்கு சிறப்பு பரிசு தரதாவும் அறிவிச்சுருக்காரு. ஆனா எந்த முன்னறிதலும் இல்லாம வாசிக்கறதுதான் நல்லதுங்கறதால இதோட நிறுத்திக்கறேன்.