1 review for தீம்புனல்
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹350.00.₹330.00Current price is: ₹330.00.
இந்நாவலைப் படித்து முடிக்கையில் சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் சிக்கலான சுழல்வட்டப்பாதைகளில் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்து வந்த பிரமிப்பும் பேருவகையும் ஏற்படுகிறது. இது குடும்பங்களின் கதை அல்ல. இது கிராமங்களின் கதை அல்ல. தமிழக சாதியப்பொருளாதார உறவுகளில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடந்திருக்கும் மாற்றங்களைத் துல்லியமாகச் சொல்லும் முதல்நாவல் இது. குடும்ப உறவுகளிலும் சமூக உறவுகளிலும் நிகழ்ந்த மாற்றங்களுக்கும் நில உறவுகளில், உற்பத்தி உறவுகளில நிகழ்ந்த மாற்றங்களுக்குமான தொடர்புகளை மிக நேர்த்தியாக இந்த நாவல் அடையாளம் காண்கிறது. கார்ல் மார்க்ஸின் மொழிநடை ஓர் எதார்த்தவாத நாவலின் எல்லைகளை மீறாமல் கவித்துவமான சித்திரங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. மிகத் துல்லியமான காட்சிப் படிமங்கள் அவரது கவித்துவமான சித்தரிப்புகள் மூலம் எழுகின்றன. இந்தச் சித்தரிப்புகள் காலம், இடம், பொருள் சார்ந்து வாசகனை முழுமையாக தனக்குள் இழுத்துக் கொள்கின்றன. பாத்திரங்கள் தம்மளவில் முழுமை பெற்றவையாகவும் இயல்பு மீறாதவையாகவும் இருக்கின்றன. உரையாடல்களின் வழியே நாவல் தன் பாதையைத் தானே உருவாக்கிக்கொண்டு செல்கிறது.
– மனுஷ்ய புத்திரன்
Delivery: Items will be delivered within 2-7 days
Kmkarthikn –
தீம்புனல்
ஜி.கார்ல் மார்க்ஸ்
எதிர் வெளியீடு
#புருவம்_உயர்த்திய_இடங்கள்
1.#சாதி – இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட இந்த சாதியை நாம் வெறுத்துக்கொண்டே விரும்பிக்கொண்டிருக்கிறோம். இந்த நாவலில் இது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. ஜி.கார்ல் மார்க்ஸ் இந்த நாவலில் அதை மூன்று இடங்களில் படம் பிடித்து காட்டியிருக்கிறார்.
மழைக்கி விழுந்து விட்ட சோமுவின் வீட்டுச்சுவரை மாணிக்கம் அடைத்து முடிக்கும் வரையிலும் மாணிக்கத்துக்கு ஏதோ தெருவில் நிற்பது போலத்தான் இருந்திருக்கிறது. புறவெளிச்சம் முற்றிலும் தடைபட்டபிறகு அது வீடு எனும் பெயரை பெற்றுவிட்ட பிறகு மாணிக்கத்தால் அந்த வீட்டிற்குள் ஒரு நிமிடம் கூட நிற்க முடியவில்லை. ஏனென்றால் தான் ஒரு ஆண்டையின் வீட்டிற்குள் நிற்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி.
கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் ரத்தினத்தின் வீட்டிற்கு சக ஆசிரியர் ஒருவர் பத்திரிக்கை வைக்க வருகிறார். ஆனால் ரத்தினத்தின் வீட்டில் தண்ணி குடிக்கக்கூட மறுக்கிறார். காரணம் உயர்ந்த பதவியிலே இருந்தாலும் ரத்தினம் தாழ்ந்த சாதிக்காரர் என்பதால்.
இவையிரண்டையும் விட சாதியின் கூர்முனைகளை தொட்டு விவரித்திருக்கும் இடம் புலவரும் ரத்தினமும் உரையாடும் இடம். நாம் இதுவரை சாதியின்பால் போட்டுக் கொண்டிருக்கும் வெளி வேஷங்களை கிழித்தெறிந்திருக்கிறார் கார்ல் மார்க்ஸ்.
2. #பெண்கள் – இன்று இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை பெண்களையும் இந்த நாவலில் ஒன்று திரட்டியிருக்கிறார். ஒவ்வொரு பெண்ணின் மனநிலையையும் அவர்களது தர்க்கக்களுக்கு எந்த இடையூறும் விளைவிக்காமல் கையாண்டிருக்கிறார்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சுந்தரவள்ளி இருப்பாள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ரமணி இருப்பாள். ஒவ்வொரு தெருவிலும் ஒரு விசாலாட்சி இருப்பாள். இதுபோக பொன்னம்மாள், செல்வி, மல்லிகா, ரஞ்சிதாக்களை கடக்காமல் நாம் ஒருநாளை கடக்கவே முடியாது என்பது நிதர்சனமான உண்மை. இத்தனை பெண் பாத்திரங்கள் இருந்தாலும் என் மனதை உலுக்கியவள் சந்திரா தான். அவளது மனநிலையை விவரிக்க எந்த வார்த்தையை இட்டு நிரப்பினாலும் அது நியாயம் சேர்க்காது.
3. #பூதம் – ராஜேந்திரனும் பூதமும் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவைகள். அது ஒரு சுய நேர்காணல். எளியவைகளே போதும் என்ற மனநிலையும் பகட்டுகள் வேணுமென்ற மனநிலையும் கலந்து கிடக்கும் மனநோயாளிகளின் மருத்துவமனைக்குள் நுழைந்தது போன்ற பிரமையை உண்டாக்குகிறது. மெல்லிய நூலினால் ஆன பாதையைக் கடக்கத் தேவையான வரத்தை நமக்கும் அருளும் வார்த்தைகள்.
4. #அத்தியாயம் – இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயங்களின் அமைப்பும் தலைகீழ் அமைப்பில் இருப்பதாகவே எனக்குப்படுகிறது. Zலிருந்து ஆரம்பித்து Aயில் முடிக்கும் அந்த யுக்தியே நாவலை மேலும் மேலும் வாசிக்கத்தூண்டுகிறது.
#முகம்_சுழித்த_இடம்
1. #வார்த்தை – இந்த நாவலுக்கு எதுக்கு இத்தனை ஆயிரம் கெட்ட வார்த்தைகள். கதாப்பாத்திரங்களின் உரையாடலில் வார்த்தைகள் வந்தாலும் தகும் ஆனால் இங்கு முழுக்கதையையும் ஆசிரியரே விளக்குபவராக இருக்கிறார் இருந்தும் சம்பந்தமே இல்லாமல் பக்கத்திற்குப்பக்கம் வார்த்தை அலங்காரம் தான். ஒரு கட்டத்திற்கு மேல் பெரும் வெறுப்புதான் தோன்றியது.
#ஏமாற்றம்
பெருமாள்முருகனின் முதல் நாவலான “ஏறுவெயில்” நாவலின் விரிவுரையாகவே இந்த நாவல் அமைந்து போனது பெருத்த ஏமாற்றம். அதிகபட்சமாக மூன்று வித்தியாசங்களைக் கூட காட்டமுடியாதது மேலும் ஏமாற்றம்.
#தீம்புனல் – சுஜாதாவின் “விடிவதற்குள் வா” எனும் குறுநாவலில் ஆரம்பிக்கும் போது ஒரு கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்துவார். அவர் நேரே கதை நடக்கும் இடத்திற்கு நம்மை கொண்டுபோய் சேர்த்துவிட்டு ஆள் மறைந்துவிடுவார். அதற்குப் பிறகு நாவல் முடியும் வரை அவர் வரவேமாட்டார். கிட்டத்தட்ட இதே பாணியில் நாவல் தொடங்குகிறது. முதல் அத்தியாயம் இந்திராணியிடம் ஆரம்பிக்கிறது அவள் நம்மை நேரே சோமுவின் வீட்டு வாசலுக்குக் கூட்டிக்கொண்டுபோய் விட்டுவிடுகிறாள். அங்கிருந்து தான் கதை ஆரம்பமாகிறது.
இந்தக்கதையின் பிரதானர் சோமு தான். சோமு தன் நேர்மையாலும், உழைப்பாலும், குணத்தாலும் அந்த கிராமத்தின் ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளும் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கிறார். அந்த கிராமவாசிகளே நினைதாலும் அதை அகற்ற முடியாது. அதுபோலவே இந்த நாவலை வாசிப்பவரின் எண்ணத்திலிருந்தும் சோமுவை அகற்றுவது கடினம் தான்.
#kmkarthikeyan_2020-43